கோவத்தில் முகம் சிவந்து விட, அழுகையும் வர கண்ணீரை அழுத்தி துடைத்துக் கொண்டவள், “அந்த வேதா இல்லை இப்போ நான். எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு, உன்கிட்ட பேச உன் மூஞ்ச பார்க்க எதுவும் பிடிக்கல எனக்கு” என்றாள்.
அவள் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவும் ஆயாசமாக பார்த்தான்.
“நீ போலாம், போ இங்கேருந்து” என சொல்லி முகத்தை திருப்பினாள்.
“ம்ம்… சமாதானமா இத கொண்டு போக விட மாட்டேன்னு நீ அடம் பிடிச்சா நான் என்ன பண்ண?” என அவன் கேட்ட விதமே சரியில்லை.
வேதாவை கண்டிப்பாக அழைத்து வந்து விட வேண்டும் என தாத்தா சொல்லியிருக்க, அதை எப்படியாவது செயல்படுத்தி விட வேண்டும் என முன்னரே தீர்மானித்திருந்தான்.
சந்திரனின் குடும்பத் தொழில் ஜவுளி நிறுவனம்தான். சண்முகநாதனை போல பரம்பரை பணக்காரர்கள் கிடையாது. சந்திரனின் அப்பா சிறிதாக தொடங்கி சந்திரனின் காலத்தில் வளர்ந்த நிறுவனம் அது. வசதியானவர்கள் என்றாலும் சண்முகநாதனின் வளத்துக்கு முன் இவர்களுடையது ஒன்றுமே இல்லை.
நவீனமாக இன்னொரு ஜவுளி நிறுவனம் தொடங்க வெளியில் கடன் வாங்கியிருக்கிறார் சந்திரன். இப்போதுள்ள கடையின் பெயரில் கடன் பத்திரங்கள் இருக்கின்றன.
கைப்பேசி வழி அவற்றை அவளுக்கு காட்டிய விஷ்வா, “உன் அப்பா கடனை திரும்ப செலுத்துற காலக் கெடு எப்பவோ முடிஞ்சு போச்சு. நம்பிக்கையின் பெயர்ல கடன் கொடுத்தவர் சும்மா இருக்கார். புதுக் கடை ஓபன் பண்றதுல உன் அப்பாக்கு ஏதோ சட்ட சிக்கல். கடன் கொடுத்தவர் எப்ப வேணா நெருக்கடி தரலாம், புதுக்கடை உன் அப்பாவுக்கு நிறைவேறாத கனவாவே போயிடும். நான் நினைச்சா ஒரு நாள் போதும் உங்களை தெருவுல நிறுத்த” என்றான்.
“ஹப்பா செத்த முன்ன என்னா ஆகட்டிங் போட்ட? மாஸ்க் கழட்டிட்டு இப்போதான் நீ நீயா பேசுற. குட்! நீ எது சொன்னாலும் நான் நம்பிடுவேனா? இல்லை அப்படியே இருந்தாலும் இப்படி பிளாக்மெயில் பண்ற உன்னை நம்பி வருவேன்னு நினைச்சியா?” பயமின்றி கேட்டாள் வேதா.
“உன்னை என்ன கொடுமை படுத்தவா அழைச்சிட்டு போறேன்? வாழ்க்கைல ஒரே மனைவிதான்னு முடிவு பண்ணி உயிரையே விட்டவருக்கு பொறந்தவன் நான், உன்னை எப்படி வச்சுப்பேன்னு கூட வாழ்ந்து பார்த்து தெரிஞ்சுக்க” என்றான்.
“ஹையோ எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க விருப்பம் இல்லையே!” என தோள்களை குலுக்கி நக்கலாக சொன்னாள்.
மீண்டும் கைப்பேசியை எடுத்து காண்பித்தான். திரையில் ஆதிரன் யாரோ ஒரு பெண்ணின் தோளில் கை போட்டுக் கொண்டு சிரித்த முகமாக நின்றிருந்தான்.
“உன் அண்ணன் லவ் பண்றான். என் பெட்ரோல் பங்க் மேனேஜர் பொண்ணுதான் ஃபோட்டோல இருக்க பொண்ணு. உன் அண்ணன் ஆசை நிறைவேறுறதும் நிறைவேறாம போறதும் கூட என் கைலதான் இருக்கு” என்றான்.
“இந்த மிரட்டலுக்கு எல்லாம் அடி பணிய அப்பாவி கிடையாது நான். உன் எலும்ப எண்ண காத்திட்டு இருக்காங்க என் அண்ணனும் சித்துவும், நீ நல்ல படியா இங்கேருந்து போக போறதில்ல” என சொல்லி எழுந்தாள் வேதா.
அவள் கையை பற்றி இருக்கையில் தள்ளியவன், “என்னால என்னெல்லாம் செய்ய முடியும்னு உனக்கு சொல்லிட்டேன். அது நடக்காம நிறுத்தி வைக்கிற சக்தி எனக்கு மட்டும்தான் இருக்கு. நீ எடுக்கிற தப்பான முடிவால உன் குடும்பமே பாதிக்கணுமா? அதைத்தான் ஆசை படுறியா? என் கூட வராம வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியும்னு நீ நினைக்கிறியா? என் மேல கை வைப்பானா உன் அண்ணன்? அவனையும் உன் அத்தை பெத்த சுந்தரனையும் படுத்த படுக்கையாக்க எவ்ளோ நேரம் ஆகும்னு நினைக்கிற?” எனக் கேட்டான்.
இவ்வளவு இவனால் செய்ய முடியுமா என பயமும் சந்தேகமுமாக பார்த்தாள் வேதா. அவளின் முன்னிலையே சந்திரன் கடன் பெற்றவரிடமும் ஆதிரன் விரும்பும் பெண்ணின் தந்தையிடமும் பேசினான்.
அரசியல் தலைவர்களிடமும் அதிகார பலமிக்கவர்களிடமும் தனக்கிருக்கும் செல்வாக்கை விளக்கினான்.
“முடிவு உன் கைல வேதா. விஷ்வாவோட மனைவியா… ம்ஹூம்… என்னோட ஒரே மனைவியா ராணி மாதிரி வாழப் போறியா? இல்லை குடும்பத்தை சீர்குலைச்சு அதை வேடிக்கை பார்த்திட்டு நிக்க போறியா?” எனக் கேட்டான்.
கைகளை கட்டிக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தவள் முடிவுக்கு வந்தவளாக எழுந்து சென்றாள்.
என்னதான் சொல்கிறாள் பார்க்கிறேன் என கடுப்புடனே அவனும் அவளின் பின் சென்றான்.
நேராக தாத்தாவிடம் வந்து நின்றவள், “உங்கள்ட்ட பேசணும் தாத்தா, தனியா” என்றாள்.
“வேதா…” என எச்சரிக்கையாக அழைத்தான் விஷ்வா.
“இவர்கிட்ட வேற என்ன பேச போற? வர முடியாதுன்னு உன் முடிவை தெளிவா சொல்லி இவங்கள அனுப்பி வை” என்ற ஆதியை பார்வையால் அமைதி காக்கும் படி சொன்னார் சந்திரன்.
“வாழ்க்கையோட பெரிய முடிவு, பேசட்டுமே” என்ற பெரியவர் எழுந்து கொண்டார்.
விஷ்வா முறைத்துக் கொண்டிருக்க, அவனை அலட்சியமாக பார்த்துக் கொண்டே கடந்து சென்றாள் வேதா.
பேரன் மிரட்டியதை எல்லாம் வேதாவின் மூலமாக அறிந்து கொண்ட பெரியவருக்கு இவனை என்ன செய்தால் தகும் என தோன்றியது.
“அப்படிலாம் எந்த ஆபத்தும் உன் குடும்பத்துக்கு வராது மா, அதுக்கு நான் முழு பொறுப்பு” உடனே உறுதி தந்தார் தாத்தா.
“அதை எங்களாலேயே சரி பண்ணிக்க முடியும் தாத்தா. உங்க பேரனோட லட்சணம் உங்களுக்கும் தெரியட்டும்னுதான் உங்கள்ட்ட சொன்னேன். எல்லார் முன்னாடியும் சொல்ல முடியாம இல்லை, அத்தை வேதனை படுவாங்க, என் அண்ணனை கண்ட்ரோல் பண்றது கஷ்டமாகிடும். சீன் கிரியேட் பண்ண வேணாம்னுதான் அப்படி செய்யல” என்றாள்.
தான் வேதாவை அழைத்து வர வேண்டும் என கண்டிப்போடு சொன்னதை சொன்னவர், “எனக்கு வேற முடியாம போகவும் பையன் பயந்திட்டான். என்ன செய்தாவது உன்னை அழைச்சிட்டு வரணும்னு இப்படி தப்பு தப்பா யோசிச்சிருக்கான்” என விளக்கம் சொன்னார்.
“உங்க பேரன் எதை சரியா செய்திருக்கார்னு சொல்ல முடியுமா தாத்தா?” என அவள் கேட்க, சின்ன பெண் முன் தலை குனிய வைத்து விட்டாயே என பேரனை நொந்து கொள்ளதான் முடிந்தது அவரால்.
“அவன் நடந்துகிட்டதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் மா” என்றார் பெரியவர்.
“அவங்கவங்க செய்ற தப்பை அவங்கவங்கதான் உணரணும் தாத்தா. ஒருத்தர் செய்ற தப்புக்கு இன்னொருத்தர் தண்டனை அனுபவிக்கிறது தப்புன்னா இன்னொருத்தர் தவறுக்காக நீங்க மன்னிப்பு கேட்கிறதும் சரி கிடையாதே”என்றாள்.
ஒத்துக் கொள்வதாக தலையாட்டியவர், “உன் அப்பாவோட கடனும் உன் அண்ணன் கல்யாணமும் என் பொறுப்பு மா” என்றார்.
“உங்க பேரன் மிரட்டினார், நீங்க வியாபாரம் பேசுறீங்க!” என குற்றம் சுமத்தினாள்.
“இப்படி என்ன சொன்னாலும் மறுத்து பேசினா நான் என்ன செய்ய மா? உன் ஒரு வார்த்தைலதான் என் குடும்பம் தழைக்கும் வேதா, மனம் வை”
“என் வாழ்க்கைய உங்க பேரன்கிட்ட பணயம் வைக்க சொல்றீங்களா தாத்தா? உங்களை போலத்தானே என் அத்தையும் அவங்க மகனோட அன்புக்காக ஏங்கி நிக்கிறாங்க, அவர் மனம் இறங்கினாரா? இப்ப கூட அவங்களதான் தப்பு சொல்றார்” என்றாள்.
தரையைப் பார்த்த படி இருந்தார் தாத்தா. ஏதோ யோசிக்கிறார் என்றெண்ணி அவளும் அமைதியாகவே இருந்தாள். பெரியவருக்குள் ஒரு போராட்டம், வயது முதிர்வின் காரணமாக பேரனை அனாதரவாக விட்டு சென்று விடுவோமோ என்ற பயம் மிரட்டியது.
அனுசரித்து வாழும் தன்மை விஷ்வாவிடம் கிடையாது, கல்யாணத்திலிருந்து ஓடிச் சென்றதும் வேதாவுக்கு கட்டாய தாலி கட்டியதும் ஊரில் பேசு பொருளாக இருக்கிறது. நல்ல இடத்தில் நல்ல குணவதி அவனை மணப்பாள் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்.