வர்ஷினி சோர்ந்து போனாள்.. “சர்வேஷ் பேசனும்ன்னு சொல்றார்.. எதோ சொல்லனும்ன்னு சொன்னாங்க. எனக்கு பழச யோசிக்க, பயமா இருக்கு.. நான் என்ன பண்ணேன்னு என்கிட்டே ஒருவார்த்தை கேட்கவேயில்ல அப்போது. அப்படி ஒரு பழி.. இன்னமும் அந்த வார்த்தைகளை மறக்க முடியலை. நான் அதை க்ரகிச்சி வந்துட்டேன். இப்போது முதலிலிருந்து ஆரம்பிக்க பயமா இருக்கு.
அத்தோட இங்க வந்ததால்.. என்னை பார்த்தால் அவங்களுக்கு ஒரு எண்ணம். என்னை முன்பே தெரியும் என்பதால்.. என்மேல ஒரு சாப்ட்கார்னர் வந்திருக்குன்னு தோணுது.. இதை எப்படி எடுத்துட்டு போறதுன்னு தெரியலை.. எனக்கு இந்த ரெண்டு மாதமும் டென்ஷன்தான் தெரியுமா.. அவனை பார்த்தால்.. பழசெல்லாம் மறந்து போய்.. அவனோடு பேச.. பழக.. முடியுது.
தூரமா வந்தால்.. குழப்பமாகிடுது.. இங்க வந்து நான் இருக்கேன்னு தெரிந்ததால்.. பேசறாங்க. என்னை பார்த்திருக்காவிட்டால்.. என்னை இன்னமும் அவனுக்கு நினைவு வந்திருக்காதில்ல.. ம்.. ஜஸ்ட் மறந்திருப்பான்.
அதனால் முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டம்ன்னு தோன்றுது. திரும்பவும் உள்ள போயிட்டு.. ஏதாவது ஆச்சுன்னா.. என்னால் தாங்க முடியாது ஷர்மி” என்றாள்.. தலையில் கை வைத்துக் கொண்டு.
ஷர்மி “சர்வேஷ் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாங்கதானே.. நீ என்ன வயதில் இருந்த லூஸு.. எப்படி நீ இப்படி யோசிக்கிற.
அப்புறம் உன்மேல சாப்ட்கார்னர்.. அப்படி இப்படின்னு சொல்லாத. நீங்க என்ன அப்போது ரிலேஷன்ஷிப்பில் இருந்தீங்களா என்ன.. ஜஸ்ட் ஒரு ஸ்பார்க்.. அவ்வளவுதானே.. அது எதோ மிஸ்அண்டர்ஸ்டான்ட்டிங்கில் கடந்துவிட்டது.
இப்போ புதுசா பேசுங்க.. பேசுங்க, ஒத்து வருமான்னு.. அதாவது டேட் பண்ணுங்களேன்.. என்ன இப்போ.. அதன்பிறகு முடிவெடுக்கலாம்.. முடிவெடு. இப்படி அவர் என்ன சொல்றாங்கன்னு கேட்காமலே இருப்பது எல்லாம்.. ஓவராகத்தான் சீன் போட்ற நீ..” என்றாள்.. ஏற்ற இரக்கமான குரலில்.
வர்ஷினி “அவனுக்கு நான் ஏன் சான்ஸ் கொடுக்கனும்.. இந்த பத்து வருஷத்தில் எப்படி இருக்கேன்னு கூட தெரியாதவர்.. இப்போது வந்து எக்ஸ்ப்ளைன் செய்தால்.. சரியாகிடுமா.. முடியாது. எனக்கு கோவமா வருது” என்றாள் எழுந்து நின்றுக் கொண்டு.
ஷர்மிக்கு அதிர்ச்சிதான்.. சரி சரியென போகும் பெண் வார்ஷினி.. திடீரென ஏன் இவ்வளவு கோவம் எனதான் எண்ணம். என்ன பேசுவது என தெரியவில்லை.
வர்ஷினி, ஐஸ்வர்யா கொடுத்திருந்த மிளகாய்பொடியில் ஊறியிருந்த இட்டியை எடுத்து உண்ணத் தொடங்கினாள்.
ஷர்மி “வர்ஷி, நான் என்ன சொல்றேன்னா.. சர்வா அண்ணாக்கும் வருத்தம்..” என சொல்ல சொல்ல..
“அப்போவே பேசியிருக்கனுமில்ல.. நான் முக்கியம்னு இருந்தால்.. இத்தனை வருஷத்தில் எத்தனை நாட்கள் இருந்தது.. ஒரு வார்த்தை பேசியிருக்கலாமில்ல.. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு.. நான் எல்லோருக்கும் ஈசி.. அதானே” என்றாள்.
ஷர்மி ஆடிபோனாள் வர்ஷினியின் இந்த கோவத்தில்.
வர்ஷினி தொடர்ந்தாள்.. “அவருக்கு எதோ பிரச்சனையாகவே இருக்கட்டும்.. அதான் அப்போவே எல்லா முடிஞ்சி போச்சின்னு அவர் விட்டுட்டாரில்ல அப்படியே போயிருக்கனுமில்ல.. எதுக்கு என்னை நெருங்கனும்.. எதுக்கு இப்படி இங்கே இருக்கணும்.. வேணும்ன்னே என்னை டெஸ்ட் பண்ணதானே” என்றாள்.
ஷர்மி “லூஸு..” என்றாள்.
“இப்போ நான் கல்யாண ஆகிபோயிருந்தால் என்ன பண்ணுவாங்க விட்டுட்டு போயிருப்பாங்கதானே.. இப்போ நான் இருக்கேன்னு தோணவும்.. வந்துட்டாங்க.. இதுக்கு பேர் லவ் இல்ல..” என்றாள்.
ஷர்மி “எவ்வளவு கோவப்பட தெரியுமா வர்ஷி உனக்கு.. அதுவும் சர்வா அண்ணா மேல.. எத்தனை வருஷம் தெரியும் உனக்கு அவரை..” என்றாள்.
வர்ஷினியின் கண்ணிலிருந்து கண்ணீர் இப்போதுதான்.. ஏதும் பேசாமல் அங்கிருந்த பைப்பில் கை கழுவினாள். ஒரமாக நின்றுக் கொண்டாள்.
ஷர்மி அருகில் வந்து நின்றாள்.. வர்ஷினி “எனக்கு என்னமோ ஆகிடுச்சில்ல” என்றாள்.. குழப்பமாக.
ஷர்மி “இல்ல.. இல்ல.. இப்போதான் சரியா இருக்க.. நீ சொல்றது சரிதான்.. சர்வேஷ் அண்ணாக்கு நிறைய நேரமிருந்தது.. கண்டிப்பா உன்னை வந்து பார்த்திருக்கணும்.. யார் மூலமாகவாது உன்னிடம் பேசியிருக்கனும்” என்றாள்.
ஆனால், ஷர்மியின் மனதில் தோன்றியது ‘சர்வேஷ் மீது அதீத காதலில் இருக்கிறாள் பெண்.. யாரிடமும் கொட்டாத அன்பினை.. அவனுக்காக வைத்து காத்திருக்கிறாள்’ என புரிய அமைதியாக இருந்தாள் ஷர்மி.
இன்னும் சற்று நேரம் அவளை தேற்றி இருவரும் உறங்க கீழே வந்தனர்.
மறுநாள் வர்ஷினி எப்போதும் போல எழுந்து அலுவலகம் கிளம்பி சென்றாள்.
மதியமாக ஷர்மி பொற்றோடு தன் இல்லம் நோக்கி கிளம்பினாள்.
வர்ஷினி, சர்வேஷ் அனுப்பிய செய்திகளுக்கு பதில் அனுப்பவில்லை இந்த ஒருவாரமும். சண்டே அழைத்தான் வெளியே செல்லவென.. அப்போதும் அழைப்பினை ஏற்கவில்லை பெண்.
சர்வேஷ் நேரில் வீடு வந்து பார்த்திடலாமா எனதான் எண்ணினான், ஆனால் அதற்கான தைரியம் வரவில்லை அவனுக்கு.. அவளை ரசிக்கிறான்.. ஆனால், நான் ரசிக்கிறேன் என ஒரு வார்த்தை சொன்னதிலிருந்து தன்னிடம் பேசவில்லை அவள்.. என மனதில் ஓட.. தயக்கமாக இருக்கிறது அவனுக்கு. அவளுக்கு தன்னை பற்றி செய்தி அனுப்புவதை நிறுத்தவில்லை அவன்.
நாட்கள் கடந்தது..
சர்வேஷ்ஷூக்கு நாளை இரவு விமானம் ஸ்வீடன் செல்ல. வர்ஷினி வீட்டிற்கு வந்தான் இன்று மாலையில்.
வர்ஷினியின் தந்தை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார்.. ஊருக்கு செல்லுகிறேன்.. பார்க்க வந்தேன் என சொன்னான்.
வர்ஷினி சற்று நேரத்தில் வந்தாள்.. “வாங்க சர்வேஷ், சொல்லவேயில்ல” என்றாள் பொதுவாக,
சர்வேஷ் “இல்ல.. இன்னொரு பிரென்ட் வீட்டுக்கு வந்தேன்” என்றான்..
வர்ஷினி “ஓகே.. பேசிட்டு இருங்க” என உள்ளே சென்றாள்.
சர்வேஷ்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. பேசாமல் ‘உங்க பெண்ணை எனக்கு கட்டி வைங்கன்னு இவரிடம் பேசிடலமா’ எனதான் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.. ‘இவள் ஏன் என்னை அவாய்ட் செய்கிறாள்..’ எனத்தான் கோவமாக வந்தது.
வர்ஷினி வந்தாள்.. மூவரும் பொதுவான விஷயங்களை பேசினர்.. விஜயா உண்பதற்கு அழைத்தார்.. உண்டுவிட்டு சர்வேஷ் கிளம்பினான்.
காரெடுத்து வரவில்லை.. டாக்சி புக் செய்து இருந்தான். வர்ஷினி வழியனுப்ப என வெளியே வந்தாள்.
சர்வேஷ் இதற்காகவே காத்திருந்தான் இத்தனை நேரமாக.. அவள் “இன்னமும் கை சரியாகலையா.. டிரைவ் பண்ண கூடாதா” என்றாள்.
குரலில் அழுத்தம் கூட்டி “என்ன வர்ஷினி ட்ரை பண்ற.. இல்ல, என்ன சொல்ல வர.. எனக்கு அடிபட்டதால் நீ பார்க்க வந்த.. என்மேல கருணை காட்டின.. அதான. இப்போ வேற, எல்லாம் சரியாகிடுச்சு எனக்கு.. நான் வேற.. அதான. வெட்கமா இல்ல.. இப்படி ஒருத்தனுக்கு நம்பிக்க கொடுத்து.. ஒன்னுமில்லாமல் ஆக்குகிறோம்ன்னு உனக்கு தோனல.. அசிங்கமா இல்ல..” என சுற்றிலும் பார்த்தவன் அவளை நெருங்கி வந்தான்.
“ரொம்ப வலிக்குது. நீயா வேணும்ன்னா பேசுவ.. வேண்டாம்ன்னா விட்டுடுவ.. என்னை பார்த்தால் எப்படி தெரியுது.
நீ நிறைய மாறிட்ட.. ரொம்ப மாறிட்ட.. என்னோட வர்ஷி ஏஞ்சல்.. அவளுக்கு நான் கண் அசைத்தால் கூட புரியும்.. ம்..” என தள்ளி வந்தவன்
“நீ வேற யாரோ.. சுக்கு சுக்கா உடைச்சிட்ட.. உன்னை பார்த்து எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..” என தலை கோதிக் கொண்டு.. தான் அணிந்திருந்த ஷூ காலால்.. கீழே தேய்த்தான்.. என்ன செய்வதென தெரியாமல்.
வர்ஷினி அவனுக்கு தெரியாமல் திரும்பிக் கண்களை துடைத்துக் கொண்டாள்.
சர்வேஷ் நிமிர்ந்தான் அவளை பார்த்து “என் மேல ஒண்ணுமே இல்லாமலா என்னை பார்க்க வந்த.. எப்படி வந்த.. அப்படிதான் எல்லோர் கூப்பிட்டாலும் போய்டுவியா.. இல்ல தெரியாமல்தான் கேட்க்கிறேன்.. என் கண்ணை பார்த்தால் தெரியலை என் காதல்.. சொல்லு.. நீ என்னதான் நினைக்கிற சொல்லிடேன்..” என்றான் கோவமாக.. இயலாமையாக.
வர்ஷிணியின் கண்ணில் கண்ணீர்..
“ஏதாவது சொல்லு.. கேக்கிறேனில்ல.. சொல்லு” என்றான்.
வர்ஷினி வாய் திறக்கவில்லை.. உள்ளே சென்றுவிட்டாள்.
சர்வேஷ் என்ன செய்வதென தெரியாமல்.. அவளையே பார்த்திருந்தான்.