பெற்றவர்களே புரிந்து கொள்ள வில்லை என்பது சந்தியாவை விரக்தியின் உச்சத்தில் நிறுத்தியிருந்தது . பேசி , போராடி என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் வலுத்தது . கண்ணீர் வழிய அப்படியே படுத்துக் கிடந்தாள் .
அறைக்குள் வந்த விஸ்வா அவளைப் பார்த்து அதிர்ந்தான் . அழுதழுது முகமெல்லாம் வீங்கியிருந்தது . ‘அவள் அப்பாவைக் கூப்பிட்டு இருக்கக் கூடாதோ….?’ என்று யோசித்தான் .
“ அவளிடம் பேசுவோமா?” என்று நினைத்தான் . பின் தயக்கம் மேலிட , அமைதியாகப் படுத்துக் கொண்டான் .
சந்தியா மிகவும் அமைதியாகிப் போனாள் . மூன்று நேரமும் கஷ்டப்பட்டு உண்டாள் . இதை வைத்து ஒரு பேச்சும் வேண்டாம் பஞ்சாயத்தும் வேண்டாம் என்று உண்டாள் .
என்ன தான் சாப்பிட்டாலும் ஒவ்வாமையுடன் உட்கொண்டதால் பாதி நேரம் அறைக்குள் போய் வாந்தி எடுத்தாள் . ஏற்கனவே உடல்நிலை பற்றிய பேச்சு வந்தால் விஸ்வாவிடமும் சொல்லாமல் மறைத்தாள் .
ஆகாஷை கவனிப்பதைக் கூட விட்டு விட்டாள் . குழந்தை ராஜியிடம் வர , “என் அதிரடி தான் சரி” என்று விஸ்வாவிடம் சொல்லி இறுமாந்தார் .
விஸ்வாவிற்கு ஆகாஷைக் கூட கவனிக்காத அமைதி உறுத்தியது . லேசாக பயம் வந்தது . சந்தியாவுடன் பேச முயன்றான் . ஆனால் அந்த முயற்சிளை சந்தியா உணரவே இல்லை .
வீட்டில் இருந்து அம்பிகா மற்றும் விந்தியா பேச முயன்றால் பல நேரம் எடுக்காமல் விடுத்தாள் . அப்படியே பேசினாலும் ஒன்றிரெண்டு வார்த்தைகளோடு நிறுத்திக் கொண்டாள் .
மகள் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று அம்பிகா நினைத்தாள் . தன் மீது கோபம் இருந்தாலும் புருஷனோடு சேர்ந்து வாழ்ந்தால் சரி என்று அம்பிகா மனதைத் தேற்றிக் கொண்டாள் . விந்தியா கவலையானாள் .
நாட்கள் அது பாட்டிற்கு ஓட , சாப்பாட்டின் மீது ஒவ்வாமை , மனச்சோர்வு எல்லாம் சேர்ந்து மெலியத் தொடங்கினாள் .
இதைக் கவனித்த ராஜி , “ஒரே ரோதனையாகப் போய்விட்டதே…” என்று பொறிய தொடங்கினார் .
விஸ்வாவும் கவலையடைந்து விசாரிக்க , “நான் நன்றாகத்தான் சாப்பிடுகிறேன் . ஏன் என்று தெரியவில்லை…?” என்று படபடத்தாள்.
விஸ்வாவிற்குப் பயம் வர , மருத்துவமனைக்கு அழைத்தான்.
“எனக்கு ஒன்றும் இல்லை” என்று வர மறுத்தாள் .
பின் ராஜி,உருட்டி மிரட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .
“அல்சராக ( வயிற்று புண்ணாக) இருக்கலாம் , ஒரு மாதத்திற்கு மருந்து கொடுக்கிறேன் . சாப்பிட்டு வாருங்கள் பார்க்கலாம்” என்றார் மருத்துவர் .
மாத்திரை சாப்பிட ஆரம்பித்தவுடன் வாந்தி குறைந்தது . ஆனாலும் உண்ணும் அளவு பெரிதாகக் கூடவில்லை .
விஸ்வா சில நேரம் அருகில் இருந்து உண்ண வைக்க முயன்றாலும் அவளால் சாப்பிட முடியாமல் திணறுவதைக் கண்டு , அவளை வற்புறுத்தாமல் விட்டான் .
திருமணத்திற்குப் பிறகு சற்று பேசத் தொடங்கியிருந்த சந்தியா , விஸ்வாவின் நடவடிக்கை மற்றும் பெற்றோரின் பேச்சால் மொத்தமாக தைரியத்தை இழந்தாள் .
ராஜி ஏதாவது பேசினால் பதைபதைத்தாள் , படபடப்பானாள் . ஸ்டரஸ் உடல்நிலையை மேலும் பாதிக்க , உண்டவுடன் வயிற்று போக்கு ஆரம்பித்தது .
ஒரு நாள் குளியலறையில் மயங்கி விழுந்தாள் . மீண்டும் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றான் . டிரிப்ஸ் ஏற்றபட்டு, , இரண்டு நாள் கண்காணிப்பில் இருந்தாள் . இம்முறை அனைத்து சோதனைகளும் செய்தனர் .
சந்தியாவின் பெற்றோருக்குத் தகவல் சொல்ல , சந்தியாவின் தந்தை வியாபார விசயமாக வெளிநாடு சென்றிருக்க ,
அம்பிகா விஸ்வாவை அழைத்து , “அவர் இல்லை மாப்பிள்ளை , இப்போது என்னால் தனியாக வரமுடியாது . சந்தியா சித்தப்பா , அத்தை என்று யாராவது கூட வருவார்கள் . தேவையில்லாத பிரச்சனை….” என்று இழுக்க ,
விஸ்வா சூழ்நிலை புரிந்து கொண்டான் . “சரி , அடுத்த வாரமே, வாருங்கள்” என்று போனை வைத்தான் .
மருந்து, மாத்திரை, மருத்துவமனை என்று மகன் தனியாக அலைவதைக் கண்டு ராஜி பொருமினார் . “எல்லாம் பெஸ்ட்டாக தேர்ந்தெடுத்தேனே , கல்யாண வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே…..” என்று கவலைப்பட ,
“கெட்ட நேரம், எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் ராஜி” என்று சங்கரன் சமாதானப்படுத்தினார் .
ஆனாலும் ராஜியின் மனதில் ஓரு ஓரத்தில் , “கால் ஊனம் என்று அந்த பெண்ணை வேண்டாம் என்று சொன்னேன் , ஆனால் அதை விடப் பெரிய பிரச்சனையில் என் மகன் மாட்டிக் கொண்டானே என்று நினைக்காமல் இருக்க முடிவில்லை .” ஆனால் வசதியாக, ‘சந்தியாவின் பிரச்சனைக்குத் தானும் சூழ்நிலையும் காரணம்’ என்று யோசிக்காமல் விட்டார் .
அத்தியாயம் -:69
சோதனையில் அனைத்தும் நார்மல் என்றே வர , அனைவரும் ஆசுவாசமானார்கள் . மருத்துவர்கள் மேலும் சில மருந்துகளை பரிந்துரைத்து அனுப்பினர் .
ஒரு வாரம் கழித்து வந்த பெற்றோர் சந்தியாவைக் கண்டு அதிர்ந்தனர் .அம்பிகா கண்ணீர் வழிய மகளை அணைத்துக் கொண்டார் .
அப்போது வந்த ராஜி , “உடம்புக்கு முடியாத மகளைச் சீக்கிரம் பார்க்க வந்து விட்டீர்கள்..” என்று இடிக்க ,
சந்தியாவின் அப்பா முகக் கன்றலோடு நிற்க , “அதான் மாப்பிள்ளையிடம் காரணம் சொன்னோமே…” என்று அம்பிகா விவரிக்க முயல ,
“ஆமாம் சொன்னான் . நீங்கள் மட்டும் சம்பாதிப்பீர்கள் , ஆனால் என் மகன் தொழிலை விட்டு , மருத்துவமனை , டாக்டர் என்று அலைய வேண்டும் , நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்” என்று தேளாய் கொட்ட ,
அம்பிகா பேச முயல , “சீக்காளியைக் கட்டிக் கொடுத்துவீட்டீர்கள் , இப்போது நாங்கள் கிடந்து அல்லாடுகிறோம்” என்று நொடித்தார் ராஜி .
இதைக் கேட்டவுடன் சந்தியாவின் அப்பா வெகுண்டெழுந்து , “நாங்கள் கட்டிக் கொடுக்கும் போது நன்றாகத் தான் இருந்தாள், உங்கள் வீட்டுக்கு வந்த புறம் தான் இப்படி… , என்ன கொடுமை படுத்தினீர்களோ?” என்று பொங்க ,
அதற்கு ராஜி பதில் கொடுக்க….என்று வாக்குவாதம் தொடங்கியது. விஸ்வாவும் , சங்கரனும் உள்ளே புகுந்து நிறுத்தினர் . ஆனால் இரு குடும்பங்களுக்கிடையே பெரிய விலகலும், கோபமும் உருவாகியிருந்தது.
சற்று நிதானித்த முத்துகுமரன் , “நீங்கள் வைத்தியம் பார்க்க வேண்டாம் , நாங்களே பார்த்து , நன்றான பின் அனுப்பி வைக்கிறோம்” என்று முடித்தார் . பின் சந்தியாவிடம் , “கிளம்பு…” என்றார் கோபமாக .
‘கணவன் தனக்கு ஆதரவாக ஏதாவது பேசுவானா…?’ என்று சந்தியா உறுத்துப் பார்க்க , அவள் பார்வை அவனை உலுக்கியது . தடுமாறி நின்றான் .
சந்தியாவும் கிளம்பிச் சென்றாள் .
அத்தியாயம் 70
ரஞ்சனி……
மார்கழி தொடங்கியிருக்க , ரஞ்சனியை காலையில் கோலம் போடும்படி ரகு பணிக்க , “ரகு விளையாடாதீர்கள்…” என்று ரஞ்சனி திரும்பிப் படுத்தாள் .
“ரஞ்சனி சீரியஸாகத் தான் சொல்கிறேன் , எழுந்திரு….”
“ரகு…..” என்று சிணுங்கியபடி எழுந்து கொள்ள ,
அவள் முன் வண்ணக் கோலப்பொடி , எளிதாகப் போடுவதற்கான அச்சுகள் , சல்லடைகள் , கம்பி கோலம் இடும் உருளைகள் என்று அனைத்தையும் கடை பரப்பியிருந்தான் .
ரஞ்சனி கண்ணில் ஒளி மின்ன அவனைப் பார்க்க , “என் பெண்ணிற்கு மார்கழி மாதம் கோலம் போட , ரொம்பப் பிடிக்கும் என்று மாமா சொல்லியிருக்கிறார் , அதான்….” என்று சிரிக்க ,
ரஞ்சனி வேகமாக அவன் கன்னத்தில் முத்தமிட ,
“ச்சீசீ…. , ஊத்தவாய்…” என்று அவன் வம்பு செய்ய ,
“ரகு……” என்று ரஞ்சனி அருகில் வர , வேகமாக நகர்ந்து, “ரெஃபிரஷாகி வா” என்றான் .
ஆனாலும் மீண்டும் ஒரு முத்தத்தை வைத்து விட்டே, அங்கிருந்து நகர்ந்தாள் .
“ரொம்ப நாளாக விட்டது ரகு , அதனால் இன்று ஒரு சின்ன கோலம் முயற்சி செய்வோம் .”
அவள் கோலம் போட ஆரம்பிக்க , அவன் கூடவே இருந்து உதவினான் . தன் உடல்நிலைகேற்ப அதிக நேரம் எடுக்காது , கருவிகளைக் கொண்டு நேர்த்தியாக அழகாக போட்டு முடித்தாள்.
இவர்கள் கதை பேசியபடி கோலம் போட , இதைச் சுந்தரி கிளிக் செய்து கோகிலாவிற்கு அனுப்ப , ரஞ்சனி வீட்டில் அனைவரும் நெகிழ்ந்தனர் . ரகு மீதான மரியாதை கூடிக் கொண்டே போனது .
அழகிய கோலத்துடன் அன்றைய நாள் விடிந்தது .. அறைக்குள் ரகு , “கோலம் சூப்பர்…” என்று முத்தமிட ,
ரஞ்சனி அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் . “இனி என்னால் சில விசயங்களை செய்யவே முடியாது என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது நீங்கள் கூட இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தோன்றுகிறது” என்று உணர்ச்சி வசப்பட்டாள் .
“இது சின்ன விசயம் ரஞ்சனிம்மா…” என்று புன்னகைக்க ,
“இருக்கட்டும் , ஆனால் எனக்கு இது பெரிய விசயம்…” என்று மாறி மாறி அவன் கன்னத்தில் முத்தமிட ,
அவன் முகத்தைத் திருப்ப , முத்தம் இடமாற , அவள் தொடங்கியதை அவன் முடித்தான் .
இவர்களின் திருமண வாழ்க்கை நல்ல புரிதலுடன் அழகாக சென்றது.
கிட்டத்தட்ட ரஞ்சனியின் திருமண வாழ்க்கை முதலாம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருந்தது . அவர்களது மகிழ்ச்சியான இல்வாழ்க்கையின் அடையாளமாக ரஞ்சனி கருவுற்றாள் .
இதை அறிவிக்க , ரஞ்சனியின் குடும்பத்தினர் அனைவரும் வந்து, மகளை பார்த்து விட்டுச் சென்றனர்.
சௌமியாவும், பிள்ளை பிறக்கும் நேரத்திற்கு வந்து விடுவேன் என்று கூற , அனைவரும் சந்தோஷமாகினர் .
அவளின் குறைபாட்டால் பிள்ளைபேற்றின் போது சில பிரச்சனைகளையும் அசௌகரியங்களையும் சந்திக்க நேரிடலாம் என்று உணர்ந்தேயிருந்தனர் .
மருத்துவரிடம் விளக்கமாகப் பேசி , தாங்கள் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைத் தெளிவுபடுத்திக் கொண்டனர் .
அதே வேளையில் தங்கள் மனதையும் அதற்காகத் தயார் படுத்த தொடங்கியிருந்தனர் . அதே நேரம் ரஞ்சனி நல்லபடியாக பிள்ளை பெற வேண்டும் என்ற கவலையும் , வேண்டுதலும் அனைவரின் மனதிற்குள்ளும் வந்தது .
மருத்துவர்கள் அறுவைசிகிச்சைக்கே அதிக வாய்ப்பு என்று கூறியிருக்க , ரஞ்சனி முடிந்தவரை சுகப்பிரசவமாக வேண்டும் என்று கவனமாகச் செயல்பட்டாள் .
அதிக உடல் எடை கால்களைப் பாதிக்கும் என்பதால் பெரிதாக எடை கூடாமல் , அதே வேளையில் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாள் ,
ரஞ்சனிக்கு மனதளவில் எந்த அழுத்தமும் வருத்தமும் வராமல் சுந்தரி பார்த்துக் கொண்டார் .
அத்தியாயம் 71
சந்தியா……
சந்தியா தூத்துக்குடி வந்தாள் . அலோபதி தவிர வேறு மருந்துகளையும் முயற்சி செய்தனர் . மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர் .
அவரும் மருந்துகள் கொடுக்க , அதை உட்கொள்ள ஆரம்பித்தாள் . அம்பிகாவும் கை வைத்தியங்கள் செய்தாள் . மேலும் சூப் , ஜூஸ் என்று பார்த்து பார்த்து கொடுத்தார்கள் .
“நன்றாக சாப்பிடு” என்று இரண்டு மூன்று முறை முத்துகுமரன் கூட சொன்னார் .
ராஜி இல்லாதது பெரிய நிம்மதியை கொடுக்க , அதுவே பதைபதைப்பபையும் , படபடப்பையும் குறைத்தது , ஆகாஷிற்கான உரிமைப் போராட்டமும் இல்லாது போக , உடல் தேறினாள் சந்தியா .
இதற்கிடையில் சொந்த பந்தங்களிடம் , சந்தியா வீட்டு விசயம் அக்குவேறாக ஆணிவேராக அலசப்பட்டிருந்தது . ஆளாளுக்கு தங்கள் அனுபவங்களையும் அறிவுரைகளையும் வழங்க , சந்தியா தடுமாறினாள் , திணறினாள் .
இங்கே இருந்து போனால் போதும் என்ற எண்ணமும் , மேலும் திரும்பி இங்கே வந்து விடக் கூடாது என்ற எண்ணமும் மேலோங்க ஆரம்பித்தது .
இதே சரியான நேரம் என்று உணர்ந்து விந்தியாவும் சந்தியாவுடன் பேச முயல , முதலில் இறுக்கமாகவே இருந்தாள் . பெரும் முயற்சிக்குப் பின் தன் மன வருத்தங்களைப் பகிர்ந்தாள்.
“நான் முன்னமே சொன்னது தான் , இங்கே உனக்கு ஆதரவும் அனுசரனையும் கிடைக்காது . இங்கே இருந்து இந்தப் பேச்சுகளைக் கேட்பதற்குப் பதில் பேசாமல் உன் வீட்டுக்கு போய், அங்கே உன்னை நிலை நிறுத்து என்று பலவாறாகப் பேசி அவளை தைரியப்படுத்தி , தயார்படுத்தினாள் .
சந்தியாவும் சென்னை செல்ல ஆயுத்தமானாள் .
இங்கு சென்னையில் சங்கரன் , ராஜியிடமும் , விஸ்வாவிடமும் கவனமாக நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார் .
“என்னை ஏன் சொல்கிறீர்கள்? நான் என்ன செய்தேன்?” என்று ராஜி பாய ,
“நீ தப்பு , சரி என்று பேச வரவில்லை . உன் பிள்ளை சந்தோஷத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து செய் என்று தான் சொல்கிறேன்..”
விஸ்வாவை நோக்கி , “நான் பலமுறை சொன்னது தான் . உன் வாழ்க்கை சிறக்க, நீ தான் முயற்சி செய்ய வேண்டும் . அம்மா செய்வாங்க , அப்பா செய்வாங்க என்று இருக்கக் கூடாது . இப்போது நீ ஒரு குடும்பத் தலைவன் , நாளை உன் குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் . பிரச்சனையில் இருந்து தள்ளி போகாமல் , ஒதுங்காமல் இறங்கி , சரி செய்யப் பார் .”
விஸ்வாவும் சமீபகாலமாக, தான் சரியாகக் கையாளவில்லை. அதனால் தான் தான் சந்தியா கஷ்டப்படுகிறாள் என்பதை உணரத் தொடங்கியிருந்தான். அதைத் தான் யோசித்தும் கொண்டிருந்தான் .
“அவள் அப்பா வந்த பொழுது அழுதது , ஊருக்குச் செல்லும் போது அவள் பார்த்த பார்வை , நீண்டு கொண்டிருக்கும் அவளின் மௌனம்… , அவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளி…” என்று எல்லாம் யோசிக்க வைத்திருந்தது . இந்த முறை தன் வாழ்க்கையை சரி செய்து கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தான் .
சந்தியா சென்னை வந்தாள் .
விஸ்வாவும் அவளை அக்கறையுடன் பார்த்துக் கொண்டான் . அவள் மீது தனிக் கவனம் செலுத்தினான் . அடிக்கடி வெளியே கூட்டிச் சென்றான் .
சலசலப்பு சண்டை வருவதை அவதானித்து , அம்மாவிடம் பேச தைரியம் இல்லாததால் , அந்த சூழ்நிலைகளைத் தவிர்த்தான்.
சந்தியாவும் தன்னை இங்கே நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்க , முழுமையாக மாற முடியவில்லையென்றாலும் இணக்கமாக முயன்றாள் . விஸ்வா மற்றும் சந்தியா உறவில் முன்னேற்றம் தொடங்கியது.
ராஜியும் அமைதியே கடைபிடிக்க , முதல் இரண்டு மூன்று மாதங்கள் பெரிய சண்டை சச்சரவு இல்லாமல் சென்றது . ஆனால் விஸ்வா சந்தியாவிற்குச் செய்வதை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் ராஜி குமைந்தார் . சங்கரன் ஏதாவது சொல்லிச் சமாதானப்படுத்தினார் .
அன்று ராஜியின் தோழி மாலா , தன் மகன் திருமணத்திற்கு அழைக்க வந்திருந்தார் . “என்ன ராஜி? இப்போதெல்லாம் அதிகமாக உன்னை லேடீஸ் கிளப் பக்கம் பார்க்க முடியவில்லை?”
“எங்கே? வீட்டிலே வேலை சரியாக இருக்கிறது…” என்று நொடித்தார் .
“அதான் .உன் மருமகள் இருக்கிறாளே? பொறுப்பைக் கொடுத்து விட்டு ஜாலியாக இருக்க வேண்டியது தானே” என்று சொல்லி முடிக்கும் முன் ,
இத்தனை நாளாக மனதிற்குள் புகைந்து கொண்டிருந்தது பொங்கிக் கொண்டு வெளியே வர ,
“எங்கே ? அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் , அவள் வேலையையும் நான் தான் சேர்த்துப் பார்க்கிறேன் . சாப்பாட்டைக் கூட என் மகன் ஊட்டி விடாத குறை தான் . எல்லாம் நான் வாங்கி வந்த வரம்…” என்று பெருமூச்சு விட்டார் .
“ம்ம்…. என் கதையை விடு , நீ நன்றாக விசாரித்துக் கொண்டாயா? அப்புறம் என்னை மாதிரி மாட்டிக் கொள்ள போகிறாய்…” என்று பேசிக்கொண்டிருக்க ,
‘அப்போது வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்கிறார்’ என்று சுதா மூலம் அறிந்த சந்தியா வரவேற்க வர ,
அத்தனை பேச்சையும் கேட்க , ஆடிப் போனாள். கண்கள் கலங்க சட்டென்று உள்ளே சென்றாள் .
தர்ம சங்கடத்தை உணர்ந்து , உடனே மாலா கிளம்பினார் .
முதலில் ராஜி சங்கடப்பட்டாலும் , “நாமென்ன இல்லாததையா? சொல்லி விட்டோம் . பார்த்துக் கொள்ளலாம்…” என்று தெனாவட்டாக இருந்தார் .