“என்னடி அப்படி பார்க்குற?” என்றாள் சிவா.

“என்ன சொல்றதுன்னு தெரியலை சிவா. அவ்ளோ அழகா இருக்க. உன்மேல இருந்து கண்ணை எடுக்கவே முடியலைடி” என்றாள் கவிதா.

“ஆரம்பிச்சுட்டியா?” என்றவள்,

“பாருங்கப்பா இவளை” என்றாள் கிருஷ்ணனிடம்.

“கவி புள்ள சொன்னது நிஜம் தான்மா. எங்க கண்ணே பட்டிடும் போல” என்றார் கிருஷ்ணன்.

“இவ்வளவு அழகா இருக்குறதால தான் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு” என்றபடி வந்தார் காவேரி. அவரின் கையில் மல்லிகைப் பூச்சரம்.

“இந்த பூவை வச்சுட்டு கிளம்பு” என்றவர், சிவாவின் கைகளில் பூவைத் திணித்திருந்தார். ஏனோ கைகளில் இருந்த பூவை வெறித்திருந்தாள் சிவ தீர்த்தா.

“சிவா என்னடி ஆச்சு?” என்ற கவிதாவின் உலுக்கலில் சுயத்திற்கு வந்தவள்,

“ஒண்ணுமில்லை கவி” என்றபடி பூவை தலையில் வைத்துக் கொண்டாள்.

“விக்னேஷ் எங்கம்மா?” என்றார் கிருஷ்ணன்.

“அவன் ஏற்கனவே கோவிலுக்கு போயிட்டான்ப்பா” என்றவள் கவியுடன் சேர்ந்து கிளம்ப, அதுவரை அமைதியாய் இருந்த காவேரி ஆரம்பித்துவிட்டார்.

“நீங்க அவளை காலேஜ்க்கு அனுப்பி விட்டது எனக்கு ஒன்னும் சரியா படலை. நாளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா, அதுக்கும் என் தலை தான் உருளும். சீக்கிரமா ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா நல்லது” என்றார் காவேரி.

கிருஷ்ணனுக்கும் அந்த கவலை இருக்கத்தான் செய்தது. அதற்கு சிவாவின் அழகும் ஒரு காரணம். ஸ்கூல் படிக்கும் போதே பலர் அவள் பின்னால் சுற்ற, அவளை அடைகாத்து வைப்பதற்குள் அவருக்கு போதும் போதுமென்றாகி விட்டது. என்னதான் வெளியே தைரியமாய் காட்டிக் கொண்டாலும் அவருக்கும் உள்ளுக்குள் பதைபதைக்கத்தான் செய்தது.

ஆனால் சிவ தீர்த்தாவோ உறுதியாக படிக்க வேண்டுமென்று நின்றாள். அவளின் பேச்சை எப்போதும் கிருஷ்ணனால் தட்ட முடிவதில்லை. தெளிவாகவும், தீர்க்கமாகவும் பேசும் பெண்ணிடம் எப்படி அவர் மறுப்பைக் கூறுவார்.

சிறுவயதில் இருந்தே அவளிடம் குழந்தைத் தனம் என்பது அறவே இல்லை. அவளிடம் அது இயல்பாகவே இல்லையா? இல்லை, அதை அவள் வெளிப்படுத்திக் கொள்ளவில்லையா என்பது அவளுக்குத் தான் வெளிச்சம். கிருஷ்ணனுக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. அவருடனே சுற்றிக் கொண்டிருந்ததில், அவளுக்கு தோட்டத்து வேலையில் இருந்து வீட்டு வேலை வரைக்கும் அனைத்தும் அத்துபடி. வீட்டு வேலை,தோட்ட வேலைகளுடன், படிப்பையும் பார்த்துக் கொண்ட அவளைக் கண்டால் ஊர்ப் பெண்களுக்கு அவ்வளவு பிடித்தம். அனைவருக்கும் செல்லப் பிள்ளை என்றே சொல்லலாம்.

அவ்வூரில் யாரும் அதிகம் படித்திராத போதே, டிகிரி வரை படித்தவர் கிருஷ்ணன். அதனால் மகளைப் படிக்கக் கூடாது என்று அவரால் சொல்ல முடியவில்லை. மதுரை விவசாயக் கல்லூரியில் பி.எஸ்.சி அக்ரி இரண்டாம் வருடம் படிக்கிறாள்.

“உனக்கு விஷயம் தெரியுமா சிவா?” என்றாள் கவி பீடிகையுடன்.

“என்ன விஷயம்?” என்றாள் சிவா புரியாமல்.

“பக்கத்து ஊர் பயலுக, நம்ம ஊர் பொண்ணுங்களை வம்பிளுத்தாங்கன்னு சொன்னேன்ல. ஆதி அண்ணன் அவனுங்களை எல்லாம் அடிவெளுத்து போலீஸ்ல சொல்லிட்டாங்களாம்” என்றாள் கவி.

“ஏன்? இதை உங்க ஆதி அண்ணா தான் செய்யனுமா? போலீஸ் கம்ப்ளைன்ட் யார் வேணும்னாலும் கொடுக்கலாம். உங்க ஆதி அண்ணா ஒரு விஷயம் செய்யராருன்னா அது அவங்க சுயநலத்துக்கா தான் இருக்கும்.இந்த பிரச்சனையில அவர் சம்பந்தப்பட்டவங்க யாராவது சம்பந்தப்பட்டிருக்கணும். அவங்களைக் காப்பாத்த அவர் இப்படி பண்ணியிருக்கணும் ” என்றாள் சிவா வெடுக்கென்று.

“உனக்கு எப்பவும் நல்லதே கண்ணுக்குத் தெரியாதா? இதுக்கும் நீ அவரை சரியா பார்த்தது கூட இல்லை. ஒரு ஊர்ல இருக்குறோம்னு தான் பேரு. அப்படி என்ன வெறுப்பு உனக்கு?” என்றாள் கவிதா.

“இதுல வெறுப்பு எங்க இருக்கு கவி? நான் நடைமுறையைத் தான் சொன்னேன். அந்த குடும்பத்து ஆளுங்களைப் பத்தி தான் தெரியுமே. அவங்க குணம் எப்படின்னு நான் சொல்லித் தெரியனுமா உனக்கு? பக்கத்துத் தோட்டத்துல இருந்துகிட்டு அவங்க பண்ற வம்பு கொஞ்சமா நஞ்சமா? அதுலயும் அந்த கிழவி இருக்கே? விஷம், உடம்பெல்லாம் விஷம் அதுக்கு” என்றாள் வார்த்தைக் கடித்து துப்பியபடி.

“அமைதியா இருக்குற உன்னை பேச வைக்கணும்னா அந்த குடும்பத்தை இழுத்தா போதும் போல?” என்று சிரித்த கவிதா,

“ஆனா ஊருக்குள்ள அவங்க தானடி பெரிய குடும்பம். ஊரைச்சுத்தி நூறு ஏக்கர் நிலம் இருக்கு. மில்லு, கம்பெனின்னு அவ்வளவு தொழில் இருக்கு. ஆனாலும் அவங்களை நீ பேருக்குக் கூட மதிக்கிறது இல்லை” என்றாள் கவி.

“என்ன இருந்து என்ன பிரயோஜனம்? அத்தனை ஏக்கர் இருந்தாலும், நாங்க வச்சிருக்கிற அந்த அஞ்சு ஏக்கர் மேல தான கண்ணு. அஞ்சு ஏக்கரை சுத்தி அம்பது ஏக்கர் வச்சிருக்கோம்ன்ற திமிரு” என்று பல்லைக் கடித்தாள் சிவா.

“ஹேய் சிவா உண்மையை சொல்லு. விசாலாட்சி பாட்டி வேணும்னா அப்படி இருக்கலாம். ஆதி கேசவன் அண்ணா அப்படி ஒன்னும் இல்லையே? அவர் உங்க தோட்டத்துக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்திருக்காரா?” என்றாள் கவி.

“இல்லை” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் சிவா.

“இருந்தாலும் பேரனோட கைக்கு பொறுப்பு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் அந்தம்மாவும், அவங்க மகன் அண்ணாமலையும் ஆடின ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா?.பேருக்குத்தான் ஊர் பெரிய தனக்காரர் குடும்பம். பண்றது எல்லாம் சில்லறைத்தனமான வேலை தான்” என்றவள்,

“இந்த நேரத்துல நமக்கெதுக்கு அவங்க பேச்சு? முளைப்பாரி தூக்கணும் சீக்கிரம் நடடி”என்று கவிதாவை நகர்த்திக் கொண்டு போனாள் சிவ தீர்த்தா.

அங்கே வான வேடிக்கைகளுடன் சாமிக்கரகம் தூக்கியவுடன் முளைப்பாரியும் தூக்க, ஊரே பக்தி பரவசத்தில் திளைத்திருந்தது. ஊர்வலம் முடித்து சாமிக்கரகம் பூஞ்சோலையை வந்தடைந்திருந்தது. முளைப்பாரியும் பூஞ்சோலையில் இறக்கி வைக்கப்பட, பெண்களின் சிரிப்பொலியும் வளையொலியும் அவ்விடத்தை நிரப்பியிருந்தது.

இளைஞர்கள் பட்டாளம் முழுவதும் வயதுப் பெண்கள் இருக்கும் இடத்தையே சுற்றி வர, மூன்று வருடங்கள் கழித்து நடந்த அந்த திருவிழா அனைவருக்கும் ஒரு ஆத்ம திருப்தியைக் கொடுத்திருந்தது.

முளைப்பாரியை சுற்றி நின்று பெண்கள் கும்மியடிக்க தயாராக, அப்போது சிவ தீர்த்தாவின் அருகில் வந்த அமிர்தா,

“அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்றாள். ஆனால் தாரணி எதுவும் பேசவில்லை.

“தேங்க்ஸ்” என்றதோடு முடித்துக் கொண்டாள் சிவா.

“அவளுக்கு திமிர் அதிகம். அழகா இருக்கான்ற ஆணவம். அவகிட்ட உனக்கு என்ன பேச்சு அமிர்தா?” என்றாள் தாரணி.

“இல்ல தரணிக்கா, நிஜமாவே அவங்க அழகா இருக்காங்க. அவங்க கட்டியிருக்கிற ஆப் சேரி கலர் சூப்பரா இருக்கு. அதான் சொன்னேன்” என்றாள் அமிர்தா.

“பாட்டி மட்டும் இதைப் பார்த்தாங்க, தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்ருவாங்க” என்று தாரணி அதட்டவும், சிவாவிடம் இருந்து சற்று விலகி நின்று கொண்டாள் அமிர்தா.

ரேணுகா ஆசையுடன் சிவ தீர்த்தாவைப் பார்த்து வைக்க, விசாலாட்சி அவரை முறைத்த முறைப்பில் அப்படியே அடங்கிப் போனார் ரேணுகா.

இவர்களை எல்லாம் சட்டை செய்யாமல் கூட்டத்தில் இருந்த விசாகன் இவளைத்தான் இமைக்காமல் பார்த்திருந்தான். அது சிவாவிற்கு தெரிந்திருந்தாலும், தெரியாததைப் போலவே காட்டிக் கொண்டாள்.

பெண்கள் கும்மியடிக்கத் துவங்க, அப்போது தான் அவ்விடம் வந்து சேர்ந்தான் ஆதி கேசவன். ஊர் முக்கியஸ்தர்களிடம் பேசிக் கொண்டிருந்தவனை, கோவில் பூசாரி அழைக்க, அவ்விடம் சென்றிருந்தான்.

“அம்மாடி சிவா, எப்பவும் நீதான கும்மி பாட்டு படிப்ப. இன்னைக்கு என்ன அமைதியா இருக்க? படிமா” என்று ஒரு பெண்மணி கூற,

“அப்ப நான் சின்னப் பிள்ளை. இப்ப எப்படி படிக்கிறது?” என்று முனுமுனுத்தாள் கவிதாவிடம்.

“சாமி பாட்டு படிக்கிறதுக்கு எந்த வயசா இருந்தா என்னடி?” என்றாள் கவிதா.

“கூச்சமா இருக்கு கவி.  சுத்தி பசங்களா இருக்காங்க. இவனுக எல்லாம் வீட்டுப் பக்கம் போகாம எதுக்கு கோவிலையே சுத்திட்டு இருக்கானுக” என்றாள் கடுப்புடன்.

“நல்லா பாரு. அவனுகளைப் பார்த்தா கோவிலை சுத்துற மாதிரியா இருக்கு. வருஷத்துல ஒரு நாள் என்ஜாய் பண்ணிட்டு போகட்டும் விடுடி. அவனுக பார்க்குறது நமக்கும் ஒரு மாதிரி நல்லா இருக்குல்ல” என்றாள் கவி.

“சரித்தான்டி” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க,

“சிவா படிமா” என்றனர் மீண்டும்.