கனகா பேசுவது மங்கைக்கும் கேட்க அவளது அறையின் ஜன்னலில் சாய்ந்து நின்றவள் அவன் வீட்டைப் பார்த்தாள். அங்கிருந்து பார்க்கும் போது அவனது அறை தெரியும் தான். ஆனால் அவனும் ஜன்னல் பக்கம் வந்து நின்றால் தான் தெரியும். இல்லையென்றால் தெரியாது.

            அவனோ கட்டிலில் படுத்து கண்களை கையை வைத்து மூடி படுத்திருந்தான். அவன் கண்களின் ஓரம் ஈரமாக இருந்தது. இந்த கவலைகள் எல்லாம் தங்கைக்கு வேண்டாம் என்று எண்ணி தான் பத்தாவது வந்ததும் அவளை பள்ளிப் விடுதியில் சேர்க்க ஆசைப் பட்டான்.

            அதற்கும் வீட்டு வேலைகள் செய்ய ஆள் இல்லை என்று கனகா சொல்லி அவளை விடுதிக்கு அனுப்ப வில்லை. அதுவும் சேதுவிடம் “மகளைப் பிரிந்து இருக்க முடியாதுங்க. ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம், அவ குழந்தைங்க”, என்று சொல்லி நினைத்ததை சாதித்துக் கொண்டாள். அதனால் தங்கையாவது தோழிகளுடன் நிம்மதியாக இருக்கட்டும் என்று எண்ணிய பார்த்திபனின் எண்ணம் தோல்வி அடைந்தது.

            ஆனால் இதே கனகா தான் கயல்விழி ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது இரண்டு பிள்ளைகளையும் விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க வேண்டும் என்று பேசியது. அப்போதும் சேதுராமன் மறுத்து விட்டார். இப்போதும் மறுத்து விட்டார்.

            இப்போது கனகா அவனது தன்மானத்தை சீண்டும் வகையில் பேசிக் கொண்டே இருக்க அவன் கண்களில் வேதனை படர்ந்திருந்தது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த மங்கைக்கோ அவன் முகம் தெரியாதா என்று இருந்தது. நிச்சயம் உள்ளுக்குள் குமுறிக் கொண்டு தான் இருப்பான் என்று அவளுக்கு தெரியும். அவன் முகம் பார்த்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று எண்ணி அவள் பார்த்துக் கொண்டிருக்க அவன் அசையவே இல்லை.

            “ஏன்டி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?”, என்ற கோமளத்தின் குரலில் அவள் ஜன்னல் பக்கம் இருந்து திரும்பி விட்டாள்.

கோமளத்தின் குரல் கேட்டதுமே நெற்றியில் இருந்து கையை எடுத்த பார்த்திபன் எழுந்து ஜன்னல் பக்கம் சென்றான். நிச்சயம் மங்கை அவளது அன்னைக்கு பதில் சொல்லுவாள் என்று தெரியும். அவன் மங்கை பேசுவதற்காக ஆவலாக காத்திருக்க அவளும் அவன் நினைத்த படி “இப்ப என்ன மா உனக்கு பிரச்சனை? நீ எனக்கு அம்மாவா? இல்லை மாமியாரா?”, என்று கேட்டாள். அதைக் கேட்டு அவன் உதடுகள் மலர்ந்தது.

“நான் உனக்கு மாமியாரா இருந்தா என்னை எல்லாம் விட்டு வைப்பியா டி நீ?”, என்று கோமளம் கேட்க அவனுக்கோ “கோமு அத்தை சொல்றது சரி தான்”, என்று தான் தோன்றி வைத்தது. கனகா பேசுவதைக் கூட கேட்காமல் இவர்கள் பேச்சில் அவ்வளவு ஆர்வமானான்.

“அவ்வளவு கொடுமைக்காரியா மா நான்?”, என்று மங்கை பாவமாக கேட்க இப்போது அவள் முகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்த பார்த்திபனுக்கு கனகா கத்தும் குரல் எல்லாம் காதிலே விழ வில்லை. அவ்வளவு சிரிப்பு வந்தது. “ஹா ஹா”, என்று வாய் விட்டே சிரித்தான்.

“அப்படியே நடிச்சிருவியே நல்லவ மாதிரி?”, என்று கோமளம் சொல்ல அன்னையை முறைத்தவள் “சரி சொல்லு எதுக்கு அப்படி கத்துன?”, என்று சத்தமாகவே கேட்டாள்.

“நான் பேசுறது கத்துறதுன்னா அப்ப நீ பேசுறது?”

“உன் மாமியார் கிட்ட பேசி பேசி என் குரலே அப்படி ஆகிருச்சு மா, சரி என்ன விஷயம்ன்னு சொல்லு”

“மாடியில துணி காயப் போட்டுருக்கியே? ஜட்டியை கூடவா அப்படி காயப் போடுவ? எல்லாருக்கும் தெரியுற மாதிரி?”, என்று கேட்டாள். கோமளம் இதை எல்லாம் சத்தமாக சொல்ல வில்லை.

ஆனால் மங்கை அப்படி இல்லையே? “அம்மா எனக்கு பீரியட்சஸ் மா, இந்த நேரத்துல வெயில் தான் காயப் போடணும். நிழல்லயா போட முடியும்? வெயில்ல போட்டா தான் கிருமி எல்லாம் போகும்”, என்று அவள் சொல்ல அவனுக்கு எல்லாம் தெளிவாக கேட்டது. கூடவே அதைக் கேட்டு சங்கோஜமாகவும் அவனுக்கு இருந்தது.

“இருந்தாலும் மறைவா போடவேண்டாமா டி?”

“அப்ப நான் தரையில தான் பாய் விரிச்சு போடணும்? போடவா?”

“உன் கிட்ட போய் சொல்ல வந்தேன் பாரு. நேரம் ஆகிட்டு. சென்டர்க்கு கிளம்பு. இன்னும் ரெண்டு கிளாஸ் இருக்குன்னு சொன்னியே? அப்புறம் என்னால தான் லேட்டுன்னு கத்துவ?”

“சரி சரி கிளம்புற நேரத்துல உன் லெக்சரை ஆரம்பிக்காத. நான் குளிக்க போறேன்”, என்று சொன்னவள் மாற்று துணியை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அவனும் கட்டிலில் அமர்ந்து அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

பார்த்தி பார்த்தி என்று தன்னையே சுற்றி வந்த குட்டி மங்கையர்க்கரசி அவன் நினைவில் வந்தாள். அப்படியே அந்த நட்பு தொடர்ந்திருக்கலாம் என்று ஏக்கம் வந்தது. உண்மையைச் சொல்ல போனால் அவன் சகஜமாக பேசிப் பழகிய முதல் பெண் மங்கை தான். அவளுக்கு பிறகு அவனுக்கு எந்த பெண் தோழமையும் ஏற்பட வில்லை.

மங்கை தினமும் காலை உணவை உண்டு விட்டு டிரைவிங் ஸ்கூல் செல்பவள் மதிய உணவு உண்ண மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவாள். பின் மாலை ஐந்து இல்லையென்றால் ஆறு மணி வரை வீட்டில் இருந்து விட்டு டீ குடித்து விட்டு மீண்டும் செல்வாள். இரவு பத்து மணி ஆகும் அவள் வீட்டுக்கு வர.

சில நேரம் கடைசி கிளாஸ் இல்லை என்றால் முன்பே வந்து விடுவாள். கிளாஸ் இருப்பதை பொறுத்து தான் அவள் வீட்டுக்கு வரும் நேரம் இருக்கும். இது தான் அவளது தினசரி வேலை நேரம்.

அவளது பயிற்சி பள்ளியில் மங்கையை தவிர டிரைவிங் சொல்லிக் கொடுக்க அருண் என்ற டிரைவரும் ஜோதி என்ற பெண்ணும் இருக்கிறார்கள். அருண் ஒரு ஆட்டோ டிரைவர். அதனால் அவன் காலை மாலை இரண்டு வேளையிலும் பள்ளி குழந்தைகளை ஏற்றி இறக்கி விட்டு தான் சென்டர் வருவான். மங்கையை விட ஐந்து வயது மூத்தவன் என்பதால் மங்கை அவனை அண்ணன் என்றே அழைப்பாள்.

அருணும் பாப்பா என்ற சொல்லுக்கு மறுசொல் சொல்ல மாட்டான். சரியாக அவனுக்கான சம்பளத்தையும் கொடுத்து விடுவாள்.

ஜோதிக்கு குழந்தைகள் இருப்பதால் காலை பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு பணிக்கு வருவாள். மாலை ஆறு மணி போல வீட்டுக்கு சென்று விடுவாள். அவளும் மங்கையை விட ஏழு வயது மூத்தவள். மூவருக்குமே சமமாக தான் கிளாஸ் இருக்கும். அவர்கள் கிளாசுக்கு ஏற்ற படி சம்பளமும் மாறும். சில நேரம் ஜோதி லீவ் எடுத்து அந்த வகுப்பை அருண் எடுத்திருந்தால் அவனுக்கான சம்பளமும் ஊக்கத் தொகையுமே மங்கை கொடுப்பாள்.

மூவருக்குமே அவர்கள் செடியுல் மனப்பாடம் என்பதால் அதன் படி அவர்கள் கிளாஸ் இருக்கும். பெட்ரோல், இதர செலவுகள் மற்றும் அவர்கள் இருவருக்கும் சம்பளம் கொடுத்து போக வருமானமும் ஓரளவு நன்றாகவே இருந்தது. அதிகமாக பெண்கள் தான் பயிற்சி எடுக்க நினைப்பார்கள் என்பதால் மங்கை நடத்தும் பள்ளிக்கு ஆட்கள் சரளமாகவே வந்தார்கள்.

அன்னையிடம் பேசி விட்டு மங்கை குளிக்கச் செல்ல பார்த்திபனும் அவள் குரல் கேட்கவில்லை என்றதும் அமைதியாக சென்று படுத்துக் கொண்டான். ஆனால் மனதில் அப்போது இருந்த கவலை எதுவும் இல்லை. கனகா இன்னும் பேசிக் கொண்டிருக்க என்ன பேசுகிறாள் என்று கூட அவனுக்கு புரிய வில்லை.

அவன் மனம் முழுக்க மங்கையே நிறைந்திருக்க “உடம்பு சரி இல்லையாமே? இந்த நேரத்துல அவளுக்கு டயர்டா இருக்குமே? இந்த வலியோட எப்படி டிரைவிங் சொல்லிக் கொடுப்பா”, என்று அவளுக்காக பரிதாபப் பட்டான் அந்த நல்லவன்.

“உன்னைய பாத்தே ஒரு ஆள் பரிதாப படனும்? நீ அவ கஷ்டத்தை நினைக்கிறியா? அவளை தாங்க அவ குடும்பமே இருக்கு. உனக்கு யார் இருக்கா?”, என்று சொன்னது அவன் மனசாட்சி. அப்போது “அண்ணா”, என்று அழைத்த படி உள்ளே வந்தாள் கயல்விழி.