இப்போது திருமணம் நின்றாலும் வேண்டிக் கொண்டதை தள்ளிப் போடாமல் நிறைவேற்ற நினைத்தார். பேரன் வரப் போவது நேற்றே தெரிந்து விட்டதால் கோயில் நிர்வாகியிடமும் நேற்றே பேசியிருந்தார். அவர்கள் இன்று நல்ல நாள் என கூறி வர  சொல்லியிருந்தனர்.

நேற்று மாலையே தங்கத்தில் திருமாங்கல்யம் வாங்கி மஞ்சள் கயிறில் கோர்த்து வீட்டு பூஜையறையில் வைத்திருந்தார் தாத்தா.

மாலை கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதை பேரனிடம்  சொல்லி விட்டே பேக்டரி புறப்பட்டார் சண்முகநாதன்.

பேக்டரியில் நடந்த  ஆலோசனை கூட்டம் நல்ல படியாக முடிந்தது. பேரனின் செயல்களை வேடிக்கை போல பார்த்திருந்த பெரியவருக்கு அவனை மெச்சிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

அவருடைய ஒரே மகன் செல்வபிரபு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அழகு அறிவு என எதிலும் குறையில்லை. இதோ இப்போது பேரன் நிர்வாகத்தை திறம்பட கவனிப்பது போல மகன் செய்வான் என கனவு வளர்த்து வைத்திருந்தார்.  ஆனால் அல்பாயுசில் அவரின் மனோதிடத்தை தகர்த்து விட்டு மறைந்து விட்டார்.

எப்போது மகனை நினைத்தாலும் ஏற்படும் சுருக் என்ற வலியை பழகிக் கொண்டிருந்தார். இப்போதும் அப்படியே நெஞ்சை நீவி விட்டுக் கொண்டு எழுந்தார்.

இப்போது கிளம்பினால்தான் வீட்டில் ஓய்வெடுத்து விட்டு மாலையில் சரியான நேரத்துக்கு கோயிலுக்கு செல்ல முடியும். ஆகவே பேரனிடம் “சாக்கு போக்கு சொல்லாம சாயந்தரம் வந்து சேரு” என கண்டிப்போடு சொல்லி சென்றார்.

விஷ்வாவுக்கு கோயிலுக்கு செல்வதில் எல்லாம் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. தன் மீது மன வருத்தத்திலும் கோவத்திலும் இருக்கும் தாத்தாவை சமாதானம் செய்ய என அவரது விருப்ப படி கோயிலுக்கு செல்வது என தீர்மானித்தான்.

வீட்டிற்கு வந்த பெரியவர் சற்று நேரம் உறங்கி எழுந்தார். பூஜைக்கென கோயிலில் வாங்கி வரச் சொன்ன சாமான்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என தன் உதவியாளரை கொண்டு பார்க்க சொன்னார்.

“எல்லாம் இருக்குங்க ஸார், தாலி மட்டும் எடுத்துக்கணும்” என்றார் உதவியாளர்.

தாத்தாவுடைய சிநேகிதர் ஒருவரிடமிருந்து அழைப்பு வர, “நான் எடுத்துக்கிறேன்”என சொல்லிக் கொண்டே அழைப்பை ஏற்றார். உதவியாளர் அனைத்தையும் காரில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

பூஜையறை பக்கமாக நடந்த பெரியவர், வயோதிகம் காரணமாகவும் பேச்சு மும்முரத்திலும் தாலியை எடுத்துக் கொள்ளாமலேயே வீட்டை விட்டு வெளியேறி காரில் ஏறி விட்டார்.

கோயில் வரை நண்பருடன் பேசிக் கொண்டே வந்ததில் தாலி பற்றிய நினைவே அவருக்கு இல்லாமல் போனது. அவரின் உதவியாளரோ பெரியவர் கையில் வைத்திருப்பார் என நினைத்து விட்டார்.

கோயிலுக்கு வந்த பிறகுதான் விஷயம் தெரிந்தது. விஷ்வாவுக்கு அழைத்து பேச, அவன் ‘இப்போதுதான் வீடு வந்தேன், இதோ கிளம்பி விடுவேன்’ என்றான். அவனையே திருமாங்கல்யத்தை எடுத்து வரும்படி சொல்லி விட்டார் தாத்தா.

விஷ்வா கோயிலுக்கு சென்று கொண்டிருக்க, வழியிலேயே அழைத்து விட்டார் தாத்தா. “எவ்ளோ நேரம்டா?” என சத்தம் போட்டவரிடம், “டென் மினிட்ஸ் தாத்தா” என மட்டும் சொல்லி அழைப்பை துண்டித்தான்.

அவனுக்கும் முன்னால் பைக்கில் யாருடனோ சென்று கொண்டிருந்தாள் வேதா. பார்த்ததும் அவனுக்குள் ஏதோ பர பரப்பு. அந்த பைக்கை நோக்கி வேகமாக காரை செலுத்தும் படி டிரைவருக்கு கட்டளையிட்டான்.

பைக் ஓட்டிச் சென்றது யாரோ ஓர் ஆண், ஹெல்மெட் அணிந்திருந்ததால் யாரென அவனுக்கு அடையாளம் யாரென தெரியவில்லை. மஞ்சள் நிற சல்வார் ஒன்றில் சாந்தமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் வேதா. முகம் முன்னர் பார்த்தது போல பொலிவாக இல்லாமல் சோகம் நிறைந்து காணப் பட்டது.

திருமணத்துக்கு முதல் நாளிரவு அவள் முத்தமிட்டதும் ‘லவ் யூ விஷ்வா’ என ஆசையாக சொல்லியதும் அவனுக்கு நினைவில் படமாக ஓடியது.

அவளின் மனதை பாதிக்க செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு ஏற்பட, அடுத்த நொடியே என் அப்பாவும் இப்படித்தான்… ம்ஹூம் இதை விட அதிகமாகவே வேதனை பட்டிருப்பார். அவரின் ஏமாற்றத்துக்கு முன் இது ஒன்றுமே இல்லை. நானென்ன திருமணத்தை முடித்துக் கொண்டா விட்டுச் சென்றேன், இப்போதும் இவளுக்கு வாழ இன்னொரு சந்தர்ப்பம் இருக்கிறதே, ஆனால் என் அப்பா? என அவனது எண்ணங்கள் சென்றது.

‘நான் செய்தது தவறே இல்லை’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டு இறுமாப்புடன் நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.

அந்த பைக்கும் கோயில் வாசலில்தான் நின்றது. அவர்களை பார்த்துக் கொண்டேதான் காரை விட்டு இறங்கினான் விஷ்வா. வேதாவை அழைத்து வந்தது சித்தார்த் என தெரியவும்  அவனது நடை நின்று விட்டது.

சித்தார்த் வேதாவுக்கு உற்ற தோழன். இரண்டு வயது பெரியவன் என்ற போதும் பெயர் சொல்லித்தான் அழைப்பாள் வேதா.

திருமணம் நிற்கவும் வேதா மிகவும் மனதொடிந்து போய் விட்டாள். விஷ்வாவுக்கு அவனது அம்மா மாமா மீதெல்லாம் கோவம் என்றால் என்னை வைத்து விளையாடுவானா என விஷ்வா மீது கண் மண் தெரியாத கோவம். தகுதியில்லாத ஒருவன் மீது போய் இத்தனை அன்பு வைத்து விட்டேனே என தன் மீதும் கோவம்.

திட்டமிட்டு செயல் பட்டவனின் உள் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் அவனுக்கு முத்தமிட்டு காதலை சொல்லி முட்டாளாக நடந்து கொண்டேனே, கொஞ்சம் யோசித்திருந்தாலும் அவன் நடிக்கிறான் என்பதை கண்டு பிடித்திருக்கலாமே, அப்படியா என் மூளை வேலை செய்யாமல் போய் விட்டது என தன் மீது கழிவிரக்கம்.

ஊரறிய ஏற்பாடு செய்த திருமணம் நின்று போய் விட்டதே, இனி என் மகளின் வாழ்வு என்னாகும் என நினைத்து நினைத்து தினம் அழுகிறார் வேதாவின் அம்மா வாசுகி.

தான் ஆசை பட்டதால்தான் தன் அண்ணன் மகள் பாதிக்க பட்டு நிற்கிறாள் என அகல்யாவும் துயரத்தில் உழல்கிறார். ஆதிரனோ விஷ்வாவை வேட்டையாடி விடும் வெறியோடும் தங்கையை காண காண துடியாய் துடிக்கும் மனதுடனும் அடிபட்ட புலியாக சுற்றி வருகிறான்.

வேதாவின் அப்பா சந்திரன் தவறான மாப்பிள்ளையை மகளுக்கு பார்த்து விட்டோமே என்ற குற்ற உணர்வில், சிரிப்பையெல்லாம் மறந்து, மகளின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தோடு நடமாடுகிறார்.

இத்தனை பேரின் அன்றாட வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டவனோ ஒன்றுமே நடக்காததை போல தன்னால் பாதிக்க பட்டவளின் முன்பே ஜம்மென வந்து நிற்கிறான். அங்கே விஷ்வாவை எதிர் பார்க்காத வேதா திகைத்து போனவளாக நின்றாள்.

இந்த ஒரு மாதமும் வேதாவை  கூடவே இருந்து சித்தார்த்தான் பார்த்துக் கொண்டான். இன்று காலையே விஷ்வா ஊர் திரும்பி விட்ட செய்தி அனைவருக்கும் கிடைத்து விட்டது. அவனது அன்றாட வேலைகளை வழக்கம் போல கவனிக்கிறான் என தெரிந்ததும் வேதாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

வருடக் கணக்காக அவன் மீது ஆசை வளர்த்து, கொஞ்ச நாட்கள் என்ற போதும் அவனை கணவனாகவே நினைத்து வாழ்ந்து விட்டவள். அவனுக்கு தான் ஒன்றுமே இல்லையா என நினைக்க நினைக்க தாங்க முடியாத வலியை அனுபவித்தாள்.

குளிக்காமல், சரியாக சாப்பிடாமல் அறைக்குள் அடைந்து கிடந்தவளை திட்டி சித்தார்த்தான் வெளியில் அழைத்து வந்திருந்தான்.

மதியம் திரைப்படம் ஒன்றுக்கு சென்றவர்கள் மாலையில் சிற்றுண்டி முடித்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல புறப்பட்டிருந்தனர். அப்போதுதான் அகல்யா கோயிலுக்கு வந்திருப்பதாக சொல்லி இவர்களையும் வர சொன்னார்.