வர்ஷினி “அமைதியா வாங்க.. இல்லை, அதான் நடக்கும்” என்றாள்.

சர்வேஷ் “இங்க.. இந்த ஹோட்டலில் நிறுத்து, இந்த கடை.. என்னால் உட்கார முடியலை” என்றான்.. அவளிடம் பேசிட வேண்டும்.. நேரமில்லை என வீடு சென்றிட போகிறாள்.. என எண்ணி.

வர்ஷினி தன் அலுவலக எல்லையை தாண்டிதான் சர்வேஷ் சொல்லுவதை காதில் வாங்கினாள்.. நல்ல காபிஷாப் பார்த்து நிறுத்தினாள்.

வண்டியை அவள் பார்க் செய்ய போக.. சர்வேஷ் “இரு இங்கே கொடு.. நான் பார்க் பன்றேன்.. நீ உள்ளே போ” என்றான்.

வர்ஷினி “ஏன் எனக்கு பார்க் பண்ணத் தெரியாதா” என்றாள்.

சர்வேஷ் “அப்படி இல்லை.. நான் செய்கிறேன்.. இறங்கு” என சொல்லி நின்றான்.

வர்ஷினி முறைத்தாள் இரண்டு நிமிடம்..

சர்வேஷ் “கொடு வர்ஷி.. மணியாச்சு” என்றான்.

சூரியன் மறையும்  மஞ்சள் மாலை நேரம். நெற்றியில் வியர்வை வழிய ஹெல்மெட் கழற்றிக் வண்டியுள் வைத்தாள். சர்வேஷ் சமாதானமாகவே பார்த்தான்.. எந்த கோவமும் வேகமும் காட்டாவில்லை அவளிடம். அவள் சாவி கொடுத்தாள்.

சர்வேஷ்.. அண்டர்கிரௌண்ட் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு மேலே வந்தான்.

வர்ஷினி சான்விச் ஆர்டர் செய்திருந்தாள் இருவருக்கும் சேர்த்து.

சர்வேஷ் வர.. வர்ஷினி “உங்களுக்கு, கொஞ்சம் கூட  மற்றவர்களை பற்றி கவலையே இல்லையா.. எப்படி ஆப்பீஸ் வரை வந்து நிக்குறீங்க?” என்றாள்.

“உனக்கு இருக்கா” என்றான்.

“இத பாருங்க.. எல்லாவற்றுக்கும் என்னை குறை சொல்லுவீங்க அப்படின்னா.. இது ஒத்துவராது.. நாம பேசவே வேண்டாம்.. கிளம்பலாம்” என்றாள்.

சர்வேஷ் அமைதியானான்.

வர்ஷினியும் அமைதியானாள்.

இருவருக்கும் ஏனென்றே தெரியாமல் ஒரு இறுக்கம் சூழ்ந்துக் கொள்ள.. உணவு வரவும், அதை உண்டனர்.

இப்போது சர்வேஷ் “வர்ஷினி, சில விஷயங்கள் இப்படிதான் நடக்கணும்ன்னு நினைப்போம்.. ஆனால், அப்படி திட்டமிட்டபடி  சிலரது வாழ்க்கையில், அவங்க நினைப்பது ஏதும் நடக்காது.. எனக்கும் அப்படிதான் போல,  நானும் நிறைய கற்பனை செய்து வைத்திருந்தேன்.. இப்படி ஒரு கோவத்தில் உன்கிட்ட சொல்லுவேன்னு.. எதிர்பார்க்கலை.. வர்ஷினி, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்..” என்றான். பாதி கடித்த சண்விட்ச்சோடு.

வர்ஷினி மென்றதை விழுங்க முடியாமல் திணறினாள். அமைதியானாள்.. எல்லாம் கணிக்க முடியும் என்றாலும்.. சட்டென சொல்லியவனிடம் எப்படி ரியாக்ட் செய்வது என தெரியாமல் தடுமாறினாள். தண்ணீர் குடித்தாள். அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.

சர்வேஷ் “பாரு வர்ஷினி, ஏதாவது சொல்லு வர்ஷி” என்றான்.

மூச்சுகளை நேராக்கிக் கொண்டு.. தயக்கமாக குரலில் “நேற்று என்ன சொன்னீங்க.. இன்று வேறு  சொல்றீங்க” என்றாள்.

அவனோ “நேற்றும் இதை சொல்லத்தான் வந்தேன்.. ஏன் கொஞ்ச நாளாக இதை சொல்லத்தான் நினைக்கிறேன். ஆனால், என்னமோ அது சண்டையில் போய் முடியுது.. எனக்கு, உன்கிட்ட உண்மையை சொல்லாமல் ஏதும் புரியலை.. இப்போது சொல்றேன்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. நீ என் கால்ஸ் எடுக்கவில்லை எனவும் கோவம்.. வீட்டுக்கு வந்து பார்த்ததும்.. நீ கண்டுக்கலை அதான் கோவம்..  என்னை மீறி பேசிவிடுகிறேன்” என்றான்.

வர்ஷினி ஏதும் சொல்லாமல் தன்னுடைய உணவினை உண்டாள்.

சர்வேஷ் பார்த்துக் கொண்டே இருந்தான்.

வர்ஷினி தன் உணவினை முடித்தவள்.. கைகளை துடைத்துக் கொண்டு.. “சர்வேஷ், என்ன நினைச்சு இதெல்லாம் சொல்றீங்க.. இதெல்லாம்  நமக்குள் ஒத்து வருமா.. எதோ பார்த்ததும்.. ஒரு ஸ்பார்க் வர இதெல்லாம் சொல்றீங்களா” என்றாள்.

சர்வேஷ் அவளின் நிதானமான கேள்வியில் கோவம்தான் கொண்டான். அவளை முறைத்தான்.. வார்த்தைகள் வேகமாகவே வர ஆரம்பித்தது.. “என்னை பார்த்தால் என்ன டீன்னேஜ் பையன் மாதிரியா இருக்கு” என சொல்லி தலையை கோதிக் கொண்டான். 

அவளோ இன்னமும் பார்வையை மாற்றாமல் நிதானமாக பார்க்க.. அவளை போல ஒரு நிதானத்தை.. பாவனையாவது செய்ய வேண்டும்.. என எண்ணிக் கொண்டு அமைதியாக இருக்க முயன்றான்.,

வர்ஷினி “எந்த மாற்றமும் இல்லை உங்ககிட்ட.. அன்று போலவே அதே டீன்னேஜ் பையன் மாதிரிதான் இருக்கீங்க. இப்போது இப்படி சொல்லுவீங்க, நான் ஏதாவது செய்தால் நீங்க மீண்டும் அப்படிதான் ஏதாவது யோசிக்காமல் பேசுவீங்க” என்றாள்.

சர்வேஷ் “என்ன விளையாடுறீயா நீ.. என்ன சொல்ற நீ.. உன்கிட்ட ஏதும் கேட்க கூடாதுன்னு சொல்றீயா.. அப்படியே இருக்கனுமா நானு.. நீ என் போனினை எடுக்கலை.. எனக்கு ஹெல்த் எப்படி இருக்குன்னு கூட கேட்க்கலை.. நல்லாதானே பேசிட்டு இருந்த திடீர்ன்னு அப்படியே மாறிடுவ நீ.. நான் ஏதும் கேட்க்க கூடாதா” என்றான், சின்ன குரலில்.. மூச்சு வாங்க.. ஆவேசமாக.

“இங்க பாருங்க.. நீங்க என்ன சின்ன பையனா.. எல்லாவற்றையும் நான் கேட்கணும்ன்னு எதிர்பார்க்க.. இத்தனைநாள் எல்லாவற்றுக்கும் பதில் அனுப்பிட்டு.. உங்க கூட வெளிய போயிட்டு வந்துட்டு தானே இருந்தேன்.. இப்போ உங்க போன் எடுக்கலைன்னா.. எதோ வேலையாக இருந்தேன்னு புரிந்துக்கணும்” என்றாள்.

சர்வேஷ்க்கு மூச்சு நேரானது.. ஆராய்ச்சி பார்வையாக அவளை பார்த்து “வேற ஒன்னுமில்லையே.. என்னை அவோயிட் பண்றமாதிரி ஏதுமில்லையில்ல..” என்றான்.

“அவொய்ட் எல்லாம் பண்ணலை.. சர்வேஷ். எனக்குதான் நிறைய குழப்பம்..  ” என்றாள்.

சர்வேஷ் நிம்மதியானான்.. மனது இதமானது.. “வர்ஷி, நீயாக எதையும் யோசிக்காதா.. அன்று, என் வாழ்க்கை உன்னை தேடி வர நிலையில் என்னை வைக்கலை. அப்பாவின் வாழ்க்கையில் நடந்தது, என் வாழ்க்கையில் நடந்தது.. என பல பிரச்சனைகள் எனக்கு. அதில் அப்படியே கரைந்து போயிருக்க வேண்டியவன்.. எதோ பிழைத்திருக்கேன். அதனால், உன்னை பார்த்தது.. எனக்கு இப்போதுவரை நல்ல நிகழ்வுதான். அதை வாழ்நாள் முழுக்க கூடவே எடுத்துக்கணும்ன்னு நினைக்கிறேன். ஆனால், ப்ராப்பராக எனக்கு எதையும் சொல்ல தெரியலை.. நீ வேண்டும் எப்போதும்” என அழுத்தமாக அவளுக்கு மட்டும் கேட்க்கும் குரலில் மொழிந்தான்.

வர்ஷினி அமைதியாகினாள் ஏதும் பேசவில்லை. இருவருக்கும் நிறைய கேள்விகள்தான். ஆனால், ஏதாவது பேசினால் சண்டை வருமோ என. ஆனாலும் பேசாமல் இருக்க முடியவில்லை.. வர்ஷினி “நமக்குள் ஒத்து வருமா சர்வேஷ்” என்றாள்.

சர்வேஷ் “என் மனசு உனக்கும் எனக்கும்தான் ஒத்து வரும்ன்னு சொல்லிட்டே இருக்கு ரொம்ப வருஷமாக.. அதுவும், சாரி போர் தட்.. எனக்கு கல்யாணம் நின்று போனதிலிருந்து.. நீ மட்டும்தான் மனதில்” என்றான்.

வர்ஷினி பேசவில்லை.. அவன் சொன்னதை உள்வாங்கினாள்.

சர்வேஷ் “அது சும்மா, நிச்சயத்தின்  போதே நின்னுடுச்சி” என்றான்.. தலை கோதிக் கொண்டு.. ஒன்றும் பெரிதானது இல்லை என்ற குரலில்.

வர்ஷினிக்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை.. “உங்களுக்கு எப்போது ப்ளைட்” என்றாள்.

நேரம் சொன்னான். என்ன பேசுவதென்று தெரியவில்லை.. தயக்கமாக இருந்தது.. அதனால் இருவரும் கிளம்பினர்.

சர்வேஷ் இப்போது வண்டியை தான் டிரைவ் செய்தான். வர்ஷினி ஏதும் கேட்க்காமல் அமர்ந்துக் கொண்டாள். 

வர்ஷினி “ரொம்ப மெதுவா போறீங்க” என்றாள்.

“போதும், சீக்கரம் வீட்டுக்கு போய் நீ என்ன பண்ண போற” என்றான்.

“உங்க வீட்டில் எல்லோரும் வெயிட் பண்ணுவாங்க.. நீங்க சீக்கிரம் வீட்டுக்கு போகங்க..” என்றாள்.

“அதெல்லாம் பேசிக்கலாம். நீ ஏர்போர்ட் வரீயா” என்றான்.

வர்ஷினிக்கு ஆசையாகத்தான் இருந்தது “அப்பாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என்றாள்.

“ம்.. என் பேர் சொல்லியே கேளு” என்றான்.

“இவர் பெரிய ப்ரைம்மினிஸ்டர்.. சொல்லி கேட்டதும் விட்டுடுவாங்க” என்றாள்.

“இல்ல வர்ஷி, அவங்களுக்கு கொஞ்சம் க்ளூ கொடுப்போமே” என்றான்.

பின்னால் அவன் தோளில் ஒரு அடி வைத்தாள் வலிப்பது போல.. “முடிவு ஏதும் செய்யலை சரியா” என்றாள்.

“வர்ஷினி இப்போது சென்றால் மினிமம் ஒன்இயர் ஆகும் நான் இங்கே வர.. அதற்குள் நீ முடிவு பண்ணிடு.. கண்டிப்பா உன்னை அடுத்தமுறை கூட்டிட்டு போய்டுவேன்” என்றான்.

“ஐயோ என் அப்பா என்னை வெளிநாட்டில் கொடுக்கமாட்டார், அதனால் கண்டிப்பா நடக்காது” என்றாள்.

“நான் பேசிக்கிறேன் டி.. நீ என்கிட்டே மட்டும் சொல்லு போதும்..” என்றான் புன்னகையாக.

வர்ஷினிக்கு சட்டென பேசவரவில்லை.. 

சர்வேஷ் “நாம நிறைய லவ் பண்ணனும் வர்ஷி. அதுக்குள் எதற்கு பெரிய யோசனை எல்லாம் எதுக்கு. நடக்கும்.. நம்பு. நம்ம பேரன்ட்ஸ் அவ்வளவு கொடூரக்காரங்க இல்லை” என்றான்.

வர்ஷினி புன்னகையோடு வந்தாள்.

அவள் வீட்டில் வண்டியை நிறுத்தினான்.. வர்ஷினி இறங்கினாள். சர்வேஷ், வண்டியிலேயே அமர்ந்திருந்தான்.. வர்ஷினி “மணியாகிடுச்சு என்றாள்.

சர்வேஷ் தன் கையினை நீட்டினான் அவள் முன்.. வர்ஷினிக்கு சட்டென்ன கன்னங்கள் சிவந்தது.. எப்படி கை சேர்ப்பது.. என நின்றாள் பெண்.. சர்வேஷ் தானாக அவள் கையினை பற்றிக் கொண்டான்.

வர்ஷினி சுற்றும்முற்றும் பார்த்தாள்.

சர்வேஷ் கோர்த்த கைகளை இறுக்கினான்..

வர்ஷினி, அவனின் அருகில் நின்றாள். சர்வேஷ் “ஊருக்கு போறேன்” என்றான் ஏக்கமாக.

தலையசைத்தாள் ‘ஆம்’ என. அவனோ “சீக்கிரம் இதெல்லாம் நடந்திருக்கலாம்” என்றான்.

பெண்ணவள் இப்போதும் ‘ஆம்’ என்றாள்.

“ஏர்போர்ட் வந்திடு.. நான் வெயிட் பண்ணுவேன்..” என்றான்.

மீண்டும் தலையசைத்தாள். 

“இதுதானா.. இதுதானா..

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா..

இவன்தானா இவன்தானா..

மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா”

நீண்ட நேரம் பிடியை விடாமல் பிடித்திருந்தான்.

வர்ஷினி கார் புக் செய்தாள்.. வண்டி வரும் வரை.. சர்வேஷ் அவளின் கைகளை விடவேயில்லை.

ஒருவழியாக கார் வந்து நிற்கவும் கிளம்பினான்.