“எனக்கு தெரியும் சிவா. நீயும் என்னை லவ் பண்ற. ஆனா உன்னோட கோபம் அதை மறைக்குது.எங்க வீட்டாளுங்க மேல இருக்குற கோபத்துல நீ என்னை வெறுக்குற மாதிரி நடிக்கிற” என்றான் விசாகன்.
‘நீயென்ன லூசா?’ என்பதைப் போல் பார்த்து வைத்தாள்.
“பிளீஸ் சிவா” என்றவன் மீண்டும் கையை பிடிக்க வர, சட்டென்று பின் நகர்ந்தவள், அவனை கைநீட்டி எச்சரித்தாள்.
“இதோ பாருங்க, இந்த கையைப் பிடிக்க வர்ற வேலை எல்லாம் வேண்டாம். அப்பறம் பிடிக்கிறதுக்கு கை இருக்காது” என்று அழுத்தம் திருத்தமாய் கூறியவள், கவி வரவும் அவளுடன் இணைந்து கொண்டாள்.
விசாகன் அவளை ஏக்கமாய் பார்த்து வைக்க, அங்கே பின்னால் வந்து கொண்டிருந்த ஆதி கேசவனின் கண்களில் இருந்து இது எதுவும் தப்பவில்லை.
“விசாகா” என்ற ஆதியின் குரலில் அதிர்ந்தவன், திடுக்கிட்டு திரும்பினான்.
“பார்த்தா அப்படி தெரியலையே? உன் கண்ணும் முகமும் வேற செய்தி சொல்லுது” என்றான் ஆதி.
விசாகன் அதிர்ந்து போய் நிற்க, அவனை ஒரு நிமிடம் உறுத்து விழித்தான் ஆதி.
“நீ வீட்டுக்கு கிளம்பு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றவன்,
“கவனம் வீட்டுக்கு போறதுல மட்டும் தான் இருக்கணும்” என்றான் இறுக்கமான குரலில்.
“சரிங்கண்ணா” என்றவன், “விட்டால் போதும்” என்ற ரீதியில் ஓடி விட்டான். விசாகனையும் சிவ தீர்த்தாவையும் அருகருகே பார்த்தவனுக்கு காரணமே இல்லாமல் எரிச்சல் மண்டியது. அவர்கள் பேசியது காதில் விழவில்லை என்றாலும், ஒன்றாய் பார்த்தது ஏனோ முரண்பாடாய் தோன்றியது ஆதிக்கு. சிவாவின் முகத்தை விசாகன் மறைத்திருந்ததால் அவளின் கோப முகத்தை ஆதி பார்த்திருக்கவில்லை.
“சிவா இப்ப எதுக்கு இப்படி கோபமா வர்ற?” என்றாள் கவிதா அப்பாவியாய்.
“ஏன்னு உனக்குத் தெரியாது? எதுக்காக இப்படி உண்மையை மறைச்சு இங்க கூட்டிட்டு வந்த கவி?” என்றாள் கோபமாய்.
“சிவா நிஜமாவே ஆதி அண்ணா இந்த தோப்பை வாங்கினது எனக்கும் தெரியாது. தெரிஞ்சிருந்தா உன்கிட்ட சொல்லியிருக்க மாட்டேனா?” என்றாள். அவளின் பதிலில் சிவ தீர்த்தாவின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டது.
“ஆமா, விசாகன் அண்ணா ஏதோ பேசிட்டு இருந்தாரே? என்ன விஷயம்?” என்றாள் கவி.
“புதுசா என்ன இருக்கப் போகுது? எப்பவும் போல லவ் பண்றேன் அது இதுன்னு பினாத்திட்டு இருந்தார்” என்றாள் சிவா வெறுப்புடன்.
“சொல்றனேன்னு கோவிச்சுக்காத சிவா. விசாகன் அண்ணா பெஸ்ட் சாய்ஸ் தான். ரொம்ப சாப்ட் நேச்சர். உன்னை அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ ஏன் அவர் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கக் கூடாது?” என்றாள் கவி.
“இன்னைக்கு உனக்கு நேரம் சரியில்லையா? இல்லை எனக்கு நேரம் சரியில்லையான்னு தெரியலை. அடிவாங்காம பேசாம போய்டு. ஏற்கனவே செம்ம கடுப்பில் இருக்கேன் கவி” என்றாள் சிவா.
“அப்படி என்னடி வெறுப்பு அவங்க மேல உனக்கு?” என்று கேட்டே விட்டாள் கவி.
அவளையே வெறிக்கப் பார்த்த சிவா,
“உனக்கு என்னோட வலி சொன்னாலும் புரியாது கவி. இதுக்கு மேல இந்த பேச்சு வேண்டாம்” என்பதோடு முடித்துக் கொண்டாள்.
இருவரும் வேறு வேறு கல்லூரியில் படிப்பதால் அதற்கடுத்து வந்த ஒரு வாரமும் அவர்களுக்கு பார்த்துக் கொள்ள நேரம் கிடைக்கவில்லை. சிவ தீர்த்தா படிப்பில் பிசியாகிவிட்டாள்.
காலையில் எழுந்து வீட்டில் பாதி வேலைகளை முடித்துவிடுவாள். அதற்கு பிறகு கல்லூரி கிளம்பி செல்ல வேண்டும். மாலையில் நேரமிருந்தால் தோட்டத்திற்கு சென்று வருவாள். இல்லையென்றால் வீட்டிலேயே அவளுக்கு நேரம் சரியாக இருக்கும். ஒரு நாளின் நேரம் போதவில்லை என்ற அளவிற்கு அவள் பிசியாக இருந்தாள்.
காவேரிக்கு தோட்டத்து வேலை எதுவும் சரியாக செய்யத் தெரியாது. அதனால் பேருக்கு மட்டுமே சென்று வருவார். அவரின் நேரங்கள் பெரும்பாலும் வீட்டில் மட்டுமே.
இதை நினைத்து சிவாவிற்கு சில சமயம் வருத்தமாக இருக்கும். காவேரி கூட மாட வேலை செய்தால் கிருஷ்ணனுக்கும் கொஞ்சம் ஒய்வு கிடைக்கும் என்பது அவள் எண்ணம். தான் நினைப்பதை காவேரியிடம் சொல்லவும் அவளுக்குத் தயக்கம். எங்கே தாய் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று.
அன்று இரவு சோர்வுடன் வீடு திரும்பிய கிருஷ்ணனைக் கண்டு அவளுக்கு உள்ளம் பதறியது.
“என்னப்பா ஆச்சு? ஏன் டல்லா இருக்கீங்க?” என்றாள் அக்கறையாய்.
“என்னன்னு தெரியலைமா சிவா. கொஞ்ச நாளா அடிக்கடி நெஞ்சுக்குள்ள ஏதோ பிசையற மாதிரி இருக்கு. என்னன்னு தான் தெரியலை” என்றவருக்கு காரணமே இல்லாமல் மனமெல்லாம் பாரமாக இருந்தது.
“இப்பதான்டா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர்றேன். இனி தான் சாப்பிடனும்” என்றவரை முறைத்தவள்,
“நீங்க கை கால் கழுவிட்டு வாங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று அவரை அனுப்பியவள், நேராக காவேரியிடம் தான் சென்றாள்.
“ம்மா அப்பாவுக்கு சாப்பாடு கூட கொண்டு போய் குடுக்க முடியாதா உங்களுக்கு?” என்று காய்ந்தாள் காவேரியிடம்.
“உங்க அப்பாரு தான் வீட்ல வந்து சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டார். நான் என்ன பண்ண?” என்றார் காவேரி.
“அவர் வரலைன்னா அப்படியே விட்ருவிங்களா?” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
“இங்க பார் சிவா. எனக்கே உடம்பு போட்டு படுத்துது. குறுக்கெல்லாம் ஒரே வலி. வீட்டு வேலைய முடிச்சா எங்கடா செத்த தலையை சாய்க்கலாம்னு தான் இருக்கு. இதுல என்னால தோட்டத்துக்கு எல்லாம் அலைய முடியாது. பேசாம தோட்டத்தை வித்துடலாம்னு சொன்னா என் பேச்சை எங்க கேட்குறிங்க?” என்றார் காவேரி.
“ஆரம்பிச்சுட்டிங்களா? சோறு போடுற பூமியை யாராவது விப்பாங்களா? அப்பறம் சோத்துக்கு என்ன பண்றது?” என்றாள் கடுப்பாய்.
“நான் ஏதாவது சொன்னா இப்படி சொல்லியே என் வாயை அடைச்சிடுங்க அப்பாவும் பொண்ணும்” என்று சலித்துக் கொண்டார் காவேரி.
கிருஷ்ணன் வரவும், அவருக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தவள்,
“நல்ல சம்பந்தம் ஒன்னு வந்திருக்கு சிவா. விசாரிச்சு பார்த்ததுல எனக்கு திருப்தியா இருக்கு. நீ சரின்னு சொன்னா, மேற்கொண்டு பேசலாம்டா” என்றார் கிருஷ்ணன்.
“என்னப்பா திடீர்ன்னு? அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு பாரமாகிட்டேனா நானு?” என்றவளுக்கு கண் கலங்கியது.
“பெத்தவங்களுக்கு பிள்ளைங்க பாரமில்லைமா. என்னமோ கொஞ்ச நாளா எனக்கு மனசுக்கு என்னவோ போல இருக்கு. நான் நல்லா இருக்கும் போதே உனக்கு ஒரு நல்லதைப் பண்ணிடனும்னு நினைக்கிறேன். பையன் பக்கத்து ஊரு தான். தூரமும் இல்லை. நினைச்ச நேரத்துக்கு வந்து பார்த்துக்கலாம். அவுகளுக்கும் தோட்டம் துரவு எல்லாம் இருக்கு. பையன் அக்ரி ஆபீஸ்ல வேலை பார்க்குறார். எல்லா வகையிலையும் உனக்கு பொருத்தமா இருக்குமா இந்த சம்பந்தம்” என்றார் பொறுமையாய்.
பையன் பக்கத்து ஊர் என்பதே அவளுக்கு பெரிய நிம்மதி. அவளுக்கு அவரை விட்டு தொலைவில் செல்லவெல்லாம் விருப்பமில்லை.
“உங்களுக்கு சரின்னா, எனக்கும் சரிதான்ப்பா. ஆனா இன்னும் ஒரு வருஷம் படிப்பிருக்கே” என்றாள்.
“அதையும் பேசிட்டேன்மா. உங்க வீட்ல இருந்து படிக்கிறதை, எங்க வீடல இருந்து படிக்கட்டும்ன்னு சொல்லிட்டாங்க. மேற்கொண்டு படிக்கிறதுனாலும் படிக்க வைக்கிறோம்னு சொன்னாங்கம்மா” என்றார்.