காலையில் எழுந்தது முதலே சிறு பதட்டத்துடன் தான் நடமாடிக் கொண்டிருந்தார் வள்ளியம்மை. நேற்றிரவு தந்தையும், அண்ணனும் பேசிச் சென்றது மனதில் ஒரு ஓரம் ஓடிக் கொண்டே இருக்க, மகளிடம் என்ன பேசுவது, எப்படி கேட்பது என்று ஆயிரம் யோசனைகள். சமையல் அறையில் கைகள் அதன் போக்கிற்கு காலை வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, மனம் முழுவதும் மீனாட்சியிடம் தான்.
முத்தையா காலை உணவுக்கு வந்து அமர்ந்து விட்டதைக் கூட கவனிக்காமல், இவர் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருக்க, கடைசியில் அவரே சமையல் அறைக்கு வந்து நின்றுவிட்டார்.
“என்ன வள்ளி” என்று அவர் மனைவியை நிறுத்த,
“மீனுக்குட்டி எழுந்து வந்துட்டாளா?” என்றார் வள்ளி.
“அட ஏண்டி நீ வேற?” என்று சலித்துக் கொண்ட முத்தையா, “நான் பேசிக்கறேன் என் பொண்ணுகிட்ட. நீ இப்படி பதறாத” என்று மனைவியை நிதானிக்கச் செய்து உணவு மேசையில் அழைத்து வந்து அமர்த்தினார்.
சில நிமிட காத்திருப்புக்குப் பின், மகள் இறங்கி வர, “என்னம்மா… அப்பாக்கு டிஃபன் வைக்கல.” என்று கேட்டுக்கொண்டே அமர, வல்லியம்மிங் நிதானமாக தந்தைக்கும், மகளுக்கும் பரிமாறினார்.
பரிமாறியபடியே அவர் கணவருக்கு கண் காட்ட, முத்தையா, “மீனு” என்று பேச்சைத் தொடங்கினார்.
“சொல்லுங்கப்பா”
“பரீட்சை எல்லாம் நல்ல எழுதி இருக்கியாடா?”
“சூப்பரா பண்ணி இருக்கேன்ப்பா. நல்ல ரிஸல்ட்ஸ் வரும்.”
“இன்னும் ஆறு மாசத்துல படிப்பு முடியுது. அடுத்து என்ன பண்ணப் போறம்மா. ஏதாவது யோசிச்சு வச்சு இருக்கியா?”
“உங்ககிட்ட நானே பேசணும்னு இருந்தேன்ப்பா. மேல படிக்க போறேன். சென்னையா இல்ல பெங்களூர், டெல்லி அப்படி எங்கயாச்சுமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்று மீனு தெளிவாக கூற,
“அம்மாடி உன் கல்யாண விஷயம்டா” என்று தந்தை நினைவுபடுத்த,
“இப்போ என்ன அவசரம். அதுதான் சக்தி மாமா கல்யாணம் நின்னுப் போச்சே. முதல்ல அவருக்கு பொண்ணை பார்த்து கல்யாணம் முடிங்க. அதுக்கு பிறகு நீங்க எனக்கு மாப்பிள்ளை எல்லாம் தேடி முடிக்கிறதுக்குள்ள, நான் படிச்சு முடிச்சுடுவேன்ப்பா. ரெண்டு வருஷம்தான” என்று வெகு சுலபமாக தீர்வு கண்டாள் மகள்.
முத்தையன் என்ன பேசுவது என்று விழிக்க, வள்ளியம்மை, “வெற்றி விஷயம் உனக்கு வருத்தமா இல்லையா மீனு” என்று கேட்டேவிட்டார்.
மீனு “எனக்கு என்ன வருத்தம்?” என்றதில், வள்ளி மூச்சு வாங்க,
“இல்லம்மா, அவனுக்கு உன்னை பேசி”
“அப்பா” என்று முகத்தை சுளித்தாள் மகள்.
முத்தையன் பார்க்க, “அதெல்லாம் ஒண்ணுமே இல்லப்பா. நீங்க சொன்னிங்க. நான் மண்டையாட்டி வச்சேன். மத்தபடி வேற ஒன்னும் இல்ல. சும்மா கண்டதை யோசிச்சு பிரஷர் ஏத்திக்காதீங்க. இப்பவும் நீங்க மாப்பிள்ளை பார்க்கிறதுக்குள்ள ன்னு தானே சொன்னேன்…” என்று மகள் தன் வார்த்தையை நினைவூட்ட, முத்தையன் நிம்மதியாக மூச்சு விட்டார்.
மகள் வாய் திறக்காமல் அமைதியாகிவிட, “என்னடி” என்றார் வள்ளியம்மை.
“ம்மா” என்று மகள் நிகழ்வுக்கு திரும்ப,
“என்னடா” என்றார் மீண்டும்.
“என்னை ஏன்ம்மா இப்படி மாட்டிவிட பார்க்கிற?” என்று மகள் பதற,
“என்ன மீனு” என்றார் அன்னை.
“ம்மா. எனக்கு பயமா இருக்கும்மா” என்றாள் மீனு.
“என்ன பயம்”
“எனக்கு அவரைப் பார்த்தாலே கொஞ்சம் பயம் தான். ரெண்டு வார்த்தை சேர்த்து பேசவே காசு கேட்பார். சும்மா எல்லாத்துக்கும் மு றைச்சுட்டு. வெற்றியாவது எனக்காக எல்லாம் பண்ணுவான். இவர் வாய்ப்பே இல்ல. எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம்”
“ம்ச் மீனு. இதெல்லாம் ஒரு காரணமா. சக்தி கொஞ்சம் பொறுப்பு. உன்னை, வெற்றியைப் போல அடாவடி இல்ல. உனக்கு சக்தியை பிடிக்க்குமா இல்லையா? அதை யோசிச்சு சொல்லு” என்று வள்ளியம்மை மிரட்ட,
“எனக்கு பிடிக்காது தான். அவர் சிரிக்க கூட மாட்டாரு. கொஞ்சம் சத்தமா பேசிச் சிரிச்சாலும் முறைக்க ஆரம்பிச்சுடுவாரு. நான் எல்லாத்துக்கும் சிரிச்சு, அவர் எல்லாத்துக்கும் முறைச்சு இதெல்லாம் சரியாவே வராதும்மா.”
“சின்னப்பிள்ளை மாதிரி பேசாத மீனு. பொறுப்பா யோசி. சக்தி உன்னை நல்லா பார்த்துப்பான்.”
“என்னை நானே பார்த்துப்பேன்” என்ற மகளை வள்ளி கொலைவெறியோடு முறைக்க, முத்தையன் தான் துணைக்கு வந்தார்.
“மீனு அப்பா சொல்றதை கேளு” என்று அவர் தொடங்க,
“அப்பா எனக்கும் அவருக்கும் சரியா வராதுப்பா” என்றுவிட்டாள் ஒரே வார்த்தையில்.
வள்ளி, “அவனைவிட நல்ல பையன் எங்கடி கிடைப்பான் உனக்கு. சும்மா உப்பு பெறாத காரணமெல்லாம் சொல்லிட்டு இருக்க” என்று மகளை கடிந்து கொள்ள, மீனாட்சி பாவமாக தந்தையைப் பார்த்தாள்.
“மீனு அப்பா சொல்றதை ஒரு பத்து நிமிஷம் பொறுமையா கேளு. பிறகு நீ யோசிச்சு உன் பதிலை சொல்லு” என, மீனுவின் முகம் தெளியவே இல்லை.
“சக்தி கல்யாணம் நின்னுப் போனது உனக்கு தெரியும்ல.”
“ம்ம்ம்”
” உன் பாட்டி அவனுக்கு வேற பொண்ணு தேடிட்டு இருக்காங்க. வெற்றி பண்ண வேலையால சக்திக்கு பொண்ணு கிடைக்கிறது கொஞ்சம் சிக்கலா இருக்குடா. அவனோட படிப்புக்கும், அவன் தகுதிக்கும் அவனை பேசக் கூட தகுதி இல்லாத பசங்க எல்லாம் பேசிட்டு இருக்காங்க மீனு. இதெல்லாம் தேவையா அவனுக்கு.”
“நீ உன்னைப் பத்தி மட்டும் யோசிக்க கூடாதுடா. உன் அம்மா, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி எல்லாரையும் மனசுல வச்சுக்கோ. சக்தி அப்படியெல்லாம் நீ நினைக்கிற மாதிரி கிடையாது. ரொம்ப நல்லவிதமானவன் தான். உன் பயமெல்லாம் தேவை இல்லாததுடா.”
“அப்படியே அவன் உன்கிட்ட கோபப்பட்டா அப்பா, உன் மாமா எல்லாம் இருக்கோமே. விட்டுடுவோமா?” என்று மகளுக்கு சூழலை விளக்கினார் முத்தையன்.
மீனுவின் முகம் மறுப்பிலிருந்து குழப்பத்திற்கு தாவ, “நீ உடனே சொல்லணும்னு இல்ல. பொறுமையா யோசி. அப்பா சொன்னது எல்லாம் யோசி. அப்பவும் வேண்டாம்ன்னு சொன்னா, அப்பா எல்லார்கிட்டயும் பேசுறேன். உன் தாத்தா கிட்ட நானே முடியாதுன்னு சொல்லிடறேன். எனக்கு எல்லாரையும் விட என் மக முக்கியம். நானே பேசறேன்” என்றுவிட்டார்.
மீனு குழப்பத்துடன் அங்கிருந்து நகர, வள்ளியிடமும் மகளை தொந்தரவு செய்ய வேண்டாமென கூறிவிட்டார் முத்தையன்.
அன்று முழு நாளும் சிந்தனையுடன் சுற்றி வந்த மீனாட்சி, அடுத்த நாள் காலையில் வெற்றியின் நண்பனுக்கு அழைத்து வெற்றியை கோவிலுக்கு அழைத்து வரும்படி கூறிவிட்டாள்.
அவனும் மீனாட்சி சொன்னதுபோலவே வெற்றியை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்துவிட, அங்கு ஏற்கனவே காத்திருந்தாள் மீனாட்சி.
வெற்றி தேனருவியையும் உடன் அழைத்து வந்திருக்க, மீனாட்சிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.
“வெற்றி” என்று அழைத்தவள் தந்தை தன்னிடம் பேசியது மொத்தத்தையும் அவனிடம் கூறி வைக்க,
“ஹேய் லூசு. அவனை கட்டிக்க என்ன உனக்கு. அதெல்லாம் ஜாலியா சம்மதம் சொல்லு” என்றான் வெற்றி.
“போடா எரும… நீ மட்டும் இப்படி பாவமா ஒரு பொண்ணை பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப்ப. நான் மட்டும் அந்த முறைப்பு முனுசாமிகிட்ட மாட்டிக்கணுமா? என்னால முடியாது” என்று மீனாட்சி மறுக்க,
“ம்ச் மீனு. கொஞ்சமாவது புரிஞ்சிக்க. சக்தி இயல்பாவே கொஞ்சம் அமைதி தான். அதுக்காக முசுடு எல்லாம் கிடையாது. அதே போல சும்மாவும் முறைக்க மாட்டான். உனக்கு அவனைவிட ஒரு பெட்டர் சாய்ஸ் இருக்கவே முடியாது. நீ பண்ற சேட்டைக்கு உனக்கு அவன்தான் சரி” என,
“போடா” என்றாள் மீனாட்சி.
“உனக்கு அவனை பிடிக்கலையா?” என்று வெற்றி தெளிவாக கேட்க,
“நான் அதெல்லாம் யோசிக்கவே இல்ல வெற்றி. எனக்கு உன் அண்ணனை நினைச்சா பயமா இருக்கு. அவரைப் பத்தி நினைச்சாலே, அவரோட முறைப்பு தான் நியாபகம் வருது” என்றாள் பாவமாக.
“மீனு அண்ணனுக்கு பேசறதா கூட நினைச்சுக்கோ. ஆனா, அவன் நல்லவன். நிச்சயமா உன்னையும் நல்லா பார்த்துக்குவான். நீ சும்மா பயந்துக்காத. தெரியாத ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டா, என்ன செய்வ. எப்படியும் அவனோட பேசிப் பழகி புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவ தானே. அப்படி நினை.”
“சக்தி மாமாவ எனக்கு தெரியாதா”
“தெரியாதுன்னு நினைச்சுக்கோ. இனி நீ அவன் பொண்டாட்டிடா. சும்மா உன்னை முறைச்சுட்டே எல்லாம் இருக்கமாட்டான். அவன் எந்தளவுக்கு முரடனோ அந்தளவுக்கு பாசக்காரன். இன்னைக்கு வேண்டாம்ன்னு சொல்லிட்டு பின்னாடி வருத்தப்படாத.” என்று வெற்றி பொறுமையாக எடுத்துக் கூற,
“நான் மேலே படிக்கனும்டா மாமா” என்றாள் மீனு.
“ஹேய் லூசு. நீ அவனை என்ன நினைச்ச? அதெல்லாம் அவனே உனக்கு சொல்லிக் கொடுப்பான். நீ வேணா அவன்கிட்ட கேட்டுப் பாரு. நிச்சயமா அவனே படிக்க வைப்பான். உன்னை வேலைக்கு கூட அனுப்புவான்” என்று தம்பி அண்ணனுக்கு பெரிதாக வக்காலத்து வாங்க,
“உன்னை அன்னைக்கு சரியா அடிக்கலையோ” என்றாள் மீனு.
“அதெல்லாம் நல்லாவே கொடுத்தான். அதுக்காக எல்லாம் அவனை கெட்டவன்னு சொல்லாத. நிச்சயமா என்னைவிட நல்லவன்” என,
“கட்டிக்க சொல்றியா?” என்று அப்போதும் சந்தேகமாக அவள் இழுக்க,
“நிச்சயமா. உடனே ஓகே சொல்லு” என்றான் வெற்றி.
“இருந்தாலும்… நான் இன்னும் கொஞ்சம் யோசிக்கவா?” என்று மீனு இழுக்க,
“யோசிச்சா நிச்சயமா தப்பா தான் முடிவெடுப்ப. யோசிக்காம கட்டிக்கோ” என்று வெற்றி உறுதி கொடுக்க, மௌனமாய் தலையசைத்துக் கொண்டாள் மீனாட்சி. ஆனாலும், அந்த முறைப்பையனை நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் தான்.
வெற்றியிடம் பேசிவிட்டு வந்தபின்னும் கூட வீட்டில் முடிவென்று எதையும் கூறவில்லை அவள். முத்தையனும் மகள் விருப்பத்திற்கே விட, ஒன்று, இரண்டு என்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள் மகள்.
சொக்கநாதர் இரு தினங்கள் பொறுத்தவர் மகளுக்கு அழைத்துவிட, வள்ளியம்மை நடந்த அனைத்தையும் தந்தையிடம் கூறிவிட்டார்.
அடுத்தநாள் காலையில் சொக்கநாதர் மீண்டும் வீட்டிற்கு வந்துவிட, சரியாக அவரிடம் மாட்டிக் கொண்டாள் மீனாட்சி.
“என்ன மீனுக்குட்டி. என்ன நினைக்கிற நீ? சட்டுன்னு சொல்லு” என்று அவர் நிற்க, அப்போதும் திருதிரு வென விழித்துக் கொண்டு தான் நின்றாள் பேத்தி.
சொக்கநாதர், “என்னடா” என,
“எனக்கு மேலே படிக்கணும் தாத்தா. ரெண்டு வருஷம் கழிச்சு கட்டிக்கவா” என்றாள் சட்டென.
தாத்தா பேத்தியின் பேச்சில் சிரித்துவிட்டு, “நீ என்ன படிக்கணுமோ, அவனே படிக்க வைப்பான் மீனும்மா. இங்கே இருக்க சிக்கல் எல்லாம் உனக்கு தெரியும்ல. இந்த நேரத்துல அவன் கல்யாணத்தை ரெண்டு வருஷம் எப்படிடா தள்ளி போட முடியும்?” என்று பேத்தியிடமே கேட்க,
“அப்போ இன்னும் காலேஜ் இருக்கே”
“அதுதான் ஆறு மாசத்துல முடியுதே குட்டி. இப்போ நிச்சயம் பண்ணிட்டு, உன் படிப்பு முடிஞ்சதும் கூட கல்யாணம் பண்ணிக்கலாம்.” என, மீனாட்சி அன்னையைப் பார்த்தாள்.
இதற்குள் முத்தையனும் வந்துவிட, இருவரையும் பார்த்தவள், பெரியவரிடம் தலையை மட்டும் அசைத்தாள்.
மூவரின் முகமும் ஒருங்கே ஒளிர்ந்துவிட, வள்ளி மகளை கட்டியணைத்து மகிழ்ந்து போனார். முத்தையன் சொக்கநாதரை அணைத்துக் கொண்டு தன் மகிழ்வை வெளிப்படுத்த, “வேலை நிறைய இருக்கு மருமகனே. சீக்கிரமே நிச்சயத்துக்கு நாள் பார்க்கணும்” என்று அப்போதே பட்டியலிட தொடங்கிவிட்டார் சொக்கநாதர்.
சொன்னது போலவே, மாமனும், மருமகனும் வெகு தீவிரமாக வேலைகளை பார்க்க தொடங்கிவிட, வடிவு அடுத்தநாளே தன் மாமியாரை அழைத்துக் கொண்டு மருமகளைப் பார்க்க வந்துவிட்டார்.
வள்ளியம்மைக்கு இவர்கள் இருவரின் பேரில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், அதையெல்லாம் வெளியே காட்டாமல் இருவரையும் வரவேற்க, மீனாட்சியை கொஞ்சி தீர்த்துவிட்டு கிளம்பினார் இருவரும்.
தங்கப்பாண்டியனும், முத்தையனும் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டதில், அடுத்த பத்து நாட்களில் நிச்சயத்திற்கு ஏற்பாடாகிவிட, சக்தியை மீறி வெற்றியை அழைக்கும் துணிவு யாருக்கும் வரவில்லை.
அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் என்று அத்தனைப் பேரும் வாயை மூடிக் கொண்டிருக்க, சரியாக நிச்சயத்திற்கு மூன்று நாட்கள் முன்பு சக்தியின் ஷோரூமுக்கு வந்து நின்றாள் மீனாட்சி.
சக்தி ஏதோ வேலையாக இருந்தவன் இவளைக் கண்டதும் எழுது வந்து தன் அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கிருந்த அத்தனைக் கண்களும் இவர்கள் மீது தான்.
“என்ன மீனு” என்று அவன் அத்தை மகளை கேட்க,
“நிச்சயத்துக்கு வெற்றி மாமாவை கூப்பிட மாட்டிங்களா” என்றாள் அவள்.
சக்தி அதற்கே முறைக்க, “எனக்கு வெற்றியை கூப்பிடனும். வீட்டுக்கு தானே வரக்கூடாது. மண்டபத்துக்கு வந்துட்டு போகட்டும்.” என்று படபடவென அவள் கூறிவிட,
“அவனை மொத்தமா தீர்த்து விட்டாச்ச்சு. தெரியும் இல்ல உனக்கு.” என்று சக்தி கேட்க,
“அது உங்க வரைக்கும் தான். எனக்கு வெற்றி எப்பவும் பிரெண்ட். இப்பவும் அப்படியே வரட்டுமே” என்றாள் மீனு.
சக்தி முறைக்க, “சும்மா முறைக்காதீங்க மாமா. எனக்கு பயமா இருக்கு” என்றாள் மீண்டும்.
“உனக்கு பயமா?” என்று கிண்டலாக கேட்டான் சக்தி.
மீனாட்சி அவனைப் புரியாமல் பார்க்க, “வந்துட்டு போகட்டும். ஆனா, இந்த ஒருமுறை தான். அதுவும் நீ அவனை பார்க்க வெல்லாம் போகக்கூடாது. இப்போ மட்டும் இல்ல. எப்பவும் போகக்கூடாது. எனக்கு பிடிக்காது” என்று விரல் நீட்டி சக்தி மிரட்ட, மீனாட்சி தலையசைக்க வெல்லாம் இல்லை.
“போகாம எப்படி கூப்பிட?” என்றாள்.
“அது உன் பிரச்சனை. ஆனா, எனக்கு என் பொண்டாட்டி அவனைப் பார்க்க போகக்கூடாது” என்றான் முடிவாக.
“நம்ம தோட்டத்துல தானே இருக்காங்க”
“அவனோட தோட்டத்துல இருக்கான். அவன் மனைவியோட. நீ போகக்கூடாது.” என்றான் அழுத்தி அவளுக்கு புரியும்படியாக.
“வேற என்ன? ஒன்னும் இல்லையே” என்றவள் எழுந்து கொள்ள, சிரிப்புடன் தலையசைத்தான் சக்தி.
அவன் சிரிப்பில், “என்ன” வென்று மீனு தலையாட்டிக் கேட்க,
“உட்கார். ஜூஸ் வரும் குடிச்சுட்டு கிளம்பலாம்” என்றான் சக்தி.
“கிளம்பலாமா” என்று யோசித்தபடியே மீனாட்சி அமர, அடுத்த பத்து நிமிடங்களில் ஜூஸ் முடித்து வீட்டிற்கு கிளம்பினர் இருவரும்.
சக்தி அவளை அழைத்து வந்து வீட்டில் விட, வள்ளியம்மை மருமகனை வீட்டிற்குள் அழைத்தார். அவரின் உபசரிப்புகளை ஏற்றுக்கொண்டு அவன் காருக்கு வர, வீடு வரும்வரை புன்னகை தான் சக்தியின் முகத்தில்.
மீனாட்சியின் மீது காதலா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், மனது நிறைவாக இருந்தது.
அதே நிறைவுடன் அவன் நிச்சயத்திற்கு தயாராக, மாலையில் நிச்சயம் என்ற நிலையில் காலையில் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.