நீயென் நாயகி -3

அத்தியாயம் -3

தனது வீட்டில் அழுது வீங்கிய இமைகளோடு சோர்வாக படுத்திருந்தாள் வேதா.

‘என் மகளின் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டாகி விட்டதா? உங்கள் மகன் எது செய்தாலும் நீங்கள் ஆதரவு கொடுங்கள், எங்களையும் அப்படி இருக்க சொல்வது என்ன நியாயம்? உங்கள் அண்ணன் தங்கையின் மீது பாசமாக இருக்கிறார் என்றால் அவர் குடும்பத்தையே ஆட்டி படைக்கலாம் என நினைத்து விட்டீர்களா?’ என அழுகையும் ஆத்திரமுமாக நாத்தனாரை விளாசி கொண்டிருந்தார் வாசுகி.

அந்த தாலியை கழட்டி கொடு, அவன் முகத்தில் வீசி எறிந்து விட்டு அவனை ஒரு கை பார்த்து விட்டு வருகிறேன் என கோவாவேசமாக நின்ற ஆதிரனை அடக்கி அமர வைத்திருந்தார் சந்திரன்.

அம்மாவின் மீது கடுமையான கோவத்திலிருந்த சித்தார்த் இங்கு வரவே இல்லை, அவனது வீட்டில் இருந்தான். விஷயம் தெரிந்து வந்த குணசேகர் தன் மனைவியை அதிருப்தியாக பார்த்ததோடு சரி, அவரை திட்டி தீர்க்கும் வாசுகியின் பேச்சில் நியாயம் இருப்பதால் மன வேதனையோடு ஓரமாக அமர்ந்திருந்தார்.

மாலையில் சண்முகநாதன் கோயிலுக்கு வந்த சிறிது நேரத்தில்  அகல்யாவும் வந்தார். முன்னாள் மாமனாரிடம் நலம் விசாரித்த அகல்யா, மகனை பற்றியும் கேட்டார். இங்குதான் வந்து கொண்டிருக்கிறான் என்பதை சொன்ன பெரியவர், “அவனுக்கு என்ன தோஷமோ போ, அம்மனுக்கு திருமாங்கல்யம் காணிக்கை கொடுக்கிறோம், பூஜை இருக்கு, இனியாவது நல்லதா நடக்கட்டும்” என்றார்.

இளம் வயதில் இறந்து போன முதல் கணவரின் நினைவில் இப்போது மகனுக்கு என்ன கெட்ட நேரமோ என நினைத்து கவலை கொண்டார் அகல்யா.

மகன் வருவான் என்பது தெரிவதற்கு முன்பே சித்தார்த்தையும் வேதாவையும் இங்கு வர சொல்லியிருந்தார் அகல்யா. இப்போது பெரியவர் சொன்ன செய்தியில் அவர்களின் வருகையை பற்றிய சிந்தனையே அவரிடம் இல்லை.

டிரைவர் வந்து கோயிலுக்கு வெளியில் தகராறு நடப்பதாக சொல்லவும்தான் பெரியவரும் அகல்யாவும் வெளியே சென்றார்கள்.

வேதாவுக்கு தாலி கட்டியிருந்த விஷ்வாவுக்கும் சித்தார்த்துக்கும் கைகலப்பாகியிருக்க, இரண்டாவது மகனை இழுத்து நிறுத்தி சண்டையை தடுத்தார் அகல்யா.

சட்டையை தட்டி விட்டுக் கொண்ட விஷ்வா, தாத்தாவை பார்த்து விட்டு உடனே வேதாவை பார்த்தான்.

கழுத்தில் தாலியோடும் கண்களில் கண்ணீரோடும் நின்றிருந்தவளை கண்ட பெரியவர், “என்னம்மா என்ன ஆச்சு?” என பதறினார்.

அகல்யாவும் தன் மருமகளை கண்டு அதிர்ந்தவராக அவளிடம் செல்ல, அத்தையை கட்டியணைத்துக் கொண்டவள் தேம்பினாள் வேதா.

“என்னடா?” என விஷ்வாவிடம் பயத்தோடு கேட்டார் பெரியவர்.

இடுப்பில் ஒரு கை வைத்து இன்னொரு கையால் நெற்றியை தடவிக் கொண்டானே தவிர்த்து வாயே திறக்கவில்லை விஷ்வா. அதீத கோவத்தில் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்து விட்டவனுக்கே இப்போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

வேடிக்கை பார்த்திருந்த கூட்டத்திலிருந்து ஒருவர்தான் விவரம் சொன்னார்.

வேதாவை அணைத்திருந்த படியே தன்னிரு மகன்களையும் மாறி மாறி பார்த்தார் அகல்யா.

“ஏம்மா என்னை பார்க்கிற, வேதாகிட்ட சொல்லி அந்த தாலிய கழட்ட சொல்லு உடனே” என்றான் சித்தார்த்.

அதிர்ந்த அகல்யாவுக்கு கண்களை இருட்டுவது போலிருந்தது.

“கோயில் வாசல்ல வச்சு தாலி கட்டியிருக்காரு, பேசி ஒரு தீர்வுக்கு வர்றத விட்டுட்டு கட்டினவர் உயிரோட இருக்கும் போது தாலிய கழட்ட சொல்றீங்களே” என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர்.

“எந்த காலத்துலயா இருக்க நீ? கட்டாயமா கட்டினா அந்த பொண்ணு அதை ஏத்துக்கணுமா?” என்றார் இன்னொருவர்.

கோயிலின் முக்கிய நிர்வாகிகள் வந்து விட, அனைவரையும் அலுவலக அறைக்கு அழைத்து சென்று விட்டார் பெரியவர்.

வேதாவுக்கு பருக தண்ணீர் கொடுத்தார் அகல்யா, அவளின் அழுகை நிற்கவே இல்லை. முகத்தில் உணர்ச்சிகளை காட்டாமல் கைகளை கட்டிக் கொண்டு நின்றான் விஷ்வா.

“உனக்கென்னடா மூளை குழம்பி போச்சா? என் உயிரை வாங்கன்னே வந்திருக்கியா?” என பேரனிடம் சத்தம் போட்டார் பெரியவர்.

“ஏன் தாத்தா சத்தம் போடுறீங்க? என்னை ட்ரிகர் பண்ணினது அவதான். கோவத்துல செஞ்சிட்டேன்” என சாதாரணமாக சொன்னான் விஷ்வா.

வேதாவுக்கு அவனை கை வலிக்க வலிக்க அடிக்க வேண்டும் போல அப்படியொரு ஆத்திரம், ஆனால் செயல்பட முடியவில்லை. அவளது உடலும் உள்ளமும் அவளின் வசத்திலேயே இல்லை. அத்தையின் புடவையை ஆதரவுக்காக பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“என்ன மாமா இது? என் அண்ணன் அண்ணிக்கு என்ன பதில் சொல்வேன் நான்?” கலங்கிப் போனவராக கேட்டார் அகல்யா.

“இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கும் தெரியாதே ம்மா” என மருகிய பெரியவர் மீண்டும் தன் பேரனை முறைத்தார்.

“ம்மா எதுக்கு வெட்டி பேச்சு, நீ கழட்டுறியா நான் கழட்டவா?” எரிச்சலாக கேட்டான் சித்தார்த்.

“சும்மா இருப்பா” என சித்தார்த்தை அடக்கினார் பெரியவர்.

“எதுக்குங்க சும்மா இருக்கணும் நான்? உங்க பேரனை நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க!” என சீறினான் சித்தார்த்.

“ஏய் இனியும் வாயை தொறந்த கை கால் இல்லாமதான்டா வீடு போய் சேருவ” என மிரட்டினான் விஷ்வா.

“கோயில்ல வச்சு என்னென்ன பேசுறீங்க!” என கடிந்த கோயில் நிர்வாகி, பெரியவரை பார்த்து, “இப்பவே அக்கம் பக்கத்து ஆளுங்க எல்லாம் வேடிக்கை பார்க்கன்னு வர ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க இன்னொரு வாசல் வழி போனாதான் வீடு போகலாம், அதுவும் கொஞ்ச நேரம்தான், இல்லைனா அங்கேயும் ஆளுங்க வந்திடுவாங்க” என்றார்.

அதி வேகமாக முடிவெடுத்த சண்முகநாதன், அகல்யாவை பார்த்து, “ம்மா நீ வேதாவை அழைச்சுகிட்டு வீட்டுக்கு போ, இவனுக்கு அந்த பொண்ணுதான்னு இறைவன் எழுதி வச்சிருக்கான்.  நான் விஷ்வாவை அழைச்சுகிட்டு நாளைக்கு அங்க வர்றேன்” என்றார்.

“அத்தை இது எனக்கு வேணாம்” என தாலியை காண்பித்து அத்தையிடம் சொன்னாள் வேதா.

“ஷ்ஷ் வேதா கொஞ்சம் அமைதியா இருடா, எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய முடியாதுடா” என மருமகளிடம் கெஞ்சினார் அகல்யா.

“என்னடா வேடிக்கை பார்க்கிற! அந்த பொண்ணுக்கு ஆறுதலா ஏதாவது சொல்லு” என பேரனிடம் அதட்டல் போட்டார் பெரியவர்.

“அவ இஷ்டம் தாத்தா. விருப்பம் இருந்தா நம்ம வீட்டுக்கு வரட்டும்” என பெருந்தன்மையாக சொல்வது போலவே சொன்னான் விஷ்வா.

“அவளுக்கு விருப்பம் இல்லை!” என கோவமாக இரைந்தான் சித்தார்த்.

“சித்து நீ கிளம்பு, இதுல நீ தலையிட்டுக்க வேணாம், வேதா முடிவு பண்ணுவா” என சின்ன மகனை அடக்கி விட்டார் அகல்யா.

அகல்யா ஆட்டோவில் வந்ததாக கூறவும் தன்னுடைய காரில் பெண்கள் இருவரையும் அனுப்பி வைத்த பெரியவர் சந்திரனுக்கு அழைத்து, “நிதானமா இருக்கணும் சந்திரன், நாளைக்கு விஷ்வாவோட வர்றேன், வேதா என் வீட்டு மருமக பொண்ணு” என்றார்.

ஒன்றும் புரியாமல் என்ன சொல்கிறீர்கள் என கேட்டார் சந்திரன்.

 “கோயில்ல வச்சு…” என தயங்கிய பெரியவர், “அது விஷ்வா வேதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அகல்யா விவரமா சொல்லும், பிரச்சனை ஆக்கிடாம புள்ளைங்க வாழ்க்கைய முன்னிறுத்தி யோசிச்சு நடப்போம்” என்றார்.

“ஐயா புரியுற மாதிரி பேசுறீங்களா?” பதறினார் சந்திரன்.

“வீட்டுக்கு போ சந்திரன், அகல்யாவும் வேதாவும் வந்திட்டு இருக்காங்க” என அவர் சொல்லவும் அழைப்பை துண்டித்த சந்திரன் தங்கைக்கு அழைத்தார். அவர் அழைப்பை எடுக்காமல் போகவும் சித்தார்த்துக்கு அழைத்து பேசி விஷயத்தை தெரிந்து கொண்டு பதறிப் போய் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

கோவத்தில் செய்தாலும் இவளுடன் வாழும் எண்ணத்தில்தான் அவன் இருக்கிறான், கட்டிய தாலியை எல்லாம் கழட்ட வேண்டாம், வேதாவுடன் நன்றாக குடும்பம் செய்வான் என மகனுக்காக பரிந்து பேசித்தான் வாசுகியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தார் அகல்யா.

வீடு வந்த பிறகு சண்முகநாதனும் விஷ்வாவும் எதிரெதிரில்  அமர்ந்திருந்தனர். தாத்தாவே பேசட்டும் என கல்லுளி மங்கன் போல இருந்தவனை, “எவ்ளோ திண்ணக்கம்டா உனக்கு?” என கேட்டார் தாத்தா.