மூன்று நாள் கழித்தும் வெற்றி வரவில்லை, வேற ஏதோ சவாரி வந்து விட்டதாம். சரண்யா பிள்ளைகள் உடன் தனியாக தான் இருந்தாள். அப்பா, கூட இல்லாமல் பிள்ளைகள் தவித்து தான் போனார்கள். வீடியோ காலில் மட்டும் தான் பார்த்து கொண்டார்கள்.
அந்த வாரத்தில் அகியின் அக்கா திருமணம். அகிக்காக கட்டாயம் போக வேண்டும். ஆனால், போக தான் தயக்கம். கல்யாணம் நடப்பது திருப்புவனத்தில்… அங்கு செல்லவே மனதில்லை. முன்பு என்றால் வேறு, தற்போது கணவன் உடன் இருக்க, வீடு தேடி வந்து பத்திரிகை வைத்தார்கள். அகியை மனதில் கொண்டு தான் செல்ல வேண்டும். கணவனிடம் சொல்லியும் விட்டாள். வெற்றி உடன் இல்லாவிட்டாலும் எதையும் மறைப்பதில்லை. அவனும் விட மாட்டான், எல்லாவற்றையும் கேட்டு விடுவான்.
சிவகுமார் தான் நகைகளை கொண்டு வந்து கொடுத்தார். வேற யாரும் உடன் வர வில்லை. அவள் அதை பெரிதாக எடுக்கவும் இல்லை.
ஒரு கஷ்டத்தில் உதவும் உறவு அவர்களுக்கு பெரிதாக படவில்லை, கொடுத்ததை திருப்பி கேட்கும் போது விரோதியாக்கி கொண்டார்கள். கொடுப்பது விஷயமில்லை, கேட்டது தான் விசயம் போல…
திருமணத்தன்று காலையில் நீல கலரில் மெஜந்தா கலர் பார்டர் வைத்த பட்டு புடவை, மாங்காய் வைத்த ஆரம் என்று சிறப்பாக கிளம்பி விட்டாள். பிள்ளைகளும் பட்டு பாவாடை சட்டையில் அம்சமாக இருந்தார்கள்.
மண்டபம் வந்ததில் இருந்து அகி உடன் தான் இருந்து கொண்டாள். இந்த ஊர் மறக்க கூடியது அல்ல, இன்னும் சில நாளில் இங்கு தான் வர வேண்டும். பிள்ளைகள் உடன் ஓரிடத்தில் அமர, நேர நின்றது தனலட்சுமி. உடல், முகம் எல்லாம் இரும்பாக இறுக, வேற பக்கம் முகம் திருப்பி கொண்டாள். விளையாட கூட பிள்ளைகளை விட வில்லை. அடுத்தடுத்து சொந்தங்கள் வர, கண்டு கொண்டாள் அவள் கொழுந்தன், நாத்துனார் என்று அனைவரும் வருவதை..
மாயாவிடம், “அந்த சீமை சித்திராங்கி வந்திருக்கா மாய… என்ன ஒரு தளுக்கு, குலுக்கு, எல்லாம் எம் மகன் காசு தான்.” என்று பொருமினார்.
“அம்மா, வாய மூடு. அண்ணனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். அவனுக்காகவாது பொறுத்து போ…”
“யாருக்கு நான் பயப்படனும். எனக்கு என்னைக்கும் அவளை பிடிக்காது. ஒட்டடை குச்சி மாதிரி இருந்து, ரெட்டை பிள்ளை எப்படி பெத்தா… எனக்கு அவளை பார்த்தாலே பச்சை மிளகாய் கடிச்ச மாதிரி இருக்கு…” எரிச்சல் மிகுந்து இருந்தது அவள் குரலில்.
சரண்யா முகூர்த்தம் முடிய கிளம்பும் நிலையில் இருந்தாள். வெற்றி வீட்டு ஆட்கள் தன்னையே சுத்தி வருவது போல ஒரு எண்ணம்…
முகூர்த்தம் நெருங்க மண்டபத்தில் கூட்டம் சேர்ந்தது… பிள்ளைகள் அகியிடம் இருக்க இவள் சற்று தள்ளி வந்தாள். தாலி கட்டும் வரை தான் இந்த கூட்டம். அதன் பின் கல்லெறிந்த காக்கா போல பறந்து விடும். சரண் சுற்றி முற்றி பார்க்க, கூட்டத்தில் ஒரு வளர்ந்த தலை. கணவனும் இந்த உயரத்தில் தான் இருப்பான் என்று எண்ணும் போதே, என்ன!… ஐயோ! அது யாரு என்று எட்டி பார்க்க, அவள் கணவன் தான். வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் போட்டு இவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.
ஒரு வாரம் ஆச்சு, பார்த்தும் முகம் புன்னகையில் புத்தது. அவனையே கண்கள் அகல பார்த்து நின்றாள். பிள்ளைகள் அகியிடம் இருப்பதை அறிந்தாலும் வெற்றியின் கால்கள் என்னவோ மனைவியை நோக்கி தான் சென்றது. தன்னை பார்த்ததும் ஆச்சர்யத்தில் விரிந்த முகத்தை கிட்ட பார்க்க ஆசை வந்தது.
கணவன் அருகில் வந்தும் அவனையே பார்த்து நிக்க, “வேற யாரோ எல்லாம் இல்லை. உன் புருசன் தான்…” என்று வெற்றி சொல்ல.
சிரிப்பு விரிந்தது சரண்யாக்கு. “சொல்லவே இல்லை…”
“ சர்ப்ரைஸ்…” என்றவன் பிள்ளைகளை தூக்கி கொண்டான்.
கல்யாண கலகலப்பில் இருந்தவர்கள் தந்தையை பார்த்ததும் ஒரே கொண்டாடம் தான். ஒரு இடத்தில் தன் குடும்பத்தோடு வெற்றி அமர்ந்து கொண்டான். பிள்ளைகளை மடியில் வைத்து பெற்றவர்கள் அமர்ந்திருக்க, அங்கிருக்கும் சொந்தங்கள் பார்வை வட்டத்தில் விழுந்தார்கள்.
வெற்றி ஊர் திரும்பியது சரண்யா விசாரித்து கொண்டு இருக்க, பதில் சொல்லி கொண்டு இருந்தான் வெற்றி. தோல் உரசி அருகருகே அமர்ந்திருக்க,
“நேத்து கல்யாணம் முடிச்சவ மாதிரி ஒட்டியே இருக்க…” என்ற தனம்.
“அடியே, அந்த பெருசு அப்படியே வெற்றி மாதிரி இல்லை. கண்ணு, மூக்கு, வாய் , முடி கூட வெற்றி தான். அந்த ரெண்டாவது அப்படியே அவளை மாதிரி… அடையாள பிள்ளை பெத்து வச்சுருக்கா…”
“அம்மா, அண்ணன் இருக்கான் வாய மூடு…”
“நான் ஏன் வாய மூடனும். உங்கண்ணனுக்கு இருக்கு, என்னை பார்க்காம அவ பின்னாடி போறான். வீட்டுக்கு வரட்டும்…”
முகூர்த்தம் நல்ல படியாக முடிய, சாப்பிட அமர்ந்தார்கள். வெற்றி வந்த பின் எழுந்து ஓடும் உணர்வு இல்லை. சாதரணமாக இருந்த கொண்டாள்.
தனத்திற்கு அஜியை தூக்கி கொள்ள ஆசை வந்தது. தன் தலை மகன் போல இருக்கும் பிள்ளை மீது ஒரு பாசம்… மாயாவை அதட்ட தொடங்கினார், பிள்ளையை தூக்கி வர சொல்லி…
ஆரவாரம் கொஞ்சம் குறைந்த பின், வெற்றி எழுந்து கொண்டான்.
“சரண், கார் செட் போய் ஒரு பார்வை பார்த்திட்டு, வீட்டுக்கு போகலாம்…” என்ற கணவனுக்கு சரி என்று தலையசைத்தாள். வெற்றி கார் எடுக்க வெளியில் செல்லும் சமையம், மாயா வந்து அஜியை நெருங்க,
பார்த்த சரண்யா கொதித்து போனாள். “ஏய், எம் பிள்ளை மேல கைய வச்சா, அவ்வளவு தான் மரியாதை…” என்று சரண்யா ஒரு அதட்டல் போட.
முகம் கலங்கி போனது மாயக்கு. அழுத முகமாக கலங்கி போய் வந்த மகளை பார்த்து பதறிய தனம் என்னவென்று விசாரித்தார். மகள் சொன்னதில் கொதித்தது போனவர், செல்வத்தை அழைத்து விசாரிக்க, வெற்றி சென்றது தெரிந்தது.
“வாடி, எம் மகளவே அரட்டி வைப்பாளா… இன்னைக்கு இருக்கு அவளுக்கு…” ஆவேசமாக நடக்க தொடங்கினார்.
அங்கு தான் வேல் முருகன் இருக்க, எல்லோரும் பேசி கொண்டிருந்தார்கள்.
“ஏய் சரண்யா, வாடி வெளிய… எம் மகளை என்ன சொன்ன?…” என்று கத்த, எல்லோரும் வந்து விட்டார்கள்.
“உம் மகளை எம் மக பார்க்க வந்ததுக்கு, தொட கூடாத்ன்னு சொல்லிருக்க உம் பொண்டாட்டி…” என்று கத்த.
“ என்ன சரண்?…”
“ஆமா, எம் பிள்ளைய அவங்க தொட கூடாது…” என்றால் தீர்மானமாக.
“ஏன்… எந்தங்கச்சி, நீ எப்படி தொட வேணாம்னு சொல்லுவா, இது தப்பு…” என்று அவர்களுக்கு சாதகமாக வெற்றி பேச
சரண்யாக்கு கோபம், “ எது தப்பு… குழந்தைக பிறந்து இருவது நாள், உங்களை தேடி உங்க வீட்டுக்கு வந்தேன்…”
வெற்றி அதிர்ந்து போய் சரண்யாவை பார்த்தான்.
“என்ன சொல்ற சரண்?…”
“ஆமாங்க, பிள்ளைகளை தூக்கிட்டு தனியா வந்தேன். சண்டை வேணாம், என் புருசன் கூட சேர்ந்து வாழ்வோம்ன்னு வீடு வந்தேன். நீங்க வெளிநாடு போனது எனக்கு தெரியாது. வீட்டுக்குள்ள பச்சை பிள்ளைகளோடு கால் எடுத்து வச்ச என்னை, பிள்ளையோட சேர்த்து வெளிய தள்ளி கதவை அடிச்சாங்க. இதுக்கு உங்க தம்பி, தங்கச்சி உடந்தை. நம்ம அண்ணன் பிள்ளைகன்னு கூட பார்க்கலை…” என்று சரண்யா சொன்ன நொடி, அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தான் வெற்றி.
அப்போது அவனும் சரண்யா உடன் சேர்ந்து வாழும் எண்ணத்தில் தானே இருந்தான். முகம் வெளுத்து போய் தாயை பார்க்க,
“ நீ, சொன்ன எம் மகன் என்னை ஒதுக்கி வைப்பானா… என்ன சிண்டு முடிஞ்சு விடுறையா. நானே சொல்றேன், எனக்கு உன்னை என்னைக்கும் பிடிக்காது. எங்க என் மகன் கிட்ட என்னை பிரிச்சு விடு பாப்போம். இந்த பிள்ளை மேல எனக்கு உரிமை இருக்கு…” என்று சரண்யா கையில் இருந்த அஜியை வலுக்கட்டாயமாக தூக்கி கொள்ள, பிள்ளை பயத்தில் கதற தொடங்கியது.
“அம்மா, தொடாத எம் பிள்ளையை…” என்று வெற்றி கத்த.
“அப்படி தாண்டா தொடுவேன். என்ன செய்வ..”
“ஐயோ! அஜி, பிள்ளையை கொடுங்க… நீங்க தூக்க கூடாது…” என்று சரண்யா கத்த
“எதே, நான் தூக்க கூடாதா… பிள்ளை எம் மகனுக்கு பொறந்தது தான, அப்ப எனக்கு தான் உரிமை இருக்கு…”
“அடியே சண்டாளி , என்ன பேச்சுடி பேசுற…” பதறி போய் வேல் வர,
“ஆமா, அவங்காத்தா வீட்டுல இருந்து வரும் போதே பிள்ளையோடா வந்தா… இது எம் மகன் வாரிசு தான்னா, அவனை பேத்தவ எனக்கு தான் முதல் உரிம… வெற்றி, நான் உன்னை பெறலன்னு சொல்லு, இல்லை உனக்கு பொறக்கலன்னு சொல்லு, நான் தூக்கல…” ஆவேசமாக தனம் பேச, கீழ இறங்கி அவரை போல் பேச வராமல் வாயடைத்து போனார்கள் கணவனும், மனைவியும்…