சுஹானா இல்லாமல் பார்த்திபன் மட்டுமே தனியாக திரும்பி வந்ததில் பெரியவர்களுக்கு வருத்தம்.
ஆஷுதோஷ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட விவரத்தையும் இப்போது கவலை பட ஏதுமில்லை என்பதையும் சொன்னான் பார்த்தி.
மகளுக்கு அழைத்து விசாரித்துக் கொண்டனர் பெரியவர்கள். அப்படியே சுஹானாவை அதிக நாட்கள் அங்கே நிறுத்தி வைத்துக் கொள்ளாதே என அறிவுரையும் சொன்னார்கள்.
பணிகளை பார்க்க ஆரம்பிக்கலாம் என மருத்துவர் சொல்லி விட்ட பிறகும் ஆஷுதோஷ் வீட்டிலேயேதான் இருந்தார். சாப்பிடும் நேரம், மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நேரம், நடக்கும் நேரம் என சுஹானாவை நாளின் பெரும்பாலான நேரத்தை தன்னுடன் இருக்கும் படி வைத்துக் கொண்டார்.
பார்த்தி சென்னைக்கு வந்து கல்லூரி புறப்பட்ட தினத்தில் காலையிலேயே அப்பாவுடன் நடந்து கொண்டிருந்தாள் சுஹானா. மனைவி உறங்குவாளோ என்னவோ என நினைத்த பார்த்தி, ‘எழுந்ததும் கூப்பிடு’ என குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி வைக்க, அவள் பார்க்கவே இல்லை.
கணவனுக்கு அழைத்து பேசலாம் என அவள் கைப்பேசி எடுக்கும் போதுதான் செய்தியை பார்த்தாள். உடனே அவள் அழைக்க, அவன் குளித்துக் கொண்டிருந்தான். கிளம்பும் முனைப்பில் அவளின் தவறிய அழைப்பை பார்க்காமலே சென்று விட்டான்.
மீண்டும் சுஹானா அவனுக்கு அழைத்த போது வகுப்பில் இருந்தான் அவன். ஓய்வு நேரத்தில் அவன் அழைக்க, அவளோ அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். கணவனின் அழைப்பை ஏற்று பேசியவளால் அப்பாவின் முன் அவனிடம் சரியாக பேச முடியவில்லை. நல விசாரிப்புகளோடு உரையாடல் முடிந்து விட்டது.
இப்படியாக அவர்கள் பேசிக் கொள்ள அன்றைய தினம் பல தடைகள். ஒரு வழியாக இரவில் உறங்கும் முன் காணொளி அழைப்புக்கு வந்து விட்டனர். இருவருக்கும் நல்ல தூக்க கலக்கம், பேசிக் கொண்டே பார்த்தி உறங்கி விட, அழைப்பை துண்டித்து விட்டு அவளும் உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் எல்லாம் கணவனிடம் பேசுவதற்கு தகுந்த படியே அப்பாவுடன் இருக்கும் நேரத்தை மாற்றியமைத்துக் கொண்டாள் சுஹானா.
காலையில் ஆஷுதோஷ் நடை பயிற்சி செல்ல மகளுக்காக காத்திருக்க, வந்ததோ காயத்ரிதான்.
“சுஹா எங்க?” எனக் கேட்டவருக்கு, “நாம ஒன்னா டைம் ஸ்பெண்ட் பண்ணனுமாம், உங்க பொண்ணு சொல்லி அனுப்பி வச்சிருக்கா” என பதில் தந்தார் காயத்ரி.
“ப்ச் நாம எப்பவும் இங்கேயே இருக்க போறோம்தானே?” என சலிப்பாக சொன்னார் ஆஷுதோஷ்.
“ம்ம்… ஒரே வீட்ல இருக்கிறோம், ஒன்னா இருக்கிறோமா? நான் வேணாம்னா போங்க” என வருத்தமாக சொல்லி நகரப் போன மனைவியின் கையை பிடித்துக்கொண்டார்.
அன்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட போது எதனால் தன் உடலில் இந்த மாற்றம் என அவருக்கு புரியவில்லை, மரணம் அருகில் வந்து விட்டதோ என்றே பயந்திருந்தார்.
இத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தும் எதையும் அனுபவிக்க விடாமல் கடவுள் இத்தனை சீக்கிரம் தன்னை அழைக்கிறாரே என்றெல்லாம் சிந்தனை சென்றிருக்க, தன் இழப்பால் பாதிக்க பட போவது மனைவிதான் என்ற உண்மையும் அவருக்கு விளங்கியிருந்தது.
கணவனின் பார்வையில் தெரிந்த எதனாலேயோ அவரை விட்டுச் செல்ல மனமின்றி அவருடனே நடந்தார் காயத்ரி.
சில நிமிடங்கள் சென்றுதான், “மார்னிங் இந்த டைம் சுஹாவுக்கு அவ ஹஸ்பண்ட் கூட பேசுற நேரமாம், அதை சொல்லித்தான், ‘உன் ஹஸ்பண்ட் கூட நீ இரு’ன்னு என்னை அனுப்பினா” என்றார் காயத்ரி.
“நிஜமாவே சுஹா அவன் கூட ஹேப்பியா இருக்காளா?” என சந்தேகமாக கேட்டார் ஆஷுதோஷ்.
“ம்ம்… உங்களை பார்க்க வரலையே தவிர் ஹாஸ்பிடல்ல மத்தது எல்லாம் பார்த்துகிட்டது பார்த்திதான். அவர் வரலைன்னா நாங்க லேடிஸ் ரெண்டு பேருமா… ரொம்ப கஷ்டமாகியிருக்கும். என்னதான் நம்ம ஒர்க்கர்ஸ் வருவாங்கன்னாலும் சொந்தம்னு ஒருத்தர் கூட இருக்கும் போதுதானே மன தைரியம் கிடைக்குது?”
“முன்னாடியெல்லாம் அவனை மரியாதையா பேச மாட்டியே?”
“முன்னாடி மரியாதை கொடுக்க மாட்டேன்னு இல்லை, வீட்ல ஒருத்தரா என் பேரெண்ட்ஸ்க்கு துணையா இருக்க பையன்னு நானும் என் தம்பி அப்படிங்கிற ஃபீல்லதான் பார்ப்பேன். அது மரியாதை குறைவு இல்லையே. இப்ப வீட்டு மாப்பிள்ளை, அதுக்கான மரியாதை கொடுத்தாகணும். உங்களை போல சுஹா மனசை பத்தி கவலை படாம இருக்க என்னால முடியாது”
“நான் அவளை பத்தி கவலை படறது இல்லையா?”
“ஆமாம், இல்லைனா பார்த்தி கூட முன்னாடி நடந்துகிட்ட முறைக்கு ஒரு ஸாரி கேட்ருப்பீங்களே. நிவாஸ் பத்தி கூட கவலை இல்லை உங்களுக்கு. யாமினிக்கு என்ன குறைன்னு அவன் காதலை எதிர்க்குறீங்க?”
“ம்… நான் கெட்டவன்தான், நீதான் உன் பசங்களுக்கு நல்லவ”
“என்னை பத்தி விடுங்க, நான் எப்படின்னு பசங்களே சொல்வாங்க. நீங்க எப்படின்னு மட்டும் பாருங்க”
“அதான் இன்டைரக்ட்டா நான் சரியில்லைனு சொல்றியே, நானும் என்ன சொல்லணும்? பிரைவேட் காலேஜ் ப்ரொஃபஸர் சேலரில என் பொண்ணு நினைச்ச படி எப்படி வாழ முடியும்? அவ சின்ன பொண்ணு, அவ கூட வேணும்னே பழகி எனக்கு எதிரா மாத்தி மேரேஜ் பண்ணிகிட்டவன் என் பார்வைல கெட்டவன்தான். நிவாஸ்க்கு ஆக்சிடெண்ட் ஆகி எப்படி இருந்து நல்ல படியாக்கினோம்னு நீ மறக்கலாம், நான் மறக்கல. திரும்பவும் அந்த பொண்ணு அவனை விட நினைக்காதுன்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா? நமக்குள்ள செட் ஆகலங்கிறப்பவும் பிரியறது பத்தி நான் யோசிச்சது கூட கிடையாது, ஏன்? என் கமிட்மெண்ட் அப்படி, அது அந்த பொண்ணுகிட்ட கிடையாது. அப்ப எதிர்க்கத்தான் செய்வேன்”
“ஓ! பிரியுறது பத்தி யோசிக்காம என்னை சகிச்சுக்கிட்டு வாழ்ந்திருக்கீங்க!” ஆதங்கத்தோடு கேட்டார் காயத்ரி.
“நான் நம்ம பசங்கள பத்தி பேசிட்டு இருக்கேன்” என எரிச்சலாக சொன்னார் ஆஷுதோஷ்.
“அவங்க ரெண்டு பேரும் அடல்ட்ஸ், அவங்க லைஃப் பத்தி அவங்களே முடிவு பண்ணிப்பாங்க. என் லைஃப்தான் அர்த்தம் இல்லாததா இருக்கு” வேதனையாக சொன்னார் காயத்ரி.
“என் லைஃப் மட்டும் மீனிங்ஃபுல்’லா இருக்கா?” என அவர் கோவமாக கேட்க, அங்கே நிற்காமல் விடு விடுவென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார் காயத்ரி.
பார்த்திக்கு காலை உணவு தாத்தாவின் வீட்டில், ஆகவே மதியத்திற்கு உணவு தயார் செய்து கொண்டே மனைவியுடன் காணொளி அழைப்பில் இருந்தான்.
“அம்மா வீட்ல இருக்கும் போது இந்த பொண்ணுங்களுக்கு செம ஜாலிதான் இல்லை?” எனக் கேட்டான் பார்த்தி.
“இல்லையே, என் ஆச்சியோட முகம் வழக்கத்தை விட அதிகமா பிரைட்டா இருக்கே”
“அதுவா… என் ஹஸ்பண்ட் கண்ணுக்கு அழகா தெரியணும்னு கொஞ்சம் டச் அப் பண்ணிருக்கேன்”
“நிஜமாவா?”
“பின்ன? பார்த்தி ஸார் ஈவ்னிங் ஆகிடும் என்னை பார்க்க, அதுவரை அவர் மூளைல குடைச்சல் கொடுத்திட்டே இருக்கணுமே” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, கடுகு தாளிக்கும் போது எண்ணெய் அவனது கையில் பட்டு விட்டது.
அவள் பார்த்து விடக் கூடாது என கைப்பேசியை வேகமாக எடுத்தான். விரல் பட்டு அழைப்பு துண்டிக்க பட்டு விட்டது. தண்ணீரில் கழுவியதுமே அவனுக்கு சரியாகி விட்டது. அதற்குள் இவள்தான் பதறி விட்டாள்.