வேதா கீழே வந்த போது தாத்தா ஹாலில்தான் அமர்ந்திருந்தார், அவருடைய உதவியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
வேதாவை பார்த்தவர், “வாம்மா, நல்லா தூங்கினியா?” என விசாரித்தார்.
“தாத்தா அது…” என்றவள் உதவியாளரை பார்த்து பேசத் தயங்க, விஷ்வாவின் பி ஏ வினித்’தும் வந்தான்.
பெரியவருக்கு வணக்கம் தெரிவித்த வினித், “ஸார் இன்னும் எந்திரிக்கலையா ஸார்?” என பவ்யமாக கேட்டான்.
“போய் எழுப்பி விடுறியா?” என தாத்தா கிண்டலாக கேட்க, “ஹையோ!” என அலறினான் வினித். முன்பொரு முறை அப்படி விஷ்வாவை எழுப்பி விட்டு நன்றாக வாங்கிக் கொண்ட அனுபவத்தை அவனது வாழ்நாளில் அவனால் மறக்க முடியாது.
“ம்ம்ம்…” என்ற தாத்தா பெருமூச்சு விட, அவருக்கு விஷயம் தெரியும் என்பதை விளங்கிக் கொண்டாள் வேதா.
“அவங்கள உங்க பேரன்தான் பிடிச்சி வச்சிருக்கார் தாத்தா” சற்றே கோவமாக சொன்னாள் வேதா.
தாத்தா வினித்திற்கு கண் காட்டினார்.
“மேடம் இதை பாருங்க” என சொல்லி தன் கைப்பேசியில் காணொளி ஒன்றை காண்பித்தான் வினித்.
ஆதிரன், சித்தார்த் இருவருமே நள்ளிரவில் விஷ்வாவின் ஸ்டீல் ஃபேக்டரியில் அத்து மீறி நுழைந்திருக்கிறார்கள். மின்சார கட்டுப்பாட்டு அறையில் நாட்டு வெடிகுண்டு வைத்து விட்டு வெளியேறும் சமயத்தில் செக்யூரிடிகள் பிடித்து விட்டார்கள்.
“ஏதாவது அசம்பாவிதம் ஆகியிருந்தா எவ்ளோ லாஸ் ஆகியிருக்கும் மேம் நமக்கு? அதை விட அங்க டூட்டில இருந்தவங்க உயிருக்கு கூட ஆபத்தாகிருக்கும்” என்றான் வினித்.
கைப்பேசியை வினித்திடம் கொடுத்த வேதா, கலங்கிய முகத்தோடு தாத்தாவை பார்த்தாள்.
பெரியவரால் பதில் சொல்ல முடியவில்லை, பேரன் மீது கோவமாக வந்த அடுத்த நொடி, பின் அவனும் என்ன செய்வான் எனவும் நினைத்தார். பாரம்பரியமான நிறுவனம், அவர்களின் அடையாளம், அதை சிதைக்க நினைத்தவர்கள் மீது தள்ளாத வயதிலிருக்கும் தனக்கே சினம் பொங்கி எழும் போது, அவனுடைய இள ரத்தம் கொதிக்காமல் போனால்தான் ஆச்சர்யம் என எண்ணிக் கொண்டார்.
“நல்லதையே நினைப்போம்மா” என மட்டும் வேதாவுக்கு ஆறுதல் சொன்னார்.
சற்று முன் இவள் எழுப்பி விட்ட போது விஷ்வா அத்தனை கோவத்தை காட்டவில்லையென்றாலும் இறுதியில் அவன் சத்தம் போட்டது அவளுக்கும் நினைவுக்கு வந்தது.
“நான் எழுப்பி விடுறேன், கோவ பட்டாலும் பரவாயில்லை” என்ற வேதா மாடியேறப் போனாள்.
“அப்படி இல்லமா, தூக்க கலக்கத்துல எரிச்சலா இருப்பான், நாம சொல்றத கேட்டுக்க மாட்டான், அவன் கோவத்தை ஹேண்டில் பண்ண முடியாது, விடியகாலைதான் வீடு வந்திருப்பான் போல, அவனா எந்திரிச்சு வரட்டும்” என சொல்லி விட்டார் தாத்தா.
“வீட்ல என்ன சொல்லட்டும்” என கேட்டவளுக்கு, “உள்ளதை சொல்லு மா” என்றார் தாத்தா.
“எல்லாருக்கும் தெரிய படுத்தணுமா தாத்தா? உண்மை தெரிஞ்சா அப்பாவே போலீஸ்ல பிடிச்சு கொடுத்திடுவார்” என தன் பயத்தை சொன்னாள்.
வேதாவுக்காக தாத்தாவும் நிதானமாக செயல் பட வேண்டியதாகி விட்டது. ஆகவே, “சரிம்மா, நடந்ததை சொல்ல வேணாம், நீயே ஏதாவது பொருத்தமா சொல்லி சமாளிமா” என முடித்துக் கொண்டார்.
நண்பன் ஒருவனது வீட்டில்தான் இருவரும் இருக்கிறார்கள், நம் அனைவரின் மீதும் கோவமாக இருப்பதால் கைப்பேசியை அணைத்து வைத்திருக்கிறார்கள், அவர்களே வருவார்கள் என அப்பாவிடம் சொன்னாள் வேதா.
வளர்ந்த பிள்ளைகள் போலவா நடக்கிறார்கள், வீட்டுக்கு வரட்டும் என திட்டினாலும் சந்திரன் இப்போதுதான் ஆசுவாச பட்டிருக்கிறார் என்பது அவரது பேச்சிலேயே தெரிந்தது.
அறைக்கு திரும்பிய வேதா குளித்து, தயாராகி விஷ்வாவை போய் பார்த்தாள். கால்களுக்கு இடையில் தலையணை ஒன்று கிடக்க, இன்னொரு தலையணையை கட்டியணைத்துக் கொண்டு தோரணையாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.
முணு முணுப்பாக திட்டிக் கொண்டே சற்று நேரம் அங்கேயே நின்றாள். பசியை உணரவும் சாப்பிடலாம் என சென்றாள். ஆதியும் சித்துவும் சாப்பிட்டிருப்பார்களா என்ற கேள்வி எழ, அவளால் சாப்பிடவே முடியவில்லை. தட்டில் பரிமாற பட்டிருக்கும் உணவு வீணாக வேண்டாம் என எண்ணி கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு மீண்டும் அவனது அறைக்கு வந்தாள்.
புரண்டு படுத்தவன் கலையாத உறக்கத்தோடு கண்களை திறந்தான். சிவந்து போயிருந்த விழிகள் எரிச்சலை கொடுக்க, மீண்டும் பழைய படி படுத்து உறக்கத்தை தொடர்ந்தான்.
அதற்கு மேல் அவளால் பொறுமை காக்க முடியவில்லை. அவனது தோளில் கை வைத்து அசைத்து எழுப்பி விட்டாள். அவள் தொட்ட வேகத்தில் தீ பட்டது போல துடித்துப் போனான்.