ஆனந்த போர்க்களம் – 12

“அது… அவரு இன்னைக்கு கடைக்கு கூட்டிட்டு போனாங்கப்பா. துணி எல்லாம் இங்கே தானே தைக்க கொடுத்து பழக்கம். அதுதான் ஸ்ரீதரன் கூட இங்கே வந்து இறங்கிட்டேன்…” சங்கடமாகச் சொன்னாள் சந்தியா.

நாராயணனுக்கு இன்னமும் முகம் தெளியவில்லை. மகளின் முகத்திலிருந்த சோர்வு, அவரின் கூரிய பார்வையைக் கண்டதும் அவளின் உடல்மொழியில் தென்பட்ட பதற்றம், அவள் மட்டும் தனியாக இங்கே வந்திருப்பது என அதிலேயே உழன்று கொண்டிருந்தார். மகள் உண்மையை தான் சொல்கிறாளா இல்லை எதற்காகவாவது சமாளிக்கிறாளா எனப் புரியாமல் ஒரு மாதிரி சோர்ந்த தோற்றத்திலிருந்தார்.

சந்தியாவுக்குத் தான் ஐயோ என்றாகிப் போனது. தன்னை குறித்து யோசித்து வந்தவள் தந்தை தன்னை வீட்டில் பார்த்தால் என்ன எதிர்வினையாற்றக்கூடும் என்பதை யோசிக்க மறந்திருந்தாள். ஸ்ரீதரன் அப்பொழுதே எச்சரிக்கை செய்திருந்தும், அதைப் பொருட்படுத்தாமல் வந்த தன் முட்டாளத்தனத்தை இப்பொழுது நொந்து கொண்டாள்.

இதற்கும் அவள் ஒன்றும் கோவித்துக் கொண்டு இங்கு வரவில்லை. கொஞ்ச நேரம் இங்கேயே இருந்துவிட்டு மனம் அமைதியான பிறகு திரும்பவும் வீட்டிற்குச் செல்வதாகத் தான் எண்ணி இருந்தாள்.

ஆனால், அதற்கே தந்தை வீட்டிற்கு வந்ததும் இவளைப் பார்த்துக் கவலைப்படுவார் என்று அவள் நினைக்கவில்லை. துருவித் துருவி கேள்வி மேல் கேள்வி கேட்டவரின் மனநிலையை அவளால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

வம்படியில் செய்து வைத்த கல்யாணம் மகள் எப்படி வாழ்கிறாள் என்ற கவலை அவரை நிச்சயம் உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருக்கும். அதன் விளைவாக இருந்த மனக்கவலை தான், இப்பொழுது வெளிப்படுகிறது என அவளால் யூகிக்க முடிந்தது. ஆக, முடிந்தவரை அவரை சமாளிக்கப் பார்த்தாள்.

ஆனால், என்ன எடுத்துச் சொல்லியும் தந்தையின் முகம் தெளியவே இல்லை. இப்பொழுது ஒரு மாதிரி கையறு நிலை தான் அவளுக்கு! என்ன செய்து இந்த நிலைமையைச் சமாளிக்க என தெரியவில்லை.

என்ன பிரச்சனை என்ற போதும் தந்தை மனம் வருந்துவதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அப்படியிருக்க இப்பொழுது எந்த பிரச்சினையும் இல்லாத பொழுது… காரணமே இல்லாமல் தந்தை மனம் வருந்துகிறாரே என கவலைப்பட்டாள். ஆனால், அவளுக்கு அப்பொழுது தெரியாது விரைவில் அவருடைய இந்த கவலை நிஜமாகிவிடும் என்று!

கையை பிசைந்து கொண்டு செய்வதறியாது அவள் நின்று இருந்த நேரம் ஆபத்தானந்தவனாக அவளின் கணவன் வீரேந்திரன் வீட்டிற்கு வருகை தந்தான். அவனை அந்த நேரம் அங்கு எதிர்பார்க்காமல் சந்தியா விழி விரித்து அதிர்ந்து நின்று விட்டாள்.

“வா… மாப்பிள்ளை…” என நாராயணன் தான் முதலில் வரவேற்றார்.

சிறு தலையசைப்பில் அவரின் வரவேற்பை ஏற்றவன், “எப்படி இருக்கீங்க மாமா…” என விசாரித்துவிட்டு, “சந்தியா கிளம்பலாமா?” என மனைவியிடம் கேட்டான். பார்வை நேருக்கு நேராக அவளைச் சந்தித்தது.

இத்தனை நேரம் என்ன எடுத்துச் சொல்லியும் தெளிவாகாத தந்தையின் முகம் மாப்பிள்ளையின் முகம் பார்த்ததும் தெளிந்து விட்டதையும், பிரகாசமாவதையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள் சந்தியா.

‘இவனை இந்தளவுக்கு தந்தைக்குப் பிடிக்கும் எனும்பொழுது, தன் சுய அலசல்களை எல்லாம் முழுவதும் ஒதுக்கி வைத்து விட்டு, அவனை முழுமுதலாகப் புரிந்துகொள்ள முயற்சி எடுக்க வேண்டும்’ என்று அந்த நொடி மனதார எண்ணினாள். இன்றைய சம்பவத்தின் பாதிப்பாக கூட இந்த முடிவை அவள் எடுத்திருக்கலாம்! அதோடு ஏற்கனவே அவளுக்கு அவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணமும் வந்திருந்தது தானே!

“என்ன யோசனை?  சீக்கிரம் கிளம்பு போகலாம். எனக்குக் கொஞ்சம் வெளிய வேலையிருக்கு…” என்று தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் மனைவியைக் கலைத்தான் வீரேந்திரன்.

மௌனமாகத் தலையசைத்தவள், ‘இவன் எப்படி திடீரென்று இங்கே?’ என குழம்பியபடியே, புறப்படத் தயாரானாள்.

சந்தியாவின் பார்வையில் இதத்தை உணர்ந்தான் வீரேந்திரன். ‘ஹப்பா! ஏன் இப்படி பார்க்கிறான்னு தெரியலையே!’ என ஒரு மாதிரி உடல் சிலிர்த்தது ஆணவனுக்கு. அவளின் முதல் ஆழமான பார்வை… அவனுள் துளி பரவசத்தை, மெல்லிய இதத்தை, மில்லி மீட்டர் புன்னகையைத் தூவி விட்டுப் போனது!

இருவரின் முகபாவனைகளையும் கூர்ந்து கவனித்த நாராயணன் இருவரின் இடையேயும் சண்டை போல எதுவும் இல்லை என புரிந்து கொண்டார். ஆக, தன்போல அவரின் முகத்தில் நிம்மதி வந்து ஒட்டிக் கொண்டது.

தந்தையின் நிம்மதியான முகத்தைப் பார்த்து ஆசுவாசப்பட்டபடி தான், கணவனோடு சந்தியா கிளம்பினாள்.

காரில் அவன் முகம் பார்த்து எதையோ கேட்க நினைப்பதும், பிறகு கேட்கத் தைரியம் வராமல் தலையைத் திருப்புவதுமாக வெகுநேரம் போராடிக் கொண்டிருந்தவளிடம், “என்ன விஷயம்?” என்றிருந்தான் வீரா.

அதில் திருதிருத்தவளிடம், “ஹ்ம்ம் என்னன்னு சொல்லு…” என மீண்டும் கேட்டான். சாதாரணமாக இருந்திருந்தால் கேட்டிருக்க மாட்டானோ என்னவோ, இன்றைய அவளின் பார்வையின் இதம் அவனை வெகுவாக தளர்த்தியிருந்தது.

“அது… அது…” என அவள் திணறும்போதே, காரை ஒரு மருத்துவமனை வளாகத்திற்குள் திருப்பினான்.

‘எங்கே போறோம்?’ என்கிற சிந்தனையில் அவளின் பேச்சு தடைப்பட்டது.

வீராவும் திரும்பிச் செல்லும்போது அவளிடம் பேசிக்கொள்ளலாம் என எண்ணினான் போல… அமைதியாக இறங்கி நடந்தான்.

உள்ளே சென்றதும் தான் புரிந்தது, அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை காண அழைத்து வந்திருக்கிறான் என்று. வெளியில் நின்றிருந்த அவளின் தோழி மற்றும் குடும்பத்தினரைப் பார்த்ததுமே சந்தியாவிற்குப் புரிந்து விட்டது. அந்த பெண்ணிற்கு என்ன ஆகியிருக்குமோ என்ற கவலை அடிவயிற்றைக் கவ்வ, கணவனின் கரங்களை ஆதரவிற்காகப் பற்றிக் கொண்டாள்.

‘இவ அநியாயத்துக்கு பயப்படறா…’ என்று எண்ணியவனுக்கு அவளை எப்படி மாற்ற என்று புரியவில்லை.

பாவம் சந்தியாவும் இவனது கோபத்தை எப்படி மாற்ற என்ற புரியாத குழப்பத்தில் தானே இருக்கிறாள். அவரவருக்கு அவரவர் கவலை!

அந்த பெண்ணின் பெற்றவர்கள் அழுது ஓய்ந்த தோற்றத்தில் அமர்ந்திருந்தார்கள். பார்க்கவே பாவமாக இருந்தது.

அந்த பெண்ணின் தோழி தான் இருவரிடமும் அழைத்துச் சென்று, “நான் சொன்னேன்ல அம்மா… அது இந்த அண்ணா தான். இவங்க தான் நம்ம ராகவியை காப்பாத்தினாங்க. ரொம்ப உதவியா இருந்தாங்க… இவங்க இல்லைன்னா ராகவி என்ன நிலைமைக்கு போயிருப்பான்னே தெரியலை…” என்று அறிமுகப்படுத்தியதும் இருவருமே எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிட்டனர். மூத்தவர்களின் கண்களில் கண்ணீர் பெருகியது.

வீரேந்திரனுக்கு சங்கடமாய் போனது. மனைவிக்குக் கண் ஜாடை காட்டியவன், அந்த பெண்ணின் தந்தையின் கரத்தை இறக்கிவிட்டு, “எதுவும் ஆகாது பயப்படாதீங்க” என ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தான்.

சந்தியாவும் புரிந்துகொண்டு ராகவியின் தாயிடம் ஆதரவாகப் பேசினாள். “நெருப்பு வெச்ச மாதிரி முகமெல்லாம் வேகுமே, அதை தாங்கிக்கிற வயசா அவளுக்கு… அவளே குழந்தைம்மா… பதினைஞ்சு வயசு பொண்ணு. அவ கல்யாணத்துக்கு இப்பவே முடிவை எடுக்கணும்ன்னு அவளுக்கு என்ன கட்டாயம் மா? பதினொன்னாம் வகுப்பு படிக்க என்ன குரூப் எடுக்கிறதுன்னே அவளுக்கு அவ்வளவு தடுமாற்றம். எவ்வளவு குழம்பி போயி இருந்தா தெரியுமா? அவளை போயி வாழ்க்கைக்கான முடிவை எடுக்க சொல்லி கட்டாயப்படுத்தினா… அவளால என்ன செய்ய முடியும்? அவன் வீட்டுல இப்படி ஒரு பொண்ணு இருக்காதா? அவ முகம் இவனுக்கு நியாபாகத்துக்கு வந்திருக்காதா? இப்படி பொசுக்க பார்த்துட்டானே… படுபாவி…” முகத்தில் அடித்துக்கொண்டு அழும் அன்னைக்கு என்ன சமாதானம் சொல்வது என சந்தியாவுக்கு புரியவில்லை.

“நீங்க தைரியமா இருக்கணும் மா. உங்க பொண்ணுக்கு ஆதரவே நீங்க தானே… எதுவும் ஆகாது பயப்படாதீங்க…” என ஆறுதலாகச் சொன்னாள்.

“எல்லாம் உங்க தயவால தான் மா… உங்க வீட்டுக்காரர் மட்டும் முதலுதவி செய்யாம விட்டிருந்தா முகமே பொசுங்கி போயிருக்குமாம். இப்ப ரொம்பவும் கம்மியா தான் காயம். டாக்டர் நம்ம ஊரிலேயே சரி பண்ணிடலாம்ன்னு சொல்லி இருக்காங்கம்மா. உங்க குடும்பத்துக்கு காலத்துக்கும் நன்றிகடன் பட்டிருக்கோம்… நீங்க புள்ளை குட்டிங்களோட பல வருஷம் சந்தோசமா வாழணும்…” உணர்ச்சி வசப்பட்டவராக பேசினார். மனம் நெகிழ்ந்தது சந்தியாவிற்கு.

அவரிடம் நின்றிருந்தவளிடம், வீரேந்திரன் “அங்கே போயி பாரு…” என கண்ணாடிச் சுவரை காட்டினான். இத்தனை நேரம் மறந்திருந்த விஷயம் மெல்ல மேலெழுந்து வர, அந்த பெண்ணின் நினைவில் மீண்டும் நடுக்கம் கொண்டது அவளின் உள்ளம்.

“தைரியமா நட…” தயங்கி நின்றவளை கையை பிடித்து அழைத்துச் சென்றான்.

அந்த ஐ.சி.யூ., அறையின் சிறிய கண்ணாடி தடுப்பின் பின்னால் உடல் நடுங்கப் பார்த்தாள்.

நிர்மலமாகப் படுத்திருந்த பெண்ணின் முகத்தில் பெருமளவு பாதிப்பு தெரியவில்லை. அவள் இந்த நிலையைச் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

ஆச்சரியமாகக் கணவனைத் திரும்பிப் பார்க்க, “நம்ம உடனடியா அந்த ஆசிட் மொத்தத்தையும் டையலூட் பண்ணிட்டோம்…” என்றான் நிதானமாக.

‘எவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறான்? அத்தனை மெனக்கெடலும், சமயோஜித புத்தியும் கணவனுடையது தானே?’

ஒரு மாதிரி வியப்பில் விரிந்த விழிகளில், “நான் இவ்வளவு தூரம் பாதிப்பு குறையும்ன்னு நினைக்கவே இல்லைங்க… அந்த பொண்ணு எரிச்சல்ல கஷ்டப்படும்ன்னு நீங்க தண்ணி ஊத்தறதா நினைச்சேன். உண்மையிலேயே நீங்க ரொம்ப பெரிய விஷயம் செஞ்சிருக்கீங்க…” மகனின் பெருமையைக் கேட்டுக் கொண்டாடும் தாயின் பூரிப்பு சந்தியாவின் முகத்தில்!

“நான் பெருசா எதுவும் செய்யலை… நல்லவேளை அந்த பொண்ணு முகத்தை திருப்பிட்டா… ஆசிட் கண்ணுல பட்டிருந்தா  அது பார்வையை பாதிச்சிடும்… அந்த அசம்பாவிதத்துல இருந்து தப்பிச்சுட்டா…” என்றவனிடம் நிம்மதி பெருமூச்சு.

இவன் ரொம்பவும் வித்தியாசமானவன். பிறரின் கஷ்டத்தையும் தன் கஷ்டமாய் பாவிக்கிறான் என்று எண்ணியவள் கணவனை நெகிழ்ச்சியாகப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

தந்தைக்காக, கழுத்தில் தவழும் தாலிக்காக அவளின் மனம் இப்பொழுது சாயவில்லை. மாறாக அவனுக்காக அவனின் குணத்துக்காக தன்போல மொத்தமாகச் சாய்ந்தது.

சின்னஞ்சிறிய நேச விதையொன்றை அவ்வப்பொழுது சிறு சிறு மழைத்துளி தீண்டிச் செல்ல… அரும்பவா துளிரவா என தயங்கிய தத்தளித்தது மாறி… இன்று ஒற்றை நொடியில் விருட்சமாய் அவளுள் வளர்ந்து கிளை பரப்பியது.

மனைவியின் பார்வையின் மாற்றம் புரிபட்டுவிட, புருவங்களை அழகாய் ஏற்றி இறக்கி என்ன என வினவினான்.

அதன்பிறகே அவசரமாகக் கலைந்தவள், ஒன்றும் இல்லை என்று வேகமாகத் தலையசைத்து மறுத்துவிட்டு சுற்றம் உரைக்கக் கீழுதட்டைப் பற்களால் அழுந்தபற்றி தலையைக் குனிந்து கொண்டாள்.

மனைவியின் இணக்கம் பெரும் இதத்தை வீரேந்திரனுள் விதைத்தது! என்னவோ வெளி வேலைகளை கவனிக்க எண்ணியிருந்தவன் இப்பொழுது அதனைச் சுத்தமாகக் கவனிக்கும் மனநிலையில் இல்லாமல் மனைவியோடு வீட்டை நோக்கிப் பயணப்பட்டான்.