சந்தியாவின் இரவு அலறல்களால் வீரேந்திரனுக்கு முன்பே அவளின் அச்சம் குறித்து உறுத்தத் தொடங்கியிருந்தது.
ஆக, மாமனார் நாராயணனிடம் பொதுவாக இதுகுறித்து அப்பொழுதே விசாரித்திருந்தான்.
“சந்தியா ரொம்ப வீக்கா இருக்கா மாமா… அடிக்கடி காய்ச்சல் வேற வருது… சரியா சாப்பிடறதே இல்லை” என்று அவன் சுற்றி வளைத்துக் கேட்டபோது, அவர் முகத்தில் அளவற்ற ஆனந்தம். அவரின் கண்கள் நட்சத்திரமாய் பிரகாசித்தது
‘நான் என்ன சொல்லிட்டேன்னு மனுஷன் இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறாரு?’ எனப் புரியாமல் விழித்தான் இளையவன்.
“சந்தியா இதைப்பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலையே மாப்பிள்ளை” என்று வருந்தியவர், “பாவம் அவ அம்மா இருந்திருந்தா அவகிட்ட சொல்லி இருப்பா. என்கிட்ட என்னத்த சொல்ல முடியும்?” என தானே சமாதானமும் ஆகியபடி, “எனக்கு ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை. ஆமா டாக்டரை பார்த்தீங்களா? என்ன சொன்னாங்க?” என்று பூரித்த முகத்துடன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, அவன் மலைத்துப் போனான்.
“காய்ச்சலுக்கு டாக்டர் கிட்ட காட்டிட்டோம் மாமா…” என்றான் குழப்பத்துடன்.
அவனின் பதிலிலும் பாவனையிலும் தன் அதிகப்படி ஆர்வம் தெரிந்துவிட, “நல்ல சேதி இல்லையா மாப்பிள்ளை?” என்றவரின் முகம் கொஞ்சம் தொங்கிப் போனது.
இன்னமும் விளக்கினால் தானே! “புரியலை மாமா? என்ன நல்ல சேதி?” அவரின் ஆர்ப்பரிப்பிலும் பின்னர் எழுந்த வருத்தத்திலும் மண்டையைப் பிய்த்துக் கொள்ளாத குறை வீராவுக்கு.
இப்பொழுது நாராயணன் விழித்தார். பல வருடங்களாகக் கண்ணெதிரில் வளர்ந்த பிள்ளை தான்! ஆனால், அவனிடம் எப்படி இதை நேரடியாகக் கேட்க என்ற கூச்சம் எழ, பார்வையை வேறெங்கோ நிலைக்கவிட்டு அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தார்.
அவரின் சங்கடத்தில் குழப்பத்துடன், “மாமா…” என்றான் மீண்டும்.
“அது… அது… வீரா…” மாப்பிள்ளை என்ற புது அழைப்பு மாறி அவ்வப்பொழுது பழைய அழைப்பு எட்டிப்பார்க்கும். அந்த அழைப்பும், அவரின் அலைப்புறுதலும் புரிய, “என்கிட்ட சொல்ல என்ன தயக்கம் மாமா. நேரடியா சொல்லுங்க” என்று ஊக்கம் தந்தான்.
“புதுசா கல்யாணம் ஆனவங்க. அதுதான் விசேஷம் எதுவோன்னு நினைச்சுட்டேன்” என்றார் வெகுவாக தயங்கி.
சில நொடிகள் புரியாமல் விழித்தவன், புரிந்ததும் திருதிருத்தான். கூச்சம் வேறு அவனை ஆட்கொண்டது. இப்பொழுது தான் முத்தம் கொடுக்குமளவே முன்னேறியிருக்கிறான். அதுவும் அவள் உறங்கும் போது. அவனிடம் மாமனார் இப்படி கேட்டு வைத்தால்?
அவனின் சங்கோஜம் பார்த்து பேச்சை மாற்றும் விதமாக, “அடிக்கடி ஏன் காய்ச்சல் வருதுன்னு டாக்டர் எதுவும் சொன்னாங்களா மாப்பிள்ளை?” என்று கேட்டு பேச்சைத் திசை திரும்பினார்.
“பெருசா காரணம் எதுவும் சொல்லலை மாமா. ஆமா அங்கே இருந்தப்ப எப்படி? இதுமாதிரி அடிக்கடி காய்ச்சல் வருமா? சரியா சாப்பிட மாட்டாளா?” என்று விசாரித்தான்.
வீராவால் நேரடியாக சந்தியாவின் இரவு அலறல்களைப் பற்றி விசாரிக்க முடியவில்லை. ஆனால் முயன்றவரை பேச்சை அந்த திசைநோக்கி இழுத்துச் சென்றான். ஆனால், பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்! அதில் கொஞ்சம் சோர்வாகக் கூட உணர்ந்தான்.
நாராயணன், “அந்த மாதிரி எதுவும் பெருசா வந்ததில்லையே மாப்பிள்ளை” என்று யோசனையுடன் அவனைப் பார்த்தார்.
மேற்கொண்டு பேச்சை எப்படி எடுத்துச் செல்ல என்று புரியாமல், “சந்தியா கொஞ்சம் பயந்த சுபாவமோ?” என்று கேட்டான்.
“இன்னும் உன்கிட்ட பயப்படறாளா என்ன?” என்று வியந்தார். அவன் புருவம் சுருங்க கேள்வியாக அவரை பார்த்தான்.
“சந்தியா ரொம்ப பயந்த சுபாவம் எல்லாம் இல்லை மாப்பிள்ளை. அது கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஊரில் எதிர்க்கட்சி எக்ஸ் எம்.எல்.ஏவை வெட்டி கொன்னப்ப நடந்த கலவரம் உனக்கு தெரிஞ்சிருக்குமே… அந்த கலவரத்துல தான்…” என்றவர் தொண்டை அடைக்க சில நொடிகள் பேசாமல் அமைதி காத்தார்.
பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் இன்னமும் ஏற்க முடியாத ஒரு நாள்! தாங்கிக்கொள்ள முடியாத வலி! இதயம் இரண்டாகப் பிளப்பது போன்ற வேதனையை… உயிரோடு தான் எரிவது போன்ற வலியை உணர்ந்த நாள் அது! இன்று வரையிலும் எண்ணி வருந்தும் ஒரு நாளும் கூட!
வீராவுக்கு அந்த கலவரம் தெரியும்! அதில் அவரின் இழப்பும் தெரியும்! ‘தன் மனைவி அதனால் தான் இந்தளவு பாதிப்புக்கு உண்டானாள் போல! பாவம்!’ என்ற கலக்கம் அவனுக்கு!
“மாமா…” என்று ஆதரவாக அவரின் கரம் பற்றித் தட்டிக் கொடுத்தான்.
நாராயணன் ஓரளவு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “என் பொண்டாட்டி வாணியையும், பையன் சரவணனையும் அந்த கலவரத்துல தான்…” என்றவர் தன் தூக்கத்தைச் சொல்ல முடியாமல் ஆழ்ந்த பெருமூச்சை விட்டார்.
“இதுல கொடுமை என்னன்னா… சந்தியாவும் அப்பதான் ஸ்கூல் முடிஞ்சு கலவரம்ன்னு சீக்கிரமே வீட்டுக்கு வந்திருக்கும் போல… அவ அதை நேரில் பார்த்துட்டா… பன்னெண்டு வயசு புள்ள… அந்த காட்சியைப் பார்க்கிறது எவ்வளவு கொடுமை… கண்ணெதிரில அண்ணனையும் அம்மாவையும் வெட்டி வீசறாங்க. இரத்தம் சொட்ட சொட்ட அவங்க துடித்துடிச்சு சாகிறதை இவ பார்த்திருக்கா… கிட்ட ஓடணும்ன்னு முயற்சி செஞ்ச புள்ளையை, நல்லவேளையா கூட இருந்தவங்க தடுத்து பிடிச்சிருக்காங்க… இல்லாட்டி அவனுங்க கையால என் புள்ளையும் போயி சேர்ந்திருக்குமோ என்னவோ… கடவுள் அவளை மட்டுமாவது எனக்காகத் தந்தாரே…” என்றவர் தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டார்.
வீரேந்திரனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சில நொடிகள் ஒன்றும் பேச முடியாமல் மெளனமாக நின்றான்.
ஆனால், அவனுக்குள் உள்ளுக்குள் ஏதோ ஒரு உறுத்தல்! இதெல்லாம் மட்டும் அவளின் பயத்திற்குக் காரணம் இல்லை! நிச்சயம் இன்னும் வேறு ஏதாவது இதனுடன் சேர்ந்து இருக்குமோ என்று அவனுக்கு ஏனோ காரணமேயின்றி உள்ளே உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால், யாரிடம் கேட்பது என்றும் யோசனை வராததால் அதை அத்தோடு விட்டுவிட்டான்.
“என் அக்கா புவனா உதவி செஞ்சதுல புள்ளையை கொஞ்சம் வளர்த்து விட்டுட்டேன்… அதென்னவோ அவளுக்கு அதிலிருந்து அடிதடி சண்டைன்னாலே ரொம்ப பயம் போல… உன்னை கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்னு பேச்சு எடுத்ததுல இருந்தே ஒரே ஆர்ப்பாட்டம், நீயும் அவ படிச்ச காலேஜில் தான் படிச்சியாமே… கண்டிப்பா ரொம்ப பிரபலமா இருந்திருப்ப. உன் வீர சாகசத்தை அவளும் நேரில் பார்த்திருப்பா… அதுனால தான் அப்படி பயந்து இருக்கா… போகப் போக சரியாயிடுவா… நானும் கொஞ்சம் புத்தி சொல்லி வைக்கிறேன்” என்றார்.
“அச்சோ அதெல்லாம் வேண்டாம் மாமா… சந்தியா நல்ல மாதிரி தான் நடந்துக்கிறா… இதை பெருசு படுத்தாதீங்க. பாவம் வருத்தப்படுவா…” என்று தன் மகளுக்காகப் பேசியவனை அவருக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.
அவன் தோளில் தட்டி தந்தவர், சிறு சிரிப்புடன், “உனக்கு கல்யாணமே விருப்பமில்லை. அவளுக்கு உன்னை கட்டிக்க பயம்… இருந்தும் ஏன் இந்த கல்யாணம் தெரியுமா?” என்று கேட்டவரை யோசனையாகப் பார்த்தான்.
“நானும் உன் பெரியப்பா வேதநாயகமும் என்ன சொல்லியும் உன் முரட்டுக்குணமும், வம்பு சண்டையும் குறையலை. எனக்கென்னவோ நீ சந்தியாவை கட்டிக்கிட்டா இதெல்லாம் குறைஞ்சிடுமோன்னு அசைக்க முடியாத நம்பிக்கை… நீ வேணா பாரு என் நம்பிக்கை ஒரு நாளும் வீண் போகாது…” என தோளைத் தட்டி சொல்லியிருக்க,
வீராவின் முகம் சுருங்கிப் போனது. ‘இதென்ன இவருக்கு இப்படி ஒரு நம்பிக்கை? அப்படி என்னால் மனைவிக்காக மாறிக் கொள்ள முடியுமா என்ன?’ அவனுக்கு விடை தான் தெரியவில்லை.
ஆனால், ‘தனக்காக சொந்த மகளின் விருப்பத்தையும் பொருட்படுத்தாமல் இப்படி ஒரு முடிவை எடுத்தவர் என்ன மாதிரியான மனிதர்?’ என வெகுவாக நெகிழ்ந்தான். அவருக்குத் தான் செய்யும் கைமாறு நியாயமே இல்லை என்று வாதிட்டது அவனின் நியாய மனம்! ஆனால் இதைவிட மோசமான நிலையை அவருக்கு தரவிருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியாது பாவம்!
அவனின் குழப்பம் பார்த்து, “இப்ப புரியாது. போக போக உன்னோட மாற்றம் உனக்கே புரியும் பாரு” என்று நம்பிக்கையாகப் பேசிவிட்டுச் சென்றார்.
தான் மாறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதவன், மனைவிக்காகக் கொஞ்சம் மாற முயற்சி செய்ய வேண்டும் என்று மட்டும் யோசிக்கவே இல்லை. உண்மையில் அந்தளவு அவனின் மனையாள் அவனுள் நிறைந்திருக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
என்றாவது ஒருநாள் அவனுள் அவள் நீக்கமற நிறையும் நாள் வருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
அன்று மாமனாரிடம் பேசியதை வைத்துத் தான் வீரேந்திரன் தம்பியிடம் அவளின் மனநிலையைப் பற்றி ஊகமாகச் சொல்லியிருந்தான்.
என்னதான் ஸ்ரீதரனுக்கு சமாதானம் சொன்னபோதும் அவனால் சந்தியா இப்படி எதையும் சொல்லாமல் பிறந்த வீட்டிற்கு சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கொஞ்சம் கௌரவ குறைச்சலாக உணர்ந்தான் என்று கூட சொல்லலாம்.
சந்தியாவை பிரிந்து இருக்க முடியாது என்ற நிலைக்கெல்லாம் வீரேந்திரன் இன்னும் வந்திருக்கவில்லை. அவனை பொறுத்தவரையிலும் அவள்மேல் ஒரு ஈர்ப்பு பிறந்தது அசைக்க முடியாத உண்மைதான்!
கூடவே நாராயணனிடம் பேசிய பிறகு அவர் தன்மீது அத்தனை நம்பிக்கை வைத்து… தன் மகளை தனக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்ததிலிருந்து, அவருக்கு நியாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மனைவி என்ற எண்ணமும் அவனுள் உண்டு. அவள் தன் சரிபாதி என்று ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தான். ஒருமாதிரி கடமையை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு.
ஆனால், கடமைக்கும் உரிமைக்கும் வேறுபாடு இருக்கிறதே! அதேபோல ஈர்ப்புக்கும் காதலுக்கும் கூட!
வீரேந்திரனின் கடமை, உரிமையாக உருப்பெறுவதற்கும்… ஈர்ப்பு காதலாக மெருகேறுவதற்கும் காலம் கொட்டி கிடக்கிறதோ?
இவனாவது இவ்வகை முன்னேற்றம் என்றால், சந்தியா சுத்தம்! கணவன் தானே என முன்பிருந்த உரிமை கூட… அவனின் நெருங்காதே என்ற பாவனையில் வெகுவாக குறைய தொடங்கியிருக்கிறது. பொதுவாகவே கல்லையும், மண்ணையும் பார்ப்பது போலத் தான் கணவனைப் பார்த்து வைப்பாள். அவனோடு வெளியில் செல்வதென்பதே திக் திக் நிமிடங்கள் தான்! இன்று என்ன வம்பு வளர்ப்பானோ என்பதாக!
உண்மையில் அந்த வம்பின் எதிர்வினை என்னவாக இருக்கும்? கணவனுக்கு எதுவும் ஆபத்து வந்துவிடுமோ என்பதே அவளுடைய உண்மையான அச்சம்! அதை அவள் எந்தளவு உணர்ந்திருக்கிறாள் என்பதுதான் தெரியவில்லை!