நீயென் நாயகி -4

அத்தியாயம் -4

வேதாவை புகுந்த வீட்டில் விட்டு வருவதற்காக மனைவியை தயாராக சொன்னார் சந்திரன். திருமணம் செய்து கொள்ளாமல் ஓடுவான், பின் வலுக் கட்டாயமாக தாலி கட்டுவான், இந்த பையன் நல்ல மன நிலையில் உள்ளவனா? அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது? எப்படி நீங்கள் இதற்கு சம்மதம் சொன்னீர்கள் என கணவரிடம் வாக்குவாதம் செய்தார் வாசுகி. 

“இதுக்கெல்லாம் எனக்கு பதில் சொல்ல தெரியலை வாசுகி, இதுதான் சரியான முடிவு, வேதா நல்லாருப்பான்னு என் உள்ளுணர்வு சொல்லுது, நாளைக்கு அவ நல்லா வாழ்வா, நீ இப்ப முகம் திருப்பினது நினைப்பு வச்சுக்கிட்டு விஷ்வா உன்கிட்ட சரியா பழகாம போனா உனக்குத்தான் வருத்தம் ஆவும். வர்றியா என்ன இப்போ?” என்றார் சந்திரன். 

வாசுகிக்கு மகளின் வாழ்க்கை மீதான குழப்பம், சந்தேகம், பயம் எதுவும் தீர்ந்த பாடாக இல்லை. ஆனாலும் கணவருடன் புறப்பட்டார். 

மகனுக்கு திருமணம் முடிந்த பிறகு, அவனது வீட்டில் எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் தானே செய்வது எனதான் முன்னர் நினைத்திருந்தார் அகல்யா. தன் மீது இத்தனை துவேஷத்தில் மகன் இருக்க, இப்போது தள்ளியே நின்று கொண்டார். பெரியவர் மூலமாக வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணியிடம் எல்லாம் ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தார். 

சித்தார்த்தும் ஆதிரனும் வேதாவை அவனுடன் அனுப்ப வேண்டாம் என போராடி பார்த்து, அது நடக்காமல் போகவும் கோவத்தோடு அங்கிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். அதுதான் எல்லாம் சுமூகமாக முடிந்ததே, நீங்கள் பாருங்கள் என குணசேகரும் தன் வேலையை பார்க்க புறப்பட்டிருந்தார். 

சண்முகநாதனும் விஷ்வசுகந்தனும் இன்னும் அங்குதான் இருந்தனர். வேதா புறப்பட தயாராகிக் கொண்டிருக்க, நேரத்தை நெட்டி தள்ளிக் கொண்டிருந்தான் விஷ்வா. 

மருமகள் பட்டுபுடவை கட்ட உதவி, அவளுக்கு மெலிதாக அலங்காரமும் செய்து விட்டார் அகல்யா. 

“இதெல்லாம் எதுக்கு அத்தை?” என சலித்தாள் வேதா. 

“வாழ்க்கையோட முக்கியமான நிகழ்வுடி இது, இப்ப இல்லாம எப்ப அலங்கரிச்சுக்குவ? பேசாம உட்கார்” என உரிமையோடு அதட்டினார் அகல்யா. 

விஷ்வாவை கணவனாக ஏற்றுக்கொள்கிறேன் என தாத்தாவிடம் சம்மதித்து விட்டாலும் வேதாவுக்கு மிகப்பெரிய மனக் கலக்கம், அவனுடன் வர வேண்டுமென்பதற்காக தன்னை அவன் மிரட்டியதை நினைத்துப் பார்த்தவளுக்கு அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. 

திருமணம் முடிவாகியிருந்த காலத்தில் கூட அதிகார தொனியில்தான் பேசுவான் என்றாலும் இந்த அளவு பயங்கரமானவன் என நினைக்க முடியாத அளவுக்குத்தான் அவனது பேச்சுக்கள் இருக்கும். நடித்திருக்கிறான் என இப்போதுதான் அவளுக்கு தெரிகிறது. 

வீட்டினரிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் தன் உணர்வுகளை மறைத்தவளாகத்தான் கிளம்பினாள். 

பட்டுப் புடவையும் நகைகளுமுமாக மணப் பெண்ணாகவே தயாராகி வந்து நின்ற வேதாவை பார்த்த விஷ்வா, “வந்தாச்சு தாத்தா, இப்போவாவது கிளம்பலாம்தானே?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்தான். 

“இருடா!” என்றவர் இருவரையும் வேதாவின் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள சொன்னார். வேதாவை பார்த்தவன் தாத்தாவிடம் சென்று நின்றான்.

 ‘இவன் பெரிய பிஸ்கோத்து! கண்ணால கட்டளை போடுவானாம், அவன் வளர்க்கிற நாய்க்குட்டி கணக்கா நான் பின்னாலேயே ஓடணுமாம்!’ என மனதில் அவனை தாளித்துக் கொண்டே சென்றுதான் அவனுடன் இணைந்து தாத்தாவை வணங்கி எழுந்தாள். 

 சந்திரனின் மீதும் விஷ்வாவுக்கு கோவங்கள் இருக்க, “இவர் கால்ல எல்லாம் விழ மாட்டேன்” என தாத்தாவிடம் சொன்னான் விஷ்வா. அருகில் நின்றிருந்த வேதாவுக்கு அந்த பேச்சு கேட்டது. 

“ஏன் விழ மாட்டாராம் தாத்தா? அவர் பெத்த பொண்ணு மட்டும் வேணும், அவர் வேணாமாம்?” வேதாவும் சின்ன குரலில் இடக்காக கேட்டாள். 

விஷ்வா ஏதோ பதில் தர போக, “சொன்னா கேளுப்பா, சீக்கிரம் வீட்டுக்கு போறதா இல்லையா?” என்றார் தாத்தா. அவனுக்கும் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்றே இருக்க, வேதாவின் பெற்றோரிடம் மனைவியுடன் சேர்ந்து ஆசி பெற்றான். 

“உன் அம்மா கால்லேயும் விழு” என தாத்தா சொல்ல, “எனக்கு அம்மா இல்லை” என வெடுக் என உரைத்தவன், தாத்தாவின் சமாதான பேச்சை தவிர்க்க எண்ணி வெளியே சென்று விட்டான். 

அகல்யாவின் கண்களில் உடனே கண்ணீர் திரண்டு விட்டது. வாசுகியும் தன் கணவரை முறைத்து வைத்தார். 

விஷ்வா சென்ற திசையை கோவமாக பார்த்த வேதா, அத்தையின் முகத்தை கைகளால் தாங்கிப் பிடித்து, “இப்படி அழுதுகிட்டே என்னை அனுப்பி வைப்பீங்களா?” எனக் கேட்டாள். 

வேகமாக கண்களை துடைத்துக் கொண்டவர், சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “என்னை வச்செல்லாம் அவன்கிட்ட சண்டை போடக்கூடாது வேதா, நீ அவனோட நல்லா வாழறதை பார்த்தா அது போதும் எனக்கு” என்றார். அவள் மட்டும் தனியாகவே அகல்யாவின் கால்களில் விழுந்து வணங்கினாள். 

அவளை எழுப்பி நிறுத்தி நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்திய அகல்யா, “அதிகம் விவரம் இல்லாதவன் என் பையன், அவனை நல்லா பார்த்துக்கணும்டி” எனவும் சொன்னார். 

“எது விவரம் இல்லாதவரா! நான் கேட்ட மிகப்பெரிய பொய் இதுவாத்தான் இருக்கணும்  அத்தை” என சலித்தவளின் கன்னத்தில் செல்லமாக இடித்து வைத்தார் அகல்யா. 

அண்ணன், தோழன் எல்லாம் வழியனுப்பி வைக்க இல்லையே என மன சுணக்கம் ஏற்பட்டாலும் அனைவரின் கோவதாபங்களும் விரைவில் சரியாகும் என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் வேதா. 

தாத்தா, விஷ்வா, வேதா மூவரும் ஒரு காரிலும் வேதாவின் உடைமைகளோடு சந்திரன், வாசகி இன்னொரு காரிலும் என புறப்பட்டு சென்றனர். 

வேதாவின் வீட்டை விட மும்மடங்கு பெரியது விஷ்வாவின் வீடு. திருமணம் பேசியிருந்த போது கூட அவளின் பெற்றோரும் அண்ணனும்தான் இங்கு வந்திருக்கிறார்களே தவிர இவள் வந்ததில்லை. 

மணமக்கள் வீடு வந்து சேர்வதற்குள் தாத்தாதான் அழைப்பின் பெயரில் விஷ்வாவின் ஒன்று விட்ட சித்தப்பா அவரது மனைவியோடு வந்து விட்டார். 

வரவேற்பு படலம் எல்லாம் முடிந்த பின் உள்ளே வந்த வேதா அம்மாவின் பக்கத்தில் போய் அமர்ந்து கொள்ள, விஷ்வாவின் பக்கத்தில் அமர வைத்தார் அவனது சித்தி. 

பெரியவர்கள்தான் சம்பிரதாயமாக ஏதோ பேசிக் கொண்டனர், விஷ்வாவும் வேதாவும் ஒருவரை மற்றவர் ஏறெடுத்தும் பார்த்துக் கொள்ளவில்லை. 

திருமணத்தின் போது வாங்கியிருந்த மெட்டி அப்படியே பத்திரமாக இருக்க, அதை எடுத்துக் கொண்ட விஷ்வாவின் சித்தி, பூஜையறைக்கு வெளியே இருந்த இடத்திற்கு அவனை அழைத்தார். 

அவனும் வர, மெட்டிகளை அவனது கையில் கொடுத்த சித்தி, “போட்டு விடு அவ கால்ல” என்றார். 

“எல்லாம் இன்னிக்கே செய்யணுமா சித்தி?” என சற்றே எரிச்சலாக கேட்டான் விஷ்வா. 

“இன்னிக்கு இல்ல ப்பா, நீ தாலி கட்டின அன்னிக்கே செஞ்சிருக்கணும், இதுவே லேட்” என்ற சித்தி, வேதாவை அழைத்து வந்து அவன் முன் நிறுத்தினார். 

ஒரு காலை மடித்து மறு காலால் மண்டியிட்டவன் வேதா பாதத்தை நீட்டாமல் இருக்கவும் நிமிர்ந்து அவளை பார்த்தான். 

“காலை பிடிச்சு இழுத்தா விழுந்திட மாட்டியா?” என அவளுக்கு மட்டும் கேட்கும் படி கேட்டான். 

“காலை வாரி விடறதுதான் உங்களுக்கு கை வந்த கலை ஆச்சே!” என அவளும் சின்ன குரலில் சொன்னாள். 

தன்னை மரியாதையாக அழைத்து பேசுகிறாள் என்பதை கவனத்தில் பதித்துக் கொண்டே, “ம்ம்… அந்த கலைத் திறனை இப்போ காட்டுற மூட்ல நான் இல்லை, உன் காலை பிடிச்சு இழுத்து எசகு பிசகா நீ எம்மேல விழுந்து வச்சா என்ன பண்றது நான்? நான் வேற கொஞ்சம் ஷை டைப், அதனால காலை நீட்டுறியா?” என்றான். 

தழைய கட்டியிருந்த புடவையை சற்று தூக்கி பிடித்துக்கொண்டவள் பாதத்தை அவனை நோக்கி எடுத்து வைத்தாள். தன் இடக் கையில் பாதத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டு மெட்டியை அணிவித்தான். அடுத்த பாதத்துக்கும் அப்படியே செய்தான். 

மற்ற சடங்குகளையும் சித்தி  செய்ய சொல்ல, பெரிதாக முரண்டு பிடிக்காமல் செய்தான் விஷ்வா. மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. இன்று தாத்தாவுக்கு உணவு தாமதமாகி விட்டதுதான், ஆனாலும் காத்திருந்தார். 

மூன்று மணிக்கு சாப்பாட்டு மேசையில் அமர்ந்தனர். வேலை செய்பவர்கள் உதவ சித்திதான் அனைவருக்கும் பரிமாறினார். வேதா நன்றாக சாப்பிட்டு பல நாட்கள் ஆகியிருந்தன. இன்று என்னவோ அவளுக்கு அப்படியொரு பசி. நன்றாக வயிற்றை கவனித்தாள். 

இப்போது மகளை கொண்டு வந்து விட்டு விட்டோம், மறு வீட்டு விருந்து பற்றியெல்லாம் இரண்டு நாட்கள் கழித்து பேசிக் கொள்ளலாம் என சந்திரன் சொல்ல, தாத்தாவும் சரியென சொல்லி விட்டார். 

சித்தி சித்தப்பா புறப்பட ஆயுத்தமானார்கள். 

“நீங்க ரெண்டு மூனு நாள் இங்க தங்கிட்டு போலாமே” மகளுக்கு துணையாக இருப்பாரே என விஷ்வாவின் சித்தியிடம் சொன்னார் வாசுகி. 

அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள், ஒருத்தி கல்லூரியிலும் ஒருத்தி பதினோராம் வகுப்பிலும் படிக்கின்றனர். அவர்களை தனியாக விட்டு இருக்க முடியாத தன் சூழலை சொன்ன சித்தி, “இங்க மாமாவும் விஷ்வாவும் மட்டும்தானே, வேதாவுக்கு எந்த பயமும் வேணாம்” என்றார். 

மகள் மீது கோவமிருந்த போதும் இப்படி திடீரென அவளை வேறொரு இடத்தில்… ஆமாம் மகளின் புகுந்த வீடு இது என்ற நினைப்பு வாசுகிக்கு வரவே இல்லை, புதிய இடத்தில் விட்டுச் செல்கிறோமே, இவர்களுக்குள் ஓரளவு சமாதானம் ஏற்படும் வரை இந்த பையன் தள்ளி இருந்தால் கூட பரவாயில்லை, மகளிடம் இரவில் எப்படி நடந்து கொள்வானோ என்றெல்லாம் நினைத்து அவருக்கு பயம். 

அம்மாவை புரிந்தவளாக நான் சமாளித்துக் கொள்வேன் என தைரியமாக சொன்னாள் வேதா. 

“எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லணும், அம்மா கோவ படுவேன் கவலை படுவேன்னு எல்லாம் நினைச்சு உனக்குள்ள வச்சுக்கிட்டு தவிக்க கூடாது. இங்க பிடிக்கலையா நேரா நம்ம வீட்டுக்கு வந்திடனும், உன் முடிவுலதான் கோவமே தவிர, உனக்கு ஒன்னுன்னா தாங்க மாட்டேன்டி” என்ற வாசுகி, என்ன முயன்றும் இறுதியில் அழுது விட்டார்.