மீனாட்சியுடனான அலைபேசி உரையாடலுக்குப் பின் ஓரளவு தெளிந்திருந்தான் சக்தி. ‘எவ்ளோ வளர்ந்துட்டா. என்ன பேச்சு பேசறா‘ என்ற பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை. அவனது சஞ்சலங்கள் முழுதாக மறைந்து போகாமல் போனாலும், மருந்திட்டது போல் இதமாகியிருந்தது அவன் காயங்கள்.
‘நான் தான் அதிகமாக சிந்தித்துக் குழப்பிக் கொல்கிறேனோ‘ என்று சுய அலசலில் இறங்கியவன், தன்னைத்தானே மீட்டெடுக்கத் தொடங்கியிருந்தான். அவனது அத்தைமகள் கூறியது போல் யோசிப்பதைக் குறைக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டான் சக்தி.
சிந்தனைகள் தெளிவானபின் செயலிலும் வேகம் கூடியிருக்க, பழையபடி அவனது ஷோரூம் வேலைகளில் ஆழ்ந்து போக ஆரம்பித்தான். பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் பலமாக்கப்பட்டிருக்க, விளம்பரங்களையும், சலுகைகளையும் அதிகப்படுத்தியிருந்தான்.
அதன் விளைவாக கடையின் வியாபாரமும் கொஞ்சம் ஒழுங்குக்கு வர, அதுவே அவனை நிம்மதியாக இயங்க வைத்தது.
என்னவோ, அழுத்தமாக கால் பதிக்க வேண்டுமென்ற அவனது ஆசை இப்போது இன்னமும் தீவிரமாகியிருக்க, அடுத்து என்ன என்பது குறித்தும் சிந்தனையில் இறங்கியிருந்தான்.
அவன் நண்பர்களிடமும் சொல்லி வைத்திருக்க, ஊருக்கு வெளியே இருந்த சர்க்கரை ஆலை ஒன்றை விலைக்கு வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறான் இப்போது. அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்தபடி அவன் அமர்ந்திருக்க, அப்போதுதான் மீனாட்சி நினைவில் வந்தாள்.
அன்று பேசியது தான் இருவரும். அதன்பின் அவளும் அழைக்கவில்லை. இவனுக்கும் அழைக்கும் எண்ணம் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் சென்னைக்கு கிளம்பியிருந்தாள்.
அப்போது வீட்டிற்கு சொல்லிக் கொள்ள வந்தவள் சக்தியிடமும் எப்போதும் போலவே சொல்லிச் சென்றிருந்தாள். அவ்வளவுதான்.
சக்திக்கு இப்போது சட்டென்று அவள் நினைவு வரவும், நேரத்தைப் பார்க்காமல் அடித்துவிட்டான். அலைபேசி அழைக்க முயன்று தோற்கும் வேளையில் நேரத்தைப் பார்த்தவன் சுதாரித்தவனாக அழைப்பைத் துண்டித்து, அலைபேசியை சட்டைப்பையில் போட்டுக் கொண்டான்.
‘என்னடா சின்னப்பிள்ளையா நீ‘ என்று அதற்கே அவன் மனம் கிண்டலடிக்க, ஒரு மௌனச் சிரிப்புடன் தன் வேலையைத் தொடர்ந்தான் அவன்.
இவன் இங்கே சிரித்தபடி இருந்த அதே வேளையில் ஒருவன் சக்தியை கொன்று போடும் ஆத்திரத்தில் இருந்தான்.
விட்ட குறை தொட்ட குறையாக அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தான் சக்தி. ஏற்கனவே வெற்றி விஷயத்திலும் அவனிடம் தோற்று மண்ணைக் கவ்வியிருக்க, இந்த முறை விடுவதாக இல்லை வாசுதேவன். அவன் தேனருவியின் அண்ணன்.
இப்போது என்ன பஞ்சாயத்து என்றால், சக்தி விலை பேசியிருக்கும் அந்த சர்க்கரை ஆலைதான். அதை அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்கான அத்தனை வேலைகளையும் ஏற்கனவே பார்த்து வைத்திருந்தான் வாசு.
சொல்லப் போனால், வியாபார ரீதியாகவும், மனரீதியாகவும் அவன் கொடுத்த உளைச்சலில் தான் அந்த ஆலையை விற்றுவிட முடிவெடுத்தார் அந்த ஆலையின் உரிமையாளர். தந்தையின் அரசியல் செல்வாக்கை வைத்து வாசு காய் நகர்த்தி இருக்க, அத்தனையும் கச்சிதமாக சென்று கொண்டிருந்த நேரம் தான் சக்தியின் இந்த இடையூறு.
அந்த உரிமையாளரிடமும் ஏற்கனவே வாசு பேசித்தான் வைத்திருந்தான். என்ன, அவர் சொன்ன தொகையை பாதியாக குறைத்து பேசி, கிட்டத்தட்ட அவரை மிரட்டியவன், அவர் முடிவெடுக்க அவகாசம் கொடுத்து வந்திருந்தான்.
இந்த நேரத்தில் சக்தி நண்பன் மூலமாக அவரை சந்தித்து பேரத்தை தொடங்கியிருக்க, வியாபாரம் லாபகரமாக இருந்ததால், அவன் பக்கம் சாய்ந்திருந்தார் அவர்.
விஷயம் கேள்விப்பட்டு அவன் தந்தை வேறு, “ஒண்ணுக்கும் லாயக்கில்லை” என்று நேரடியாகவே பேசி வைத்திருக்க, இருக்கும் தலைவலியில் இதுவும் சேர்ந்து கொண்டது.
எப்படியும் சக்தியை ஒரு கை பார்த்தாக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான் அவன். அந்த ஆலையையும் விட்டுக் கொடுக்கும் எண்ணம் இல்லை அவனுக்கு. அதை கையகப்படுத்தும் யோசனைகளில் இறங்கியவன், தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அடுத்தநாள் காலை விடிந்து விடியாமலும் அவன் சர்க்கரை ஆலை வாசலில் நிற்க, அடுத்த அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தார் அதன் உரிமையாளர்.
“என்னண்ணே என்ன முடிவு எடுத்திருக்கீங்க?” என்று சாதாரணம் போல் அவன் விசாரிக்க,
“தம்பி… நான் வேற ஒருத்தருக்கு கொடுக்கறதா ஒத்துக்கிட்டேன் தம்பி. விலையும் எனக்கு கட்டி வருது. அதுதான் கொடுக்கறதா சொல்லிட்டேன்” என்றவரின் சட்டையைப் பிடித்துவிட்டான் வாசு.
உடன் அவன் தந்தையின் அல்லக்கைகளும் இருக்க, எதற்கும் துணிந்திருந்தான். அவர் வயதையும் பொருட்படுத்தாமல் அவர் கன்னத்தில் அறைந்து விட்டவன், “காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கூட அனுப்பி வைப்பியா. மாமா பயலாடா நீ. என்கிட்டே விலை பேசிட்டு, அவன்கிட்ட போவியா. கையெழுத்து போட கை இருக்கணும் இல்ல” என்று அவர் கையைப் பிடித்து முறுக்க, வலி தாங்காமல் அவர் கத்தியதில் அங்கிருந்த வேலையாட்கள் ஓடிவர, அத்தனைப் பேரையும் அவனுடன் வந்த அடியாட்கள் தடுத்து நிறுத்தினர்.
“என்னை மீறி ஆலையை எவனுக்குடா கொடுப்ப? கரும்பு பிழியுற மாதிரி பிழிஞ்சு சக்கையாக்கி எறிஞ்சுடுவேன். ஒழுங்கா பேசுன விலைக்கு ஆலையை கொடுத்துட்டு ஓடிடு. இல்ல, உசுரு பொழைக்க மாட்ட” என்று வாசு அவரை மிரட்டிக் கொண்டிருக்க, சடசடவென உள்ளே நுழைந்தனர் ஐந்தாறு காவலர்கள்.
அவர்களுக்குப் பின்னே, சக்திவேலனும் வந்து நிற்க, பார்த்த கணம் இது அவன் வேலை தான் என்று புரிந்துவிட்டது வாசுவுக்கு.
சக்தி அவனுக்கு பதில் கொடுக்கவும் இல்லை. அலட்டிக் கொள்ளவும் இல்லை. காவல் துறையினர் வாசுவை அழைத்துச் செல்ல, “நல்ல வேளை தம்பி. உடனே வந்திங்க” என்று வலியுடன் முனகினார் அந்த உரிமையாளர்.
அவர் வாசு உள்ளே வந்த நிமிடமே சக்திக்கு அழைப்பு விடுத்திருக்க, நடந்த சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டிருந்தவன், அப்படியே வண்டியை திருப்பிக்கொண்டு இங்கே வந்திருந்தான்.
“ஹாஸ்பிடல் போவோம் வாங்க” என்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவன், அவர் கொஞ்சம் நிதானமாகவும், “நாளைக்கே கிரயம் பண்ணிடுவோமா?” என, தலையாட்டிவிட்டார் அவர்.
“நீங்க வீட்டுக்கு போக வேண்டாம். என்கூட வாங்க.” என்று அவரை அழைத்துக் கொண்டு கிளம்பியவன் நேராக வந்து நின்றது செண்பகப்பாண்டியனிடம் தான்.
“வாடா” என்று அவன் வரவேற்க, தலையசைத்து வீட்டிற்குள் நுழைந்தான் சக்தி.
“தலைவர் எங்கே” என,
“இன்னைக்கு லீவ். முக்கியமா ஏதோ வேலையாம்” என்றான் செண்பகப்பாண்டியன்.
“இவர் இங்கே இருக்கட்டும்டா. நாளைக்கு ரெஜிஸ்டரை வீட்டுக்கு வர சொல்லு. இங்கே வச்சு முடிச்சுடுவோம்” என்று சக்தி சொல்ல,
“ஒரு முடிவோட தான் இருக்க நீ” என்று சிரித்த செண்பகப்பாண்டியன், “நான் பார்த்துக்கறேன் கிளம்பு” என்றுவிட, நிம்மதியுடன் அங்கிருந்து வெளியே வந்தான் சக்தி.
அவன் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்திருந்த வாசுவும் அன்று மதியமே வெளியே வந்திருக்க, அவனும் அந்த சர்க்கரை ஆலையின் உரிமையாளரைத் தான் தேடிக் கொண்டிருந்தான்.
இதற்குள் விஷயம் கேள்வியுற்ற அவன் தந்தை, “இந்த விஷயத்துல இனி நீ தலையிட கூடாது வாசு. பெரும்பாடு பட்டு உன்னை வெளியே எடுத்திருக்கேன். மறுபடியும் எதையாவது இழுத்து வைக்காத” என்று மிரட்டிச் சென்றிருக்க, எதையும் செய்ய முடியாத தன் நிலையை நினைத்து புழுங்கி கொண்டிருந்தான் அவன்.
சக்திவேல் சொன்னபடியே செண்பகப்பாண்டியன் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டதில், அடுத்தநாள் காலையில் அந்த ஆலையை தன் பெயரில் பதிந்து முடித்திருந்தான் சக்தி.
வெற்றி இன்றும் விடுப்பு எடுத்திருக்க, ‘என்ன பண்றான் இவன்‘ என்று அதுவேறு மண்டையில் ஓடிக் கொண்டிருந்தது.
யோசனையுடன் ஷோரூம் வந்தவன் தனது இருக்கையில் அமர்ந்துவிட, மீனாட்சி அப்போது தான் அழைத்தாள் அவனை. அவள் அழைப்பு சக்திக்கு அழகாக ஒரு புன்னகையை கொடுக்க, அப்படியே அலைபேசியை காதுக்கு கொடுத்தான்.
“சொல்லுங்க மாமா” என்று எப்போதும் போலவே உற்சாகமாக மீனுவின் குரல் கேட்க,
“ம்ம்ம்ம்… சொல்லுங்க எதுக்கு கால் பண்ணீங்க. என்ன விஷயம்?”
“ஒன்னும் இல்லையே”
“அப்புறம் என்ன”
“ஏன் ஏதாவது இருந்தா தான் கூப்பிடணுமா?”
“அப்படி இல்ல”
“வேற எப்படிடா”
“என்னாச்சு இன்னைக்கு. நிறைய பேசறீங்க”
“இப்படியே சொல்லி சொல்லி என்னை பேசவிடாம பண்ணிடு” என, அழகாக சிரித்தாள் அவள்.
“இல்லன்னா மட்டும் நிறைய பேசிடுவீங்க. இன்னைக்கு ஏதோ நல்ல மூட்ல இருக்கீங்க. அதுதான்” என்று அவள் கிரகிக்க, அவள் புரிதலில் ஏதோ ஒரு புது உணர்வு பொங்கியது அவனுக்குள்.
“எப்படிடா”
“என்ன”
“ஒன்னும் இல்ல.”
“பரவால்ல சொல்லுங்க”
“புதுசா ஒரு சர்க்கரை ஆலை வாங்கி இருக்கேன். இன்னைக்கு தான் ரெஜிஸ்டரேஷன் முடிஞ்சுது.” என்றான் சக்தி.
“இது என்ன? பைக் ஷோரூம் அதிபர் சர்க்கரை ஆலை முதலாளியா மாறிட்டார்.?” என்று மீனு சிரிப்புடன் கேட்க,
“ஏன் பைக் ஷோரூம் வச்சிருந்தா, சர்க்கரை ஆலை வாங்ககூடாதா?”
“ஆலை வாங்கிட்டிங்க சரி. யாரு வேலை பார்க்கிறது? சாருக்கு என்ன தெரியும்?”
“தெரிஞ்சுப்போம்”
“தெரிஞ்சுப்போமா…”
“என்னை ஏன் சேர்த்து கோர்க்கறீங்க?”
“உன்னை சேர்க்காம யாரை சேர்த்துக்க சொல்ற?”
“யாரையும் சேர்க்க முடியாது. நியாயமான பேச்சு தான். ஆனா, ஜெர்மன் ரிட்டர்னுக்கும் சர்க்கரை ஆலைக்கும் என்ன மாமா சம்பந்தம்?”
“இனிமே தான் யோசிக்கணும். என்கிட்டே பதில் இல்ல.”
“எதுக்காக வாங்கினீங்க?”
“என் வீட்டம்மாவுக்கு ஏதாவது தொழில் வேணும் இல்லையா?”
“நீதானே தொடங்கி வச்ச, அப்போ பதிலும் நீ தான் சொல்லணும்” மீண்டும் அவள் அமைதியை கையிலெடுக்க,
“ஏதாவது பேசு” என்றான் சக்தி.
“உங்களால தான்”
“சரி என்னால தான். என்ன பண்ணிட்டேன்?”
“தெரியல”
“சரி சரி. பொறுமையா பதில் சொல்லிக்கலாம். ஒன்னும் அவசரமில்ல.”
“ம்ம்ம்”
“இப்போ வேகமா பதில் வருது”
“மாமா”
“சரிடா. உன்னோட ஃப்ரீ டைம் எப்போ?” என்றதற்கு அவள் பதில் கொடுக்க,
“அந்த டைம்ல கால் பண்ணவா?”
“ம்ம்ம்”
“ம்ம்ம்ம்ம்”
“போயிட்டு படிக்கிற வேலையை பாரு. ஓடு” என,
“போப்பா” என்று சிணுங்கியபடியே அழைப்பைத் துண்டித்தாள் மீனு.
இருவர் முகத்திலும் புன்னகை நிறைந்திருக்க, மனதும் சற்று இதமாக இருந்தது.
தேனருவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தான் வெற்றி. தேனருவி சற்றே பயந்தவளாக அமர்ந்திருக்க, அவள் கையைப் பிடித்தபடி அவள் அருகில் வெற்றி.
நேற்றில் இருந்தே காய்ச்சலாக இருக்க, மருத்துவமனைக்கு வரவே மாட்டேன் என்றவளை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான். இப்போதும் பயத்துடன் அமர்ந்திருப்பவளைக் கண்டு பாவமாக தான் இருந்தது வெற்றிக்கு.
“காதலித்ததை தவிர வேறெந்த தவறும் செய்யவில்லையே. ஏன் இப்படி பயந்து நடுங்க வேண்டும் இவள்” என்று உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான் அவன்.
அவள் பட்டிருந்த வேதனைகள் அவளது தைரியத்தை முழுதாக குலைத்திருக்க, அங்கே தோப்பு வீட்டில் இருந்தவரை இயல்பாகத் தான் இருந்தாள். அதை விட்டு வெளியே வரவும், பழையபடி நடுங்க தொடங்கி இருந்தாள்.
ஆனால், அதற்கெல்லாம் சேர்த்து வெற்றி திடமாக இருக்க, மருத்துவரை பார்த்து, காய்ச்சலுக்கு ஊசி போட்டுகொண்டு அவர்கள் வெளியே வர, காத்தன் மருத்துவமனை வாசலில் இருந்தார்.
“என்னண்ணே” என்ற வெற்றியிடம்,
“ஒன்னும் இல்ல தம்பி. பிள்ளைக்கு உடம்பு முடியலையே. அதுதான் என்னமோ ஏதோன்னு ஓடியாந்துட்டேன்” என்றவர் ஒரு ஆட்டோவை பிடித்து இருவரையும் ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர, அவர்கள் வீட்டிற்குள் நுழையும் வரை எட்டி நின்று பார்த்துவிட்டு தான் கிளம்பினான் சக்திவேல்.