“கோயில் போற மூட்லாம் இல்லை, வீட்டுக்கே போலாம்” என்ற வேதாவை கோயிலுக்கும் சித்தார்த்தான் வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்.

அவளின் பார்வை சென்ற திசையை பார்த்த சித்தார்த்தும் விஷ்வாவை கண்டு விட்டு திகைத்தான், பின் அவனை கோவமாக பார்த்தான்.

‘நீயெல்லாம் எனக்கொரு ஆளா?’ என்பது போல தம்பியை அலட்சியமாக பார்த்த விஷ்வா அவர்களை நோக்கி நடந்தான். ஆமாம் சித்தார்த் இவனின் தம்பி, இவர்கள் இருவரும் ஒரே அம்மாவுக்கு பிறந்தவர்கள்.

அகல்யா செல்வபிரபுவை விவாகரத்து செய்து விட்டு விஷ்வாவுக்கு ஒரு வயது இருக்கும் போது குணசேகரை மணந்து கொண்டார். அப்பா இல்லாமல் போனதற்கு அம்மாதான் காரணம் என சந்தேகத்திற்கு இடமின்றி நம்புகிறான் விஷ்வா.

 அப்படியில்லை என விளக்கி சொல்ல வேண்டிய இடத்திலிருக்கும் சண்முகநாதன் தன் குடும்ப கெளரவத்தை காப்பாற்றுவதற்காகவும், பேரனை தன்னுடனே தக்க வைத்துக் கொள்வதற்காகவும் சில உண்மைகளை அவரது உள்ளத்தில் போட்டு  புதைத்து வைத்திருக்க, அம்மா மகன் இடையே பெரும் இடைவெளி உண்டாகி விட்டது. அத்தோடு இருந்தால் கூட பரவாயில்லை, அம்மா என்றாலே வெறுக்கும் நிலைக்கு வந்து விட்டான் விஷ்வா.

“போயிடலாமா வேதா?” என அவளிடம் கேட்டான் சித்தார்த்.

அதற்குள் அவர்களை சமீபத்து விட்டான் விஷ்வா.

“ஏன் போகணும் சித்து? நம்பின பொண்ணை நிர்கதியா விட்டுட்டு ஓடினவன் எல்லாம் நெஞ்சை நிமித்திகிட்டு நடமாடறப்போ, எந்த தப்பும் செய்யாத நான் எதுக்கு கண்டவனை பார்த்திட்டு ஓடணும்?” என சத்தமாகவே கேட்டாள் வேதா.

வேதா பாவமாக நின்றிருந்தாலோ அழுத்திருந்தாலோ கண்டிப்பாக விஷ்வாவால் அதை கையாண்டிருக்க முடியாது. அவளின் இந்த பேச்சு அவனுக்கு ஆறுதலாகவே இருந்தது, என்ன சித்தார்த் முன்னிலையில் அவள் அப்படி பேசியதில்தான் அவனுக்கு சற்று கோவம்.

வேதாவின் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அவர்கள் யாரோ  என்பது போல கடந்து சென்றான் விஷ்வா.

வேதா வேதனைப் பட கூடும் என்பதால்தான் இங்கிருந்து போகலாமா எனக் கேட்டிருந்தான் சித்தார்த். மற்றபடி விஷ்வா என்றால் அவனுக்கு வேப்பங்காய். அவளே தைரியமாக பேச, “கோயிலுக்குள்ள நுழைய எல்லாம் தராதரம் இல்லாம போச்சு வேதா, சாத்தானுக்கு இங்க என்ன வேலையா இருக்கும்?” என கேலியாக கேட்டான்.

வேதாவின் இடி சொல்லை ஏற்றுக்கொண்டு நடந்த விஷ்வா, சித்தார்த்தின் பேச்சில் ஆத்திரமடைந்து விட்டான்.

நிதானமாக திரும்பிய விஷ்வா, சித்தார்த்தை ஏளனமாக பார்த்தான்.

“சித்து… நீ ஏதும் பேசக்கூடாது அமைதியா இரு” என வேதா எச்சரிக்கை செய்ததை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை அவன்.

“என்னடா லுக்கு! கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டு ஓடினா எங்களுக்கு அவமானம்னு நினைச்சியா? ஊரெல்லாம் என்ன சொல்லிக்கிறாங்க தெரியுமா? நீ பொம்பளைய கல்யாணம் பண்ணிக்க போறதில்ல, நீ ஒரு…” என சொல்லிக் கொண்டிருந்த சித்தார்த், விஷ்வா விட்ட அறையில் பொறி கலங்கிப் போய் நின்றான்.

விஷ்வாவின் முகத்தையும் அவனது அடியின் வேகத்தையும் கண்டு பயந்து போனவள் சித்தார்த்தின் கையை பிடித்துக்கொண்டாள்.

ஒரு விரல் நீட்டி ‘பத்திரம்!’ என்பது போல சொன்னான் விஷ்வா.

வேதாவை விலக்கி விட்ட சித்தார்த், தன் அண்ணனை அடிக்க பாய்ந்தான். விஷ்வா தள்ளி விட்டதில் விழப் போனான் அவன்.

நண்பனை தாங்கிப் பிடித்துக்கொண்ட வேதா, “பண்றதெல்லாம் அநியாய வேலை, அதை சொல்லி காட்டினா சண்டைக்கு வருவியா? போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன், ஒழுங்கா விலகிப் போ!” என சீற்றமாக சொன்னாள்.

அதற்குள் அங்கே கூட்டம் கூடியிருந்தது. வேடிக்கைதான் பார்த்தனரே தவிர யாரும் இடையிட்டுக் கொள்ளவில்லை. விஷ்வாவை தன்னால் எல்லாம் சமாளிக்க முடியாது என நன்றாக தெரிந்த டிரைவரும் சமயோசிதமாக சண்முகநாதனை அழைக்க கோயிலுக்குள் ஓடிச் சென்றிருந்தான்.

தன்னை வேதா ஒருமையில் அழைத்து பேசியதை ரசிக்காத விஷ்வா, “பாதிக்க பட்டது நீதானேடி, அப்ப நீதான் பேசணும், அவனை பேச விட்டு வேடிக்கை பார்ப்பியா? கம்ப்ளைண்ட் பண்ணுவியாடி? எங்க பண்ணு, என் முன்னால என்னை மரியாதை இல்லாம பேசிட்டு எவனும் நிக்க முடியாது, பொண்ணா போயிட்டதாலா  சும்மா விடுறேன் உன்னை, இல்லைனா…” என கோவமாக சொன்னான்.

“இல்லைனா என்ன செய்வ? பொண்ணுன்னு சும்மா விடுறியா? கேட்க சிரிப்பு சிரிப்பா வருதே! அப்படிலாம் சும்மா விட வேணாம், முடிஞ்சா ஏதாவது பண்ணி பாரு, அப்புறம் தெரியும் இந்த வேதா யாருன்னு!” என உக்கிரத்தோடு சொன்னாள் வேதா.

மூச்சை நன்றாக இழுத்து சுவாசித்த விஷ்வா, “உம்மேல எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. உன் அத்தையும் அப்பாவும் செஞ்ச தப்புக்கான தண்டனை அது” என தான் செய்தது சரி என்பது போல சொன்னான்.

“உனக்கு யார் மேலேயும் கோவம்னா அவங்கள்ட்ட நேர்ல வந்து சண்டை போட்ருக்கணும், இப்படி சம்பந்தமே இல்லாத பொண்ணோட மனசோட விளையாடியிருக்க கூடாது. கல்யாணத்துக்கு முத நாள் கோழை மாதிரி ஓடிப் போய்ட்டு இப்ப பெரிய இவனாட்டம் பேசுறியா?” என அழுகையும் ஆத்திரமுமாக கேட்டாள்.

தாடை இறுக கை முஷ்டி மடக்கி நின்றிருந்தான் விஷ்வா.

“நல்லா கேளு வேதா, எவ்ளோ கேட்டாலும் இவனுக்கு உரைக்கவா போகுது? வாய் பேச்செல்லாம் வேணாம், இவன் மூஞ்சு முகரைய  நல்லா பேத்து விடுறேன், தள்ளு வேதா நீ” என்றான் சித்தார்த்.

“உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா சித்து! சாக்கடைய கண்டா நாம ஒதுங்கித்தான் போகணுமே தவிர கல் விட்டு ஏறியக் கூடாது. அப்புறம் நமக்குத்தான் அசிங்கம். நல்ல வேலையா ஓடிப் போனான், இல்லைனா இவனை நான் கல்யாணம் பண்ணி… சேச்ச நினைச்சு பார்க்கவே கொடுமையா இருக்கு” சித்தார்த்தை அடக்கிய வேதா, அவளை அறியாமல் விஷ்வாவை வெகுவாக சீண்டிக் கொண்டிருந்தாள்.

விஷ்வா தன் கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்து விட்டான். அவளது வார்த்தைகளால் முகமெங்கும் தீக்கங்குகள் சுடுவது போல உணர்ந்தான்.

“இந்த மாதிரி ஒருத்தன் என்னை விட்டு ஓடி போனதுக்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் வாழ்க்கை தப்பிச்சுதுன்னு நிம்மதிதான், அத்தைய என் அப்பாவை பழி வாங்குறானாம்! இவன் கூட எனக்கு கல்யாணம் நடக்கலைன்னு நாமெல்லாம் வேதனை பட்டாதானே! அதுல நமக்கெல்லாம் சந்தோஷம்னு இவனுக்கு யார் புரிய வைக்கிறது சித்து?

 அன்னிக்கே என்னை வேற ஒரு நல்லவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா எங்கப்பாவுக்கு? இவனை மாப்பிள்ளையா வச்சு ரெடியான மண்டபம், ஏற்பாடான எதையும் வச்சு கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னுதான் வேணாம்னு சொன்னேன் நான். இவன் போனா வேற பையன் கிடைக்க மாட்டான்னு நினைச்சிட்டான் போல, ஏன் நீயும் எனக்கு அத்தை பையன்தானே? உன்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாம் ஜாம்னு எப்படி வாழ்ந்து காட்டுறேன்னு இவனை பார்க்க சொல்லு!” விஷ்வாவை காயப்படுத்தி விடும் நோக்கத்தில் வாய்க்கு வந்ததை பேசினாள்.

“இப்ப கூட கோயிலுக்கு எதுக்கு வந்திருக்கேன்? அம்மா தாயே இவனோட என்னை கோர்த்து விடாம என்னை காப்பாத்தி விட்டுட்டியேன்னு தேங்க்ஸ் சொல்லத்தான் வந்திருக்கேன். பொண்ணுகிட்ட முதுகு காட்டி ஓடின இந்த வீரனை கட்டிக்க எவளாவது முன் வந்தா…” என்ற வேதா, இளக்காரமாக சிரித்து, “ஆறு அறிவு இருக்கிற எவளும் இந்தாளை கட்டிக்க வருவாளா என்ன சித்து?” எனக் கேட்டு வைத்தாள்.

அடுத்த நொடி வேதாவை தன்னிடம் இழுத்து பிடித்து நிறுத்தினான் விஷ்வா. என்ன நடக்கிறது என சித்தார்த் கணிக்கும் முன், விஷ்வாவின் பிடியிலிருந்து விலக வேதா திமிற திமிற, தன் பலத்தை பிரயோகித்து அவளை கோயில் சுவரில் வைத்து அழுத்தி அசைய விடாமல் செய்தான்.

அவர்களை நோக்கி வந்த சித்தார்த் கல் இடறி தரையில் விழுந்தான்.

முற்றிலும் பயந்து போயிருந்த வேதா, என்ன நடக்கிறது என புரியாமலும் என்ன செய்வது என தெரியாமலும் அவனை பிடித்து தள்ள பார்த்தாள். பாறையில் முட்டிக்கொண்டது போலானது அவளின் நிலை, அவளை விட பல மடங்கு பலம் வாய்ந்த அவனிடமிருந்து  அவளால் விடுபடவே முடியவில்லை.

சட்டைப் பையில் அம்மனுக்காக செலுத்த வைத்திருந்த தாலியை வேகமாக கையில் எடுத்த விஷ்வா, அதே வேகத்தில் வேதாவின் கழுத்தில் கட்டினான். நடக்கும் அசம்பாவிதம் புரிந்து அவனது கையில் அடித்தவள் பற்களாலும் காயம் செய்தாள். அவன் அசர வேண்டுமே.

சில நொடிகளுக்குள்  தன் கழுத்தில் ஏறி விட்ட திருமாங்கல்யத்தை கையில் பிடித்து பார்த்த வேதா விக்கித்து போனாள்.