புதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 27

அத்தியாயம் 

விஸ்வா மெதுவாக மருத்துவர் சொன்ன விவரங்களைச் சொன்னான் . “பின் எனக்குப் பயமாக இருக்கிறது அப்பா . மனநல மருத்துவர் என்றெல்லாம் பேசுகிறார்…” என்று கண்கலங்க ,

“முதலில் தைரியமாக இரு , மனநல மருத்துவரைப் பார்ப்பது ஒன்றும் பெரிய குற்றமோ , தப்போ  இல்லை . உடலுக்கு வருவது போல் மனதிற்கு  வரும் பிரச்சனை. அவ்வளவு தான், புரிகிறதா?”

“ம்ம்..” என்றவன் . “நம் வீட்டுக்குக் கல்யாணமாகி  வந்த சந்தியா,  இப்போது இல்லை அப்பா . மலர்ந்த பூவாய் இருந்தாள். எப்ஙமுகத்தில் மெல்லிய புன்னகை இருக்கும். இப்போது எல்லாம் போய் விட்டது அப்பா. எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கிறாள் . இவை அனைத்திற்கும் நான் தான் காரணம் என்று நினைக்கும் போது, அவளைப் பார்க்கும் போது ரொம்பவும் உறுத்துகிறது  . குற்ற உணர்ச்சியாக இருக்கிறதுப்பா” என்று உதட்டைக் கடித்தான்.

விஸ்வாவைத் தட்டிக் கொடுத்த சங்கரன் , “முடிந்ததை விடு , இப்போது இதை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசி .”

“ஒன்றும்  புரியவில்லை அப்பா…” என்று பாவமாகப் பார்த்தான் . 

தன் மகன் அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் தடுமாறுவதைக் கண்டு சஞ்சலப்பட்டார் . பின் அவரே மனதை தேற்றிக் கொண்டு ,

“சரி விஸ்வா , சந்தியாவிற்கு என்ன பிரச்சனை? கண்டுபிடித்து விட்டாயா?”

“ம்…. ,  சந்தியா கடைசியாக தூத்துக்குடி போன போது தான் யோசிக்க ஆரம்பித்தேன்ப்பா…..”

 சங்கரன் ஆழ்ந்து கவனிக்க,

“நீங்கள் சொன்ன ஆணிவேரைத் தேடினேன் , ஓரளவு புலப்பட்டது . ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாமல் இருந்தேன் .ஆனால் இந்த முறை உடம்பு முடியாமல் போன போது உறுதியானது” என்று நிறுத்த ,

“சொல்…” என்று சங்கரன் ஊக்க ,

“அம்மாவின் ஆதிக்கமும்  , அவள் சுயமரியாதைக்கும், அடிப்படை ஆசைகளுக்கும் விழும் அடிகளும் , அதை நான் சரியாகக் கையாளததுவும் தான் காரணம்” என்று வருந்தினான் .

“குறிப்பிட்டுச் சொல் விஸ்வா”

“அம்மா  அவளை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள் . நானும்  தெளிவு இல்லாமல் , அம்மா சொன்னால் சரியாக இருக்கும் என்று ‘ஜஸ்ட் லைக் தட்டாகக்’ கடந்துவிட்டேன் . சந்தியாவின் உணர்வுகளை , அவமானத்தைப் புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன்…”

“இப்போது உங்களிடம் பேசிய பிறகு தான் , எனக்கு, அம்மா தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவளை என்னிடம் மட்டம் தட்டிப் பேசியிருக்கிறார்கள்  என்று புரிகிறது.அவர்கள் உரிமை போராட்டத்தின் விளைவு , சந்தியா பாதிக்கப்பட்டு விட்டாள்.”

“ம்ம்…. , அப்புறம்….?”

“என் விசயத்தில்  புகைய ஆரம்பித்தது , சந்தியா மாசமாக இருக்கும் போது , நான் சொல்வது தான் சரி என்று என்னிடம் நடப்பது போல் சந்தியாவிடம் நடந்து கொள்ள , முக்கியமாக சந்தியாவின் உணவு விசயத்திலும்  தொடர , 

சந்தியா  என்னிடம் தன்னால் ‘முடியவில்லை’ என்று சொன்னால் தான் அப்பொழுதாவது சுதாரித்து, அவள் கூட இருந்து அவள் சங்கடங்களைப் போக்க உதவியிருக்க வேண்டும் . ஆனால் நான் , என்னுடைய பார்வையிலே யோசித்து , அம்மா சொல்வது தான் சரி என்று அவளையும் பணிய சொன்னேன் . அது அவள் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது .

அப்படியே அம்மா, அவரின் ஆதிக்கத்தை ஆகாஷ் விசயத்திலும் தொடர ,  தன் பிள்ளையைக் கூட தான் ஆசைப்பட்ட மாதிரி வளர்க்க முடியவில்லை என்பது காயத்தை ஆறவிடாமல் ரணமாகி விட்டது….” 

அதான், “முதல் பிறந்த நாளில் …..” என்று தொண்டையைச் செறுமியவன் , “அப்போதே நான் உணர்ந்து சரி செய்து இருந்தால்…. , 

இந்த இரண்டு வருடமாக மருத்துவமனை, வீடு என்ற போராட்டம் இருந்திருக்காது . என் மாமனார் வீட்டு உறவு மத்தியிலும் என் மதிப்பை மரியாதையை இழந்திருக்கமாட்டேன்..”  என்று வருந்தினான் .

 சங்கரன் அவன் கைகளை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டார் . “விஸ்வா……” என்று தூண்ட ,

“ஆகாஷ் விசயத்திலும்  போராட்டம் ஆரம்பிக்க , அவளுக்கு எங்கே தன் கணவனைப் போல் தன் மகனும் தனக்கு இல்லாமல் போய்விடுவானோ….? என்ற பயமும் பதற்றமும்  பாதுகாப்பின்மையும், அவளைத் தூண்ட , தப்பும் தவறுமாக சில காரியங்கள் செய்துவிட்டாள்….

அது அம்மாவிற்கும் வீம்பைத் தூண்ட , பிரச்சனை பூதாகரமாகிவிட்டது . அதனால் இன்று அவள் மன அழுத்தத்தின் விளிம்பில்…..” என்று குலுங்கிக் குலுங்கி அழ ,

சங்கரன் தோள் அணைக்க, “வீட்டுப் பிரச்சனையெல்லாம்‌ மனசைப் பாதிக்கும் என்று எனக்குத் தெரியாது அப்பா… இதை உடல்பிரச்சனையாகவே நினைத்தேன்…” என்று குலுங்கினான்.

சங்கரன் அணைத்தபடி , “இது இயல்பாக எல்லா மாமியார் மருமகள் விசயத்தில் நடப்பதுதான் . நம் வீட்டில் ராஜி பலம் பொருந்தியவளாகவும் , சந்தியா மிகவும் மென்மையானவளாக இருந்தது தான் பிரச்சினையைப் பெரிசாகிவிட்டது . மேலும் உன்னுடைய திறமையின்மையும்  மிக பெரிய காரணம் விஸ்வா .”

அதை ஆமோதிப்பது போல் , விஸ்வாஅமைதியாக இருக்க,

அவன் முகத்தில் தவழ்ந்த சோகத்தைக் கண்ட சங்கரன், “பிரச்சனையின் நுனி தெரிந்து விட்டதல்லவா , இனி எளிதாக தீர்த்து விடலாம் . கவலை விடு விஸ்வா “

“எப்படி அப்பா? எனக்கு நம்பிக்கையே இல்லை  . இப்போது சந்தியா தன்னைச் சுற்றி பெரிய எஃகுக் கோட்டை கட்டிவிட்டாள் . அதில் அவள் பெற்றோரையும் , கூடப்பிறந்தவர்களையே கூடஅனுமதிக்க தயாராக இல்லை . அதிலும் நான் , அவள் நம்பிக்கை உடைத்து , நொகடித்து ….. , எப்படி அப்பா? மென்மையானவள் அப்பா….” என்று தலையில் கையை வைத்தான்.

“எப்படிப்பட்ட கோட்டை என்றாலும் கதவு இருக்க தானே செய்யும் . முட்டி மோது… , ஒரு நாள் நிச்சயமாகத் திறக்கும் விஸ்வா .”

அவன் நம்பிக்கையற்று பார்க்க , 

“நீ செய்யப் போகும்  காரியம் எளிதானது அல்ல என்று எனக்குப் புரிகிறது விஸ்வா . உனக்கு நிறைய பொறுமையும் , நம்பிக்கையும் , வாழ்க்கையைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற வெறியும் இருக்க வேண்டும்.”

“சந்தியா நம்பிக்கையைப் பெற வேண்டுமென்றால் ….. அம்மா பாதிக்கப்படுவார்  , எனக்காகவே யோசித்து எனக்காவே வாழ்ந்தவர் அப்பா….” என்று நிறுத்தியவன். 

“ஏற்கனவே ஒருவர் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்து விட்டேன் , இப்போது அம்மா….  எப்படி அப்பா, செயல்படுத்துவேன்?  அது என்னால் முடியும் என்று தோன்றவில்லை” என்று கலங்கினான் ,

சங்கரன் அவனை அணைத்து , “கஷ்டம் தான் விஸ்வா . ஆனால் இரண்டு படகில் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாது . சில நேரம் கடினமான முடிவுகளை எடுத்துத்தான் ஆக வேண்டும் . இப்பொழுது பாதிக்கப்பட்டவர்களைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும் . அவர்கள் பக்கம் தான் நிற்க வேண்டும்.”

விஸ்வா இயலாமையோடு பார்க்க , 

“நான் முப்பது வருடமாக ராஜியையும், என் குடும்பத்தையும் சமாளிக்க வில்லையா?  கொஞ்சம் மெனெக்கெடலும் முன்யோசனையும் இருந்தால் போதும் . அதிலும் உன் மீது அவளுக்கு அதீத அன்பு..” என்று சிரிக்க ,

“அது தான் அப்பா கவலையே….” என்று விஸ்வா வருத்தப்பட , 

“பொறுமையாக கையாளலாம் விஸ்வா . நான் கூட இருக்கிறேன் , சேர்ந்து சமாளிக்கலாம்” என்று நம்பிக்கையூட்டினார் .

விஸ்வா தலையாட்ட , “இப்போது இரண்டு பக்கமும் சிந்திக்க ஆரம்பித்து விட்டாய் அல்லவா , இனி நல்லதே நடக்கும்.”

விஸ்வா தைரியமற்று பார்க்க , “என் மகன் முட்டாள் இல்லை என்று சொன்னது நடந்தது அல்லவா , அது போல இதுவும் நடக்கும் விஸ்வா “என்று சிரிக்க  ,

“ஆனால் யோசிக்கத்தான் ரொம்ப நாளாகி விட்டது”  என்று வருத்தப்பட்டான்.

“சரியான திசையில் யோசிப்பது தான் முக்கியம் . முன்னே பின்னே இருந்தால் சமாளித்துக் கொள்ளலாம்” என்று சங்கரனும்  சொல்ல , அவன் மனநிலை மாறியது .

“இப்போது என்ன செய்யலாம் அப்பா? “

“முதலில் சந்தியாவிற்கு உன் மீது நம்பிக்கை வர வேண்டும் . அம்மா சாடும்  போது சந்தியா பக்கம் நில்”

“ம்ம் ….. அப்புறம்….?”

“ அவளுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் இல்லை பிடித்தமானவர்களை வைத்துப் பாஸிடீவ்வாகப் பேச வைக்க வேண்டும் .”

“அதற்குத் தான் அப்பா…” என்று ஆரம்பித்தவன் , ரகுவும் ரஞ்சனியும் உதவுவதாக சொன்னதைச் சொன்னான் .

“என்ன பக்குவம் ? எவ்வளவு பெரிய மனசு விஸ்வா” என்று ஆச்சரியப்பட்டார் .

“அந்தப் பெரிய மனசு இல்லாததால் தான் அப்பா , நான் இன்று கஷ்டப்படுகிறேன்” என்று வருந்த ,

“இறைவன் எழுதியதை மாற்ற முடியாது விஸ்வா . நாம் ஆக வேண்டியதைப் பார்ப்போம்  , அவர்கள் அந்த பக்கத்தில் இருந்து முயற்சிக்கட்டும் , நாமும் இந்த பக்கம் ஆரம்பிப்போம்.”

“சந்தியா சரியாகிவிடுவாள் இல்லையா அப்பா ?” என்று பயத்துடன் கேட்க ,

“நிச்சயமாக விஸ்வா . நல்ல நேரம் வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது . உன் துன்பத்திற்கு முற்றுபுள்ளி வந்து விட்டது, இல்லையென்றால் கிடைக்க முடியாத இடத்தில் இருந்து உதவிக்கரம் நீளுமா ?”

அப்பாவின் பேச்சு நம்பிக்கையை தர , ஆசுவாசமானான் . 

பின் சங்கரன் , “ராஜியின் வளர்ப்பில் ஏன் தலையிடவில்லை என்று கேட்டாயே?, உன் தவறு புரிந்ததும் , அதைத் திருத்திக்கொள்ள  முயலுகிறாய் என்றால் , உன்னைச் சரியாகத் தானே வளர்த்திருகிறாள்…” என்று புருவத்தைத் தூக்க ,

“பொண்டாட்டியை விட்டு கொடுக்க மாட்டீர்களே…” என்று கேலி செய்ய . 

“எல்லா நேரங்களில் முடியாது , கூடாது . ஆனால் செய்ய வேண்டிய இடத்தில் கட்டாயம் செய்ய வேண்டும் .”

உடனே விஸ்வா, “இதைத்தான் நான் செய்ய தவறிவிட்டேன் இல்லையா அப்பா ….?” என்று மீண்டும் வருந்த ,

“விடு விஸ்வா , நீ சொகுசாக, ஒற்றைப் பிள்ளையாய் வளர்ந்தவன் , நான் பெரிய குடும்பத்தில் மூத்த மகனாய் பிறந்தவன் , அதனால் என் குடும்பச் சூழ்நிலை , சீக்கிரமே வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விட்டது” என்று தேற்றினார் .

அத்தியாயம் 82 

ரஞ்சனி தொடர்ந்து சந்தியாவுடன் பேச ஆரம்பித்தாள் . சந்தியாவிற்கு ரஞ்சனியைப் பிடிக்கும் என்றாலும், பழக தயக்கமும் காட்டினாள் தான் . சற்று தள்ளியே வைத்தாள் .

 அதை உடைக்க ,  சந்தியாவைத் தன்னுடன் நெருக்கமாக்குவதற்காக , தன்னுடைய கதையை முதலில் சொல்ல ஆரம்பித்தாள் ரஞ்சனி .

அப்படி ஒரு நாள் ரஞ்சனி , “சந்தியாவிடம் பேசும் போது , நான் தைரியமான பெண் தான் சந்தியா . கால் உடைந்த போது கூட வெற்றிகரமாக மீண்டு வந்தேன் . ஆனால், ‘குழந்தை’ என்று வரும்போது ஏதேதோ பயம் வருகிறது…” என்று ஆரம்பிக்க,

“உடனே,உங்களுக்கு எப்படிக் கால் போனது ?”என்று தயக்கத்துடன் கேட்க ,

விஸ்வாவின் பேரைக் குறிப்பிடாமல் , தனக்குக் கால் போனதும் , அதனால் கல்யாணம் நின்று போனதையும் மட்டும் கூற ,

சந்தியாவிற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது . 

“எப்படி ரஞ்சனி? உங்களால் முடிந்தது , கேட்ட எனக்கே தாளவில்லை.. என்ன நடந்தது? என்று  சொல்லுங்கள்..” என்று வேகமாக கேட்க , 

“அது சந்தியா …” என்று ஆரம்பித்தவள் , “ரகு வந்துவிட்டார்  , நாளை கூப்பிடுகிறேன்..” என்று வேண்டுமென்றே, நாளை பேச்சைத் தொடர்வதற்கு வாகாக, பேச்சை ஒரு சுவாரசியத்துடன் நிறுத்தினாள் ரஞ்சனி .

ஆனால் இரண்டு நாட்கள், ரஞ்சனி சந்தியாவை அழைக்கவே இல்லை . 

சந்தியாவிற்கு இந்த விசயமே மனதில் ஓடி கொண்டிருக்க , விஸ்வாவிடம் கூட வழக்கமில்லாத வழக்கமாக , இதைப் பற்றி பேசினாள் .

ஏற்கனவே ரகு , “உன் பெயர் அடிபடாது , அவள் மனதை திசை திருப்புவதற்காகத் தான் பேசியுள்ளோம் . நாம் போகும் வழி சரியென்றால் அவள் உன்னிடம் இதைப்பற்றி பேச வேண்டும் . அப்படிப் பேசினால் , நீ ரஞ்சனியிடம் பேசச் சொல்லித் தூண்டு” என்று விசயத்தைப் பகிர்ந்திருக்க ,

சந்தியா ஆரம்பித்தவுடன் , “ஏன் மனசைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறாய்? ரஞ்சனியிடமே போன் போட்டுப் பேசி விட வேண்டியது தானே…” என்று இவனும் தூண்ட ,

மறுநாள் சந்தியா ரஞ்சனியை அழைத்து விவரம் கேட்க , “தன் கல்யாணம் நின்ற விசயத்தைத் தவிர்த்து , மருத்துவமனை போராட்டங்களை , வலியை விலாவாரியாகப் பேச , சந்தியாவிற்குத் தன் துன்பம் சிறிதாகத் தோன்றியது.”

மேலும் சந்தியா , “சரி ரஞ்சனி  , உன்  கல்யாணம்….” என்று இழுக்க,

அதற்குள் ரஞ்சனி , “அது பெரிய கதை சந்தியா ….”என்று ஆரம்பிக்க ,

“ரஞ்சனி ,ரஞ்சனி…..” என்று பின் பக்கத்தில் குரல் கேட்க , 

“மாமா கூப்பிடுகிறார் சந்தியா , நாளை பேசலாம்…” என்று ஒரு ஆர்வத்தைத் தூண்டி விட்டு , போனை வைத்தாள் ரஞ்சனி .

அன்று  இரவு சந்தியா விஸ்வாவிடம் , ரஞ்சனி பட்ட கஷ்டங்களையெல்லாம் புலம்பித் தவிக்க,

விஸ்வா பெரும் மனவேதனைக்குள்ளானான் . தன் சுயநலத்தை நினைத்து வெட்கப்பட்டான். தன்னுடைய செயலை அவமானமாக உணர்ந்தான். தன்னுடைய பாவகணக்கு ஏறிக்கொண்டே போகிறதே …. என்று தவித்தான்.

சந்தியா அவன் பதிலுக்காகக் காத்திருக்க,

“பாவம் ,ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார்கள்..” என்று விட்டு, அமைதியாக படுத்துவிட்டான் . 

தூக்கம் தான் வரவில்லை .மனசாட்சி அவனைக் கேள்விகளால் துளைத்தது . கிட்டதட்ட கொன்றது.

 சந்தியா மறுநாள் அழைக்க, 

அலுவலகத்தில் முக்கியமான வேலை இருப்பதால், இரண்டு நாட்கள் கழித்துப் பேசுவதாக மெஸேஜ் செய்தாள் ரஞ்சனி .

ரஞ்சனி பேசவில்லையே தவிர , ஏதாவது ஜாலியான இல்லை கருத்துள்ள பதிவுகளை சந்தியாவிற்கு அனுப்பிக் கொண்டிருந்தாள் . இருவருக்குள்ளும் நெருக்கம் கூடியது.

இது ஒரு பக்கம் ஓடி கொண்டிருக்க ,  விஸ்வா சந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தான் . நேரம் ஒதுக்கினான் . அவள் கவனிக்காவிட்டாலும் நிறைய பொது விசயங்களைப் பேசினான். 

“இன்று ஒரு முக்கியமான மீட்டிங் , நேரமாகிவிட்டது ,உடை எடுத்து வை , நான் குளித்து வருகிறேன்…” என்று சொல்லிச் சென்றான் .

சந்தியாவும் வேறு வழியில்லாது எடுத்து வைக்க , அதை அணிந்து கொண்டு சாப்பிட வந்தான் . 

விஸ்வா கண் ஜாடை செய்ய , “சங்கரன் என்னடா ஜம் என்று வந்திருக்கிறாய் ?”

அவன் சிரித்தபடி, “எல்லாம் சந்தியா உபயம் தான்..”  என்று விவரத்தை தெரிவித்தபடி உண்ணத் துவங்க , சந்தியா அமைதியாகப் பரிமாறினாள் .

ராஜி வழக்கம் போல், “உன் ராசியான சட்டை போடு விஸ்வா , மீட்டிங் நல்லபடியாக முடியும்” 

பரிமாறிக் கொண்டிருந்த சந்தியாவின் கை நடுங்குவதைக் கவனித்த விஸ்வா , “சட்டையில் என்னம்மா ராசி ?  எல்லாம் என் திறமையில் தான் இருக்கிறது” என்று புன்னகைத்தான்.

“இருந்தாலும் ….” என்று ராஜி இழுக்க ,

“சட்டையை தான் நம்புகிறீர்களா? என்னை இல்லையா?”என்று கேலி போல பேசினான் .

ராஜி பொதுவாகச் சிரிக்க ,

“உன் மகன் இதையும் ராசியான சட்டையாக மாற்றுவான்” என்று சங்கரன் சொல்ல ,

சந்தியா படபடப்பானாள் .

 ராஜியும் வேறு ஒன்றும் சொல்ல வழியில்லாது சிரித்தார் .

இருவரும் கடைக்குச் சென்று விட , தன் தேர்ந்தெடுத்து கொடுத்ததைத் தன் கணவன் அணிந்து சென்றது பெருமகிழ்ச்சியைத் தர , அது சந்தியாவின் முகத்தில் லேசான புன்னகையைத் தோற்றுவித்தது .

தொடரும்……..