கொடைக்காகனலில் இருந்து விஷ்வா ஊர் திரும்ப கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது.
பேக்டரியில் போர்ட் மீட்டிங் ஏற்பாடாகியிருந்தது. முதல் நாளே எல்லாருக்கும் மெயில் சென்றிருக்கவும் பேரன் இன்று வருவான் என்பதை நன்றாக அறிந்தே இருந்த சண்முகநாதனுக்கு அவனது வரவு அதிர்ச்சி அளிக்கவில்லை.
வீட்டுக்குள் நுழைந்தவனை உக்கிரமாக பார்த்து வைத்தார். இப்போது அவரிடம் பேசினால் சரியாக வராது என அவரைக் கடந்து அமைதியாக சென்றான் அவன்.
“நில்லுடா!” என அதட்டினார் தாத்தா.
அவன் அப்படியே நின்றான், ஆனால் அவரின் பக்கமாக திரும்பவில்லை.
“என் வளர்ப்புதானாடா நீ?” என சத்தம் போட்டார்.
வேகமாக அவரின் முன் வந்தவன், “அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்? உங்க பையனோட இறப்புக்கு நீங்க வேணா நியாயம் செய்யாம இருக்கலாம், என் அப்பா விஷயத்துல நான் அப்படி இருக்க முடியாது” என கோவமாக சொன்னான்.
“முட்டாள் மாதிரி பேசாத!” பற்களை கடித்தார் பெரியவர்.
“நான் எப்படின்னு எனக்கு தெரியும் தாத்தா, உங்க பார்வைக்கு முட்டாளா தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போறேன்”
மூண்ட கோவத்தை எல்லாம் விழுங்கிங் கொண்ட சண்முகநாதன் இறுகிய முகத்துடன் தரையை வெறித்தார். இப்போது உயிருடன் இல்லாத அவரது மனைவி சங்கரி மீதும் கோவம் கோவமாக வந்தது. அவரது துர்போதனையால்தான் இவன் இப்படி ஆகி விட்டான் என்பது அவருக்கு சர்வ நிச்சயம்.
பாவி இறந்து போயும் பேரனை இப்படி வாழ விடாமல் செய்கிறாளே என அவரின் மனம் கொதித்தது.
கண் முன் நிற்பவன் யாரோ இல்லையே தட்டி விட்டு கடந்து செல்ல, மிச்சமிருக்கும் அவரின் ஒரே இரத்தம். பெருமூச்சு விட்டவர், “அந்த பொண்ணு பாவம் இல்லையாடா? அதுக்கு நீ செய்தது அநியாயம்தானே? உன் மனசாட்சி உறுத்தல?” என நிதானமாக கேட்டார்.
தாத்தாவின் சோர்ந்த உருவம் அவனை கவலை கொள்ள செய்ய, அவரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
“இப்படிலாம் நான் பிளான் பண்ணினது இல்லை தாத்தா. நீங்கதானே வேதாவோட ஃபோட்டோ காட்டுனீங்க, அதுக்கு முத நாள் உங்கள்ட்ட அந்தம்மா பேசினதை கேட்டேன். என்னை விட அவங்களுக்கு எல்லாருமே முக்கியம், அவங்க அண்ணனும்தானே அவங்க செயலுக்கு உடந்தை? அதனாலதான் இப்படி செஞ்சேன். மேரேஜ் நின்னு போனாலும் வேதாவுக்கு வேற யாரையாவது பார்த்து கட்டி வைப்பாங்கனு நெனச்சேன். அப்படி செய்யாம போனது அவங்க மிஸ்டேக்” என விளக்கம் சொன்னான்.
அன்றைய நாள் இப்போதும் சண்முகத்தால் மறக்க முடியாது. விஷ்வா சொன்னது போல வேதாவுக்கு திருமணத்தை நடத்தி விடத்தான் பார்த்தார்கள். ஆனால் அவள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மிக உறுதியாக திருமணமே வேண்டாம் என சொல்லி வீட்டுக்கு சென்று விட்டாள்.
அனைவருக்கும் தீராத அவமானம்தான், ஆளாளுக்கு வாய்க்கு வந்த படி பேசுவது காதில் விழா விட்டாலும் உணர்ந்துதான் இருந்தார் சண்முகநாதன்.
பேரன் சென்ற இடத்தை கூட தெரிந்து கொண்டு விட்டார். நின்ற திருமணத்தை நடத்தி காட்டுவதாக கூட வேதாவின் அப்பா சந்திரனிடம் சூளுரைத்தார். அப்படி எந்த கெடுதலையும் எனக்கு செய்து விட வேண்டாம் என சிவந்த விழிகளுடன் அழுத்தம் தெறிக்க வேதா சொன்னது இன்னும் பெரியவரின் நினைவுக்குள் அப்படியே நிற்கிறது.
பெண் பாவத்தை சேர்த்துக் கொண்டானே என இவருக்கே நடுங்கி விட்டது.
பேரனின் தோளை பிடித்தவர், “உன் அம்மா எந்த தவறும் செய்யலடா, உன் கோவம் அர்த்தமே இல்லாதது” என நயமாக சொன்னார்.
அவரின் கையை விலக்கி விட்டு அலட்சியமாக அவரை பார்த்தவன், “ஓ! அவங்க மேல எந்த தப்பும் இல்லதான் தாத்தா” என நக்கலாக சொன்னான்.
“உன் அப்பனை பெத்த நான் சொல்றத நம்ப மாட்டியாடா?” இயலாமையோடு கேட்டவர், அவனது முகத் திருப்பலில், “என்ன செய்தா நம்புவ?” என்றார்.
“இறந்து போன என் அப்பா வந்து சொல்லட்டும், அவரோட மனைவி மனசுல அவரை தவிர யாருக்கும் இடம் தரலைன்னு அவர் சொல்லட்டும், நம்புறேன்” என்றான்.
சண்முகநாதனுக்கு கையறு நிலைதான். அகல்யாவை தவறாக சித்தரித்தால் தனக்கு மோட்சம் என்ன நல்ல சாவே வராது என அவருக்கு தெரியும், ஆனால் பேரன் அவனது அம்மாவை அப்படி பார்க்க இவரும் காரணம்தானே?
“அதெல்லாம் நாம எடுத்துகிற விதத்துல இருக்கு தாத்தா” என சர்வ சாதாரணமாக சொன்னான்.
“இனிமே உனக்கு வேற யாரும் பொண்ணு தருவாங்களாடா?” கடுப்பாக கேட்டார்.
“சொடக்கு போட்டா பொண்ணு தர ஆயிரம் பேர் வருவாங்க தாத்தா” என அவன் சொல்ல, சொடக்கு போட்ட பெரியவர் அவனை நன்றாக முறைத்தார்.
வாய் விட்டு சிரித்தவன், “அத நான் போடணும் தாத்தா. எப்ப மூட் வருதோ அப்ப சொடக்கு போடுறேன். நீங்க எதை பத்தியும் ஒர்ரி பண்ணிக்காம ரெஸ்ட் எடுங்க, நான் கொஞ்ச நேரத்துல என் வேலைகளை பார்க்க கிளம்பிடுவேன்” என சொல்லி அறைக்கு சென்று விட்டான்.
மகனின் வாழ்க்கையை சரி செய்ய தவற விட்டதற்கான வருத்தமே இன்னும் சுமையாக அவருள் இருக்கிறது, இப்போது பேரனின் வாழ்வும் தவறாகிப் போகுமோ என்ற கவலை அவரை பிடித்துக்கொண்டது.
இரண்டு மணி நேர ஓய்வுக்கு பின் சுத்தமாக சவரம் செய்யப் பட்ட முகம், திருத்தப் பட்ட மீசை, அடர் நீல நிற சட்டையை காக்கி நிற பேண்டில் இன் செய்து பார்ப்பவரை கவரும் தோற்றத்தில் தயாராகி வந்தான் விஷ்வா. அவனது உதவியாளன் வினித் அவனுக்காக காத்திருந்தான்.
இத்தனை நாட்களாக விஷ்வா இங்கு இல்லை என்றாலும் அலுவல்கள் எல்லாம் தடையின்றிதான் நடந்து கொண்டிருந்தன.
தஞ்சையின் புறநகர் பகுதியில் பெரிய ஸ்டீல் பேக்டரி உள்ளது, அதுதான் இவர்களின் மிகப்பெரிய தொழில். தஞ்சையில் மிகப்பெரிய நட்சத்திர விடுதி ஒன்றும் பெட்ரோல் பங்க்’கும் உள்ளன. திருச்சியில் உள்ள சில தொழில் நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கிறார் சண்முகநாதன்.
இப்போது நவீனமாக மால் ஒன்றை கட்டும் திட்டத்தில் இருக்கிறான் விஷ்வா. திருமணம் பற்றியெல்லாம் அதிகம் யோசித்தது இல்லை, அவனுக்கு கணவன் மனைவி உறவின் மீது பெரிதாக நம்பிக்கையும் இல்லை. இந்த திருமணத்தை தானே நிறுத்தி விட்டதிலும் எந்த பாதிப்பும் அவனுக்கு இல்லை.
சண்முகநாதன் பேக்டரி தவிர வேறெங்கும் செல்ல மாட்டார், அங்கேயும் அதிக தலையீடுகள் செய்யாமல் தனது பொழுது ஓட வேண்டுமே எனதான் செல்கிறார். வீட்டில் இருந்துதான் என்ன செய்வது என்ற எண்ணம். கொள்ளு பேரனோ பேத்தியோ இருந்தால் அதன் முகத்தை பார்த்துக் கொண்டு வாழ்நாளின் இறுதியை கழித்து விட அவருக்கு மிகுந்த ஆசை.
அதற்கெல்லாம் தனக்கு கொடுப்பினை இல்லை என்ற வருத்தத்தோடு பேரனிடம் வந்தார்.
தஞ்சையில் உள்ள அம்மன் கோயிலில் திருமாங்கல்யம் காணிக்கை செலுத்துவதாக அவருக்கு முன்பே வேண்டுதல் இருந்தது. விஷ்வா, வேதா திருமணம் முடிந்த பின் இருவரையும் சேர்ந்தே அந்த காணிக்கையை செலுத்தலாம் என யோசித்திருந்தார்.