அத்தியாயம் 1 

கண்ணீரும் கூட இனிமை தான்

வலியும் கூட சுகம் தான்

காதல் சேரும் பொழுதில்!!!

உலகிற்கு கூரையாக அமைந்திருக்கும் அழகிய பரந்த நீல வண்ண ஆகாயம் இன்று இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த ஆகாயத்துக்கு இடைப்பட்ட இருமலைகளுக்கு இடையே அமைந்திருப்பது போல அழகாக இருந்தது கோயம்புத்தூரில் உள்ள அந்த கிராமம் காடல்குடி. புதுமைகள் பல புகுந்தாலும் பழமை மொத்தமும் அந்த ஊரில் இன்னும் அழியாமல் தான் இருந்தது.

ஆதவன் செந்நிறக் கதிர்களை பாய்ச்சிக் கொண்டிருக்க காலை ஏழு மணி போல “அடியேய் மங்கை”, என்று அழைத்த படி மகளின் அறைக்குள் வந்தாள் அவளது அன்னை கோமளம்.

கட்டிலில் குப்புற படுத்து காலாட்டிய படி போனை பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி அன்னையின் குரல் கேட்டதும் “எதுக்கு மா காலைலே இப்படி கத்துற?”, என்று சத்தமாகவே கேட்டாள்.

ஏனோ அந்த குரல் கேட்டு ஒரு புத்துணர்வு வந்தது பார்த்திபனுக்கு. மங்கை குரல் ஓங்கி ஒழிப்பது மற்றவர்களுக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் அவள் குரலுக்கு அதே காம்பவுண்டுக்குள் இருக்கும் மற்றொரு வீட்டில் வசிக்கும் ரசிகன் தான் பார்த்திபன்.

மங்கை இருக்கும் காம்பவுண்டுக்குள் இன்னொரு வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்தான் பார்த்திபன். இரண்டு வீட்டுக்கும் ஒரே ஹவுஸ் ஓனர் தான். அவர் இப்போது சென்னையில் பிள்ளைகளுடன் செட்டில் ஆகி விட்டார். வாடகையை மட்டும் இரண்டு குடும்பமும் ஜிபேயில் அனுப்பி வைத்து விடுவார்கள்.

மங்கை குடும்பமும் பார்த்திபன் குடும்பமும் பல வருடங்களாக அங்கே தான் இருக்கிறார்கள்.

மங்கை பிறப்பதற்கு முன்பே அவர்கள் குடும்பம் அங்கே குடியிருக்க மங்கைக்கு ஏழு வயதாக இருக்கும் போது அங்கிருந்த மற்றொரு வீட்டுக்கு வாடகைக்கு வந்தார்கள் பார்த்திபனின் குடும்பத்தார். ஆனால் இரண்டு குடும்பத்திற்கும் பல வருடங்களாக ஆகவே ஆகாது.

“விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது? அடுப்பாங்கரைல எனக்கு ஏதாவது வந்து உதவி செய்யலாம்ல? குப்புற படுத்து காலாட்டிக்கிட்டு கிடக்க? அதையும் மெதுவா கேக்குறியா டி? பொம்பளை பிள்ளை இப்படியா சத்தம் போடுவ?”, என்று கேட்ட கோமளத்தின் குரலில் அப்படி ஒரு ஆதங்கம்.

எழுந்து அமர்ந்து அன்னையை இமைக்காமல் பார்த்த மங்கை “உனக்கு உதவிக்கு வந்தா மட்டும் நீ என்னை வேலை செய்ய விடுவியா? உன் மனசாட்சியை தொட்டு சொல்லு. நான் ஒரு மாதிரி காய் வெட்டுனா நீ ஒரு மாதிரி வெட்ட சொல்லுவ. எதுக்கு இப்படி வெட்டுறன்னு திட்டவும் செய்வ. விடு நான் பாத்துக்குறேன் உனக்கு ஒண்ணும் தெரியலைன்னு பேசியே சாகடிப்ப. சரி பாத்திரம் விளக்க வந்தா இதை இங்க வைக்கணும், அதை இங்க வைக்கணும்னு பாடம் எடுப்ப. எதுக்கு எடுத்தாலும் ஒரு குறை சொல்லுவ. கடுப்பா இருக்கும்”, என்றாள்.

“நீ திருத்திக்கணும்னு சொல்லுறது தப்பா டி? போற எடத்துல எவ உனக்கு சொல்லிக் கொடுப்பா? பிள்ளையை இப்படி வளத்துருக்காங்கன்னு எனக்கு தான் திட்டு விழும். அவியல்க்கு இப்படி தான்  காய் வெட்டணும்னு இருக்கு. அதுவே கூட்டுக்கு அப்படி வெட்ட முடியாது. அதைச் சொல்லிக் கொடுத்தா குத்தமா டி? உனக்கு வேலை செய்ய சோம்பேறித் தனம்ன்னு சொல்லு”

“அப்படி எல்லாம் இல்லை மா. என்னை திட்டுறேன்னு நீயே டென்ஷன் ஆகிருவ. உன்னை காலைல எதுக்கு தொல்லை பண்ணணும்னு தான்?”

“ரொம்ப நல்ல எண்ணம் டி உனக்கு”

“அதை விட இன்னொரு விஷயம் இருக்கு மா”

“என்னன்னு சொல்லித் தொலை”

“என்னைக்கா இருந்தாலும் நான் வேற வீட்டுக்கு பொற பொண்ணு. போற வரைக்கும் இங்க இளவரசியா மாம் டேட் லிட்டில் பிரின்ஸசா இருந்துக்குறேனே? உனக்கு உதவிக்கு ஆள் தானே வேணும்? அதான் உன் பிள்ளையோட சம்சாரம், இந்த வீட்டு மகாராணி, உன் அன்பான அண்ணன் பொண்ணு இருக்காளே? அவளை உன் அசிஸ்டன்ட் டா கூப்பிட வேண்டியது தானே?”

“அதான் நீயே சொல்லிட்டியே அவ இந்த வீட்டுக்கு மகாராணின்னு. வெளிய பொண்ணு எடுத்தா தான் கஷ்டம்ன்னு சொந்த அண்ணன் மகளை உன் அண்ணனுக்கு கட்டி வச்சா அவ என்னமோ அப்படி அதிகாரம் பண்ணுறா. என்ன பண்ணுறது எனக்கு வாச்சதும் சரி இல்லை. வந்ததும் சரி இல்லை. நீ எழுந்து வா டி, காலைலே எரிச்சலை கிளப்பிக்கிட்டு”

அதற்கு மேல் வாயடிக்காமல் “சரி வரேன்”, என்றாள் மங்கை. ஏனோ அன்னையின் குரல் சோர்வாக ஒழிக்க அதற்கு மேல் வாக்குவாதம் செய்ய அவளுக்கு மனதில்லை. அன்னையின் கீழே செல்ல பேப்பர் படித்துக் கொண்டிருந்த சந்திரன் மகளைப் பார்த்து அழகாக புன்னகை பூத்தார். அவளும் சிரித்து விட்டு அன்னையுடன் சென்று விட்டாள். அவள் மட்டும் தந்தையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தால் கோமளம் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாளே.

சந்திரன் மங்கையர்கரசியின் தந்தை எல்.ஐ.சியில் பணி புரிகிறார். நேர்மையான அதே நேரம் அமைதியான மனிதர். மனைவி மற்றும் பிள்ளைகள் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்பானவர். மகன் வேறு மகள் வேறு என்று எப்போதுமே அவர் பிரித்து பார்த்ததில்லை. ஆனால் மகன் திருமணம் முடிந்த பிறகு செய்த சில விஷயங்கள் அவருக்கு மூத்த மகன் மேல் இருந்த நல்மதிப்பை கொஞ்சம் குறைத்திருந்தது.

ஆனால் மகள் மேலும் இளைய மகன் மீதும் அவருக்கு அலாதி பிரியம். அதற்கு ஏற்றார் போல தான் மங்கையும் அவள் தம்பியும். அனைவரின் மீதும் அன்பு இருந்தாலும் தந்தை பேச்சை என்றுமே அவர்கள் தட்டியதில்லை.

சந்திரனின் மனைவி கோமளம் கணவருக்கு ஏற்றார் போல நடந்து கொண்டு அந்த வீட்டை சிறப்பாக நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் அவரின் காதல் மனைவி. கொஞ்சம் வெடுக் வெடுக் என்று பேசும் ரகம் தான்.  ஆனால் மனதில் எதுவும் இருக்காது.

சந்திரன் கோமளம் தம்பதிக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். முதல் இரண்டு பிள்ளைகள் அவர்கள் பிளான் படி உருவாகி இருக்க மூன்றாவது பிள்ளையோ கடவுள் அவர்களை அறியாமலே கொடுத்தது. அதையும் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.

மூத்தவன் நந்தன், ஈ.பியில் இன்ஜினியராக பணிபுரிகிறான். அவன் மனைவி லதா. கோமளத்தின் சொந்த அண்ணன் மகள் தான் லதா. அவர்களுக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடம் ஆகிறது.  இப்போது அவர்களுக்கு மூன்று வயதில் அஸ்வின் என்ற மகன் இருக்கிறான். சந்திரன் மற்றும் கோமளத்துக்கு மகனுக்கு இருபத்தி ஏழு இல்லை என்றால் இருபத்தி ஒன்பதில் தான் திருமணம் செய்து வைக்க எண்ணம் இருந்தது. அதுவும் மங்கைக்கு முடித்த பிறகு தான் மகனுக்கு செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தார்கள்.

ஆனால் கோமளத்தின் அண்ணன், மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பேச்சை ஆரம்பிக்க அண்ணன் மகள் தானே என்ற எண்ணத்தில் அவளை விட்டுக் கொடுக்க மானதில்லாமல் அவசரமாக நந்தனுக்கு மணம் முடித்து வைத்து விட்டார்கள்.

நந்தனுக்கு அடுத்து பிறந்தது மங்கை என்ற மங்கையர்க்கரசி. அவளது பாட்டியின் பெயர் தான் அவளுக்கு சூட்டப் பட்டிருந்தது. அவளுக்கு அடுத்து பிறந்தது கவின் அவளுடைய ஆசை தம்பி. கவின்க்கு அந்த வீட்டில் செல்லம் கொஞ்சம் அதிகம் தான். ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான்.

முதலில் நந்தன், மங்கை, கவின் மூன்று பேரும் அன்பாக தான் இருந்தார்கள். உடன் பிறந்தவர்களுக்குள் ஸ்னாக்ஸ், டிவி ரிமோட் வைத்து சிறு சிறு சண்டைகள் மட்டுமே வரும். ஆனாலும் உடனே மறந்து ஒன்றிக் கொள்வார்கள்.