கைகளை கட்டிக் கொண்டு தள்ளி நின்றிருந்த விஷ்வா இதையெல்லாம் பார்த்துதான் இருந்தான். தன்னை குறித்து வேதாவின் அம்மாவுக்கு என்னவெல்லாம் கற்பனை ஓடுகிறது என அவனுக்கு புரிந்தது. அங்கு நிற்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. ஆனால் தாத்தா அவனை நகர விடாமல் நிறுத்தியிருந்தார். 

இப்போது தாத்தாவை கண்டனமாக பார்த்து வைத்தான். 

“நீ செஞ்ச காரியத்தோட வீரியம் உனக்கு இன்னும் புரியலை விஷ்வா, ஏதோ பொண்ணை அனுப்பி வச்சாங்களேன்னு நினைச்சுக்க. வாசுகி பயப்படுத்துன்னா நாட்டு நடப்பு அப்படியிருக்கு, நீ அப்படி இல்லைனு செயல்ல காட்டு” என்றார் பெரியவர். 

“எனக்கு வேலை இருக்கு தாத்தா, எப்ப விடுவீங்க என்னை?” என கடுப்பாக கேட்டான். 

“ரெண்டு போட்டேனா தெரியும்! இன்னிக்கு வீட்லதான் இருக்கணும் நீ, இதோ இப்ப அவங்க கிளம்பிடுவாங்க, உன் ரூம் போயிடலாம், இரு இரு” என தாத்தா சொல்ல, வேண்டா வெறுப்பாக நின்றான் விஷ்வா. 

அழுது விடாமல் தன்னைக் கட்டுக்குள் வைத்து பெற்றோரை வழியனுப்பி வைத்தாள் வேதா. 

“வேதாவை ரூமுக்கு கூட்டிட்டு போ” என தாத்தா கட்டளையிட, அவளை பார்த்தான் விஷ்வா. 

அவளும் இறுகிய முகத்தோடு அவனை பார்க்க, “வா” என சொல்லி படியேறினான். 

அறைக்குள் ஒருவர் பின் ஒருவராக நுழைந்தனர். எப்படியும் வேதாவை தன்னுடன் வரவழைத்து விடுவேன் என்ற நினைவில் இருந்ததால் அவளது வரவிற்கு தன்னை தயார் செய்திருந்தான் அவன். வேதாவின் மனம்தான் தாமரை இலை தண்ணீராக இருந்தது. 

அவள் அறையை பார்த்துக் கொண்டிருக்க, “அதென்ன உன் அம்மா அப்படி பேசுறாங்க, நீ ஒன்னும் சொல்லாம கேட்டுட்டு நிக்கிற. உன் கூட பேசி பழகிட்டு இருந்தப்ப கூட ஏதாவது அட்வாண்ட்டேஜ் எடுத்திருப்பேனா? தேவையில்லாம உன்னை தொட்டு பேசியிருப்பேனா? கல்யாணம் பண்ணி உன் கூட ரெண்டு நாள் வாழ்ந்திட்டு அப்புறம் விட்டுட்டு போயிருந்தாலும் யாரும் என்னை எதுவும் செஞ்சிருக்க முடியாது, ஆனா அப்படிப்பட்டவன் இல்லை நான்” என்றான். 

“நீங்க பேசுறதுதான் உங்க தரத்தை காட்டும், நல்லவர் மாதிரி காட்டுறேன்னு உங்க உண்மை முகத்தை இன்னும் இன்னும் தோல் உரிச்சி காட்டிட்டு இருக்கீங்க. ‘உன்னை விட்டா என் பேரனை கல்யாணம் பண்ணிக்க எவளும் வர மாட்டா, வாழ்க்கை கொடும்மா’ன்னு தாத்தா கேட்டுகிட்டதால வந்திருக்கேன், உங்களை சகிச்சுக்க முடியாதுன்னு எப்ப தோணினாலும் போயிட்டே இருப்பேன்” என்றாள். 

“ம்ம்… வாழ்க்கை கொடுத்திருக்கீங்களா வேதா மேடம்? என்கூட இருக்க வரைக்கும்தான் உனக்கு வாழ்வு, விட்டுட்டு போய் பாரு, ஏன்டா வாழுறோம்னு உன்னை கதற வைக்கிறேன்” என்றான்.

“என் கூட வாழும் போதே உங்களை கதற வைக்கிறேன் நான், பார்க்குறீங்களா?” 

சளைக்காமல் அவள் பேசிய பேச்சு அவனை எரிச்சல் படுத்த கூடவே கொஞ்சம் சுவாரஷ்யமும் ஏற்பட்டது. 

“அப்ப வாழ ரெடிங்கிற?” என சீண்டலாக கேட்டான். 

“ஓ இப்ப என்ன நான் வெட்க பட்டு சிரிக்கணுமா? வாங்கி கட்டிக்காம ஒழுங்கா போயிடுங்க” என்றாள் அவள்.

“என் வீட்ல என் ரூம்லே வந்து நின்னுகிட்டு என்னையவே வெளியே போவ சொல்றத பாரேன்!” என சொல்லிக் கொண்டே அறையின் வாயிலை நோக்கி நடந்தான். 

“எனக்கு வீடில்லாம ஒன்னும் இங்க வந்து நிக்கல, நான் வரணும்ங்கிறதுக்காக என்னெல்லாம் பேசினீங்கன்னு மறந்திட வேணாம்” 

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவளது பதில் பார்வையில் அங்கு நிற்க இயலாமல் சென்று விட்டான். 

வீட்டிலேயே இருக்க வேண்டும் என தாத்தா உறுதியாக சொல்லி விட்டதால் அவனது அறைக்கு பக்கத்து அறையில் போய் இருந்து கொண்டான். அங்கிருந்தே அவனது வேலைகளையும் பார்த்தான். 

அவன் நிமிர்ந்த போது இரண்டு மணி நேரம் ஓடியிருந்தது. நெட்டி முறித்துக் கொண்டவன் இன்றைய நிகழ்வுகளை அசை போட்டான். அவள் சீறி சீறி பேசுவதும் கண்களை உருட்டிக் கொண்டு முழிப்பதுமாக இருந்ததும் அவனுக்கு நினைவில் வர, ‘சரியான அடாவடி!’ என நினைத்து புன்னகை செய்தான். 

இலகுவான ஆடைக்கு மாறுவதற்காக அறைக்கு சென்றான். அவனது படுக்கையில் குப்புற படுத்து ஒரு பக்க கன்னத்தை தலையணையில் வைத்து முகம் தெரியுமாறு உறங்கிக் கொண்டிருந்தாள். 

பொதுவாக இப்படி உறங்குபவள் கிடையாது. பல நாள் சரியான உறக்கம் இல்லாமல் இவன் தாலி கட்டியதிலிருந்து ஒரு வித அழுத்தத்தில்  உறக்க சீர் கேட்டோடு இருந்தவள். இங்கு வந்ததில் நிம்மதி கிடையாது, ஆனால் அவள் வாழ்க்கை குறித்து ஏதோ ஒரு முடிவு எட்டப் பட்டு விட்டதாக உணர்ந்தாள். ஆதலால்தான் தூக்கம் இவளை தேடிக் கொண்டு வந்திருந்தது. 

ரெஃப்ரெஷ் ஆகிக் கொண்டு வெளியேறி விட்டான் விஷ்வா. அவள் எழுந்து வந்த போது இரவு உணவுக்கான நேரமே வந்திருந்தது. ஆங்கில புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தவன் அவளை பார்த்து விட்டு, “ஆர் யூ ஓகே?” எனக் கேட்டான். 

‘என்னடா இவனுக்கு எம்மேல அக்கறை?’ என்பது போல அவள் பார்க்க, “நீ தூங்கினது பார்த்ததும் உனக்கேதும் ஸ்லீப்பிங் டிஸார்டர் இருக்குமோனு நினைச்சேன், அப்படிலாம் ஏதும் இல்லைதானே?” என கிண்டலையே தீவிர தொனியில் கேட்டான். 

“நான் தூங்கிட்டு இருக்கும் போது வந்தீங்களா உள்ள?” என கண்டனமாக கேட்டாள். 

“ஹையோ ரொம்பதான்! அது என் ரூம்” என்றான். 

“மேனர்ஸ் தெரியாத ஆளுதானே நீங்க?” என்றாள் அவள். 

கையிலிருந்த புத்தகத்தை கோவமாக டீபாய் மீது போட்டவன், “என்ன எனக்கு மேனர்ஸ் தெரியணும்? அப்படியே வச்சுக்க, மேனர்ஸ் தெரியாதவன் எப்படில்லாம் நடப்பான்னு உனக்கு டெமோ காட்டுறேன்” என்றான். 

“வேதா வாம்மா, சாப்பிடலாமா?” என கேட்டுக் கொண்டு தாத்தா வர, இருவரும் அமைதியடைந்து விட்டனர். மூவரும் சேர்ந்தே இரவு உணவை முடித்தார்கள். 

அறைக்கு செல்லும் போதே அவன் ஏதாவது கோக்குமாக்காக செய்வானோ என ஒரு யோசனை அவளுள் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அவளிருந்த அறைக்கு அவன் வரவே இல்லை. பக்கத்து அறைக்கு சென்றவன் அங்கேயே படுத்தும் விட்டான். 

நெஞ்சில் கை வைத்து நிம்மதி அடைந்து கொண்டவள் அம்மா, அப்பா, அத்தை என மூவரிடமும் பேசினாள். இன்னும் அண்ணனிடமும் நண்பனிடமும் பேசியிருக்கவில்லை, அவர்களாக அழைக்காமல் தானாக பேச வேண்டாம் என்ற முடிவிலிருந்தாள். 

பகலில் உறங்கியதால் புத்துணர்ச்சியோடு இருந்தவளுக்கு படுத்தாலும் உறக்கம் வராது என்பதால் சற்று நேரம் அறையிலேயே நடந்தாள். பின் அறைக்கு வெளியில் வந்து ஹெட்செட்டில் பாடல் கேட்டுக் கொண்டே நடந்தாள். 

“தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?” என அவன் கேட்டது அவளின் காதில் விழவில்லை. அவனிருந்த அவசரத்தில் மேலும் ஏதும் கேட்க நேரமின்றி அவளை கடந்து சென்றான். 

அவன் கீழே இறங்குவதை பார்த்தவள் அவனை பின் தொடர்ந்து சென்றாள். வீட்டை விட்டு வெளியேறும் முன் தன் பின்னால் அவள் வருவதை பார்த்தவன், “ஒரு எமர்ஜென்சி, நீ ரூம் போ” என்றான். 

“என்னாச்சு?” என அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் சென்று விட்டான். 

அவனது வரவை எதிர்பார்த்து வெகு நேரம் உறங்காமல் இருந்தாள், என்னவானது, எப்போது வருவாய் என அவள் அனுப்பி வைத்த குறுஞ்செய்திகளை பார்த்தும் பதில் தரவில்லை அவன். நேரம் நான்கை நெருங்கும் சமயம் அவளுக்கு உறக்கம் வந்து விட்டது. 

காலையில் அவளது அப்பா அழைத்து ‘ஆதி, சித்து இருவரையும் காணவில்லை, கைப்பேசி அணைத்து வைக்க பட்டிருக்கிறது, இரவில் நீ ஏதும் அவர்களிடம் பேசினாயா? அவர்கள் எங்கிருக்கிறார்கள் என விவரம் ஏதும் தெரியுமா?’ என விசாரித்தார். 

தனக்கெதுவும் தெரியாது என அவள் சொல்லவும் “என்னன்னு நான் பார்க்கிறேன் வேதா” என சொல்லி வைத்து விட்டார். அவர்களுக்கு வேதாவும் அழைத்து பார்த்தாள், அழைப்பு செல்லவே இல்லை. 

குழம்பிப் போனவள் விஷ்வாவின் அறைக்கு சென்று பார்த்தாள். அவன் உறங்கிக் கொண்டிருந்தான். திரும்ப நினைக்கும் போது அங்கிருந்த சோஃபாவில் கிடந்த கைப்பேசி அவளின் கவனத்தை ஈர்த்தது. பார்க்க அவளின் அண்ணனுடையது போலவே இருந்த அந்த கைப்பேசியை கையில் எடுத்துப் பார்த்தாள். அணைந்து போயிருக்க, கைப்பேசியுடனே சத்தமின்றி அங்கிருந்து வெளியேறினாள். 

தனதறைக்கு சென்றவள் கதவடைத்து விட்டு கைப்பேசிக்கு சார்ஜ் போட்டு விட்டு அண்ணன் உபயோகிக்கும் கடவுச்சொல்லை போட்டாள். திறந்து கொண்ட கைப்பேசியில் ஆதி சிரித்துக் கொண்டிருந்தான். 

கோவாவேசமாக விஷ்வாவின் அறைக்கு சென்றவள் அவனது தோளை தட்டி எழுப்பினாள். 

உச்சு கொட்டியவன் புரண்டு படுத்துக் கொண்டான். 

“எழுந்துக்குறீங்களா இல்லை தண்ணி எடுத்து ஊத்தவா?” என அவள் சத்தம் போடவும், கண்களை திறந்தவன் படுக்கையில் இருந்த வண்ணமே எரிச்சலாக, “என்ன?” எனக் கேட்டான். 

“என் அண்ணாவும் சித்துவும் எங்க?” என சீற்றமாக கேட்டாள். 

“என்னை கேட்டா?” என அலட்சியமாக சொன்னான். 

அண்ணனின் கைப்பேசியை காண்பித்தவள், “ஒழுங்கா சொல்ல போறீங்களா இல்லையா?” என அதட்டினாள். 

சாவகாசமாக எழுந்தவன் அவள் எதிர் பார்க்காத நேரம் அவளை வளைத்து பிடித்து கைப்பேசியை கைப்பற்றிக் கொண்டான். மீண்டும் அதை தன் வசப் படுத்த அவள் என்ன முயன்றும் நடக்கவில்லை. 

“அவங்க என்ன பண்ணினாங்க உன்னை? எதுக்காக அவங்கள புடிச்சு வச்சிருக்க? தயவுசெஞ்சு அவங்கள விட்ரு” என கெஞ்சினாள். 

அவன் மௌனம் சாதிக்க, “இப்பவே தாத்தாகிட்ட போறேன்” என அழுகையோடு சொன்னாள். 

“யார்கிட்ட வேணாலும் போய் சொல்லு” என சீறியவன் மீண்டும் படுத்து விட்டான். 

வேக மூச்சுகளோடு அவனை பார்த்தவள், அடுத்து ஏதோ சொல்லப் போக, அதற்கு அனுமதிக்காதவன், “ஏதும் பேசாம வெளில போடி!” என இரைந்தான். 

 கண்களை துடைத்துக் கொண்டே வெளியேறினாள் வேதா.