அவளும் அசரவில்லை. “நீங்க என்னை டாமினேட் பண்றது போல இருக்கு, உங்களோட என் லைஃப் எப்படி போகுமோன்னு சந்தேகமா இருந்ததால என்ன செய்யலாம்னு சித்துகிட்ட டிஸ்கஸ் பண்ணினேன்” என்றாள். 

“அதை என்கிட்டதானே சொல்லணும்? அவன் யார் உனக்கு, எதுக்கு அவன்கிட்ட சொன்ன?” என கோவமாக கேட்டான். 

அவனை ஊன்றி பார்த்தவள், “இதோ இந்த ரெண்டு நிமிஷத்திலேயே உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு தெரிஞ்சு போச்சே, நமக்கு கல்யாணம் வேணாம்” என சொல்லி நகரப் போனாள். 

அவன் விடவில்லை. 

“எங்க என்னை பார்த்து என் மேல விருப்பம் இல்லைனு சொல்லு, நானும் வந்த வழியே திரும்ப போறேன்” என்றான். 

“முதல்ல உங்களுக்கு எம்மேல விருப்பமான்னு சொல்லுங்க?”

“இல்லாமதான் அத்தனை வேலையையும் அப்படியே போட்டுட்டு ஓடி வந்து உன் முன்னால நிக்கிறேனா?” என அவன் கேட்கவும் சற்று தடுமாறித்தான் போனாள். 

“சொல்லு என்னை பிடிக்கலையா உனக்கு?” அதட்டல் போட்டான். 

எப்படி அப்படி சொல்வாள்? இவனை பார்த்து பழகாமலே இவன் மீது ஆசையை வளர்த்து கொண்டு விட்டாளே. இவளுடன் பேச ஆரம்பித்த இந்த சில நாட்களிலேயே அவனும் அதை தெரிந்து கொண்டிருந்தானே.

“விருப்பம் இருக்குன்னு அரைவை மெஷினுக்குள்ள போய் தலையை கொடுக்க முடியுமா?” என நொடிப்பாக கேட்டாள். 

“ஏய்!” என சீறியவன் உடனே தணிந்து, “அப்ப நான் இல்லாம வாழ்ந்திடுவ?” என இடக்காக கேட்டான். 

“எனக்கு என் ஃபேமிலி ரொம்ப முக்கியம், நான் கஷ்ட பட்டா அவங்களும் கஷ்ட பட மாட்டாங்களா? அவங்களுக்காக நல்லா வாழ்வேன்” என்றாள். 

பின்னங் கழுத்தை தடவிக் கொண்டு அங்குமிங்கும் நடந்தவன், திடீரென நின்று கண்களை இடுக்கிக் கொண்டு, “என்ன பிடிக்கல என்கிட்ட? என்ன செய்யணும் நான்?” எனக் கேட்டான். 

“அதான் சொன்னேனே, டாமினேட் பண்றத மாத்திக்கணும். என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்” என்றாள். 

“என்ன டாமினேட் பண்ணினாங்க? கல்யாணம் பண்ணிட்டு வந்து சொல்லு, நீ சொல்றதுக்கெல்லாம் எஸ் பாஸ் சொல்றேன்” என்றான். 

“நீங்க எப்பவுமே இப்படித்தானா?”

“எப்படி?”

“கல்யாண பேச்சே முடிவாகுமான்னு தெரியாதப்போ கல்யாணம் பண்ணிட்டு வந்து சொல்லுன்னா என்ன அர்த்தம்?”

“நீதான் என்ன அர்த்தத்துல பேசுறேன்னு புரியலை, உனக்கு பிடிக்கலைனா விடு” என்றான். 

அவனை முறைத்தவள், “நான் பேசுறதுக்கும் காது கொடுக்கணும், பேசுற தொனி இப்படித்தான்னு சொல்லாம கொஞ்சம் கொஞ்சமா உங்களை நீங்க மாத்திக்கணும், சரியா?” எனக் கேட்டாள். 

“ம்ம்… ஓகே டன்!” என்றான். 

“பார்க்கலாம்” 

“அது பொறுமையா பாரு, தாத்தா கூப்பிட்டு சத்தம் போடுறார், நீ ஆரம்பிச்சு வச்ச பிரச்சனையை நீயே சரி பண்ணு, இப்ப கிளம்பறேன்” என்றான். 

“சமாதானம் ஆனதுக்கு அப்பறம் ரெண்டு வார்த்தை நல்லா பேசிட்டு போலாம்ல?” என அவள் கேட்கவும், “நைட்…” என்றவன் கைப்பேசியில் என்பதை சைகையாக சொல்லி சென்று விட்டான். 

அவளும் தன் பெற்றோரிடம் ‘அண்ணன் ஏதோ தவறாக புரிந்து கொண்டு பேசுகிறான்’ என சொல்லி விட்டாள். அதன் பின் விஷ்வா அவளிடம் பேசும் போது அவனிடம் மாற்றம் தெரிந்தது. தனக்காக மாற முயற்சி செய்கிறான் என்பதிலேயே வேதாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. 

தங்கையை கவனித்த ஆதியும் சித்தார்த்தின் பேச்சையெல்லாம் புறம் தள்ளினான். ஒரே தங்கையின் திருமணத்தில் எல்லாம் பார்த்து பார்த்து செய்தான். 

திருமணத்துக்கு முந்தைய நாளான அன்று விஷ்வாவுக்கு பிறந்தநாள், காலையிலேயே அவனது வீட்டில் கேக் வெட்டி பூஜை செய்து என எல்லாம் நடந்து விட்டது. வேதா அவனை சந்திக்க செல்ல முடியாத காரணத்தால் அண்ணனிடம்தான் பிறந்தநாள் பரிசை கொடுத்தனுப்பியிருந்தாள். 

ஆனாலும் நேரில் தனிமையில் அவனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமென அவளுக்கு மிகவும் ஆசை. 

மாப்பிள்ளை அழைப்பு முடிந்து நிச்சயதாம்பூல பத்திரிகை வாசிக்க பட்டது. மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டனர். கூடுதலாக வேதாவுக்கு வைர அட்டிகை ஒன்றை அணிவித்து விட்டான் விஷ்வா. இருவரையும் ஒன்றாக அமர வைத்து நலங்கு செய்தனர். நெருக்கமாக நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்தனர். 

விஷ்வாவுக்கு பெற்றோர் ஸ்தானத்தில் சண்முகநாதனின் தம்பியின் மகனும் மருமகளும்தான் நின்றனர். அகல்யா அவரது கணவரோடு தள்ளியேதான் நின்றார். அது குறித்து பேச்சுக்கள் நிலவாமல் இல்லை, எல்லாம் அவர்களுக்குள், யாரும் சண்முகநாதனின் கோவத்தை சம்பாதிக்க விரும்ப மாட்டார்களே. 

மணமக்கள் இருவரும் ஒன்றாகத்தான் இரவு உணவை சாப்பிட்டனர். அப்போதுதான் அவனிடம் சின்ன குரலில், வெட்கத் தடையை உடைத்து ‘உங்களை தனியாக சந்திக்க வேண்டும்’ என சொன்னாள் வேதா. 

அவளது ரகசியப் பேச்சை கவனிக்காமல் “என்ன?” எனக் கேட்டான் அவன். அருகில் ஆட்கள் இருந்ததில் ‘ஒன்றுமில்லையே’ என சொல்லி விட்டாள் அவள். 

பதினோரு மணி அளவில் அனைவரும் உறங்க சென்று விட்டனர். விஷ்வாவின் அறைக்கு வந்த வேதாவின் மாமன் மகள் அவனை கட்டாயப் படுத்தி மாடிக்கு போக செய்து விட்டாள். 

அங்கே நிலவொளியில் பருத்தி புடவை ஒன்றில் எழில் ததும்ப அவனுக்காக காத்திருந்தாள் வேதா. 

“என்ன பண்ற இங்க?” என அவன் கோவமாக கேட்டான். 

அவள் முறைக்க, “இந்த டைம் தனியா வந்து நிக்கலாமா?” என அக்கறையாக கேட்டான். 

“இன்னிக்கு உங்க பர்த்டே, எனக்கு உங்களுக்கு நேர்ல விஷ் பண்ணும்னு இருந்துச்சு” என அவள் சொல்ல, நெற்றியை நீவி விட்டுக் கொண்டான். 

அவள் கையை நீட்டினாள். முழங்கை வரை அவள் மெஹந்தி போட்டிருக்க, அதை ரசிக்கும் மன நிலையில்தான் அவன் இல்லை. 

“விஷ்வா என்ன யோசிக்கிறீங்க?” என அவள் குழப்பமாக கேட்கவும், “கைல மெஹந்தி… ரொம்ப நல்லாருக்கு” என சமாளித்தான். 

அவள் கண்களை சந்திக்க இயலாமல் தன் கையை கொடுத்தான். அவன் சங்கோஜ படுகிறான் என்றே அவள் நினைத்துக் கொண்டாள். 

அவன் கையை பற்றி அவள் வாழ்த்து சொல்ல, “ஹேய் தேங்க்ஸ்!” என்றான். 

அடுத்த நாள் கணவனாக போகிறவனை நெருக்கத்தில் பார்த்தவள் தடுமாறிக் கொண்டிருக்க, “நாளையிலேருந்து நம்மள யார் என்ன சொல்ல முடியும்? இப்ப இங்க இருக்க கூடாது, ரூம் போ” என்றான். 

“போறேன் ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்திட்டு” என வெட்கம் படர சொன்னாள். 

“என்ன, சீக்கிரம் கொடு” 

“என்னன்னு கண்டுபிடிங்க”

“என் பொறுமையை சோதிக்காத” 

“யாரும் வர மாட்டாங்க விஷ்வா, அப்படி வந்தாலும் தியா சமாளிப்பா” என தன் மாமன் மகள் காவலுக்கு நிற்பதை குறிப்பிட்டு சொன்னாள்.

என்ன சொல்ல என தெரியாமல் அவன் வாயை குவித்து மூச்சு விட, “இந்த கிஃப்ட் எல்லாம் நான் மட்டும்தான் உங்களுக்கு தர முடியும்” என குறிப்பு தந்து, “எனி கெஸ்?” எனக் கேட்டாள். 

“என்ன என்ன சொன்ன?” அவன் சுற்றம் பார்த்துக் கொண்டே ஒரு வித பதற்றத்தில் கேட்டான். 

சட்டென அவனது கன்னம் பற்றி முத்தமிட்டவள், “லவ் யூ விஷ்வா!” என சொல்லி ஓடியே சென்று விட்டாள். 

அவள் இதழ் பட்ட கன்னத்தை பற்றியிருந்தவன் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றான். எல்லாம் சில நொடிகள்தான், தன்னிலை அடைந்தவன் இறுகிய முகத்துடன் அறைக்கு சென்று விட்டான். 

பொழுது புலரும் முன்னரே விஷ்வசுகந்தன் மண்டபத்தில் இல்லை என தெரிய வந்தது. 

தாத்தாவுக்கு மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தான். தன் அம்மாவுக்கு ‘உங்களை எல்லாம் வேதனை படுத்தி மகிழ இதைவிட சிறந்த வழி எனக்கு தெரியவில்லை, மன நிறைவோடு இங்கிருந்து செல்கிறேன்’ என செய்தி அனுப்பி வைத்திருந்தான். 

மண்டபம் அல்லோல பட்டுக் கொண்டிருந்தது. விஷ்வாவின் காரோ கொடைக்கானலில் இருக்கும் அவனது விருந்தினர் பங்களாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் இல்லாமல் அவனே காரை செலுத்திக் கொண்டிருந்தான். 

அவனது முகத்தில் குரூர திருப்தி வழிந்தோட, சட்டென நினைவடுக்கில் அவள் தந்த முத்தம் வந்து இடறியது. உச்சு கொட்டி ஒதுக்கித் தள்ளியவன் காரின் வேகத்தை கூட்டினான். 

பிறந்தது முதல் வேதனை என்பதை கண்டிராத வேதநாயகி, நெஞ்சாங்கூடு முழுதும் பரவிக் கொண்டிருந்த வேதனை வலியை சமாளிக்க இயலாமல் கண்களில் கண்ணீரோடு உறைந்து போயிருந்தாள்.