கடந்து செல் காதலுடன்! 2

“இதெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை” குருமூர்த்தி அலைபேசியில் கோவமாக பேச, 

மறுபக்கம், “எனக்கும் தெரியாது மூர்த்தி. நிதானத்துக்கு வா. நான் அவங்ககிட்ட பேசுறேன்” என்றார்.

“பேசுறதுக்கு எல்லாம் ஒன்னுமில்லை. என் பொண்ணு இருக்க வீட்ல என்னால ஒரு வயசு பையனை வைச்சுக்க முடியாது” என்றார் குருமூர்த்தி திட்டவட்டமாக.

“புரிஞ்சுக்கோ மூர்த்தி. என்னால மாட்டேன்னு சொல்ல முடியாது“

“ஏன் சொல்ல முடியாது? அவங்க யாரா இருந்தாலும் எனக்கு கவலையில்லை. நாளைக்கே நான் அந்த பையனை திருப்பி அனுப்ப தான் போறேன்“

“மூர்த்தி, மூர்த்தி அந்த தப்பை மட்டும் பண்ணிடாத. ரொம்ப அவஸ்தைப்பட்டு தான் அவரை உன்கிட்ட சேர்த்திருக்கோம்” 

“நம்ம ஐயாக்காக மட்டும் தான் நான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். மத்தபடி அந்த பையனை பத்தி எனக்கு எந்த அக்கறையில்லை” சம்யுக்தாவின் தந்தை முடிவெடுத்துவிட்டார்.

“மூர்த்தி. சொன்னா கேளுப்பா. அந்த பையன் வெளியே வந்தா அவன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. ஏடாகூடமா எதாவது ஆச்சு நம்ம உயிருக்கும் உத்திரவாதம் கிடையாது, உன் பொண்ணுக்கும் சேர்த்துதான் சொல்றேன்“

“என்ன மிரட்டுறீங்களா” குருமூர்த்தி குரல் ஏகத்துக்கும் உயர்ந்தது.

“இல்லை. இல்லவே இல்லை. நான் நடக்க போறதை தான் சொல்றேன். என்னால அவங்களுக்கு எதிரா ஒரு சுண்டு விரலை கூட அசைக்க முடியாது. புரிஞ்சுக்கோ மூர்த்தி” என்று அந்த பக்கம் பேசியவரிடம் முழு உண்மையே!

“யார் அவங்க?”

“சொல்ல அனுமதி இல்லை மூர்த்தி“

அந்த நேரம் ரகசிய அறையின் சமிக்சை அவரின் வாட்சில் ஒலிக்க, “ஏன் கூப்பிடுறான்” என்று முணுமுணுத்தார்.

“அவரா? சீக்கிரம் போ மூர்த்தி” மறுபக்கம் விரட்டினார்.

குருமூர்த்தி உடனே அந்த அறைக்குள் வந்தவர், கீழே விழுந்த கிடந்தவனை சட்டென கையில் அள்ளி கட்டிலில் படுக்க வைத்தார்.

“ஆள் மயக்கமாகிட்டான்” என்று லைனில் இருந்தவரிடம் சொன்னார்.

“டாக்டர் உடனே வந்திடுவாங்க” என்று அவர் வைத்த ஐந்து நிமிடத்தில் மருத்துவர் வந்துவிட்டார்.

“கடைசியா எப்போ சாப்பிட்டார்?” என்று கேள்வி வர, 

“தெரியலை” என்றார் மூர்த்தி.

அந்த அறையே மருத்துவ மனையாக உடனக்குடன் மாற்றப்பட்டு அவனுக்கான வைத்தியம் நடந்தது.

ஓரமாக நின்றிருந்த குருமூர்த்தியின் நெற்றியில் முடிச்சுக்கள். அவருக்குள் ஏதோ உறுத்தல். 

கீழே விழுந்திருந்தவன் மீதும், அவனை சுற்றியும் சிதறி கிடந்த தண்ணீரை அவர் கவனித்தே இருந்தார்.

ரூமுக்குள்ள யாரும் வந்திருப்பாங்களா? இளவயது ஆண்மகனை கண்டதும் குருமூர்த்தி அதிருப்தியில் எதையும் கவனிக்காமல் அவனை அறைக்குள் விட்டு சென்றுவிட்டிருந்தார்.

இந்த நேரம் அவரின் தவறாக அவரின் கவனக்குறைவு பட்டது. 

“ண்ணா” என்று அவரை கலைத்தார் மாசிலாமணி.  குருமூர்த்தியின் தலைசிறந்த விசுவாசி.

“டாக்டர் கிளம்பவான்னு கேட்கிறாங்க” என,

“அவர் முழிச்சதுக்கு அப்புறம் தான் கிளம்ப முடியும்ன்னு சொல்லிடு” என்றவரும் அங்கேயே அமர்ந்து கொண்டார்.

“சொல்லிட்டேன்’ண்ணா. ண்ணா” என்றழைத்த மாசிலாமணி, குருமூர்த்தியின் பார்வை கீழே சிதறி கிடந்த தண்ணீரின் தடங்களையே பார்த்திருப்பதில், “குடிக்க எடுத்து தவற விட்டிருக்கலாம்ண்ணா” என்றார்.

“மயக்கம் போடும் போது ஸ்விட்சை ஆன் பண்ணிட்டா  மயக்கம் போடுவான்?” என்று கேட்டார் குருமூர்த்தி.

“ண்ணா. உடம்பு ஏதோ பண்ணுதுன்னு தான் தண்ணீர் குடிக்க எடுத்திருக்கார், நம்மளையும் கூப்பிட்டிருக்கார். நம்ம இடதுக்குள்ள வரதுக்கு யாருக்குண்ணா தைரியம் இருக்கு. அதுவும் இந்த ரூமுக்கு போய்” என்றார் மாசிலாமணி.

குருமூர்த்தி தலையசைத்து கொண்டாலும், முழுதாக சமாதானம் ஆகவில்லை.

“நீ கிளம்பு. நான் பார்த்துகிறேன்” என்று மாசிலாமணியை அனுப்பி விட்டவரின் போன் ஒலிக்க, “பசியில் மயக்கம்” என்றார் எடுத்து.

“ஒரு வாரமா அவர் சாப்பிடலை” என்றார் மறுபக்கம்.

அவன் இருக்கும் நிலையில் அவனை எங்கும் அசைக்க கூட முடியாது என்பது புரிந்து போனது. ஒருமாதிரி எரிச்சல் கொண்டார் குருமூர்த்தி.

“நீ அவரை நல்லா கவனிச்சுக்கோ மூர்த்தி. நானே திரும்ப கூப்பிடுவேன்” என்று வைக்க, இனி அவரே அழைத்தால் தவிர நான் அவரை தொடர்பு கொள்ள கூடாது என்ற புரிதலில் குருமூர்த்திக்கு கோவமே.

‘என் கையைக்கட்டி வேலை வாங்குறாங்க‘ முணுமுணுத்து கொண்டவர், அந்த இளைஞனை விட்டு எங்கும் நகரவில்லை.

அன்றிரவு முழுவதும் இருவரும் தூங்காமல், அந்த புதியவன் முழித்து பார்த்த பின்னே மருத்துவர் அங்கிருந்து கிளம்பினார்.

குருமூர்த்தி அந்த இளைஞன் அருகில் அமர்ந்தார். அதுவரை விட்டதை வெறித்திருந்தவன், அவர் அருகில் அமரவும் கண்களை மூடி கொண்டான்.

‘என்னை பார்த்தா கண்ணை மூடினான்‘ முதல் அதிர்வு மனிதருக்கு. 

நிமிடங்களே  அவனை பார்த்திருந்து, அவன் இப்போதைக்கு கண்களை திறக்க போவதில்லை என்று புரிந்து அங்கிருந்து சென்றார்.

‘எவ்வளவு திமிர்‘ குருமூர்த்தி முகம் கடுகடுத்தது.

சம்யுக்தா அதுவரை கல்லூரி கிளம்பாமல் ஹாலிலே தவம் இருந்தவள், தந்தையை காணவும் வேகமாக எழுந்து நின்றாள்.

நான் அந்த ரூமுக்கு போனது அப்பாக்கு தெரிஞ்சிருக்குமா? கண்டுபிடிச்சிருப்பாரா என்ற பயமும், அந்த இளைஞனுக்கு என்ன ஆனதோ என்ற கவலையும் சேர்ந்து இரவெல்லாம் அரைகுறை தூக்கமே. 

விடியலிலே ஹாலுக்கு வந்துவிட்டவள், தந்தை இன்னும் வெளியே வரதாததில் அங்கேயே காத்திருந்தாள் பெண்.

“காலேஜ் கிளம்பலை” குருமூர்த்தி நேரம் பார்த்து கேட்க,

“பர்ஸ்ட் கிளாஸ் ப்ரீ தான்” என்ற மகள் அவர் முகத்தை ஆராய்ந்து, அதில் இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்து போனாள்.

 “அவருக்கு சாப்பாடு?” என்று குருமூர்த்தியிடம் கேட்டார் கற்பகம்.

“இப்போ தான் முழிச்சிருக்கார். கொஞ்ச நேரம் கழிச்சு கொடுக்கலாம்” என்று அவரின் அறைக்குள் சென்றார்.

சம்யுக்தா முகம் இப்போது தான் தெளிந்தது. “கண்ணு. இன்னும் எவ்வளவு நேரம்? சாப்பிட வா” என்று கற்பகம் இவளை அழைக்க, மறுக்காமல் உண்டவள் கல்லூரிக்கு சென்றாள்.

மாசிலாமணிக்கு அழைத்து, அந்த புதியவன் உதவிக்கு வைத்த குருமூர்த்தி  சிறிது நேர ஓய்விற்கு பிறகு, குளித்து ஹாலுக்கு வர, கற்பகம் உணவை எடுத்து வைத்தார்.

மகள் பற்றி கேட்டு சாப்பிட்டவர், உணவுடன் அந்த ரகசிய அறைக்கு சென்றார்.

“நான் பார்த்துகிறேன். நீ எப்போவும் போல உன் வேலையை பாரு” என்று மாசிலாமணியை அனுப்பி வைத்தார்.

கட்டிலில் படுத்திருந்தவனை கண்டு, ‘திரும்ப மட்டை ஆயிட்டானா?’ என்ற குருமூர்த்தியின் முணுமுணுப்பு அவன் காதில் நன்றாக கேட்டு விட்டதாக, பட்டென கண் திறந்து அவரை கோவமாக பார்த்தான்.

“சாப்பிடலாம். எழுந்திரு” என்றார் குருமூர்த்தி அவன் கோவத்தை கண்டு கொள்ளாமல். 

“தேவையில்லை” என்பதாக ஒரு அலட்சிய கையசைப்பு. திரும்ப கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.

குருமூர்த்திக்கு அவன் கையசைப்பிலே கோவம். என்னை பார்த்தா அப்படி பண்ணான்? ராஸ்கல். 

அவன் சட்டை காலரை பிடித்து தூக்கி நிறுத்தி வைத்துவிடும் வேகம் மனிதருக்கு. பல்லை கடித்து பொறுத்து கொண்டவர், “திரும்ப மயக்கம் போட்டா யார் பார்க்கிறது உன்னை” என்றார்.

“உங்களை பார்த்துக்க சொல்லி நான் கேட்டேனா” என்பது போல் ஒரு பார்வையை அவர் பக்கம் வீச,

“என்கிட்ட இப்படி யாரும் நடந்துக்கிட்டது இல்லை. இதுதான் உனக்கு பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்” என்றார் மனிதர் மிரட்டலாக.

“அப்படித்தான் செய்வேன். போயா” என்றது அவன் பார்வை.

குருமூர்த்திக்கு அவன் பார்வையில் இருந்த திமிரை சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை. கை, கால்கள் மனிதருக்கு பரபரவென வந்தது.

இப்போவே இவனுக்கு பாடம் கத்து கொடுத்திடணும். பார்க்கிறான் பார், திமிர் பிடிச்சிவன். 

இருவரும்  ஒருவரை ஒருவர் பார்வையாலே சண்டையிட்டு கொள்ள, “வெளியே போ” என்று அவனிடம் இருந்து திரும்ப ஓர் கையசைப்பு.

“என்ன? என்னை வெளியே போக சொல்றியா?” குருமூர்த்திக்கு அப்படியொரு அதிர்ச்சி.

“இங்க நீங்க மட்டும் தானே இருக்கீங்க” என்பதாய் அறை சுற்றி அவன் கண்களை மேயவிட்டு, அவரை பார்த்தான். 

“நீ தின்னு தொலைச்சா நான் போயிடுவேன். எனக்கொன்னும் உன்னை பார்த்துட்டு இருக்கணும்ன்னு ஆசையில்லை” என்று வெடித்தார் மனிதர்.

“எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்ற விரலசைப்புடன் கண்களை இறுக்கமாக மூடி கொண்டான்.

“மாத்திரை போடணும். சாப்பிடு“

“உன்னை தான்“

“திரும்ப மயக்கம் போட்டா எனக்கு தெரியாது“

“ஏய்“

“டேய்“

இதற்கு மட்டும் கண்களை திறந்து கோவப்பார்வை.

“மரியாதை இல்லாம பேச கூடாதோ?”

பதிலேதும் இல்லாமல் முகத்தை திருப்பி கொண்டான். 

“என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற நீ” 

மகளை ஓர் அதட்டிலே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவருக்கு, இவன் முதல் நாளே தண்ணீர் காட்டினான்.

காலையிலே இவருக்கு போன் வேறு வந்துவிட்டது. “சீக்கிரம் அவர் உடம்பை சரியாக்கிடு மூர்த்தி” என்று உதவியா, உத்தரவா என்ற கண்டறியா முடியாதபடி சொல்லி வைத்திருந்தார் அந்த மனிதர்.

இவன் சாப்பிடாமலே இருந்தா நான் எப்படி சரியாக்க முடியும்? குருமூர்த்தி நெற்றியை நீவிவிட்டு கொண்டார்.

அந்த நேரம் மட்டுமில்லை அன்று முழுவதுமே அவன் சாப்பிடவில்லை.

குருமூர்த்தியிடம் வாய் திறந்து ஓர் வார்த்தை கூட பேசவும் இல்லை. 

மனிதருக்கு எக்கச்சக்க தலையிடி. கற்பகம் பாட்டி, மாசிலாமணி கூட அவனை உண்ண சொல்லி கெஞ்சிவிட்டனர்.

மாலை போல் திரும்ப ஒரு மயக்கத்துக்குள் சென்றான். உடனடியாக மருத்துவரை வரவைத்து திரும்ப அவனை பார்க்க வைத்தார். மருத்துவரும் அவனிடம் உணவுண்ண சொல்லி பேச, பதிலே இல்லை.

மரியாதை தெரியாதவன். யார் சொல்லியும் கேட்க மாட்டேங்கிறான்!

“என்னால இவனை பார்த்துக்க முடியாது. நான் திரும்ப மணியோட அனுப்புறேன். கூப்பிட்டுக்கோங்க” என்று போனில் செய்தியும் அனுப்பிவிட, உடனே இவருக்கு போன் வந்தது.

குருமூர்த்தியின் பழைய முதலாளி. “சொல்லுங்க” என்று குருமூர்த்தி மிகவும் மரியாதையுடன் எடுக்க,

“அவரை நீதான் பார்த்துக்கணும்” என்றார் அந்த முதலாளி.

“என்னால சமாளிக்க முடியலை. சாப்பிடவே மாட்டேங்கிறான். அப்புறம் அவனுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்னை தானே  கேட்பாங்க” என்றார் குருமூர்த்தி.

“உன்னால முடியும் மூர்த்தி. செய். எனக்காக செய். நான் அந்த குடும்பத்துக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்” என்றார் அவர்.

இனி எப்படி மறுக்க? முதலாளிக்கு குருமூர்த்தி அதிகமாகவே கடமைப்பட்டிருக்கிறாரே!

குருமூர்த்தி அவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று இரவெல்லாம் யோசிக்க, அவரின் மகளோ அவனை பார்க்க போகலாமா என்று யோசித்து கொண்டிருந்தாள். 

“அந்த பையன் சாப்பிடாம மறுபடியும் மயக்கம் போட்டு, ட்ரிப்ஸ் போட்டிருக்கு. இப்போ தூக்கத்துல இருக்கான். எவ்வளவு சொல்லியும், யார் சொல்லியும் சாப்பிட மாட்டேங்கிறான். என்ன பிடிவாதமோ?” என்று கற்பகம் பாட்டி இவளிடம் புலம்ப, 

பிடிவாதமா? இல்லை என்றது சம்யுக்தாவின் மனம்.

இரவு அவன் கதறிய கதறலை அருகில் இருந்து கேட்டவளாயிற்றே!

“அவனை இங்க அனுப்பிட்டாங்கன்னு கோவமா இருக்கானோ என்னவோ? சொட்டு தண்ணீர் கூட தொண்டையில இறங்கலை” என்றபடி அவளுக்கு இரவு பானம் கொடுக்க,

கோவத்துல சாப்பிடலையா? இல்லை கஷ்டத்துல சாப்பிடலையா?

அவன் கண்ணீர் இரண்டாவதை தான் உணர்த்தியது. அப்படி என்ன கஷ்டமா இருக்கும்? ஏன் அப்படி அழுதாங்க? அவன் கண்ணீரை நினைத்த நேரமே பெண்ணுக்கு வருத்தமானது.

“துணைக்கு யார் இருக்காங்க பாட்டி” என்று கேட்டாள் சம்யுக்தா.

“யாரும் இல்லை கண்ணு. நான் வேணா இருந்துக்கவான்னு கேட்டேன். உன் அப்பா வேணாம் சொல்லிட்டார். பாவம் தனியா என்ன செய்வானோ?” என்றபடி சென்றார் கற்பகம் பாட்டி.

தனியாகவா? சும்மாவே அந்த ரூம்ல வெளிச்சம் இருக்காது. இப்போ இன்னும் இருட்டா இருக்குமே!

சம்யுக்தாவிற்கு அவனை பார்க்க வேண்டும் போல் இருந்தது. இன்னமும் அழுவாரா? பாட்டி அப்படி ஏதும் சொல்லவில்லையே!

போலாமா? தூக்கத்தில தானே இருப்பாங்க. ஜஸ்ட் பார்த்துட்டு மட்டும் வந்திடலாம். 

‘ப்பா‘ குருமூர்த்தி நினைவு வந்ததும், கட்டிலில் அமர்ந்து கொண்டாள். 

இப்போ ரூம்ல இருந்தாலும் இடையில அப்பா வந்தா? 

உடம்பு சரியில்லாதவரை ஏன் தனியா விடணும்? 

பெண்ணுக்கு தெரியாது. அவன் பாதுகாப்பில் எண்ணற்ற விதிமுறைகள் குருமூர்த்திக்கு சொல்ல பட்டிருக்கும் விஷயம். 

அதில் முதலாவதே அவனுடன் எப்போதும், யாரும் இருக்க கூடாது என்பதே!

இரண்டாவது கேமரா எதையும் அவன் இருக்கும் திசையில் கூட வைக்க கூடாது. சுலபமாக கேமரா வழி அவனை கண்டறிந்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கை. அதனாலே சில கேமராக்கள் அகற்ற பட்டிருந்தது.

சம்யுக்தா யோசித்து, ஒரு கட்டத்தில் முடிவெடுத்து அவன் அறைக்குள் சென்றாள்.

சிறிதும் வெளிச்சமில்லா இருட்டு. சம்யுக்தா சில நொடிகள் தடுமாறி, பின் மெல்ல அந்த கட்டிலை நெருங்க, அவன் முகமே சரிவர தெரியவில்லை.

அவளின் கையில் பேனா டார்ச் இருந்தது. அந்த வெளிச்சத்தில் எழுந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து, சில நொடி அவனை அந்த இருளிலே பார்த்து நின்றாள்.

தூக்கமா? இல்லை மயக்கமா? 

சிலையாக அவன் படுத்த நிலை அவளை கொஞ்சம் கலவரப்படுத்த, பென் டார்ச்சை அவன் முகத்தில் அடித்தாள்.

அவன் கண்ணோரம் லேசான, மிக லேசான சுருக்கம்.

நல்லா தூங்குறாங்க போல! பெண்ணுக்கு ஆசுவாச மூச்சு.

ஏன் இப்படி வேர்த்திருக்கு? ஓஹ் இங்க ஏசி இல்லை, ஜன்னலும் இல்லையே 

காற்று பத்தலையா? அந்த டேபிள் பேனை மெல்ல அவன் அருகில் நகர்த்தி வைத்தவளுக்கு அவன் உதட்டில் ஏதோ நூல் போல் தென்பட்டது.

வாய்க்குள் சென்றுவிட்டால் என்னவாவது என்ற எண்ணத்துடன் அந்த நூலை எடுக்க இவள் விரலை அவன் கீழ் உதட்டில் வைக்க, அவளின் கை பற்றப்பட்டது.

சம்யுக்தா அதிர்ந்து போனாள். அவன் முகத்துக்கு நேராக இருந்த டார்ச், இப்போது அவள் முகத்துக்கு நேராக இருந்தது.

விரித்த கண்களுடன் விழித்த நின்ற பெண்ணின் விரல் அவன் உதட்டை பற்றியிருக்க, அவன் கைகளோ இவள் கையை பற்றியிருந்தது.