“தாத்தா ப்ளீஸ் இப்படியான பேச்செல்லாம் எனக்கு கேட்க வேணாம். வந்தா வச்சு வாழுறேன், இல்லியா…” என்றவன் தோள்களை குலுக்கினான்.

“இப்படி சொன்னா பொண்ண அனுப்பி வைப்பாங்களாடா உன்னோட? முட்டாள்!”

கோவமாக முகத்தை திருப்பினான் அவன்.

“நாளைக்கு நாம அங்க போறோம், கூட குறைச்சுதான் பேசுவாங்க, எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது சொல்லிட்டேன். வேதாவை நல்லா வச்சுப்பேங்கிறது தவிர வேற ஏதும் சொல்லக்கூடாது”

“ஏன் அவங்க எல்லார் கால்லேயும் வுழுவுறேனே தாத்தா” எரிச்சல் படர சொன்னான்.

“அப்படி விழுந்தாலும் தப்பில்ல விஷ்வா!”

“தாத்தா!”

“என்னை கோவக்காரன் ஆக்காத, அவங்க வீட்டுக்கு போய்ட்டு திரும்பறப்போ உன் மனைவியோடதான் இங்க நுழையனும் சொல்லிட்டேன்”

“இல்லைனா?”

“செத்து போறேன் டா நான்”

“தாத்தா!”

“கோவத்துல சொல்லலடா, நிஜமா போய் சேர்ந்திடுவேன், நீ செய்ற அட்டூழியத்தை எல்லாம் பார்க்கிற தெம்பு எனக்கில்லை”

“அவ வர மாட்டேன்னு சொன்னா நான் என்ன பண்ண முடியும்? கை கால கட்டியா இழுத்திட்டு வர முடியும்? அப்படி இஷ்டம் இல்லாதவளை அழைச்சிட்டு வந்து எப்படி வாழுவேன்?”

“அந்த பொண்ணு கை கால்ல விழுந்தாவது அவளை இங்க கூட்டிட்டு வந்துதான் ஆகணும் நீ” என கோபப்பட்ட தாத்தா, “வேதா கழுத்துல தாலி கட்டும் முன்னல்லடா இதை நீ யோசிச்சிருக்கணும்” என சொல்லி கண்களை மூடிக் கொண்டார்.

விஷ்வா எழுந்து அவனது அறைக்கு சென்று விட்டான். இரவு உணவுக்காக வந்த போது தாத்தா முன்னரே சாப்பிட்டு விட்டதாக வேலை செய்பவர் சொல்லவும் அவனும் சாப்பிட்டான்.

 உறங்க போவதற்கு முன் தாத்தாவை பார்க்க அறைக்கு சென்றான். படுக்காமல் அமர்ந்திருந்தவர், “வாடா இப்பதான் உன்னை கூப்பிட நினைச்சேன்” என சொல்லி ஏப்பம் போட்டு நெஞ்சை தடவிக் கொண்டார்.

“என்னை செய்யுது தாத்தா” என பதறினான் விஷ்வா.

“ரொம்ப தாங்க மாட்டேன் போலடா, எமன் இன்னிக்கே கூப்பிடுறான் போல” என்றார் தாத்தா.

உடனே குடும்ப மருத்துவரை வரவழைத்து விட்டான் விஷ்வா. இரத்த அழுத்தம் வழக்கத்தை விட உயர்ந்திருக்கிறது, மற்ற படி பயப்பட தேவையில்லை, அவரை அமைதியாக இருக்க வையுங்கள் என்றார் மருத்துவர்.

“வேற ஆபத்து இல்லையே டாக்டர்?” எனக் கேட்டான் விஷ்வா.

“வயசு ஆகுதே விஷ்வா? அவர் பையன் போனப்பவே நிறைய மனம் தளர்ந்திட்டார், உனக்காகத்தான் வாழறார், நீயும் அவரை எப்படில்லாம் கஷ்ட படுத்தலாம்னு பார்த்து பார்த்து செய்ற” என குறையாக சொன்னார் மருத்துவர்.

விஷ்வா அமைதி காக்க, “அவருக்கு என்ன மெடிசன் தேவை படுது தெரியுமா? உன் கல்யாணம், அப்புறம் உன் மூலமா கொள்ளு பேர பசங்க, அதுக்கு வழி செய்” என சொல்லி சென்று விட்டார்.

அன்றைய இரவே காய்ச்சல் வந்து மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு விட்டாள் வேதா. தாலியை கழட்டி விடாதே என கண்ணீரோடு கேட்டுக் கொண்ட அத்தைக்காக அதை இன்னும் கழுத்திலேதான் போட்டிருந்தாள். அதில் நாத்தனாரோடு பேசுவதில்லை வாசுகி, மகள் வீடு திரும்பட்டும் இந்த விஷயத்தை பார்த்துக் கொள்கிறேன் என இருந்தார்.

வேதா வீடு திரும்ப இரண்டு நாட்கள் ஆகின. நாள் சரியில்லை என சொல்லி பெரியவர் வேதாவை பார்க்க வருவதை இன்னும் இரண்டு நாட்களுக்கு தாமத படுத்தினார்.

ஒரு வழியாக அந்த புதன்கிழமை பெரியவர் பேரனோடு வருவதாக உறுதி பட சொன்னார்.

அகல்யாவோ என்னுடன் இல்லாமல் வளர்ந்த காரணத்தால் முரடனாக போய் விட்டான், தவறான புரிதலில் தவறாக நடந்து கொண்டானே தவிர, மனைவியை நன்றாக நடத்துவான், உனக்கும் அவன் மீது விருப்பம் இருந்ததுதானே என மருமகளின் மண்டையை கழுவிக் கொண்டிருந்தார்.

ஆதிரன், வாசுகி, சித்தார்த் ஆகியோர் எல்லாம் ‘நடந்தது கல்யாணமே இல்லை, அவன் கட்டிய தாலிக்கு அர்த்தமே இல்லை,  நாங்கள் இருக்கிறோம் உனக்கு’ என சொன்னார்கள்.

சந்திரனுக்கு விஷ்வாவின் செயலில் கோவம்தான், உடன்பாடு கிடையாதுதான். ஆனால் மகள் வேறொரு திருமணத்துக்கு சம்மதிக்காமல் உறுதியாக நின்றதும் ஒரு மாத காலமாக நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் போராடியதும் திருமணம் முடிவான பிறகு கனவில் மிதந்து வாழ்ந்ததும் என எல்லாம் நினைத்து பார்த்தார்.

கோயில் வாசலில் நடந்ததை வீடியோ எடுத்த யாரோ அதை உலவ விட்டிருந்தனர். சண்முகநாதனுக்கு தெரிய படுத்தி காவல்துறை உதவியுடன் அந்த காணொளி வெளியில் பரவாமல் அடக்கி விட்டாலும் யார் யார் கைப்பேசியில் அது சேமிக்க பட்டிருக்கிறது, எப்போது மகளின் வாழ்வுக்கு இடைஞ்சல் ஆகுமோ என்ற பயமும் சந்திரனுக்குள் இருந்தது.

அதற்காக மகளை கட்டாயப் படுத்தவும் அவர் நினைக்கவில்லை. ‘நன்றாக யோசித்து உன் முடிவை சொல்’ என்றே மகளிடம் சொல்லியிருந்தார். அதுவரை யாரும் அவளை தொந்தரவு செய்யக் கூடாது என வீட்டினரிடமும் கண்டிப்போடு சொன்னார்.

பத்து மணி போல விஷ்வாவும் பெரியவரும் வேதாவின் வீட்டுக்கு வந்தார்கள். சோகம் வருத்தம் குற்ற உணர்வு என எதுவுமில்லை விஷ்வாவிடம், அதைவிட பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் தோரணையில் அவன் இருந்ததுதான் ஆதியையும் சித்தர்த்தையும் இன்னும் எரிச்சல் படுத்தியது. அவர்கள் இருவரும் அவனை முறைத்து பார்த்துக் கொண்டு நின்றனர். அடிதடி ரகளை எல்லாம் வேண்டாம் என முன்னரே எச்சரிக்கை செய்திருந்தார் சந்திரன்.

பேரனின் நடத்தைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் பெரியவர். என் வீட்டில் வேதா நன்றாக இருப்பாள் என உறுதி தந்தவர் விஷ்வாவை பார்த்தார்.

“வேதாவை நல்லா பார்த்துப்பேன்” என அனைவருக்கும் பொதுவாக சொன்னான் விஷ்வா.

மகள்தான் முடிவு சொல்வாள் என சந்திரன் சொல்ல, தான் அவளிடம் தனிமையில் பேச வேண்டும் என்றான் விஷ்வா.

வாசுகியும் ஆதியும் முடியாது என மறுத்தார்கள்.

“வேதா மேல எனக்கும் அக்கறை இருக்குதும்மா, அவன் தரப்பை அவனே சொல்லி புரிய வைக்கட்டுமே” என பெரியவர் சொல்ல, கணவரை பார்த்தார் வாசுகி.

“பேசட்டும் வாசுகி, வேதாவுக்கும் தெளிவு கிடைக்கலாம்” என சந்திரன் சொல்லி விட,  சம்மதிப்பதை தவிர மற்றவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.

வீட்டின் பின் பக்கமிருந்த வராண்டாவுக்கு தங்கையை அழைத்து வந்து அமர வைத்தான் ஆதி. அவன் என்ன சொன்னாலும் ஏமாந்து போய் விடாதே என சொல்லி விட்டே அகன்றான்.

சில நிமிடங்களில் அங்கு வந்த விஷ்வாவை முறைப்பாகத்தான் பார்த்தாள் வேதா.

நொடி நேரம் அவளை கண்டு தடுமாறினான், உடனே இயல்பாகி அவள் எதிரில் அமரிக்கையாக அமர்ந்தான்.

“உன் அத்தை என் அப்பாக்கு துரோகம் செய்தாங்க, உன் அப்பா அதுக்கு உடந்தை. என் இடத்துல நீ இருந்தா என்ன செஞ்சிருப்ப?” என நிதானமாக கேட்டான்.

“உங்கப்பா பழைய காதலை மறக்க முடியாம அத்தைய நோகடிச்சிருக்காங்க, சட்டப் படிதானே பிரிஞ்சாங்க, அதுவும் மியூச்சுவல் டிவோர்ஸ்” என்றாள் வேதா.

“அப்புறம் ஏன் என் அப்பா தூக்க மாத்திரை போட்டுக்கிட்டார். அவர் உன் அத்தை மேல வச்சிருந்த அன்புக்கு சாட்சியா நான் நிக்கிறேன். என்னையவே வேணாம்னு சொல்லிட்டு என் அப்பா இறந்து ஒரு வருஷம் கூட ஆகாம பழைய காதலனை கல்யாணம் பண்ணிக்கிட்டது யார்?”

“இத்தனை வருஷமா அத்தையை தப்பா நினைக்கிற நீ உடனே ஏத்துக்க போறியா என்ன? அந்த பேச்சே வேணாம். எனக்கு உன்னோட வர விருப்பம் இல்லை” என உறுதியாக சொன்னாள்.

முன்னர் திருமணம் செய்யாமல் சென்ற போதும் உன்னை நினைத்து வருத்தப்பட்டேன், அன்று கோயிலில் நீ பேசியது அதிகம், வசமிழந்து தவறு செய்து விட்டேன், அதை சரி செய்ய வேண்டும் என்றுதான் முயற்சி செய்கிறேன் என்றெல்லாம் சமாதானமாக பேசியவன், “வெட்டிங்கு முதல் நாள் நைட் என்கிட்ட லவ் சொன்ன அந்த வேதாவை தேடி வந்திருக்கேன், அப்ப உன் நம்பிக்கையை காப்பாத்த தவறிட்டேன், அதையெல்லாம் சரி செய்ய சந்தர்ப்பம் கொடு, நம்பிக்கையோட என்கூட வா வேதா” என்றான்.