“அப்பப்பா! சரோஜா தேவி பாட்டா கேட்டுட்டு இருக்கீங்கன்னு பார்த்தா காதலை பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணியிருப்பீங்க போல” என கேலி செய்தாலும் கணவன் சொன்னதில் பாட்டிக்கும் உடன்பாடுதான்.

“இன்னும் ஒன்னோ ரெண்டோ வருஷத்துல டாக்டரேட் வாங்கிடுவான் நம்ம பார்த்தி, அப்புறம் ஃபினான்ஸியலாவும் ஸ்டெடி ஆகிடுவான், மணி மணியா ரெண்டு குழந்தைங்களோட எந்த குறையும் இல்லாம வாழுவாங்க பாரு அவங்க” என தாத்தா அவர்களின் எதிர்காலத்தை கணித்து சொல்ல, ‘அப்படியே நடக்கட்டும்!’ என நெஞ்சில் கை வைத்து மனதிற்குள் வாழ்த்தினார் பாட்டி.

இரண்டு முறை கணவனின் அழைப்பை ஏற்காமல் போன சுஹானா மூன்றாவது அழைப்பை ஏற்று விட்டாள்.

நீ வந்தது எனக்கு தெரியும், ஏன் சொல்லவில்லை என அவளை கோவித்துக் கொண்டான். பின் அவனே இயல்பாகி, எப்போது கிளம்பினாய், நிவாஸின் திருமணத்துக்கு உன் அப்பா என்ன சொன்னார், உன் அப்பா அம்மாவின் பிணக்கு சரியானதா என எல்லாம் கேட்டறிந்து கொண்டான்.

அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பே அம்மாவிடம் பேசியிருந்தாள் சுஹானா. மதிய உணவுக்கு நால்வரும் சேர்ந்து வெளியில் சென்றார்கள். முழுதாக சரியாகா விட்டாலும் சரி செய்து கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக சொன்னாள்.

ஊருக்கு போக உனக்கும் சேர்த்து டிக்கெட் போடவா எனக் கேட்டு, ஏற்கனவே அவனுக்கு மட்டும் போட்டிருந்த டிக்கெட்டை கேன்சல் செய்து இருவருக்கும் சேர்த்து புக் செய்தான்.

சுஹானாவுக்கு தனியாக பயணிப்பது போலவே இல்லை, அவன் பேசிக் கொண்டே இருந்தது அவளது பக்கத்திலேயே அவன் இருப்பது போலத்தான் அவளை உணர வைத்தது.

அபார்ட்மென்ட் வாசலில் டாக்ஸி வந்து நிற்கவும் வேகமாக வெளியே பார்த்தாள் சுஹானா. பார்த்தியும் குனிந்து அவளை பார்த்தான். பார்வையால் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.

இறங்கியவள் அவனது தோளில் சாய்ந்து கொள்ள, குரலை செருமி அவளை விலக்கி நிறுத்தினான். அவளும் சுற்றம் பார்த்து விட்டு நெற்றியில் தட்டிக் கொண்டாள்.

டாக்ஸிக்கு பணம் செலுத்தி அவளது லக்கேஜை எடுத்துக் கொண்டவன் அவளுடன் இணைந்து நடந்தான்.

லிஃப்ட்டில் இருவர் மட்டுமே இருக்க, “நேர்ல பார்த்து ரெண்டு வாரம் ஆகுது, பப்ளிக் பிளேஸ்ல ஹக் பண்ண முடியாது, கிஸ் பண்ண முடியாது. இங்கேயும் தள்ளி நிக்கிறீங்க, அட்லீஸ்ட் கையையாவது பிடிச்சுக்கலாம், கண்ணால ஆசையா பார்த்து நிக்கலாம். எவ்ளோ ஆசை ஆசையா வந்தேன் தெரியுமா? போங்க பார்த்தி!” என்றாள்.

“அப்படிலாம் உன்னை பார்த்துகிட்டு சும்மா நிக்க முடியாது. பதினஞ்சு நாள் வெயிட் பண்ணின உனக்கு இன்னும் ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ண முடியாதா?” என அவன் கேட்க, அவனை செல்லமாக முறைத்து வைத்தாள்.

இருவரும் அவர்களின் தளத்துக்கு வரவுமே தாத்தாவும் பாட்டியும் அவர்களை எதிர்கொண்டனர். நேராக இங்கு வந்து சாப்பிட்டு விட்டு பின் உங்கள் வீட்டுக்கு போகலாம் என பாட்டி சொல்ல, சுஹானாவை அவர்களுடன் அனுப்பி வைத்து லக்கேஜை தன் வீட்டில் வைக்க சென்றான் பார்த்தி.

“நானும் போய்ட்டு வருவேன்ல ஆச்சி?” எனக் கேட்டாள் சுஹானா.

“போய்ட்டு எப்ப வருவீங்களோ? நாங்க தூங்க வேணாம்?” என்றார் பாட்டி. உண்மையில் அவரது அக்கறை பேரனும் பேத்தியும் நேரத்தோடு சாப்பிட வேண்டும் என்பதில்தான்.

நிவாஸின் காதல், கல்யாணம் வைப்பது என பேச்சு செல்ல, பார்த்தி வந்து விட்டான். பின்னர்தான் சாப்பிட அமர்ந்தாள் சுஹானா. பாட்டி தோசை வார்க்க செல்ல, அவரை அமர சொல்லி விட்டு பார்த்தியே சென்றான். சட்னியை எடுத்துக் கொண்டு சுஹானாவும் அவனிடம் சென்று விட்டாள்.

சமையல் மேடையில் அவள் அமர்ந்து கொள்ள, அவன் ஊற்றிக் கொடுத்த தோசையை அவனுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டாள்.

எல்லாம் எடுத்து வைத்து விட்டு தங்கள் வீட்டுக்கு செல்லலாம் என அவர்கள் இருக்கும் போது, ஏசி சரியாக வேலை செய்யாமல் அதை பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தா.

“நீ போ சுஹா, நான் என்னன்னு பார்த்திட்டு வர்றேன்” என்றான் பார்த்தி. காலையில் பார்த்துக் கொள்ளலாம் என தாத்தா சொல்லியும் அவன் கேட்கவில்லை.

ஏசியை சரி செய்து விட்டு அரை மணி நேரம் கழித்துதான் தன் வீட்டுக்கு வந்தான் பார்த்தி.

அவன் கதவை அடைக்க, வேகமாக வந்து கணவனை அணைத்துக் கொண்ட சுஹானா, “எவ்ளோ மிஸ் பண்ணினேன் தெரியுமா?” எனக் கேட்டாள்.

“தெரியாதே” என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

“தெரியாட்டா போங்க” என அவள் சொல்ல, அவளது கழுத்து வளைவில் புதைந்தவன், “உனக்கு என்னை தெரிஞ்சுதா? போ, எப்ப வேணா என் முன்ன வந்து நிப்பேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணிட்டே இருந்தேன், பதினஞ்சு நாள் ஆகியிருக்கு என் ஆச்சிக்கு அவ புருஷன் நெனப்பு வர” என்றான்.

இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து பிரிவுக் காலத்தின் வேதனையை ஓரளவு சரி செய்து கொண்டு மீண்டார்கள்.

அவள் படுத்து விட, அவளது பிரிண்ட் அவுட்களை எடுத்துக் கொண்டு போய் அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

“ஹேய் எப்படி எடுத்தீங்க இதை? இது ஸ்பைரல் பைண்ட் பண்ணி உங்களுக்கு ப்ரெசென்ட் பண்ணலாம்னு இருந்தேன்” என சொல்லிக் கொண்டே அவளும் எழுந்தமர்ந்தாள்.

இருவரும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அந்த ஓவியங்களை ரசித்தனர்.

“நம்ம ஸ்டோரில நிறைய மிஸ் ஆகுதே ஆச்சி” என குறும்பாக கேட்டான்.

அவனது தொடையில் வலிக்க கிள்ளி வைத்தாள். அவன் காசித்தும்பை செடிகளுக்கு தண்ணீர் விடுவது போல ஒரு படம் இருந்தது, அதில் ‘மை லவ்’ என எழுதப் பட்டிருக்க, “அதென்ன இதுல மட்டும் இப்படி கேப்ஷன், மத்ததுல உள்ள பார்த்திய பிடிக்கலையா?” எனக் கேட்டான்.

அந்த பிரிண்ட் அவட்’டை கையில் வாங்கியவள், “இது நான் ஆச்சிகிட்ட வீடியோ கால்ல இருந்தப்போ உங்களை பார்த்தது. உங்களை லவ் பண்ணனிடுவேன்னு டாடி என்னை கண்டிச்ச டைம் அது, உங்க மேல ஏதோ ஃபீலிங்ஸ் ஸ்டார்ட் ஆகியிருக்குனு நான் உணர்ந்த மொமெண்ட்” என்றாள்.

“ம்ம்…  இதையெல்லாம் வச்சு தினம் எனக்கு கதை சொல்ல போறியா?”

“நம்ம பசங்களுக்கு காட்டி கதை சொல்வேன். உன் அப்பாவோட குழந்தை பருவம் இப்படித்தான் இருந்தது, உன் பெரிய அத்தை இவங்கதான், இப்படித்தான் உன் அப்பா என் லைஃப்ல வந்தார், நாங்க இப்படித்தான் வாழ்ந்தோம்னு எல்லாம் சொல்வேன்” என்றாள்.

“சுஹா…” என மென்மையாக அழைத்தவன் அவளது வயிற்றில் கை வைத்து, “வேற ஏதும் சர்ப்ரைஸ் நியூஸ் இருக்கா எனக்கு?” எனக் கேட்டான்.

“அப்படிலாம் இருந்தா இவ்ளோ நேரம் உங்கள்ட்ட சொல்லாம இருந்திருப்பேனா? பார்த்தியோட குழந்தைகளை பெத்து வளர்க்கணும்னு நிறைய ஆசை இருக்கு. பார்த்திய நிறைய வெர்ஷன்ல பார்த்திட்டேன். அப்பாவா பார்த்திய பார்க்கணும், என்னால பார்த்திக்கு கொடுக்க முடிஞ்ச ரொம்ப பெரிய சந்தோசம் அது, அதை அவர் எப்படி அனுபவிக்கிறார்னு பக்கத்துல இருந்து பார்க்க நிறைய நிறைய ஆசை இருக்கு” என்றாள்.

எப்போதும் போல தன் மீதான அவளின் அதீத பிரியத்தில் திக்கு முக்காடிப் போனவன், “எத்தன பார்த்தி? சரியான பார்த்திபித்து!” என்றான்.

அவனை கட்டிக் கொண்டவள், “எஸ், பார்த்தின்னா எனக்கு அப்படித்தான்” என்றாள். அவளோடு அப்படியே படுக்கையில் சரிந்தான். இத்தனை நாள் பிரிவையெல்லாம் ஈடு கட்டும் படியான காதலோடு இணை கூடினார்கள்.