அவள் அழகில் முடியில் லதா பொறாமை பட மங்கையோ அவளை ஒரு ஆளாக கூட கணக்கில் எடுக்க மாட்டாள். அதனால் தான் எதுவும் வம்பு இழுக்கவும் மாட்டாள். ஆனால் தன்னுடைய தன்மானத்தை சீண்டும் படி ஏதாவது லதா சொல்லி விட்டால் போதும். வார்த்தையால் விளாசி விட்டு தான் நகர்வாள்.
மங்கை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டால் “இவ என் ஆளு”, என்று பல இளைஞர்கள் பேசி அவளைக் கண்டு ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி பேசி தங்களுக்குள் அடித்துக் கொண்டு உருளும் ஆண்களும் அங்கே உண்டு.
மங்கைக்கு அழகு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவுக்கு அவளுக்கு கோபமும் வரும். எந்த ஆணும் அவ்வளவு எளிதில் மங்கையை நெருங்கி விட முடியாது.
காதல் என்று வந்து சொன்னால் நிச்சயம் ஒரு முறை விருப்பம் இல்லை என்று அமைதியாக மறுப்பை சொல்லிப் பார்ப்பாள். கேட்க வில்லை என்றால் அடுத்து அவன் அசிங்கப் பட்டு தான் செல்ல வேண்டும். மற்ற பெண்கள் போல பயந்து ஒதுங்கி போகும் ரகம் எல்லாம் அவள் இல்லை. அதற்காக நடு ரோட்டில் நின்று மற்றவர்கள் பார்க்கும் படி நடந்து தன்னுடைய பெயரையும் கெடுத்துக் கொள்ள மாட்டாள்.
அவளது வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி இருக்கும் சுரேஷ் என்பவன் அவளிடம் காதல் என்று சொன்னான். அவள் பொறுமையாக மறுத்து பார்த்தாள். அவன் கேட்க வில்லை. மீண்டும் மீண்டும் தொல்லை செய்ததும் அவன் வீட்டு வாசலுக்கே சென்றவள் “மல்லி அக்கா”, என்று அழைத்தாள்.
“என்ன மங்கை?”, என்று கேட்ட படி வெளியே வந்தாள் அந்த பெண்.
“என்னை உங்க வீட்டுக்கு மருமகளாக்க எதுவும் எண்ணம் உங்களுக்கு இருக்கா என்ன?”, என்று நேரடியாக கேட்டு விட்டாள்.
“என்ன மங்கை இப்படி கேக்குற?”
“அப்படி எண்ணம் இருந்தா அதை துடைச்சிருங்க. உங்க மகனுக்கும் சொல்லி வைங்க. இதுக்கு மேலே ஏதாவது நடந்தா அசிங்கம் தான் படணும். இப்ப உங்க கிட்ட சொல்லிட்டேன். மறுபடியும் அவன் என்னை தொல்லை செஞ்சா நான் போலீஸ்க்கு தான் போவேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். அடுத்து சுரேஷ் அவள் பக்கம் வரவே இல்லை. அவன் அன்னையிடம் வாங்கிய அடிகள் அப்படி.
அவள் குணம் பாதி பேருக்கு தெரிந்து அவளை நெருங்காமல் சைட் மட்டும் அடித்துக் கொண்டிருந்தனர்.
அவளது வீட்டில் அவள் சத்தம் எப்போதும் எதற்காவது கேட்டுக் கொண்டே தான் இருக்கும். அதுவும் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்கும். அவளது பாட்டி மங்கையர்கரசிக்கு சரியாக காது கேட்காது. அதனால் சிறு வயதில் இருந்து பாட்டியிடம் யாரும் அதிகமாக பேச மாட்டார்கள். இவள் தான் பேசுவாள். அதுவும் கொஞ்சம் சத்தமாக பேசுவாள் என்பதால் அப்படியே இவள் குரலும் சத்தமாகவே ஒலித்து விட்டது. இப்போது பாட்டி உயிருடன் இல்லை என்றாலும் அவள் குரல் ஓங்கியே ஒலிக்கும்.
“கத்தாத டி”, என்று அன்னை சொன்னாலும் “உங்க தங்கச்சி எதுக்கு இப்படி கத்துறா? பொண்ணு மாதிரியா பேசுறா?”, என்று லதா சொன்னாலும் மங்கை அதை காதிலே வாங்க மாட்டாள்.
அதிகம் படிக்க வில்லை என்றாலும் தந்தையிடம் அனுமதி பெற்று வண்டி ஓட்ட, கார் ஓட்ட என்று தனியே கற்றுக் கொண்டாள். அவள் கற்று முடித்தது தான் தாமதம் பெரிய அளவில் இல்லை என்றாலும் அந்த ஊரில் இருக்கும் மெயின் இடத்தில் ஒரு கடையை வாடகைக்கு பேசி ஒரு டிரைவிங் ஸ்கூலை ஆரம்பித்து கொடுத்து விட்டார் தந்தை.
ஒரு புது காரும், ஒரு பழைய காரும் தான் மகளுக்கு வாங்கிக் கொடுத்தார். அடுத்த இரண்டு வருடத்தில் மங்கையோ அந்த பழைய காரை கொடுத்து விட்டு இரண்டு புது கார்கள் வாங்கி விட்டாள்.
டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கும் முன் பேச்சு வார்த்தை செல்லும் போதே லதா கணவனிடம் அக்கறையாக பேசி அதற்கு முற்றுக் கட்டை போட நினைக்க அவனும் மங்கைக்கு எதற்கு அது என்ற நினைப்பில் தான் பேசினான்.
“பொம்பளை பிள்ளைக்கு எதுக்குப்பா டிரைவிங் ஸ்கூல்? அவ எப்படிப்பா அதை பாத்துக்குவா? அதுவும் வேற வீட்டுக்கு போக போற பொண்ணு. அவளுக்கு எதுக்கு இதெல்லாம்? நம்ம வீட்ல இருக்குற வரைக்கும் நிம்மதியா சந்தோஷமா இருக்கட்டுமே?”, என்று கேட்டான் நந்தன். அந்த வார்த்தைகள் அனைத்தும் லதாவின் உடையது என்று அனைவருக்கும் தெரிந்து தான் இருந்தது.
“உன் விஷயத்துல நாங்க யாரும் தலையிடுறோமா நந்தா? அதே மாதிரி என் பொண்ணு விஷயத்துலயும் நீ தலையிடாதே. உனக்கு கவர்ன்மெண்ட் வேலை இருக்கு. அடுத்து கவினும் படிச்சு முடிச்சு நல்ல பதவில உக்காந்துருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்படி இருக்க என் பொண்ணுக்கு நான் நல்லது செய்ய வேண்டாமா? அப்புறம் பணம் பத்தாம இருக்குன்னு நான் உன் கிட்ட எதுவும் கேக்கலை. அதனால நீ உன் வேலையை மட்டும் பாத்தா போதும்”, என்று சந்திரன் சொல்லி விட நந்தனால் என்ன சொல்லி விட முடியும்? முகத்தை தொங்க போட்டு விட்டு சென்று விட்டான்.
அடுத்த நாள் மேலும் லதா ஏற்றி விட “அப்பா லதா வீட்ல சும்மா தானே இருக்கா? அவ டிராவல்ஸ்க்கு போனா மங்கைக்கு உதவியா இருக்கும்ல? மங்கை கிட்ட சொல்லி லதாவையும் அங்கே கூட்டிட்டு போங்க. ரெண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தர் ஒத்தாசையா இருந்துக்குவாங்க”, என்று கேட்டான் நந்தன்.
லதாவின் நோக்கம் புரிந்த சந்திரன் “என் மகளால தனியா மேனேஜ் பண்ணிக்க முடியும்ன்னு நம்பி தான் நான் அவளுக்கு இதை ஆரம்பிச்சிக் கொடுத்துருக்கேன். அவ நல்லா நடத்துவா யாரோட உதவியும் இல்லாமலே. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு நந்தா. அதனால அவளுக்கு யாரோட உதவியும் தேவை படாது”, என்றார் உறுதியாக.
“இல்லைப்பா பணம் கணக்கு வழக்குக்காவது லதா போகட்டுமே? அவளுக்கும் நேரம் போகும்ல?”
“உன் பொண்டாட்டிக்கு நேரம் போகணும்னா படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைக்கு போக சொல்லு. அஸ்வின் தான் வளந்துட்டானே? அவனை உன் அம்மா பாத்துக்குவா. வேலை கிடைக்கிறதா கஷ்டம்? இல்லை நீயும் அவ அப்பாவும் சேந்து அவளுக்கு ஏதாவது தொழில் ஏற்பாடு பண்ணிக் கொடுங்க. நேரமும் போகும். பணமும் சம்பாதிக்கலாம். அதை விட்டுட்டு அண்ணன் அண்ணின்னு சொல்லி டிராவல்ஸ் விஷயத்துல மங்கைக்கு யாரும் இடைஞ்சல் கொடுக்க கூடாது. அதுல வர வருமானம் கூட மங்கைக்கு மட்டும் தான். அதுல இருந்து வீட்டு செலவுக்கு கூட வாங்க கூடாதுன்னு உன் அம்மா கிட்ட கூட சொல்லிட்டேன்”, என்றார் சந்திரன்.
“ஏன் மாமா அது நம்ம வீட்டு சொத்து தானே? மங்கைக்கு கல்யாணம் முடிஞ்சா அவ வேற ஊருக்கு போயிருவா. அப்புறம் அதை நான் தானே பாத்துக்கணும்? அதை இப்பவே செய்ய கூடாதா?”, என்று கேட்டாள் லதா.
“இருந்தாலும் இன்னைக்கு உனக்கு என் மக மேல ரொம்ப தான் அக்கறை வருது மா. அப்புறம் கவலைப் படாதே. எனக்கு என் பொண்ணை வெளியூர்ல கட்டி கொடுக்க எல்லாம் விருப்பம் இல்லை. இதே ஊர்ல தான் இருப்பா. அவ வசதிக்கு ஏத்த மாதிரி அவ கட்டிக் கொடுத்துருக்குற இடத்துக்கு பக்கத்துலே அவளுக்கு மங்கை டிராவல்ஸை மாத்திக் கொடுத்துருவேன்”, என்று சந்திரன் சொல்லி விட அதற்கு பிறகு யாரும் மூச்சு விடவில்லை.
இருந்தாலும் மகன் மீது சந்திரனுக்கு கோபம் வந்தது. மனைவி இப்படி பேசினால் “எங்க அப்பா அவர் மகளுக்கு செய்யுறார். நீ எதுக்கு தலையிடுற?”, என்று மனைவியை கேட்காமல் இப்படி அவளுக்கு ஜால்ரா தட்டுகிறானே என்று இருந்தது.
இவனை நம்பி எல்லாம் மகளையும் இளைய மகனையும் விட்டுச் செல்ல முடியாது என்று அவருக்கு நன்றாகவே புரிந்து போனது.
இப்போது கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கிறார். மங்கைக்கு டிராவல்ஸ் ஆரம்பிப்பதற்கு முன் அந்த பணத்தையும் சேர்த்து வைத்து வீடு கட்ட வேண்டும் என்று தான் முதலில் எண்ணினார்.
நந்தனின் குணத்தைக் கண்டு தான் மகளுக்கு டிராவல்ஸ் ஆரம்பித்தது. கூடவே கோமளத்தின் நகை மகளுக்கு தான் என்பதால் அவர்கள் நகை எதுவும் வாங்க யோசிக்க வில்லை. ஆனால் அது நந்தனுக்கும் லதாவுக்கும் தெரியாது. தெரிந்தால் எனக்கும் அம்மா நகையில் ஒரு பங்கு வேண்டும் என்று பஞ்சாயத்தை வைத்தாலும் வைப்பான்.
அடுத்து இளைய மகனுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும். ஏதோ கடவுள் புண்ணியத்தில் நந்தனுக்கு கவர்ன்மெண்ட் வேலை கிடைத்து விட்டது. கவினுக்கும் எதிர்காலத்தில் அரசாங்க வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாதே. அதனால் அதை யோசித்த படி இருந்தார் சந்திரன். இது தான் மங்கையின் குடும்பம். மங்கைக்கு அவளது டிராவல்ஸ் மற்றும் குடும்பம் மட்டுமே முக்கியம்.