Kadanthu Sel Kaathaludan 1 14841 கடந்து செல் காதலுடன்! 1 “கந்தன் துணை” மெலிதாக இதழ்கள் விரிந்தது. தினமும் இந்த வாசகத்தை நூறு முறையேனும் படித்துவிடுவாள் சம்யுக்தா. பக்தியில் என்றால் இல்லை. ஒரு விதத்தில் கட்டாயம் என்றே சொல்லலாம். அவள் வலம் வரும் காரில் இருக்கும் வாசகம். கல்லூரிக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் இதை வாசிப்பதை கடமையாக செய்யும் பெண். ஏதும் செய்யாமல் இருப்பதற்கு, இதையாவது படிக்கலாம் என்ற எண்ணம்! அவள் வசிப்பது ஒன்றும் பாலைவனத்தில் இல்லை. அழகான ஊட்டி மலை பிரதேசம். முதலில் அழகாக இருந்த ஊட்டி மலை பிரதேசம் இப்போது சலிப்பை கொடுத்தது. இதற்கும் இங்கு வந்து ஓரிரு மாதங்கள் தான் ஆகிறது. மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பை இங்குள்ள கல்லூரிக்கு மாற்றி கொண்டு வர வைக்கப்பட்டிருக்கிறாள். இதுபோன்ற பெரிய விஷயங்களுக்கு எல்லாம் அவளின் முடிவு, விருப்பம் என்ற ஒன்று தான் இல்லவே இல்லையே! மிகப்பெரிய எஸ்டேட்டிற்குள் அவர்கள் கார் நுழைய, வாசலிலே அவளின் தந்தை குருமூர்த்தி. இரண்டு நாட்களாக கண்ணிலே படாதவர் இன்று மகள் வந்ததும், “வீட்டுக்குள்ளே இருக்கணும்” என்றார். கட்டளை! பணிந்து தான் ஆக வேண்டும். சரி என்று மகள் சொல்ல கூட அங்கு இடமில்லை. “கண்ணு. வந்துட்டியா. சீக்கிரம் சாப்பிட்டு ரூமுக்கு போயிடு சாமி” என்றார் கற்பகம் பாட்டி. “பசிக்கலை. அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் பாட்டி. இப்போ ஒரு கப் டீ மட்டும் கொடுங்களேன்” என்று சம்யுக்தா ஹாலில் அமர்ந்தாள். கற்பகம் பாட்டி உடனே அவளுக்கு குடிக்க டீ கொண்டு வந்தவர், அவளிடம் ஏதோ சொல்ல அருகில் வந்தார். அதற்குள் குருமூர்த்தி வந்துவிட்டவர், “நைட்டுக்கு இன்னொருத்தருக்கு சாப்பாடு பண்ணனும். நீங்க தான் பண்ணனும்” என்றார் கற்பகத்திடம். முக்கியமான ஆள் என்று புரிந்து போக, “சரிப்பா” என்றார் பாட்டி. “இன்னைக்கு மட்டுமில்லை. நான் சொல்ற வரைக்கும்” இங்கேயே தங்க போகிறார்களா? இதென்ன புதிதாக? “யாருக்கும் தெரிய கூடாது” என்ற குருமூர்த்தி பார்வை மகளின் மீதும் படிந்தது. குரலில் அப்படி ஒரு கடினத்தன்மை. எஸ்டேட் வேலைக்கும், வீட்டை சுத்தம் செய்ய வரும் ஆட்களுக்கும் தெரிய கூடாது என்பது தான் அதன் பொருள். கற்பகம் பாட்டிக்கு மட்டுமில்லை, சம்யுக்தாவிற்கும் புரிந்தது. ஆனால் ஏன்? இவரின் வேலை எல்லாம் வாசலுக்கு வெளியே தானே? இத்தனை வருடங்களாக அப்படித்தானே இருந்திருக்கிறார். இன்று மட்டும் ஏன்? யார் அது? தந்தையின் கெடுபிடி சட்டத்தை உடைத்தது யார்? ‘அது உனக்கு தேவையில்லாத வேலை‘ உடனே சிந்தனையை கலைத்தது அவளின் மனது. காயம்பட்ட மனதிற்கு தானே வலி தெரியும், மூளை அவளை அவள் இஷ்டத்திற்கு யோசிக்க விடலாம். ஆனால் அவளின் மனது அதை செய்யாது. “இன்னைக்கு உனக்கு எந்த பயிற்சியும் இல்லை. ரூமுக்கு போயிடணும்” என்றார் மகளிடம் தந்தை. சரி என்று தலையாட்டி கொண்ட சம்யுக்தாவிற்கு மிக பெரிய விடுதலை. விரிய துடித்த இதழ்களை அடக்கி கொண்டவள், டீ கப் வைத்து முகத்தை மறைத்து கொண்டாள். குருமூர்த்தி திரும்ப வாசலுக்கு செல்ல, “முடிச்சிட்டியா. சாப்பாட்டை ரூமுக்கே கொடுத்து விட்டுடுறேன் கண்ணு. நீ போய் ரெஸ்ட் எடு” என்றார் பாட்டி. சம்யுக்தா துள்ளல் நடையுடன் அறைக்குள் சென்றவள், கதவை மெல்ல மூடினாள். “சம்யுக்தா சாம்ராஜ்யம்!” ஆம் அவளின் சாம்ராஜ்யம் தான் அந்த அறை. அறைக்கு வெளியே என்றால் அவளை கட்டுப்படுத்த ஆள் உண்டு. அறைக்குள் அப்படி யாரும் கிடையாது. இங்கு அவளே ராணி! அவளே சேவகி! கல்லூரி புத்தகத்தை வைத்தவள், கைகளை விரித்து கொண்டு கட்டிலில் விழுந்தாள். அப்படி ஒரு ஆசுவாசம்! நிம்மதி பெருமூச்சு! பயிற்சி இல்லை என்பது அவளை இவ்வளவு சந்தோஷ படுத்துமா? இல்லை. இந்த நான்கு நாட்கள் மட்டுமே! பெண்ணுக்கான நாட்கள் அவை. தினசரி அதிகப்படியான பயிற்சியில் இந்த நாட்களில் சிரமப்படுகிறாள். கற்பகம் பாட்டி ஒருமுறை இதை பற்றி மேலோட்டமாக குருமூர்த்தியிடம் சொன்னதற்கு, “எல்லாம் சமாளிச்சு தான் வந்தாகணும்” என்று முடித்துவிட்டார் தந்தை. “இவ்வளவு பயிற்சி கொடுத்தும், இன்னொருத்தர் முதுகு பின்னாடி தான் மறைஞ்சிருக்கா. இதுல பயிற்சிக்கு வேற லீவ் வேணுமா?” என்று மகளை பார்த்து கேட்க, சம்யுக்தாவிற்கு கோவம். “நானே தான் கேட்டேன்ப்பா” என்று கற்பகம் பாட்டி வேகமாக சொல்ல, “நீங்க கேட்டு முடிக்கிற வரை மேடம் அமைதியா தானே இருந்தாங்க” என்ற குருமூர்த்தி மகளுக்கு பேசும் வாய்ப்பை கூட அளிக்காமல் சென்றுவிட்டார். “நான் செத்தாலும் பரவாயில்லை. இனி அவர்கிட்ட எனக்காக ஏதும் கேட்காதீங்க பாட்டி” என்றாள் மகள் ரோஷமாக. குருமூர்த்திக்கு எல்லாம் சரியாக நடந்தாக வேண்டும். அதில் சிறு தடங்கல் வந்தாலும் எதிரில் நிற்கும் ஆள் அவரின் எதிரியாகி விடுவார். அது மகளாகவே இருந்தாலும் கூட! குருமூர்த்தி வகுக்கும் சட்டதிட்டங்களை அவரே உடைக்கவும் செய்வார் என்பதை மகள் இன்றுதான் தெரிந்து கொண்டாள். எப்படியோ நான் இன்னைக்கு நிம்மதியா இருப்பேன்! ‘இதுக்காகவே அந்த கெஸ்ட்டை நான் மனதார வரவேற்கிறேன்! சில நிமிடங்களில் கதவு தட்டப்பட, “கண்ணு. சாப்பிட்டு ரூமுக்குள்ளே வைச்சுக்கோ. நானே வந்து வாங்கிக்கிறேன்” என்று கற்பகம் பாட்டி அவளுக்கான உணவை கொடுத்து சென்றார். அவரிடம் தெரிந்த அவசரத்தில், ஏதோ நடக்க போகிறது என்று புரிந்து கொண்டாள் சம்யுக்தா. எப்போதுமே வீடு அமைதியாக தான் இருக்கும் என்றாலும் இன்று மிக, மிக அதிகமான அமைதி. சம்யுக்தாவிற்கு இந்த அமைதி எச்சரிக்கையை கொடுக்க, எல்லா ஜன்னல்களையும் அடைத்துவிட்டாள். சிறிது நேர ஓய்வுக்கு பிறகு உணவை உண்டாள். ஏனோ தொலைக்காட்சி பார்க்க மனதில்லை. அறைக்குள் நடந்தாள். பூ போன்ற பாதங்கள் தரையை முத்தமிட்டு வந்தது. சத்தமில்லா முத்தமே! எப்போதும் இந்த நேரம் தோட்டத்திற்கு செல்பவளுக்கு அறைக்குள் அடைந்து கிடக்க முடியவில்லை. அங்க போலாமா? சம்யுக்தா கண்கள் மின்னியது. அந்த இடத்தை நினைத்தாலே பெண்ணுக்குள் குதூகலம் வந்துவிடும். இருக்காதா பின்ன? தந்தைக்கு தெரியாமல் அவள் காக்கும் ஓர் ரகசியம் இது. குருமூர்த்தியின் கழுகு கண்களில் இருந்து எதுவும் தப்பாது. கூர்பார்வை கொண்ட மனிதருக்கு இந்த ரகசியம் தெரியாதே! அவர்கள் வசிப்பது பல தலைமுறை எஸ்டேட் பங்களா. குருமூர்த்தியும் இதை சமீபமாக தான் வாங்கியிருக்க, அவருக்கும் இதற்குள் புதைத்து கிடக்கும் ரகசியங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. சம்யுக்தா இதை அறிந்து கொண்டதும் ஓர் விபத்தில் தான். அவளின் அறை அவளின் சுதந்திரம் என்பதற்கு இணங்க, குருமூர்த்தி அறை மாற்றத்திற்கான அனுமதியை கொடுத்தார். சம்யுக்தா மொத்த அறையும் அவளுக்கேற்றது போல் மாற்றினாள். அந்த நேரம் கப் போர்டுகளை மாற்ற, வேலை நடந்து கொண்டிருந்தது. உணவு நேரம் என்று பாதி வேலையில் விட்டு செல்ல, சம்யுக்தா மேற்பார்வை பார்க்க வந்தவள், கவனிக்காமல் கப் போர்டுகளின் கதவை வேகமாக இழுத்துவிட, மொத்தமாக சுவற்றில் இருந்து பிய்த்து கொண்டு அவள் விழுந்துவிட்டது. நல்லவேளை சட்டென நகர்ந்ததில் அவளின் காலின் மேல் தான் நல்ல காயம். சத்தம் கேட்டு மொத்த பேரும் வந்துவிட்டார்கள். குருமூர்த்தி வந்தவர் முதலில், வேலை செய்தவர்களை தான் அடித்தார். “அய்யா. பாப்பா உள்ள வந்தது எங்களுக்கு தெரியாது” என்று அவர்கள் சொன்னது எல்லாம் அவரின் காதுகளுக்கு கேட்கவே இல்லை. “ப்பா. ப்ளீஸ். என்மேல தான் தப்பு” என்று சம்யுக்தா சொல்ல, மகளை திரும்பி அப்படி ஓர் பார்வை. கற்பகம் பாட்டி, “நீ பேசாத கண்ணு” என்று அவளை அடக்கிவிட்டார். அதன் பின் ஓர் வாரம் வேலை நடக்கவே இல்லை. சம்யுக்தா காலும் சரியாகி வர, பெண்ணுக்குள் ஓர் பரபரப்பு. தந்தை எப்போது வெளியே செல்வார் என்று பார்த்து கொண்டே இருந்தவள், யாருக்கும் தெரியாமல் அந்த அறைக்கு சென்றாள். கப் போர்ட் விழும் போதே அவளின் கண்களுக்குள் ஏதோ உறுத்தல். மெலிதான துளை அந்த சுவற்றில். சம்யுக்தா அந்த சுவற்றை தட்டி பார்த்தவள், வித்தியாசத்தை உணர்ந்தாள். சுவர் தான் ஆனால் சுவர் இல்லை. ஆர்க்கிடெக்ட் மாணவியின் மூளை வேகமாக செயல்பட்டது. நிச்சயம் ஏதோ ரகசிய வழி, அல்லது அறை தான் இருக்கும். எப்படி அதை திறப்பது என்று பலவாறாக, பல வாரங்களாக முயன்று சென்று வாரம் தான் அதை திறந்திருந்தாள். கப் போர்ட் வேண்டாம் என்றுவிட்டு, ஓவியங்களை அங்கு மாட்டியிருந்தவள், அந்த கதவு திறந்ததும், டார்ச் ஒலியுடன் சிதிலமடைந்த அந்த சுரங்க வழிக்குள் பயணப்பட்டாள். சில நிமிடங்களில், அந்த ரகசிய வழி முடிந்தது ஓர் அறைக்குள்! இதெந்த ரூம்? கும்மிருட்டாக இருந்தது. சிறு வெளிச்சம் மட்டும் எங்கிருந்தோ பாய்ந்தது. அப்பாவிடம் சொல்லலாமா? ம்ஹூம். எனக்கான ரகசியம் இது! இரவில் யாருக்கும் தெரியாமல் ரகசிய வழியை சுத்தம் செய்தவள், இன்றிரவு அந்த அறையை சுத்தம் செய்யலாமா என்று யோசித்தாள். “எப்படியும் வெளியே போக முடியாது. அதுக்கு இதையாவது செய்யலாம்” என்று தூங்க போவதாக பாட்டிக்கு போனில் சொல்லிவிட்டு அறை கதவை லாக் செய்து கொண்டாள். சுத்தம் செய்வதற்கான பொருட்கள் ரகசிய வழியில் இருக்க, அந்த அறைக்கு சென்றவள் அதிர்ந்து நின்றுவிட்டாள். அறை மிகவும் சுத்தமாக இருந்தது. அதனுடன் பொருட்களும் புதிதாக இறங்கியிருந்தது. சம்யுக்தாவை கலவர படுத்துவது போல் யாரோ நடக்கும் சத்தம். சட்டென அங்கிருந்த கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டாள். கதவு திறந்தது. இருவர் கால்கள் உள்ளே நுழைய, “நாங்க சொல்ற வரைக்கும் நீங்க இங்க தான் இருக்கணும்” என்று குருமூர்த்தி குரல். சம்யுக்தா மூச்சை இழுத்து பிடித்து கொண்டாள். “சாப்பாடு வைச்சுட்டு போறேன். ஏதும் தேவைன்னா இந்த பட்டனை அழுத்துங்க” என்று குருமூர்த்தி கதவை சாற்றி விட்டு சென்றார். இப்போது அந்த அறையில் யாரோ ஓர் ஆள், இவள் மட்டுமே! அச்சோ நான் எப்படி வெளியே போக? புதிதாக வந்தவன் ஆண் என்பது அவனின் கால்களிலே தெரிந்தது. சில நொடி கனமான அமைதி. பின் மெலிதான ஓர் சத்தம். அந்த சத்தம் படிப்படியாக உயர்ந்து, ஓர் கதறல். மண்டியிட்டு முகத்தை மூடி கொண்டு அப்படி ஓர் அழுகை. சம்யுக்தா திகைத்து போனாள். நிமிடங்கள் நீண்டு கொண்டே சென்றது. கதறல் சிறிதும் குறையவில்லை. ஏதோ பெயர் சொல்லி, சொல்லி கதறினான். தரையை கைகளால் ஓங்கி, ஓங்கி அடித்ததில், சம்யுக்தா கண்களை இறுக்கமாக மூடி கொள்ள, அவளின் காதுகளும் அடைத்து கொண்டது. ‘இப்படி அடிக்கிறாங்க. கை என்னத்துக்கு ஆகும்‘ ஓயாத அவன் கண்ணீரில், பெண்ணுக்கும் காரணமே இல்லாமல், கண்ணீர் வழிந்தது. அவனின் கதறல் சிறிதாக குறைய, பெண்ணுக்குள் ஆசுவாசம். நன்றாக மூச்சை இழுத்துவிட்ட நேரம், பொத்தென கீழே சரிந்திருந்தான் அந்த புதியவன். “அயோ என்னாச்சு” சம்யுக்தா வெளியே வர வழியில்லாமல் அவளின் பக்கத்துலே பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தான். சம்யுக்தா போராடி அவனை கைககளால் தள்ளி, கிடைத்த இடைவெளியில் வெளியே வந்தவள் முதலில் கண்டது அவன் முகத்தை தான். விழியோரம் இன்னமும் கசிந்து கொண்டிருந்த கண்ணீர் துளிகளுடன் அவன் முகத்தை கண்டாள் பெண். பேச்சு மூச்சில்லாமல் இருந்தான். சில நொடிகள் என்ற செய்வதென்றே தெரியவில்லை. ‘போயிடு சம்யு. சீக்கிரம் போ. அப்பா வந்தா நீ தொலைஞ்ச. போ‘ என்று அவளின் மனது விரட்ட, கால்கள் அசைய மறுத்தது. மயக்கமாகி விட்டானா? வேறெதுவுமா? பயத்தில் திக், திக்கென அடித்த நெஞ்சத்துடன் அவனுக்கு அருகில் சென்றாள் சம்யுக்தா. அவனை நோக்கி நீண்ட விரல்கள், தொட தயங்கின. ‘சீக்கிரம் அவனுக்கு என்னாச்சுன்னு பாரு சம்யு’ தனக்கு தானே சொன்னவள், மண்டியிட்டு அவன் இதயத்துக்கு அருகில் காதுகளை வைக்க, துடித்தது அவன் இதயம். சம்யுக்தா இதய துடிப்பும் இப்போது சீரானது. வேகமாக எழுந்து, அங்கிருந்த தண்ணீர் எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள். ம்ஹூம், அசைவே இல்லை. தண்ணீர் வைத்து முகம் துடைத்து, கொஞ்சம் வலுவாக தட்டி எதற்கும் பலனில்லை என்றதும் சம்யுக்தா யோசிக்கவே இல்லை. குருமூர்த்தி சொன்ன பட்டனை தட்டிவிட்டு, மின்னலாக ரகசிய வழிக்குள் மறைந்துவிட்டாள். இனி தந்தை பார்த்து கொள்வார்! பெண் பதட்டத்துடன் அவள் அறைக்கு திரும்பினாள்.