இரவு வந்த விக்ரம் சந்தியாவின் முகத்தை பார்த்தே , ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டான் . அம்மாவிடம் கேட்டால் பெரிய பிரச்சனையாகும் என்பதை உணர்ந்து , அமைதியாக உண்டு விட்டு, உள்ளே சென்றான் .
சந்தியா உள்ளுக்குள் வெதும்பிக் கொண்டிருந்தாள் . இதுவரை வீட்டு மனிதர்கள் முன் மட்டுமே நடந்த அவமதிப்பு , இன்று வெளி நபர்களை அடைந்ததைப் பொறுக்க முடியாமல் வேதனையுற்றாள் . இனி இது அவர்கள் நண்பர்கள் வட்டம் முழுவதும் பரவும் , இனி தனக்கு மரியாதை என்பது கானல் நீர் என்பதை நினைத்துக் குமைந்தாள் .
விஸ்வா வந்து விவரம் கேட்ட போது , “சொல்வோமா?” என்று முதலில் யோசித்தாள் . பின் பழைய சம்பவங்கள் படம் போல் ஓட , ஒரு விரக்தி சிரிப்பை சிந்தி விட்டு , அமைதியாக படுத்துக் கொண்டாள் .
அவளுடைய மௌனமும் , சிரிப்பும் , அவனை அறுத்தது . மனதில் பயப்பந்து உருண்டது .
அவன் பயந்த மாதிரியே , அடுத்து வந்த நாட்களில் இருவருக்குமிடையே மலரத் தொடங்கிய உறவு கருகியது . சந்தியா ஒடுங்கினாள் . உணவு உட்கொள்ள முடியாமல் சிரமப்பட்டாள் .
விஸ்வா வேறு வழியில்லாமல் சுதாவிடம் நேரிடையாக விசாரிக்காமல் வேறு மாதிரி கேள்விகளைக் கேட்டு விசயத்தை வாங்கினான் .
பிரச்சனையின் வீரியத்தை கண்டு அதிர்ந்தான் .
அவனுடைய வளர்ப்பு முறை அவனை அம்மாவிடம் நியாயம் கேட்க விடவில்லை . அம்மா மீதான பாசம் தடுத்தது . அம்மாவிடம் பேசப் பயந்தான் . யோசித்தான் .
அப்பாவிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தால் , “இதுவரை அவர் பேச்சை உள் வாங்காததும் , போன முறை நீ தான் குடும்பத் தலைவன் , நீயே தான் சரி செய்ய வேண்டும்” என்று சொன்னதும் ஞாபகத்திற்கு வர அமைதியானான் .
சந்தியாவின் மௌனத்தை உடைக்க முயன்றான் . இறங்கிப் போய் பேசினான் . ஆனால் அதை எதையும் உணரும் நிலையில் சந்தியா இருக்கவில்லை . அவள் வாழ்க்கையே வெறுத்து போய் இருந்தாள் .
மீண்டும் பழைய பிரச்சனை ஆரம்பித்தது . உணவின் மீது ஒவ்வாமை வந்தது . சாப்பிட்டவுடன் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள் .
விஸ்வாவும் அவளை உண்ண வைக்க முயன்றான் . இறுதியில் அவள் கஷ்டப்படுவதைக் கண்டு , அம் முயற்சியை கைவிட்டான் .
மருத்துவமனைக்கு அழைக்க , “எனக்கு ஒன்றும் இல்லை , நான் எப்படியாவது சாப்பிட்டு விடுகிறேன் , எங்கள் வீட்டிற்கோ , மருத்துவமனைக்கோ வேண்டாம்” என்று படபடத்தாள் . அவள் பயத்தைப் புரிந்து கொண்ட விஸ்வா, வருந்தினான் . பின் ஒருவாறு கெஞ்சி , மிரட்டி என்று சகல வித்தைகளையும் இறக்கி , அவளை சம்மதிக்க வைத்தான் .
மருத்துவர் சந்தியாவைப் பரிசோதித்து விட்டு , சில பரிசோதனைகளுக்காகச் சந்தியாவை செவிலியருடன் அனுப்பி வைத்து விட்டு , விஸ்வாவை நிறுத்தினார் .
பின் விஸ்வாவிடம், “நான் பார்த்தவரையில் அவருக்கு உடம்பில் பிரச்சனையில்லை , மனதில் தான் பிரச்சனை….”
விஸ்வா குழம்பிப் போய் பார்க்க , “வயிற்றுப் பிரச்சனை அவர் உடல் சம்மந்தப்பட்டது இல்லை , மனம் சம்பந்தப்பட்டது….”
விஸ்வா அதிர்ந்து பார்க்க , “நான் அனுமானித்த வரை, தாங்க முடியாத மன வலி இல்லை பிரச்சனை வரும்போது தான் அவருக்கு வயிறு பாதிக்கப்படுகிறது ….”
“பிரச்சனையைக் கண்டு பிடித்து அதை சரி செய்யப் பாருங்கள் விஸ்வா இல்லையென்றால் விபரீதமாகிவிடும் . முக்கியமாக அவருக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்குங்கள் காலம் கடந்து விட்டால் சரி செய்வது மிகவும் கடினம்…”
விஸ்வா நிலைகுலைந்து, அவரைப் பார்க்க, “மன அழுத்தத்தின் ஆரம்பக்கட்டம் தான் . இப்போதே நாம் சுதாரித்து சரி செய்து விட்டால் , பிரச்சனை இல்லை… ”
விஸ்வா திகைக்க, அவன் தோள் தட்டி,
“இப்போதைக்கு அன்சைட்டிக்கும்(anxiety) , நல்ல தூக்கத்திற்கும் மாத்திரை தருகிறேன் . இரண்டு வாரம் சாப்பிடட்டும் , ‘சரியாகி விடும்’ என்று தான் நினைக்கிறேன் . அப்படி இல்லையென்றால் அடுத்தமுறை மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது…”
விஸ்வாவிற்கு இதைக் கிரகிக்க நேரமானது . அவன் அதிர்ச்சியிலே இருந்தான்.
மீண்டும் மருத்துவர் , “அவங்களுடைய வருத்தம் கவலைக்குக் காரணம் என்ன? என்று கண்டுபிடித்து , சரி செய்யுங்கள் . இனி அடுத்து அனைத்தும் உங்கள் கையில் தான் உள்ளது. அடுத்த ஸ்டேஜிற்குச் சென்று விட்டால் குணப்படுத்துவதற்குப் பெரும் போராட்டம் நடத்த வேண்டும்” என்று மீண்டும் எச்சரித்தார் .
மீண்டும் மீண்டும் அதே சூழ்நிலையில் உழலும் போது , “எப்படி சரியாகும் விஸ்வா?ஆணிவேரைக் கண்டுபிடித்து சரி செய்யுங்கள்…”
அத்தியாயம் 73
விஸ்வா மருத்துவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் , சந்தியா பரிசோதனைக்காக ஸ்கேன் சென்டர் வாசலில் காத்திருக்க , கூட்டிக்கொண்டு வந்த செவிலியர் மற்றொருவரிடம் பேசிக் கொண்டிருந்தார் .
அப்போது ரஞ்சனியும் ரகுவும் பரிசோதனையை முடித்துக்கொண்டு வெளியே வர,
ரஞ்சனி சந்தியாவை கண்டு கொள்ள , சந்தியா வாடிப் போய் தெளிவு இல்லாமல் இருப்பதைக் கண்டு , இருவரும் அவள் அருகில் சென்றனர் .
சந்தியா அதை உணரவே இல்லை .
ரஞ்சனி யோசனையோடு ரகுவை பார்க்க , அவன் முகத்திலும் சிந்தனை முடிச்சுக்களே இருந்தன .
பின் மெதுவாக ரஞ்சனி, “சந்தியா , சந்தியா …..”என்று அழைக்க , மூன்றாம் முறை உணர்வு பெற்று நிமிர்ந்தாள் .
“ரஞ்சனி …..” என்று சந்தியா மெல்லிய சிரிப்பைச் சிந்த ,
“எப்படி இருக்கிறீர்கள்?” என்று அருகே அமர்ந்தாள் . ரகுவும் சந்தியாவை, “நன்றாக இருக்கிறீர்களா?” என்று நலம் விசாரித்தான்.
சின்ன தலையாட்டுதலுடன், நிறுத்திக் கொண்டாள் சந்தியா .
ரஞ்சனி ரகுவைப் பார்க்க , உடனே அவன் , “நீங்கள் இரண்டு பேரும் பேசிக் கொண்டு இருங்கள் , நான் போய் மாத்திரை வாங்கி வருகிறேன் . மருந்து சீட்டைக் கொடு ரஞ்சனி” என்று கேட்க ,
அவள் அதைப் பையில் தேட ,
அப்போது ஒரு செவிலியர் வர , ரஞ்சனி வேகமாக எழ , தடுமாற , வேகமாக ரகு வந்து அணைத்து கொள்ள , செவலியரும் கையைப் பிடித்தார் .
“எதற்கு ரஞ்சனி அவசரம் ?” என்று கண்டிக்க ,
“இல்லை….”என்று ரஞ்சனி சமாளிக்க ,
உடனே ரகு , “என்ன பிரச்சனை?” என்று குனிந்து கால்களைப் பார்க்க ,
“கலட்டி மாட்டியதில் சரியாக ஃபிக்ஸ் ஆக வில்லை என்று நினைக்கிறேன்…”
உடனே ரகு குனிந்து அதைச் சரி செய்தான் . இதை அனைத்தையும் சந்தியா அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் .
ரகு செவலியரைப் பார்க்க , “நீங்கள் மருந்து சீட்டை மறந்து அங்கேயே வைத்து விட்டீர்கள் . அதைத்தான் கொடுக்க வந்தேன்” என்று கொடுத்து விட்டு சென்றாள் .
“இப்போது ஓ.கே. தானே?” என்று உறுதிப்படுத்திக் கொண்டு நகர்ந்தான் .
“எப்படி ரஞ்சனி ? உங்கள் கால்களுக்கு என்னாச்சு?” என்று பதட்டப்பட்டுக் கேட்க ,
சந்தியா கேட்ட விதத்தை வைத்தே , இப்போது தான் தெரிந்து இருக்கிறது என்று புரிந்து கொண்டாள் . பின் சின்ன சிரிப்போடு , “கிட்டத்தட்ட நான்கு வருடம் ஆயிற்று…”
சந்தியா அதிர்வுடன் , “அப்போ திருமணத்தின் பொழுது…” என்று இழுக்க ,
“நாங்கள் உட்கார்ந்து இருந்ததால் , உங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்” என்று புன்னகைத்தாள் ரஞ்சனி .
இதற்கு மேல் கேட்பது நாகரீகமாக இருக்காது என்று உணர்ந்த சந்தியா , “எத்தனை மாதம் ?” என்று பேச்சை மாற்ற,
ரஞ்சனி சின்ன சிரிப்போடு , “நான்கு ஆரம்பித்திருக்கிறது , அதான் ஸ்கேன் செய்ய வந்தோம் .”
“நீங்கள்….. ?” என்று விசாரிக்க ,
சந்தியாவிற்கு சட்டென்று கண்கலங்க , பின் சமாளித்தவள் , “சரியாகச் சாப்பிட முடியவில்லை . வலுக்கட்டாயமாக உட்கொண்டாலும் வாந்தி , வயிற்றுப்போக்கு என்று ஆகி விடுகிறது , அதான் டெஸ்ட் செய்ய வந்தோம் .”
“ஓ…. ! ஒன்றும் இருக்காது . என் தோழி ஹரிணிக்குக் கூட இப்படித் தான் இருந்தது . அல்சர் என்று மருத்துவர் , மருந்துகள் தந்தார் இப்போது நன்றாக இருக்கிறாள்” என்று நம்பிக்கை ஊட்டினாள் .
ரகு வந்து விட , சந்தியாவின் வாடிய முகமே , அவர்களைத் தனித்து விட்டுச் செல்ல யோசிக்க வைக்க, “உங்கள் கூட யார் வந்திருக்கிறார்கள் ?” என்று வினவ ,
அதே நேரம் விஸ்வாவும் வர , இவர்களைக் கண்டவன் அதிர்ந்தான் . பின் சுதாரித்து நலம் விசாரித்தான் .
அப்போது செவிலியர் சந்தியாவை அழைக்க , “வருகிறேன்…” என்று நகர்ந்தனர் .
“ஏதோ பிரச்சனை போல் தெரிகிறது ரஞ்சனி…”
“எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது . இருவர் முகத்திலும் மகிழ்ச்சியே இல்லை” என்றும் ரஞ்சனியும் வருத்தப்பட்டாள் .
அத்தியாயம் 74
காரில் வரும் பொழுது சந்தியா , “ரஞ்சனிக்கு ஒரு கால் இல்லை , உங்களுக்குத் தெரியுமா?”
“ம்ம்…”
“எப்போது தெரியும் ? ஏன் எனக்குச் சொல்லவில்லை ?”
சற்று உஷாரனவன் , “திருமணத்தின் போதே தெரியுமே? நீ கவனிக்கவில்லையா?”
“இல்லைங்க , நான் கவனிக்கவில்லை . ரகு இஸ் கிரேட் , குறைபாடு தெரிந்தும் மணந்திருக்கிறாரே?”
விஸ்வாவிற்குக் குத்த, அமைதியானான் .
சந்தியாவுடன் இதைப் பற்றிப் பேசுவது பிடிக்கவில்லை தான் . ஆனால் அவளுடைய மௌனத்தை உடைக்கிறதே என்பதற்காக பொறுமையாகக் கேட்டுக் கொண்டு வந்தான் .
“இன்றைக்கு ……” என்று நடந்த சம்பவத்தை விவரித்தாள் . “நான் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன் . அத்தனை கூட்டத்திலும் , ஒரு நிமிடம் கூட தயங்காது மனைவியின் காலைப் பிடித்தார்” என்றாள் ஒரு பெருமூச்சுடன் .
காரை ஓட்டிக் கொண்டிருந்த விஸ்வா திரும்பிப் பார்க்க ,
சந்தியா ஒரு வெற்றுப் புன்னகையைச் சிந்தி விட்டு , வெளியே பார்க்க ஆரம்பித்தாள் .
சந்தியாவின் பார்வையும் , புன்னகையும் ஏதோ செய்ய , நொந்து போனான் . அதே நேரம் மருத்துவர் பேசியதும் மனதில் ஓட , இதைச் சரி செய்தே ஆக வேண்டும் என்ற கவலையும் வந்தது .
மனநல மருத்துவரிடம் போக வேண்டும் என்று நினைத்தாலே படபடப்பாக இருந்தது . முதலில் இதற்கு சந்தியா ஒத்து கொள்ள மாட்டாள் , மேலும் அவள் வீட்டில் தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் . அதைவிட அம்மா எப்படி நடந்து கொள்வார்கள் என்று அவனால் யூகிக்கக் கூட முடியவில்லை . இவையெல்லாம் மண்டைக்குள் ஓட , குழம்பியபடி வண்டியை ஓட்டி கொண்டிருந்தான் .
அதே வேளையில் மனநல மருத்தவரிடம் போகாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பலமாக ஓடியது . ஆனால் அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை . இதுவரைக்கும் தானாக எதையும் யோசித்து செயல்படுத்தாத தன் விளைவு , குழம்பிப் போய் முட்டுச் சந்தில் நின்றான் . வண்டியில் மௌனமே ஆட்சி செய்தது . வீடு வந்து சேர்ந்தார்கள் .
ராஜி விசாரிக்க , “மாத்திரை கொடுத்திருக்கிறார்கள்” என்று முடித்துக் கொண்டான் .
மேலும் என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு நாட்கள் போக , அன்று விஸ்வா நண்பனின் திருமண வரவேற்பிற்கு செல்ல வேண்டியதிருந்தது ,
சந்தியா இருந்த மனநிலையில் வர மறுக்க , விஸ்வா மட்டும் தனித்துச் சென்றான் .
ரகுவும் வந்திருக்க , புன்னகையைப் பரிமாறிக் கொண்டு மற்ற நண்பர்களுடன் கலந்தனர் .
வரவேற்பு முடிந்து கிளம்ப , விஸ்வாவின் கார் பஞ்சராகி இருந்தது .
இதைக் கவனித்த ரகு , அருகே வந்து , “வாங்க விஸ்வா , நான் டிராப் செய்கிறேன் .”
“இல்லை வேண்டாம் , நான் டாக்ஸி இல்லை ஆட்டோ பிடித்துப் போய் கொள்கிறேன்” என்று மறுக்க ,
“எனக்கு ஒன்றும் சிரமமில்லை , வாங்க…” என்று மறுபடியும் அழைக்க ,
இதற்கு மேல் மறுத்தால் , நன்றாக இருக்காது என்று விஸ்வாவும் புறப்பட்டான் . காரில் சிறிது நேரம் தொழில் சம்மந்தப்பட்ட பேச்சு ஓட ,
மெதுவாக ரகு , “என்ன பிரச்சனை விஸ்வா? உங்கள் முகமே சரியில்லை…”
விஸ்வா அமைதியாக இருக்க ,
“சொல்ல வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை . உங்களுக்குளேயே குழம்பித் தவிப்பதை விட , சில நேரம் நாம் யாரிடமாவது பேசினால் தெளிவும் தீர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது . நான் நம்பிக்கைக்குறியவன் என்று நினைத்தால் சொல்லாம் இல்லையென்றாலும் வேறு யாரிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள் விஸ்வா . அதுதான் நல்லது…”
விஸ்வா சற்று நேரம் அமைதியாக யோசித்தான் , பின் ரகுவின் பொறுமை , பக்குவம் என்று எல்லாவற்றையும் எண்ணி , ‘அவனிடம் பகிரலாம்’ என்று முடிவு செய்து , “வண்டியை பீச்சுக்கு விடுங்க ரகு..”
இருவரும் கடற்கரையில் ஓர் தனிமையான இடத்தில் அமர்ந்தனர் .