“அண்ணா..!!!” என்றவனுக்கு, ’இவரும் இங்க தான் இருந்தாரா? இது தெரியாம வந்து மாட்டிகிட்டியே விசாகா’ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டான்.

“உனக்கு என்ன வேலை குடுத்துட்டு வந்தேன். நீ இங்க என்ன பண்ற?” என்றான் இடுங்கிய பார்வையுடன்.

“அண்ணா அதை எல்லாம் முடிச்சுட்டேன்ண்ணா” என்றான் வேகமாய்.

“அப்போ தோப்புக்கு போ. தேங்காய் எண்ணிப் போட ஆள் வந்திருக்கு. போய் பாரு” என்றான் ஆதி.

“இதோண்ணா” என்றவன் அடுத்த நிமிடம் சென்று விட்டான்.

அவன் சென்றவுடன், சிவ தீர்த்தாவை முறைத்திருந்தான். அவளோ அவனை இம்மியும் சட்டை செய்யாமல் அமர்ந்திருக்க,

“ஓடிப் போய் கல்யாணம் பண்ற அளவுக்கு காதலோ?” என்றான் கோபத்துடன்.

“ஆமாம்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்?” என்றாள் வீம்புடன்.

“ஏய்!! யார்கிட்ட பேசுறோம்னு பார்த்து பேசு. இந்த திமிர் பேச்செல்லாம் என்கிட்ட வச்சுக்காத?” என்றான் ஆதி.

“திமிரா பேசினா பதிலும் திமிரா தான் வரும். நீங்க யாரா இருந்தா எனக்கென்ன? உங்களைப் பார்த்து ஊரே பயப்படலாம். நான் ஏன் பயப்படனும்? அதுக்கு என்ன அவசியம் வந்தது?” என்றாள் நேர் பார்வையாய்.

“என் தம்பி கூட பழகுறதை இதோட நிறுத்திக்கோ” என்றான் ஆதி.

 அவள் அவனைப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரிக்க,

“இங்க என்ன நடக்குதுன்னு இப்படி ஒரு சிரிப்பு?” என்ற ஆதியின் குரலில் ஏகத்துக்கும் எரிச்சல்.

“இல்ல, உங்க குடும்பத்துல ஒன்னு ரெண்டு பைத்தியம் இருக்கும்னு நினைச்சேன். இப்படி குடும்பமே பைத்தியமா இருக்குறதை இன்னைக்குத் தான் பார்க்குறேன். அதான் சிரிப்பு வந்துடுச்சு. சும்மா குடுத்தா கூட வேண்டாம்கிற மாதிரி தான், உங்க வீட்ல இருந்து வர்ற எதுவுமே எனக்கு.

அதாவது ஊர்ல வேற ஆம்பிள்ளைங்களே இல்லையா என்ன? உங்க வீட்டுப் பையனை காதலிக்கிற அளவுக்கு? அப்படியே இல்லைன்னாலும், அது என்ன தேவைக்கு?” என்றாள் சிவா.

“ஏய்!! என்ன சின்ன பொண்ணுன்னு பார்த்தா ரொம்ப ஓவரா பேசுற? வாயை அடக்கிப் பேசிப் பழகு” என்றான் ஆதி கேசவன் தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று.

“அதே தான் சார் உங்களுக்கும். உங்க வீட்டுப் பையனை அடக்கத் துப்பில்லை. வந்துட்டார் எனக்கு பாடம் எடுக்குறேன், பதவி குடுக்குறேன்னு. போய் பொழப்பு தளப்ப பாருங்க சார்” என்றாள்.

வீட்டில் இருப்பவர்களே அவனிடம் பேச பயப்படும் போது, ஒரு சிறு பெண் இவ்வளவு தூரம் பேசியதில் அவனின் கோபம் தூண்டப்பட்டிருந்தது. எல்லாம் விசாகனால் வந்தது என்று எண்ணியவனுக்கு கோபம் முழுவதும் தம்பியின் மேல் திரும்ப,  அதே கோபத்துடன் வீட்டிற்கு சென்றான்.

அவன் ஜீப் வந்து நின்ற சத்தத்தில் அதிர்ந்தவர்கள்,

“இன்னைக்கு என்ன பஞ்சாயத்துன்னு தெரியலையே?” என்று எண்ணிக் கொண்டனர்.

விசாகன் ஹால் சோபாவில் அமர்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருக்க, ஆதி வந்ததை கவனிக்கவில்லை. நேராக அவனிடம் வந்தவன், அவன் சட்டைக் காலரை கொத்தோடு தூக்க, மிரண்டு விட்டான் விசாகன்.

“அண்ணா” என்றான் பயத்தில்.

“நான் உன்னை தோப்புக்குத் தான போக சொன்னேன். வீட்ல என்ன பண்ற?” என்றான்.

“இப்போ தான் வந்தேண்ணா” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவனை ஓங்கி அறைந்திருந்தான் ஆதி.

அறை வாங்கியதில் விசாகன் அதிர்ந்து நிற்க,

“உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தி வராதா விசாகா. என்ன பண்ணிட்டு இருக்க? ஒரு சின்ன பொண்ணு, உங்க வீட்டு பையனை அடக்கி வைக்கத் துப்பில்லையான்னு என்னைப் பார்த்து கேட்குறா? என்ன பதில் சொல்லட்டும், சொல்லு என்ன சொல்லட்டும்” என்றான் வெகுண்டவனாய்.

“ஆதி என்னப்பா ஆச்சு?” என்று பதட்டத்துடன் ரேணுகா வர,

“உங்க அருமை பையனயே கேளுங்கம்மா” என்றான்.

“என்னன்னு சொன்னா தானே தெரியும்?” என்றார் விசாலாட்சி.

மொத்த குடும்பமும் ஒன்று சேர, விசாகனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“அண்ணா..!!” என்று ஆதியை பாவமாய் பார்த்து வைத்தான். அவன் அறைந்ததில் அவன் ஒரு கன்னமே வீங்கியிருக்க, அதைக் கண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் ஆதி கேசவன்.

“ஒண்ணுமில்லை, ஒரு வேலை சொல்லியிருந்தேன், அதை சரியா முடிக்கலை இவன். அதான் கோபத்துல அடிச்சுட்டேன்” என்றான் ஆதி.

“அதுக்குன்னு இப்படியா மாமா அடிப்பிங்க? பாருங்க சின்ன மாமா முகமே வீங்கிப் போய்டுச்சு” என்று தாரணி சொல்ல, அவளை ஆதி முறைத்த முறைப்பில் கப்சிப் என்று அடங்கிவிட்டாள்.

“என் ரூம்க்கு வா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்ற ஆதி அவன் அறைக்குள் சென்று விட்டான்.

“பார்த்து நடந்துக்க கூடாதா விசாகா? ஆதி சொன்னத சரியா செய்யலைன்னா எப்படி கோபம் வரும்னு உனக்குத் தெரியாதா? இன்னும் எத்தனை நாளைக்கு சின்னப் பிள்ளை மாதிரியே இருக்கப் போற? அத்தனை வேலையும் அவன் ஒருத்தனா பார்க்குறான். கொஞ்சம் பார்த்து நடந்துக்கோப்பா” என்றார் ரேணுகா.

“சரிங்கம்மா” என்றவன், வேகமாய் ஆதியின் அறைக்கு சென்றான்.

ஆதியோ அங்கு குறுக்கும் நெருக்கும் நடந்து கொண்டிருந்தான். விசாகன் உள்ளே வரவும் கதவை அடைத்தவன்,

“என்ன லவ்வா? அதுவும் ஓடிப் போய் கல்யாணம் பண்ற அளவுக்கு?” என்றான் தம்பியைப் பார்த்து.

விசாகன் அவனைப் பாவமாய் பார்த்து வைக்க,

“வாயைத் திறக்கப் போறியா இல்லையா விசாகா?” என்றான் ஆதி.

“ஆமாண்ணா” என்றான் தலையை குனிந்தபடி.

“ஒரு பொண்ணை பிடிச்சிருக்குன்னா, அவளை காதலிக்கிறன்னா நெஞ்சை நிமிர்த்தி ஆமான்னு சொல்லணும். இப்படி தலையை குனிஞ்சு சொல்லக் கூடாது. இது அந்த பொண்ணையும் சேர்த்து அவமானப்படுத்துற மாதிரி” என்றான் ஆதி கேசவன்.

“எத்தனை நாளா நடக்குது?” என்றான் வேண்டா வெறுப்பாய்.

“ஒரு வருஷமா” என்றான் விசாகன். கேட்ட ஆதிக்கோ நெஞ்சில் ஈட்டி பாய்ந்த உணர்வு.

“ஹோ..!” என்றவன்,

“அந்த பொண்ணுக்கு இதுல விருப்பமா?” என்றான்.

“அவ என்னை காதலிக்கவே இல்லைன்னு சொல்லிட்டாண்ணா” என்றான் விசாகன்.

“என்ன சொன்ன?” என்றான் ஆச்சர்யமாய்.

“ஆமாண்ணா..! அப்படித்தான் சொன்னா” என்றான் விசாகன்.

“விருப்பம் இல்லாத பொண்ணை கட்டாயப்படுத்துறது தப்புன்னு உனக்குத் தெரியாதா?” என்றான்.

“ஆனா எனக்குப் பிடிச்சிருக்கே” என்றான் விசாகன்.

“அதுக்கு”

“நீங்களே வீட்ல பேசி சிவாவை எனக்கு” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை, மீண்டும் கையை ஓங்கி இருந்தான் ஆதி.

“பொறுமையா இருக்கணும்னு நினைக்கிறேன். என்னை மிருகமா மாத்தாத விசாகா. கட்டாயப்படுத்தி எல்லாம் காதலை வாங்க முடியாது. இனி அந்த பொண்ணு விஷயத்துல நீ தலையிடக் கூடாது” என்றான் உறுதியாக.

விசாகன் தயங்க,

“என்ன அந்த அளவுக்கு தீவிர காதலோ?” என்றான் ஆதி.

“இல்லண்ணா! இனி சிவா விஷயத்துல தலையிட மாட்டேன்” என்றான் விசாகன்.

“அந்த பொண்ணுக்கும் பிடிச்சிருந்தா கண்டிப்பா நானே உனக்காக பேசியிருப்பேன்டா. இந்த வயசுல இதெல்லாம் வெறும் அட்ராக்ஷன் விசாகா” என்றான் ஆதி.

‘இருபத்தி அஞ்சு வயசுல எனக்கு வந்ததுக்கு பேரு அட்ராக்ஷ்னா?’ என்று நினைத்தவன் வெளியே சொல்லவில்லை.

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில்,

ரேணுகாவோ மகன்களை நினைத்து கவலையில் இருந்தார். அவரின் கவலை படிந்த முகத்தைப் பார்த்த சுபத்ரா,

“என்னாச்சு அண்ணி? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றார்.

“எல்லாம் இந்த ஆதியை நினைச்சு தான் சுபத்ரா. சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணிகிட்டா நல்லா இருக்கும். எதுக்கும் சரின்னு சொல்லாம இருக்கான். இந்த விசாகனும் இன்னும் விளையாட்டு பையனாவே இருக்கான்” என்றார்.

“ஆதிக்கு தாரணி இருக்கும் போது எதுக்கு அண்ணி கவலைப்படுறிங்க?” என்றார் மணிமேகலை.

“நான் பேசிப் பார்த்துட்டேன் மேகலை. ஆதி எதுக்கும் சரி குடுக்குற மாதிரி தெரியலை” என்றார் ரேணுகா.

“அதெப்படி சரி குடுக்காம போவான். தாரணி இருக்கும் போது நீங்க வெளியவெல்லாம் பொண்ணு எடுக்கக் கூடாது. எனக்கும் பின்னாடி ஆதரவுக்கு யார் இருக்கா?” என்றார் மேகலை.

“இப்ப எதுக்கு விசனப்படுறவ? தாரணி தான் இந்த வீட்டு மூத்த மருமக. அது எப்பவும் மாறாது” என்றார் விசாலாட்சி.

அவர்கள் பேசுவதை கேட்ட சுபத்ராவிற்கு கண்கள் கலங்கியது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“என்ன ரேணுகா? முன்னாடி தோட்டத்து பக்கம் அதிகம் போகாத ஆதி இப்பல்லாம் அடிக்கடி அங்கயே போறான்?” என்றார் விசாலாட்சி.

“வேலை இருந்தா போய்த்தான ஆகணும் அத்தை” என்பதோடு முடித்துக் கொண்டார் ரேணுகா.

விசாலாட்சியும் மேகலையும் நகர்ந்துவிட,

“நீங்க மனசுக்குள்ள எதையோ வச்சிருக்கிங்க. என்னன்னு சொல்லுங்க அண்ணி” என்றார் சுபத்ரா.

“எனக்கு சிவா பொண்ணை ஆதிக்கு பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுது சுபத்ரா. என்னோட ஆசைன்னு கூட சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு சட்டென்று சுற்றும் முற்றும் பார்க்க, நல்லவேளை யாருமில்லை.

சுபத்ராவோ எதுவும் பேசாமல் சுவரை வெறிக்க,

“சுபா” என்றார் ரேணுகா.

“நாம ஆசைப்பட்டது எல்லாம் நடந்துருமா அண்ணி. அதுவும் இந்த வீட்ல” என்றவரின் கண்ணீர் வெளியே வந்துவிட,

“அப்படி நடந்தா நல்லா இருக்கும்னு தான் நினைச்சேன். ஆனா அது நடக்கவே நடக்காதுன்னு நமக்கு தான் தெரியுமே” என்றார் ரேணுகா பெருமூச்சுடன்.

“ஏன் அண்ணி அப்படி சொல்றிங்க?” என்றார் சுபத்ரா.

“சிவா பொண்ணுக்குப் பக்கத்து ஊர் பையனைப் பார்த்து பேசி முடிச்சுட்டாங்களாம். சீக்கிரமே கல்யாணம்னு சொன்னாங்க” என்றார் ரேணுகா.

“சிவாவுக்கு கல்யாணம்” என்ற செய்தி சுபத்ராவை அதிகமாய் தாக்கியது. ஒரு அதிர்ச்சியுடன் எழுந்து அறைக்குள் சென்று விட்டார்.

சிவ தீர்த்தாவின் திருமண நாளும் நெருங்கியிருந்தது.

சுற்றி இருக்கும் அனைத்து ஊர்களிலும் எந்த விசேஷம் என்றாலும் முதல் அழைப்பு என்னவோ ஆதி கேசவன் குடும்பத்திற்கு தான். அதன் படியே மாப்பிள்ளை வீட்டினர் ஆதியின் வீட்டிற்கு அழைப்பிதழை எடுத்துக் கொண்டு வந்த போது தான் அவனுக்கும் தெரிந்திருந்தது, அவளுக்கு திருமணம் என்று.

“யாரு கல்யாணத்துக்கு யாரை அழைக்க வந்திருக்கிங்க?” என்று விசாலாட்சி வார்த்தைகளை விட,

“பாட்டி” என்று ஒரே வார்த்தையில் அடக்கினான் ஆதி கேசவன்.

“கண்டிப்பா வந்திடுறோம்” என்று அவர்களை அனுப்பி வைத்தவன், கைகளில் இருந்த அழைப்பிதழை வெறித்துக் கொண்டிருந்தான்.

“நம்ம வீட்ல இருந்து யாரும் போகக் கூடாது” என்றார் விசாலாட்சி உறுதியாக.

“நம்மளோட தரம் நம்ம நடந்துக்கிறதுல தான் இருக்கு. பொண்ணு யாரா இருந்தா என்ன? வீடு தேடி வந்து விசேஷத்துக்கு அழைச்சா, போறது தான் முறை. கொஞ்சம் பெரிய மனுஷி மாதிரி நடந்துக்கோங்க” என்றவன், பத்திரிக்கையை டீப்பாய் மேல் போட்டுவிட்டு சென்று விட்டான்.

ரேணுகாவோ அந்த பத்திரிக்கையை பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டார்.