புதுப்புது அர்த்தங்கள்….. நாள். – 23

அத்தியாயம் 65

மறுநாள் தகவல் சந்தியாவின் பெற்றோருக்குச் சொல்லப்பட , அவர்கள் புறப்பட்டனர் . விந்தியாவிற்குப் தேர்வு என்பதால் இவர்களுடன் சந்தியாவின் அத்தை இணைந்து கொண்டார் .  

அத்தை துருவித் துருவிக் கேட்க ,  “எல்லாம் மாமியார் மருமகள் பிரச்சனைதான்…” என்று  முடித்துக் கொண்டார் அம்பிகா .

“இதை ஏன் நீ போன  தடவை சந்தியா வந்த போதே சொல்லவில்லை , நன்றாக கேட்டிருப்பேனே , அவர்களுக்கும் ஒரு பயம் வந்திருக்கும்  , எதையும் உருப்படியாக செய்யாதே” என்று அம்பிகாவை திட்ட , 

“இல்லை , இதெல்லாம்  எல்லா வீட்டிலும் நடப்பது தானே…” என நினைத்தேன் என்று இழுக்க , 

“நீங்கள் ஏன் சொல்லவில்லை அண்ணா…” என்று அண்ணனிடம் சண்டைக்குப் போக , 

“நானும் இதைப் பெரிதாக நினைக்கவில்லை .”

“நீ சொல்வதெல்லாம் சரி தான் , உன் பெண் வாயில்லா பூச்சியாச்சே , ஒன்னுகெடக்க ஒன்றானால் , நமக்குத் தானே நஷ்டம் . இதெல்லாம் முதலிலே தட்டிக் கேட்டுவிடவேண்டும்” என்றார் ஆவேசமாக.

 இந்த முறை சந்தியாவின் பெற்றோர் மனதிலும் ஒரு கோபமும்  , ஏமாற்றமும் சூழ்ந்து இருந்தது . அவர்கள் வீட்டுக்குள் நுழைய , அப்போது தான் சந்தியா மருத்துவமனையில் இருந்து வந்து படுத்திருந்தாள் . 

அவளைப் பார்த்த அத்தை , “தங்கமே இப்படி அடிபட்டு விட்டதே , எத்தனை அருமையாக வளர்த்தோம்…”என்று புலம்பத் துவங்கினார்.

விஸ்வாவின் குடும்பத்தினர் சங்கடத்துடன் அமர்ந்திருந்தனர்.

“ என்ன நடந்தது?” என்று சங்கரனிடம் கேட்க ,

சங்கரன் தயங்கியபடி , “வீட்டில் கொஞ்சம் காரசாரமான பேச்சு  வார்த்தை , அதில்  டென்ஷனாகி விட்டாள் . கொஞ்சம் பி.பி கூடி விட்டது , அதனால் மயங்க , விழும் போது டீப்பா முனையில் இடித்துவிட்டாள் .”

உடனே சந்தியாவின் அத்தை , “எங்கள் பெண் சண்டை போட்டாளா…? நம்ப முடியவில்லையே…? , அவளாக இடித்து கொண்டாளா….? இல்லை….?” என்று ராஜியைப் பார்க்க ,

ராஜி வேகமாக , “உங்கள் பெண்ணிடமே கேளுங்கள் , எல்லாம் எங்கள் நேரம் , இப்படியெல்லாம் பேச்சு வாங்க வேண்டியதிருக்கிறது…” என்று நொடித்தபடி உள்ளே சென்றார் .

சங்கரன் , சுதாவைப் பார்த்து கண் அசைக்க , அவள் காபி கலந்து எடுத்து வந்தாள் . அனைவரும் சங்கடத்துடன் , ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர் .

சற்று நேரத்தில் சந்தியா கண் முழிக்க , விவரம் அறிந்து கொண்டார்கள் . 

அப்போதும் அத்தை , “அமைதியின் உருவான உன்னையே  பேச வைத்து விட்டார்கள் என்றால் எத்தனை கொடுமை அனுபவித்தாயோ …”என்று குத்தலாகப் பேச ,

சந்தியாவின் தந்தையும் அதைத் தடுக்காமல் அமைதியாக இருக்க , விஸ்வாவும் சங்கரனும் சங்கடத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள் .  

“எதிர்பாராமல் நடந்து விட்டது , இதை விட்டு விடலாமே…” என்று சங்கரன் சொல்ல , 

பின்னர் சந்தியாவின்அப்பா  தங்கையைப் பார்க்க ,  அவர் அமைதியானார் . 

“பின் சந்தியாவைப் பத்து நாளைக்கு எங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிறோம் . உடம்பைத் தேற்றி அனுப்புகிறோம்” 

சந்தியாவின் அப்பா போனமுறை அழைத்துப் போக, அனுமதி கேட்டது அவர்கள் நினைவடுக்களில் வந்த போதும், வேறு வழியின்றி  தலையசைத்தனர் .

சந்தியாவின் அம்மா மட்டும் தங்க , மற்ற இருவரும் காலை வருவதாகச் சொல்லிக் கிளம்பினர் . வீடே தர்ம சங்கடமான சூழ்நிலையில் சிக்கித் தவித்தது .

காலை அவர்கள் வந்து அழைத்துச் செல்ல , சந்தியா சின்ன தலையசைப்புடன் கிளம்பினாள் .

அவர்கள் கிளம்பியதும் , ராஜி ஆரம்பித்தார்…. , “அவள் அத்தைகாரி ஓவராக பேசுகிறாள்…” என்று பொறிய ,

“இதற்கு காரணம் யார்?  உங்கள் இரண்டு பேரிடமும் பல முறை சொன்னேன். உடம்பு முடியாதவள் பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்றேன் . கேட்டீர்களா? இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறோம் .”

“தப்பெல்லாம் அவள் மீது தான்…” என்று பொங்க ,

“இந்தப் பேச்சே வேண்டாம் , இந்தச் சூழ்நிலையே வராமல் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் .”

“ பிரச்சனையை சரியாகக் கையாள் என்று பலமுறை சொன்னேன் . ஒன்றும் பிரயோஜனமில்லை . இனியும் நீ சுதாரிக்கவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாகும் விஸ்வா…”என்று  ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றார் .

விஸ்வாவும்  தலையை பிடித்துக் கொண்டு உட்கார  , ராஜி கவலையானாள் .

சந்தியா தூத்துக்குடியில் ஒரு மாதம் இருந்தாள் , அங்கேயும் அமைதியாகவே இருந்தாள் . ஆனால் சுற்றி சொந்தங்கள் பேசத் தொடங்கின . ஆளாளுக்குக் கருத்துக்கள் சொல்ல , குழம்பிப் போனாள் .

 இந்த முறை விஸ்வாவை வந்து அழைத்துப் போகும்படி சொல்ல ,

“நாம் ஏன் போக வேண்டும் ? அவர்களைக் கொண்டு வந்து விடச் சொல்லுங்கள்” என்று ராஜி கோபப்பட ,

“அவர்கள் சொல்வது சரி தான் , இங்கே பிரச்சனை என்று தூத்துக்குடியில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் , இவன் போய் கூப்பிட்டால் தான்  அவர்களுக்கும் சந்தியாவிற்கும் மரியாதையாக இருக்கும் என்று யோசிக்கிறார்கள் . அது சரி தான் . இத்தோடு இப்பிரச்சினையை விடு” என்று சங்கரன் முடித்தார் .

விஸ்வா தயக்கத்துடன்  தூத்துக்குடிக்குச்  செல்ல , 

சித்தப்பா , அத்தை என்று எல்லோரும் வரிசை கட்டி வந்து , தங்கள் பிள்ளையை நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படிப் பேச 

விஸ்வா குன்றிப் போனான் . 

 இவை அனைத்திலும் சந்தியா ஒரு பார்வையாளாராக மட்டுமே இருந்தாள் . கணவன் மீது கோபம் குறையாமல் தான் இருந்தாள் . 

அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினர் .

அத்தியாயம் 66 

இம்முறை பிரச்சனைக்குப் பின் , விஸ்வாவிடம் ஒரு விலகல் தன்மை வந்தது . அவர்கள் வீட்டில் சந்தியா தனக்காகப் பேசவில்லை என்பதில் வருத்தம் இருந்தது . தான் இதுமாதிரி எத்தனை முறை தன் மனைவிக்காகப் பேசினோம் என்பதை வசதியாக மறந்தான் 

 பெற்றோரிடமும்  இதைப் பகிரவில்லை . பெருத்த அவமானமாகக் கருதினான். 

இதுவரை எந்தத் தாக்குதலுக்கும் ஆளாகாமல் , பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டவன் , ஆடிப் போனான் . இன்னொரு முறை இப்படியொரு அவமானம் நேரக் கூடாது என்பதில் கவனமானான் . 

அது சந்தியாவிடமிருந்து தள்ளி நிற்க வைத்தது . அதிக நேரம் கடையில் இருக்க ஆரம்பித்தான் . ஆகாஷை வைத்து மட்டுமே இருவருக்குள்ளும் பேச்சுக்கள் இருந்தன.

சந்தியா இதைக் கவனிக்கவுமில்லை , இதைக் குறித்து யோசிக்கவுமில்லை . சந்தியா   தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் , குழந்தையை விட்டு விடக்கூடாது என்ற  எண்ண போக்குடன்  , அவள் உலகில்  இருந்தாள் .

போன முறை நடந்த பிரச்சனையின் போது , விஸ்வா விரிசலை சரி செய்ய பெரிதும் முயன்றான் . ஆனால் இம்முறை விஸ்வாவும் விலக , சந்தியா விஸ்வாவிடையே  ஏற்பட்ட விரிசல் ஆழமானது .

சங்கரன் ராஜியை எச்சரித்திருக்க , ராஜியும்  விலகியே இருந்தார்.

 மகனின் முக வாட்டத்தையும் , அவன் சிரிப்புக் காணாமல் போனதை நினைத்துப் புலம்பியபடியே ராஜி வளைய வந்தார் . 

மகனை கவனித்த சங்கரன் , “இரண்டு மூன்று முறை பேச முயல , விஸ்வா பிடி கொடுக்கவில்லை . பின் அவனே சரி செய்து கொள்ளட்டும்” என்று அமைதி காத்தார் .

ஒரு மாதம் போக ,  சந்தியா வீட்டில் உள்ள சூழ்நிலை அவதானிக்க ஆரம்பித்தாள் . தான் ஒதுக்கப்படுவதாக உணர்ந்தாள் . தன்னைத் தள்ளி வைக்கிறார்கள் என்று நினைத்தாள் . 

ஆனால் தான் தள்ளி நிற்பதை அவள் உணரவில்லை . தப்பும்தவறுமாக யோசிக்க , பிள்ளையை மேலும் இறுகப் பற்றி கொண்டாள் . யாரிடமும் கொடுக்க மறுத்தாள் . 

“முப்பது வருடம் கழித்து , நம் வீட்டுக்கு குழந்தை வந்திருக்கிறது , அதைக் கொஞ்ச வழியில்லையே….”  என்று சங்கரனிடம்  ராஜி புலம்பினார் . 

“சங்கரனும் கொஞ்சம் பொறுமையாக இரு , எல்லாம் சரியாகிவிடும்” என்று சமாதனப்படுத்தினார் .

 அவ்வப்போது இவ்வுரையாடல்கள் விஸ்வா காதில் விழ , அவனும் வருந்தினான் . ஆனால் அதற்கான முயற்சிகள் எடுக்க தயங்கினான் , பயந்தான் .

நாட்கள் ஓட , சந்தியா தான் இந்த வீட்டில் அன்னியபட்டுப் போனதாக உணர்ந்தாள் .  இந்த வீடு தனக்கு உரிமைப்பட்டது இல்லை  என்ற எண்ணம் தோன்ற ,   இந்த வீட்டில் சாப்பிடுவதை  அசிங்கமாக , அவமானமாகக்  கருதினாள் .

“இங்கே இருக்கவே பிடிக்கவில்லை அம்மா , தூத்துக்குடி வருகிறேன்…” என்று அம்மாவிடம் பேச , 

“என்னடா, இப்போது நீ வந்தால், ஊரில் தேவையில்லாத பேச்சுக்கள் வரும் சந்தியா . அங்கே ஏதும் பிரச்சனையா? ஏதாவது சொன்னார்களா? அப்பாவை வந்து பேச வரச் சொல்லட்டுமா ?”

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை . எல்லோரும் அமைதியாகத் தான் இருக்கிறார்கள்…”

“அப்புறம் என்ன சந்தியா ? பேசாமல் அங்கேயே இரு , ஒரு மாதம் போகட்டும் , நம் கோவில் திருவிழா வருகிறது . அதற்கு அழைக்கிறேன் , அப்போது இங்கே வந்து விடு” என்று முடித்தார்.

பிறந்த வீட்டிலும் தனக்குப் பிடிப்பு இல்லாததை போல் உணர ,தனக்காக யாருமில்லை என்று நினைத்தாள். மிகவும் மனவேதனையுற்றாள் . மன சோர்வுற்றாள் . விரக்தி  ஆட்கொண்டது . 

மன விரக்தி….. , அவளின் எல்லா  செயல்களிலும் பிரதிபலிக்க , செய்யும் செயலில் ஆர்வம் குறைந்தது , உணவு உட்கொள்வதிலும் ஆர்வம் குறைய சாப்பாட்டைத் தள்ளினாள்.

பத்து நாட்கள் செல்ல , இதைக் கவனித்து சுதா சொல்ல ,

 இந்த முறை ராஜி பஞ்சாயத்தைக் கூட்டினார் . சந்தியா அம்மாவிற்குப் போன் செய்து உடனே  வரும்படி பணித்தார் .

இரவு வீடு  திரும்பிய இருவருக்கும் விவரம் தெரிய ,  “ஏன் ராஜி?” என்று சங்கரன் ஆதங்கப்பட ,

“இல்லைங்க , இதைப் பேசியாக வேண்டும் . நாளைக்கு அவளுக்கு உடம்பு முடியாமல் போனால்…., அது நம் மீது தான் விடியும் . அப்புறம் என் பிள்ளை தான் தேவையில்லாத பேச்செல்லாம் கேட்க வேண்டும் .”

சங்கரனும் அதில் இருந்த நியாயம் புரிபட , அமைதியானார் . விஸ்வா ஏற்கனவே பட்ட அவமானத்தால் , ‘அவனும் சரிதான்’ என்று யோசித்தான் . 

அம்பிகா மகளுக்குப் போன் செய்து விவரம் கேட்க , 

“இங்கே எதுவும் பிரச்சனையில்லை அம்மா….” என்றாள். ஆனால் 

 சந்தியா குழம்பிப் போனாள் . 

ஆனால் அவளின் விரக்தி மனப்பான்மை , இதைப்பற்றி விஸ்வாவிடம் கேட்கவும் , பேசவும் தூண்டவில்லை . நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டேறியாக நினைத்தாள் .

அறைக்கு வந்த  விஸ்வாவும் அமைதியாகப் படுத்துவிட்டான் 

அத்தியாயம் 67

காலை சந்தியாவின் அப்பா, விவரம் கேட்டு போன் செய்ய , “நீங்கள் நேரில் வாங்க , பேசலாம்” என்று முடித்துக் கொண்டார் சங்கரன் .

மறுநாள் மாலை அவர்கள் வர , வீட்டில் அனைவரும் காத்திருந்தனர் . ராஜி விசயத்தைத் தொடங்கினார் .

“உங்கள் பெண் , இங்கே வந்ததிலிருந்து சரியாகவே சாப்பிடவில்லை . நாங்களும் எத்தனையோ முறை சொல்லி விட்டோம் . அவள் கேட்பதாக இல்லை . நாளைக்கு ஏதேனும்  பிரச்சனையென்றால்  நாங்கள் பொறுப்பு கிடையாது” என்றார் வேகமாக .

“என்னங்க சம்பந்தி , இப்படிப் பேசுகிறீர்கள்?  இந்த சின்ன விசயத்திற்குப்  போய்  வரச் சொல்லியிருக்கிறீர்கள்…” என்றார் முத்துக்குமரன்  கோபமாக .

“என்னது ? விசயமில்லையா? போன முறை இப்படித் தான் சாப்பிடாமல் ரத்தசோகையை இழுத்துக் கொண்டாள் . ஒருவேளை மருத்துவமனைக்குப் போக வேண்டியது வந்தால் , யாராவது ஊரில் இருந்து வந்து சாப்பாடே போடவில்லையா? என்பார்கள் . எங்களுக்கு எதற்கு வம்பு”  என்றார் ராஜி ஆவேசமாக.

சந்தியாவின் அப்பா முகக்கன்றலுடன் அமர்ந்திருக்க ,

“ஊருக்கு வேண்டுமானாலும் கூட்டிக் கொண்டு போய் நன்றாக சாப்பிட வைத்து அனுப்புங்கள் இல்லை நன்றாக எடுத்துச் சொல்லி விட்டுப் போங்கள் . இனிமே எந்தப் பழி பாவத்திற்கும் நாங்கள் ஆளாக தயாராக இல்லை” என்று ராஜி கடுமையாகப் பேச ,

சந்தியாவின் அப்பா கோபமாக அம்பிகாவை முறைக்க , உடனே அம்பிகா , “நான் சந்தியாவிடம் பேசுகிறேன்” என்று முடித்தார் . 

இந்த பேச்சு வார்த்தை நடக்கும் பொழுது , சந்தியா விஸ்வாவையே பார்க்க , அவன் அமைதியே கடைப்பிடித்தான்.

 சந்தியா நிராசையோடு திரும்பிக் கொண்டாள் .

“என்னமோ , உங்க பெண்ணுக்கு நல்ல புத்தி சொல்லுங்கள்” என்று ராஜி உள்ளே செல்ல ,

சங்கரன் மெதுவாக , “சந்தியாவின் உடல்நிலையை யோசித்து தான்…” என்று இழுக்க ,

சந்தியாவின் அப்பா  இறுக்கமாக அமர்ந்திருந்தார் . 

உடனே விஸ்வா , “நீங்கள் பேசுங்கள் , கொஞ்சம் வேலை இருக்கிறது , வெளியே போய் வருகிறோம்…” என்று அப்பாவையும் கூட்டிக் கொண்டு நகர்ந்தான் .

மூவரும் அறைக்குள் செல்ல , முத்துக்குமரன் கோபமாக முறைக்க , உள்ளுக்குள் நடுங்க தொடங்கினாள் சந்தியா . 

“உன்னால் எனக்கு  அசிங்கம் , அவமானம் . அந்த அம்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசுது , இதெல்லாம் கேட்க வேண்டும் என்று தலையெழுத்தா?  என்ன பிரச்சனை சந்தியா ?  நல்லா சாப்பிடுவதற்கென்ன?  நீ என்ன சின்ன குழந்தையா?” என்று அப்பா கண்டிக்க ,

சந்தியா தயங்கி , “அப்பா… ,எனக்கு இங்கு கஷ்டமாக இருக்கு  , ஒட்டவே முடியவில்லை , ஊருக்கு வரட்டுமா?” என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்க , 

முத்துகுமரனுக்கு கோபம் தலைக்கேற , “ஏன் ஊரிலும் நான் அசிங்கப்பட வேண்டுமா?” என்று பாய ,

“அப்பா….” என்று அழுகையோடு நிற்க , 

“உன்னை அடிக்கிறார்களா? துன்புறுத்துகிறார்களா? மாப்பிள்ளைக்கு ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா?”

“இல்லைப்பா ….. “

“அப்புறம் என்ன தான் உன் பிரச்சனை?”

“எனக்கான மரியாதை இல்லை அப்பா “

“புரியவில்லை சந்தியா” 

சந்தியாவுக்கும் இதை எப்படி அப்பாவிடம் சொல்வது என்று புரியவில்லை . உதவிக்கு அம்மாவைப் பார்க்க , அவரோ பதட்டத்துடன் சேலை முந்தானை திருகிக் கொண்டிருந்தார் .

 அம்மா துணைக்கு வர மாட்டார் என்பது புரிய , “என் மாமியார் பேச்சை மட்டும் தான் அவர் கேட்கிறார் அப்பா.”

“பெரியவர்கள் இருக்கும் இடத்தில் இது சகஜம் தானே  சந்தியா”என்று முத்துகுமரன்  கூர்ந்து பார்க்க , 

“என் பிள்ளையின் விசயத்தைக் கூட என்னால் முடிவு செய்ய முடியவில்லை அப்பா” என்று சொல்வதற்குள்  அவளுக்கு வேர்த்து இருந்தது .

சந்தியா அப்பாவிற்கு விசயம் புரிந்து விட , “ஒன்று புருஷனை உன் பக்கத்தில் இழுக்கிற திறமை இருக்க வேண்டும் இல்லை உன் அம்மா மாதிரி அடங்கி போக வேண்டும் . இது இரண்டும் இல்லாமல்  நீ என்ன திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறாய் . மேலும் நீ ஊருக்கு வருவதால் என்ன சாதித்து விட முடியும்? என்று நினைக்கிறாய்…” என்று படக்கென்று கேட்க , 

சந்தியா அதிர்ந்து போய் பார்த்தாள் .

“வாழாவெட்டியாக இருக்க நினைக்கிறாயா? உனக்கு அப்புறம் ஒருத்தி இருக்கிறாள் . அவள் வாழ்க்கையை நான் பார்க்க வேண்டாமா?” என்றார் ஆத்திரமாக .

சந்தியாவிற்கு இங்கே இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க ,  இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தாளே தவிர வாழாவெட்டி போன்ற பெரிய வார்த்தைகளை அவள் யோசித்திருக்கவில்லை….

இதைக் கேட்டவுடன் , சந்தியா நடுங்கத் தொடங்கினாள் ,

“புருஷனோடு சேர்ந்து பொழைக்கிற வழியைப் பார்….” என்றவர் , “நான் கொஞ்ச நேரம் வெளியே போய் வருகிறேன் . அவளுக்குப் புத்திமதி சொல்” என்று அம்பிகாவிடம் சொல்லி விட்டு , நகர்ந்தார் .

அம்பிகாவிற்கும் பிரச்சனையின் வீரியம் புரிய வில்லை . இவளை அழைத்துச் சென்றால் புருஷன் மற்றும் சொந்த பந்தங்களிடமிருந்து வரும் பேச்சைச் சமாளிக்க முடியாது என்பது உறுதியாக தெரிய , 

எதாவது பேசி சந்தியாவை இங்கே இருக்கச் செய்து விட வேண்டுமென்று மட்டும் யோசித்தார் .

  பின் அவர் அறிவுரைகளை ஆரம்பிக்க , சந்தியா கண்ணீருடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் .

சிறிது நேரத்தில் அப்பா வர , “பார்த்து நடந்து கொள் “ என்று எச்சரித்தார் .

மூவரும் வெளியே வர , அனைவரும் அமர்ந்திருக்க ,  அம்பிகா ராஜியை பார்த்து , “என் பெண் நல்லபடியாக நடந்து கொள்வாள்” என்று தணிந்து பேச ,

 “நடந்தால் சரி…..” என்று ராஜி அதிகாரமாகப் பார்த்தார் .

சந்தியா தன் பெற்றோரும் தன்னை விட்டுக் கொடுத்ததை நினைத்து நொந்து போனாள் .

“சரி,  நாங்கள் கிளம்புகிறோம்” என்று கிளம்ப,

“சாப்பிட்டுப் போகலாம்”  என்று சங்கரன் சொல்ல ,

“இருக்கட்டும் , பசிக்கவில்லை…” என்று கிளம்பினர் .

சந்தியா அறைக்குள் போக முனைய , “சாப்பிட்டுப் போம்மா” என்றார் சங்கரன் .

சந்தியா கஷ்டப்பட்டு உண்டு விட்டு , உள்ளே சென்றாள்.

தொடரும்

…..