தங்கையைக் கண்டதும் மங்கையால் மலர்ந்திருந்த அவன் முகம் மேலும் மலர்ந்தது.

எழுந்து அமர்ந்தவன் “டியூஷன் முடிஞ்சிருச்சா கயல் குட்டி?”, என்று கேட்டான்.

“முடிஞ்சிட்டு அண்ணா, இன்னைக்கு என்ன ஆச்சு? நம்ம ஹிட்லர் சத்தம் அதிகமா கேக்குது”, என்று சிரிப்புடன் கேட்டாள்.

“அமைதியா பேசு பாப்பா. அவங்க காதுல விழுந்துறப் போகுது? இன்னைக்கு இன்டர்வியூ போனேன்? ஆனா எனக்கு வேலை கிடைக்கலைல? அதான் இன்னைக்கு சத்தம் கொஞ்சம் அதிகமா இருக்கு. அப்பா வர வரைக்கும் இருக்கும். நீ கண்டுக்காத. போய் முகம் கழுவிட்டு படி. ஏதாவது சந்தேகம்னா கேளு டா”

“சரி அண்ணா”, என்ற படி சென்று விட்டாள்.

            மங்கை குரல் கேட்டதும் அவனிடம் இருந்த நெகட்டிவ் எனர்ஜி முழுவதும் போய் ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன் அவனை சூழ்ந்து கொண்டதால் தங்கையிடமும் சந்தோஷமாகவே பேசினான்.

            கனகா சத்தம் நின்று போயிருக்க அப்போது சேதுராமனின் வண்டியும் காம்பவுண்டுக்குள் நுழைந்தது. தந்தையால் தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்று தெரிந்தாலும் அவர் வருகையால் பிள்ளைகள் முகம் மலர்ந்து தான் போனது. இனி அடுத்த நாள் வரை எந்த திட்டும் விழாது என்ற நிம்மதி அவர்கள் இருவருக்கும் வந்தது.

            ஒன்பது மணிக்கு “பிள்ளைகளா சாப்பிட வாங்க”, என்று அவ்வளவு பாசமாக அழைத்தாள் கனகா.

            அண்ணன் தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு “இதோ வறோம் சித்தி”, என்று ஒன்றாக குரல் கொடுத்தார்கள்.

            அவர்கள் இருவரும் வந்ததும் மலர்ந்த முகத்துடன் பரிமாறினாள் கனகா. ஏனென்றால் அவர்களுடன் சேதுவும் அமர்ந்து சாப்பிடுகிறாரே.

            நான்கு பேரும் உண்டு முடித்ததும் கயல்விழி அனைத்து பாத்திரங்களையும் கழுவிக் கொண்டிருக்க சேது ராமன் அங்கே இருந்ததால் “கயலு மா, அதை எல்லாம் அப்படியே போட்டுரு டா. நான் காலைல கூட கழுவிக்குவேன்”, என்றாள்.

            அதைக் கேட்டு கயல்விழி பாத்திரம் விளக்காமல் போட்டுவிட்டு சென்று விட்டால் அடுத்த நாள் முழுவதும் வசவு விழும் என்பதால் “பரவால்ல சித்தி, நான் ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டேன். கொஞ்ச பாத்திரம் தான். இப்ப முடிஞ்சிரும்”, என்றாள்.

            “உன் அக்கா இருந்தா கூட பிள்ளைகளை இவ்வளவு நல்லா பாத்திருப்பாளான்னு தெரியாது கனகா”, என்றார் சேது.

            “இவங்க நம்ம பிள்ளைங்க. நாம தானே நல்லா பாத்துக்கணும்”, என்று சொல்லும் மனைவியை அவ்வளவு காதலாக பார்த்தார் சேது.

            அப்போது அங்கே பார்த்திபன் தண்ணீர் குடிக்க வர“என்ன டா இன்டர்வியூ என்ன ஆச்சு? சாப்பிடும் போது கேக்க வேண்டாம்னு நினைச்சேன்? வேலை எதுவும் கிடைக்கிற மாதிரி இருக்கா இல்லையா?”, என்று கேட்டார் சேது.

            அதற்கு அவன் பதில் சொல்லும் முன் “தோளுக்கு மேல வளந்த பிள்ளை கிட்ட என்ன பேசுறீங்க? இப்ப இருக்குற காலம் நம்ம காலம் மாதிரி இல்லைங்க. வேலை கிடைக்குறது குதிரைக் கொம்பா இருக்கு. அவன் என்ன செய்வான்? இதுக்கு தான் ஒரு டிகிரி மட்டும் படிச்சா போதும்ன்னு சொன்னேன். எங்க அவன் கேட்டான்? அடுத்து மேல படிக்கணும்னு அதையும் படிச்சு பிள்ளை வேலை கிடைக்காம கஷ்டப் படுது”, என்று கனகா நீட்டி முழக்கி பேச பார்த்திபனே அவள் சாகசத்தை வியந்து தான் பார்த்தான்.

            “ஆமா கனகா நீ கூட சொன்ன. நான் தான் கேக்கலை? படிக்கட்டும்ன்னு சொன்னேன்”, என்றார் சேது.

            “இந்த சின்ன கழுதையும் டாக்டர்க்கு படிக்கணும்னு சொல்லிக்கிட்டு திரியுதுங்க மாமா. அதெல்லாம் வேண்டாம். பொம்பளை பிள்ளைக்கு கல்யாணம் தான் முக்கியம். இப்பவே முடிக்க மாட்டோம் தான். ஆனா அந்த படிப்புக்கு ஆகுற செலவுக்கு நகை செஞ்சு வச்சா நல்ல மாப்பிளை கிடைக்கும்”, என்று சொல்ல சேதுராமன் சரி என்று தலையாட்ட பார்த்திபனோ கனகாவை முறைத்துப் பார்த்தான்.

            என்ன ஆனாலும் தங்கையை மருத்துவருக்கு படிக்க வைத்தே ஆக வேண்டும். அவள் கனவை இவர்களை கலைக்க விடக் கூடாது. அதற்குள் ஏதாவது வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

            நிச்சயம் கயல் படிக்கும் படிப்புக்கு மெரிட்டில் சீட் கிடைக்கும் என்று தெரியும். அதனால் தந்தை படிக்க வைக்க வில்லை என்றாலும் தான் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அதற்கு வேலை வேண்டுமே என்று அவன் உள்ளம் சோர்ந்து போனது.

            அதே எண்ணத்துடன் அவனது அறைக்கு வந்தான். நேராக அவன் கண்கள் சென்றது மங்கை அறைக்கு தான். அவள் அறையில் விளக்கு எறிய வில்லை. அதிலே அவள் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று புரிந்தது.

            எப்போதும் பத்து மணிக்கு வந்து விடுவாள். இன்றும் பத்து நிமிடம் தாமதமாகி இருக்க அவளது ஸ்கூட்டி அப்போது தான் உள்ளே வந்தது. அவளையே அவன் இமைக்காமல் பார்க்க அவளோ லேசான புன்னகை முகத்துடன் வீட்டுக்குள் சென்றாள்.

            அவள் உள்ளே போனதும் பார்த்திபனும் படுத்துக் கொண்டான். இன்னும் மங்கை சாப்பிட்டு கதை பேசி விட்டு அறைக்கு வர பதினொரு மணி ஆகும் என்று அவனுக்கு தெரியும் என்பதால் அவன் படுக்கச் சென்று விட்டான்.

            அதே போல பதினொரு மணிக்கு அறைக்கு வந்த மங்கை ஜன்னல் வழியாக அவன் அறையை பார்த்தாள். அவன் அறை விளக்கு அணைத்திருப்பதால் “தூங்கி இருப்பான்”, என்று எண்ணிக் கொண்டாள்.

            அடுத்த இரண்டு நாள் கழித்து காலையில் ஒரு கம்பெனியில் இருந்து இன்டர்வியுக்கு வரச் சொல்லி இருக்க டிப் டாப்பாக கிளம்பி பஸ் ஸ்டாண்ட்க்கு நடந்து சென்று கொண்டிருந்தான் பார்த்திபன். அவனது வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட்க்கு ஒரு மூன்று நிமிடம் நடக்க வேண்டும் என்பதால் நடந்து சென்று கொண்டிருந்தான்.

            அப்போது கவின் ஒரு மரத்தடியில் ஸ்கூல் யுனிபார்ம் அணிந்து தன்னுடைய சைக்கிளில் நின்று கொண்டிருந்தான். “இந்நேரம் இவன் எதுக்கு இங்க நிக்குறான். சைக்கிள் ஏதாவது பிரச்சனையா?”, என்று எண்ணிக் கொண்டே அவனை நெருங்க அவனும் தயக்கத்துடன் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

            அவனுக்கு பிடித்த மங்கையின் தம்பி ஆயிற்றே. அதனால் தயக்கத்தை உதறி “ஸ்கூல்க்கு போகலையா கவின்? சைக்கிள் ஏதும் பிரச்சனையா?”, என்று கேட்டான்.

            “இல்லை நீங்க வருவீங்கன்னு தான் நின்னுட்டு இருக்கேன்”, என்று கவின் சொல்ல பார்த்திபனுக்கு வியப்பு தான்.

            “எனக்காகவா நிக்குற? என்ன விஷயம்?”

            “இல்லை. அது.. அது வந்து.. ஸ்கூல்ல இருந்து எல்லாரும் டூர் போறோம். கயல் வர மாட்டேன்னு சொல்லிட்டா போல? அவ பிரண்ட்ஸ் தான் என்னை உங்க கிட்ட பேச சொன்னாங்க”, என்று சொல்ல பார்த்திபன் அமைதியாக நின்றான்.

            தங்கைக்கு ஆசை இருந்தும் எதனால் அப்படி சொல்லி இருப்பாள் என்று அவனுக்கு புரிந்தது. “அடுத்த வருஷம் யார் எந்த காலேஜ்ல படிப்போம்ன்னு தெரியாது. எல்லாரும் இந்த ஸ்கூல்ல இருந்து போயிருவோம். அதனால இந்த டூர் கொஞ்சம் முக்கியம். எல்லாரும் போகும் போது அவ மட்டும் வரலைனா எங்களுக்கு கஷ்டமா இருக்கும். நீங்க எதுவும் பண்ண முடியுமா? உங்க சித்தி கிட்ட பேச முடியாது, அதான் உங்க கிட்ட கேக்குறேன். இல்லை உங்களால முடியாதுன்னா கூட சொல்லுங்க. நாங்க பைசா போட்டுக்குறோம். அவளை கூட்டிட்டு போறதுக்கு மட்டும் பெர்மிஷன் வாங்கித் தாங்களேன்”, என்றான் கவின்.

            “நீ ஸ்கூல்க்கு போ கவின். கயல் கட்டாயம் டூர்க்கு வருவா. நான் பணம் ஏற்பாடு பண்ணிட்டு சொல்றேன். எவ்வளவு கட்டணும் ?”

            “ரெண்டாயிரம் ரூபாய் கட்டணும், அதுவும் இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு பணம் கட்ட”

            “சரி நான் ஏற்பாடு பண்ணுறேன். அவ கிட்ட இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்”, என்று சொல்ல கவினும் சரி என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்று விட்டான்.

            கவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றதும் பார்த்திபனும் பஸ் ஸ்டாண்ட் நோக்கிச் சென்றான். எந்த வேலையா இருந்தாலும் சரி. அதில் சேர்ந்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தான் அங்கே சென்றான். ஆனால் நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன?

            பஸ் பிடித்து அங்கே செல்ல கொஞ்சம் கசங்கி தான் போனான். ஆனாலும் அவன் தைரியமாக நல்ல படியாக தான் நேர்முகத் தேர்வை எதிர்க் கொண்டான். ஆனால் வேலை?

தொடரும்..