மோகங்கள் தீர்ந்த பின்னும் அவள் பேசிக் கொண்டே இருக்க, அவன் உறங்கியே விட்டான். அவனருகில் அவளின் மனம் நிர்மலமாகியிருக்க அவனது கை வளைவில் இருந்த படியே கண் அயர்ந்தாள் அவள்.
நிவாஸ், யாமினி இருவரின் திருமணத்துக்கு தாத்தாதான் நாள் பார்த்து குறித்தார். யாமினியின் பெற்றோரோடு திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் அவர்தான். அடுத்த மாதம் பெங்களூருவில் எளிமையாக திருமணம் செய்வது என முடிவானது.
தொழில் பொறுப்புகளை மகனிடம் விட்டு விட்ட ஆஷுதோஷ் மனைவியுடன் நேரம் செலவு செய்தார். அவர்களின் மன வருத்தங்கள் இனி கொஞ்சம் கொஞ்சமாக மறையக் கூடும்.
பணம் வசதி இதெல்லாம் அவசியம் என்ற போதும் அவை மட்டுமே மகிழ்ச்சி தராது என்ற புரிதல் இப்போதுதான் ஆஷுதோஷுக்கு வர ஆரம்பித்திருக்கிறது. இன்னும் மகளின் திருமண வாழ்க்கையில் அவள் மகிழ்ச்சியாக இருப்பாள் என்ற நம்பிக்கை அவருக்கு வரவில்லை, ஆனால் பார்த்தியிடம் அவர் நடந்து கொண்ட முறைக்காக வருத்தப் படுகிறார்.
சட்டென இறங்கி வந்து அவனிடம் மன்னிப்பு கேட்க முடியவில்லை, ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் அவனிடம் மனமாற மன்னிப்பு கேட்பார்.
திருமணத்துக்கு பின் யாமினி தன் வேலையை விட்டு விட்டு நிவாஸுடன் இணைந்து குடும்ப நிறுவனத்தை பார்த்துக் கொள்வது என அவர்கள் இருவரும் பேசி முடிவு செய்து கொண்டனர். அதில் ஆஷுதோஷ், காயத்ரி இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
பார்த்தியும் சுஹானாவும் கோயில் திருவிழாவுக்காக கிராமத்துக்கு சென்றனர்.
அஸ்வினியின் குடும்பமும் வந்திருக்க சனிக்கிழமை முழுதும் வீட்டில்தான். அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு அஸ்வினியின் மகளுடன் விளையாடி என இனிமையாக சென்றது. துரைக்கண்ணு தன் மகள், மருமகள், பேத்தி மூவருக்கும் திருவிழாவுக்கென பணம் கொடுத்தார்.
மாலையில் மருது வந்தான், அவனோடு வெளியில் சென்ற பார்த்தி அவனது மற்ற பால்ய கால நண்பர்களுடன் நேரம் செலவிட்டு வந்தான்.
இரவு சாப்பாடு வீட்டுக்கு வெளியில் நிலாவை பார்த்துக் கொண்டும் தென்றலை அனுபவித்துக் கொண்டும் நடந்தது. இந்த முறை துரைக்கண்ணுவும் அவர்களுடன் இருந்தார்.
குட்டிப் பெண் அனைவருக்கும் நான்தான் பரிமாறுவேன் என ஒரே அடம், அம்மாச்சி செய்து தரும் உரைப்பு அடையை தத்தி தத்தி நடந்து வந்து மற்றவர்களின் தட்டுக்களில் வைத்து சென்றாள். அத்தை ஊட்டும் போது வெட்கப்பட்டுக் கொண்டே வாங்கிக் கொண்டாள்.
பார்த்தி விளையாட்டாக சுஹானாவின் கை பிடிக்க, வேகமாக ஓடி வந்து இருவரின் கைகளை பிரித்து விட்டு, அத்தையின் மடியில் ஜம் என அமர்ந்து கொண்டாள்.
“பாப்பா… சுஹா என் பொண்டாட்டி, எழுந்து வா” என பார்த்தி அதட்ட, “ஏன்த்த…” மழலையில் சொல்லி அத்தையை கட்டியணைத்துக் கொண்டாள்.
“எனக்கு இப்படி ஒரு போட்டியா?” என பார்த்தி பாவமாக விழிக்க, எல்லோருக்கும் ஒரே சிரிப்பு.
அடுத்த நாள் காலையிலேயே கோயிலுக்கு செல்ல கிளம்பினார்கள். எழுந்ததிலிருந்து கண்களில் தென்படாத மனைவியைத்தான் தேடிக் கொண்டிருந்தான் பார்த்தி. நாத்தனாரோடு குளத்திற்கு குளிக்க சென்றிருந்த சுஹானா அப்போதுதான் வந்தாள்.
“என்னை கூப்பிட்டிருக்கலாமே ஆச்சி” என ஆசையாக கேட்டான்.
“அது லேடிஸ் குளிக்கிற இடம் பார்த்தி!” என்றாள். முகத்திற்கு மஞ்சள் போட்டிருப்பாள் போலும். என்ன இதெல்லாம் என அவன் கேட்க, “அண்ணி போட்டாங்க, அப்படியே நானும் போட்டுக்கிட்டேன்” என்றாள்.
திருவிழாவுக்கு என அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்து வைத்திருந்தார் சரஸ்வதி. மாந்தளிர் நிறத்திலிருந்த காட்டன் புடவையை கட்டிக் கொண்டவள், “நல்லா கட்டியிருக்கேனா?” என கணவனிடம் கேட்டாள்.
புடவை மொட மொடவென இருக்க, நீவி விட்டு சரி செய்தவன், “கலக்குற ஆச்சி! வர வர என்ன இப்படி அழகாயிட்டு வர்ற?” என்றான்.
“ஹையோ வாத்தி பார்வைய பாரு!” என்றவள் தலையை துவட்டிக் கொண்டே வெளியேறி விட்டாள்.
பார்த்தியும் வேஷ்டி சட்டை அணிந்து தயாராக, சாப்பிட அழைக்க வந்தாள் சுஹானா.
மஞ்சள் பூசிய முகம், மை தீட்டிய விழிகள், நெற்றி வகிட்டில் குங்குமம், கைகளில் சிகப்பும் பச்சையுமாக கண்ணாடி வளையல்கள், தோள் தொட்ட கூந்தலை முடிந்து அதில் மஞ்சள் நிற கனகாம்பரம் பூச்சூடி என வித்தியாசமாக இருந்தாள்.
“என்ன ஆச்சி இது இப்படி நிக்கிற?” என சின்ன சிரிப்புடன் கேட்டான்.
“வளையல் குங்குமம் எல்லாம் அத்தையோட ஆசைக்காக, மருமகளை இப்படி பார்க்கவும் அத்தைக்கு ரொம்ப சந்தோஷம். அவங்க பையன்தான் எதையும் ரசிக்காம கேள்வி கேட்டுட்டு நிக்கிறார்” என்றாள்.
“எல்லாம் ஓகே, இந்த மஞ்சள் பூதான்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, “ஏன் இதுக்கென்ன? நம்ம வீட்டு கார்டன்ல பூத்தது பார்த்தி, இது தலைல வச்சுக்கலாமான்னு அத்தைகிட்ட டவுட் கேட்டேன், நான் ஆசை படுறேன் போலன்னு நினைச்சு நான் ரெடியாகுறதுக்குள்ள பறிச்சு கட்டி வச்சும் விட்டுட்டாங்க” என்றாள்.
“உனக்கு வேணாம்னா சொல்ல வேண்டியதுதானே?”
“சொல்ல தோணல” என தோள்களை குலுக்கி சொன்னாள்.
தலையாட்டிக் கொண்டவன், “இந்த கிராமத்தான் பொண்டாட்டியா பக்காவா இருக்க சுஹா” என பாராட்டினான்.
“ஹப்பா! நான் கேட்டதுக்கப்புறம் ஒன்னும் யாரும் ஏதும் சொல்ல வேணாம்” என நொடித்தாள்.
“இப்ப இவ்ளோதான் ஆச்சி, நாளைக்கு சென்னை வீட்டுக்கு போனதும் எந்த குறையும் இல்லாம வேற வகைல சிறப்பா சொல்றேன்”
“ஏதும் சொல்ல வேணாம் போங்க” என சொல்லிக் கொண்டே அவனது தோளில் முகம் புதைந்தாள்.
அவளை நேராக நிற்க வைத்து திருஷ்டி எடுத்தவன், “நிஜமா சொல்றேன், அவ்ளோ அழகு நீ?” என்றான்.
அஸ்வினியின் மகள் வந்து சாப்பிட கூப்பிடுவதாக சொல்லவும் வெளியே சென்றார்கள்.
சாப்பிட்டு முடித்து குடும்பமாக கோயிலுக்கு சென்று வந்தனர். காவடியாட்டம் எல்லாம் இருந்தது. நன்றாக வேடிக்கை பார்த்தாள் சுஹா.
மாலையில் ஆற்றை பார்க்க அழைத்து சென்றான். தண்ணீர் இல்லாமல் மணல் வெளியாக காட்சி தந்தது ஆறு.
இரு பக்கமும் நாணல் புற்கள் உயரமாக வளர்ந்து நிற்க, ஆசையாக பார்த்தாள்.
சட்டென அவன் பக்கமாக திரும்பியவள், “பார்த்திக்கு ஒரு நெஞ்செலும்பு கூட இருக்கு, சரியான ராட்சஷன்!” என்றாள்.
“என்ன விளையாட்டு ஆச்சி இது?” என சிரிப்புடன் கேட்டான்.
“கோவம் வரலையா உங்களுக்கு? என்னை ஏதும் செய்யணும்னு தோணல?” எனக் கேட்டாள்.
“ஆள் இல்லாத இடம், கைல சிக்கினன்னு வை கண்ட படி ஏதாவது பண்ணுவேன்” என்றாலும் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த மனைவியை ஏதும் செய்யாமல்தான் நின்றிருந்தான்.
“கண்ட படி நீங்க என்ன செய்தாலும் எனக்கு ஓகேதான், நான் ரெடி” என்றவள் மின்னல் வேகத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடினாள்.
ஆற்று மணலில் கால்கள் புதைய புதைய சிரித்துக் கொண்டே ஓடிச் சென்றாள் சுஹானா. வேஷ்டியை மடித்து கட்டி அவளை துரத்திக் கொண்டு சென்றான் பார்த்தி.
அவளை பிடித்து விட்டவன் தன்னிடம் இழுக்க, நிலை தடுமாறி இருவரும் மணலில் விழுந்தார்கள். அவளின் கன்னத்தில் ஒட்டிக் கொண்ட மணல் அந்தி வெயில் பட்டு மினு மினுத்தது. அவன் அவளின் கன்னத்தை துடைத்து விட, அவளோ அவனது கன்னங்களில் மணலை அள்ளி பூசி விட்டு சிரித்தாள்.
அப்படியே அமர்ந்து விட்டனர். மணலை கிளறி சங்குகள் சேகரித்தவன் மனைவியிடம் நீட்டினான். ஆசையாக வாங்கிக் கொண்டவள், ஏதோ கதை சொன்னாள்.
பல வருடங்களுக்கு முன் இந்த ஆற்றில் வியர்வை வடிய ஓடியாடி விளையாடும் போது பார்த்திக்கு தெரியாது, இப்படியொரு தேவ மங்கை அவனது வாழ்வில் வருவாள் என. மும்பை மாநகரத்தில் நவ நாகரீகமாக வளர்ந்த சுஹானாவுக்கும் தெரியாது, அப்பழுக்கில்லாத கிராமத்து மனிதன் ஒருவன் தன் எளிமையால் அவளை பிரம்மிக்க வைத்து, தனக்குள் அவளை இழுத்து சுருட்டிக் செல்வான் என.
இந்த பேரண்டம் விசித்திரமானதுதான், இவர்கள் இருவரையும் இணைத்து வைத்து அழகாக வாழவும் வைத்து விட்டதே.
பார்த்திபனும் அவனது ஆச்சியும் மகிழ்ச்சி குறையாமல் நலமுடன் வளமுடன் வாழட்டும்!