என்னவானது இவனுக்கு என இவள் விலகி நிற்க, ஆவேசத்தோடு கண்களை திறந்தவன் வேதாவை பார்த்து விட்டு சத்தம் ஏதும் போடாமல், “என்ன வேணும் உனக்கு?” என எரிச்சலாக கேட்டான்.

“ப்ளீஸ் அவங்கள விட்ருங்க” என தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கெஞ்சினாள்.

கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தவன், “யார் என் முன்னாடி நிக்கிறது வேதநாயகியா?” என கிண்டலான தொனியில் கேட்டான்.

மனதிற்குள் அவனை கரித்துக் கொட்டினாலும் வெளியில் புன்னகை செய்தவள், “என் மேல நிறைய பாசம் வச்சிருக்காங்க ரெண்டு பேரும், நான் உங்க கூட வந்ததுல எம்மேல கோவம், ஒழுங்கா யோசிக்காம இப்படி பண்ணிட்டாங்க, மன்னிச்சிடுங்க ப்ளீஸ்” என்றாள்.

 சீட்டி மூலமாகவே ஓஹோ என்றவன் ஒருக்கலித்து படுத்து, வலது கையில் தலையை தாங்கிய வண்ணம் அவளையே பார்த்தான்.

அவளும் உர் என பார்க்க, “என் கூட வான்னு உன்கிட்ட எவ்ளோ பேசினேன் நான்? மூஞ்சுல அடிச்ச மாதிரி பேசல நீ? நான் மட்டும் அவனுங்கள உடனே மன்னிக்கணும்?” என்றான்.

“நீங்க செஞ்சதை எல்லாம் யோசிச்சு பாருங்க, உங்களுக்கு ஒரு சிஸ்டரோ க்ளோஸ் ஃபிரெண்டோ இருந்து அவங்கள யாராவது சீட் பண்ணினா நீங்க என்ன பண்ணுவீங்களாம்?” எனக் கேட்டாள்.

“அப்ப நான் சீட்டர்?” வியப்பான பாவனையில் கேட்டான்.

மானசீகமாக பற்களை நெறித்தவள், “நீங்க நல்லவர், நாந்தான் ஏமாளி!” என்றாள்.

“பாவம்தான் நீ” என அவன் நக்கல் செய்ய, தாத்தாவுக்கு அழைத்தவள் உடனே அவரை இங்கு வரச் சொன்னாள்.

“ஹேய் அவரால ஸ்டெப்ஸ் ஏற முடியாது, கால் பண்ணி கீழேயே இருக்க சொல்லு, நானே வர்றேன்” என்றவன் வேதாவுக்கு விட்டுக் கொடுத்து விட்ட தனது அறைக்கு சென்றான்.

தாத்தாவை நிச்சயமாக தனக்கு உதவ வைக்க, அவரிடம் இன்னொரு முறை பேசி விடலாம் என்றெண்ணி அவளும் கீழே சென்று விட்டாள்.

அரை மணி நேரத்துக்கு பின் விஷ்வா கீழே வர, அலுவலக அறையில் காத்திருந்த வினித் வந்தான். சில நிமிடங்கள் அவனிடம் பேசிய விஷ்வா, அவனை அனுப்பி வைத்து விட்டு தாத்தாவிடம் வந்தான். அருகில்தான் அமர்ந்திருந்தாள் வேதா.

“விஷ்வா…” என தாத்தா ஆரம்பிக்கும் போதே, “நல்ல பசி தாத்தா, சாப்பிட்டு பேசலாமா?” எனக் கேட்டான் அவன்.

தாத்தா சரி என்க, வேதாவை பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு உணவு மேசைக்கு சென்றான் அவன்.

அவனுக்கு பரிமாற வந்த பணியாளை போக சொல்லி விட்டு வேதாவே பரிமாறுவதை கன்னத்தில் கை வைத்து ‘நீயா இது?’ என்பது போல பார்த்தான்.

இவனுக்கு சேவகம் செய்யும் நிலையில் கொண்டு வந்து விட்ட தன் அண்ணனையும் நண்பனையும் மனதிற்குள் திட்டியவள், ‘ஹையோ இந்நேரம் எங்க எந்த நிலைல இருக்காங்களோ!’ என வேதனையும் அடைந்தாள்.

உணவுக்கு பின் தாத்தாவிடம் வந்தமர்ந்தான். வால் பிடித்துக்கொண்டே வேதாவும் வந்தாள்.

அவர்களை விட்டு விடு என சொல்லிக் கொண்டிருந்தார் தாத்தா.

“அப்படிலாம் விட முடியாது தாத்தா, இதை வேற மாதிரி கூட டீல் பண்ணியிருக்க முடியும், நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னுதான் சட்டப் படி மூவ் பண்றேன்” என உறுதியாக சொன்னான் விஷ்வா.

“அவங்க யாரோ இல்லை விஷ்வா, ஒருத்தன் வேதாவோட அண்ணன், இன்னொருத்தன் உன் அம்மாவோட மகன்” என்றார் தாத்தா.

அசுவாரஷ்யமாக தாடையை தடவி விட்டுக் கொண்டவன், “இந்த அம்மா ஆட்டுக்குட்டி பேச்சையெல்லாம் எப்பதான் விடுவீங்க தாத்தா? அந்த பொடியனுக்கு எவ்ளோ திமிர் இருந்தா என் ஃபேக்டரி மேல கை வைக்க நினைச்சிருப்பான், அவனை விடணுமா நான்?” எனக் கேட்டான்.

வேதா தாத்தாவிடம் கண்களால் கெஞ்ச, “சரிப்பா… போனா போகட்டும் விட்ரு, அதனால நீ ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்ட” என்றார் தாத்தா.

“நான் ஒரு அடி குறைஞ்சாலும் பரவாயில்லை தாத்தா, இந்த விஷயத்துல நீங்க டென்ஷன் எடுத்துக்க வேணாம். அவங்கள்ட்ட எதுக்காக கருணை காட்ட நினைக்குறீங்க, இவதானே ரீசன்? இந்த வீட்டுல எல்லாம் இவ உரிமைதான், எந்த பொருள் எங்க இருக்கணும், அடுத்த வேலை என்ன சமையல் நடக்கணும் எல்லாம் இவ இஷ்டம்தான். அதுக்காக விஷ்வாவை அவ இஷ்ட படி வளைக்க நினைக்க வேணாம்னு சொல்லுங்க, நீங்களும் அதுக்கு ட்ரை பண்ணாதீங்க தாத்தா” என அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

தாத்தா அடுத்து பேசுவதற்குள், “விஷ்வா ப்ளீஸ்… நீங்க அவங்கள விட நான் என்ன பண்ணணும்?” தீவிரமாக கேட்டாள் வேதா.

அவனுக்கு சுவாரஷ்யம் பிறக்க, அவளை பார்த்துக் கொண்டே எழுந்தான்.

பெரியவர் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, “என்ன வேணா செய்வியா?” எனக் கேட்டான்.

வில்லங்கமாக என்ன கேட்டு வைப்பானோ என அவளுள் பயப் பந்து உருண்டது, ஆனாலும் சம்மதமாக தலையசைத்தாள்.

“நான் கிளம்பறேன் தாத்தா” என்றவன், பார்வையால் தன்னுடன் வரும்படி வேதாவுக்கு கட்டளையிட்டு விட்டு வாயிலை நோக்கி நடந்தான்.

நான் பேசிக் கொண்டிருக்கையில் இந்த பெண் எதற்கு தலையிட்டாள் என பெரியவருக்கு அதிருப்தி, தாத்தா நெருக்கடி கொடுத்தால் அவனால் அதிக நேரம் மறுப்பு சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

 வேதாவுக்கோ தாத்தா மேம்போக்காக பேசுவதாக எண்ணம், விஷ்வாவின் அழுத்தமும் அவனிடம் சிறை பட்டிருப்பவர்களை பற்றிய பயமும் அவளை இடையிட செய்திருந்தது.

அவனிடம் கடினமாகவோ கண்டிப்போடோ பேசியெல்லாம் காரியம் சாதிக்க முடியாது, தாஜாவாக பேசினால்தான் அவன் மசிவான் என்பதால்தான் தாத்தா அப்படி பேசினார் என வேதாவுக்கு தெரியவில்லை.

விஷ்வாவோ வாகாக தாத்தாவிடமிருந்து நழுவி அவளையும் அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டான்.

காரின் டிரைவர் ஓய்வறை உபயோகிக்க சென்றிருக்க, அவன் வரும் வரை காத்திருக்கும் பொறுமை இன்றி விஷ்வாவே காரை எடுத்தான்.

காரில் அவனுடன் செல்கையில் ‘எங்கே போகிறோம்?’ என சற்று பயத்தோடு கேட்டாள் வேதா.

“நான் உன்னோட ஹஸ்பண்ட்தானே வேதா? எதுக்கு பயந்திட்டே கேட்குற?” என அவன் கேள்வி கேட்க, அவள் பதில் தரவில்லை. முன்னர் அவள் கேட்ட கேள்விக்கு இவனும் பதில் தரவில்லை.

விஷ்வாவின் ஃபேக்டரியில் அவனது அறையில் இருந்தனர் இருவரும். அது எப்போது ஆரம்பிக்க பட்டது, எப்படி வளர்ந்தது, எத்தனை தலைமுறைகளை பார்த்துள்ளது, எத்தனை தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள், வருடத்திற்கு எவ்வளவு லாபம் ஈட்டித் தருகிறது என்பது பற்றிய காணொளி ப்ரஜக்டர் மூலமாக ஒளி பரப்பப் பட, அதை பார்த்தாள் வேதா.

புதிதாக சேரும் தொழிலாளர்களுக்கு இந்த காணொளி காண்பிக்க படும், இங்கு நடக்கும் எந்த நிகழ்ச்சி என்றாலும் இந்த காணொளி கண்டிப்பாக இடம் பெறும்.

காணொளி முடியவும், “உன் உடன்பிறப்பும் அந்த பொடியனும் எதை அழிக்க பார்த்திருக்காங்கன்னு புரியுதா?” எனக் கேட்டான்.

அவள் தவிப்போடு அவனை பார்த்தாள். “என் இடத்துல நீ இருந்தா என்ன செஞ்சிருப்ப?” எனக் கேட்டான்.

“உங்க கூட வரலைனா எங்களை நடுத் தெருவுல நிறுத்துவோம்னு நீங்களும் சொன்னீங்க, மறந்திட வேணாம்” என்றாள்.