அத்தியாயம் 12

உன்னை நேசிக்கும் உனக்கான உன் காதல்…

லேசாக திறந்திருந்த ஜன்னல் வழியே காலை கதிரவனின் கதிர்கள் கீற்றாக நுழைந்து மகாவின் முகத்தில் பட்டு, யாருக்காகவும் விடியல் காத்திருக்காது என்று எடுத்து காட்டவும்.

கண்களை துடைத்த படி எழுந்தவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அங்கே குருவிகள் தன் இணையோடு கொஞ்சிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பதை பார்த்தவள்.

“பேசாம இந்த குருவியா பொறந்திருக்கலாம் போல “ என்று ஏக்கமாக மூச்சை இழுத்து விட்டாள்.

அவள் கட்டுப்பாடு இன்றி கலங்கும் கண்களை துடைத்து விட்டு கழிவறைக்குள் சென்று முகத்தை கழுவி விட்டு வெளியே வந்து கண்ணாடியை பார்க்க பயந்தே போனாள்.

“ என்ன இது கண்ணு இப்படி சிவந்து இருக்கு மூஞ்சி கூட வீங்கி இருக்கு அம்மா கேட்டா என்ன சொல்ல “

என்று பயந்தவள் லேசாக கதவை திறந்து எட்டி பார்க்க அமிர்தம் அப்போது தான் எழுந்து பாத்ரூம் சென்றார்.

அதை பார்த்து விட்டு வேகமாக வெளியே வந்தவள் ஃபிரிட்ஜை திறந்து அதில் இருந்த ஐஸ் கட்டியை எடுத்து கண்ணில் முகத்தில் என்று வைத்தபடி திரும்ப

“அச்சோ மகா! என்னடி ஆச்சு முகம் இப்படி வீங்கி போய் இருக்கு, கண்ணும் சிவந்து இருக்கு” என்று நாடி பிடித்து கவலையாக பார்த்து அமிர்தம் கேட்க,

திடீரென்று கேட்ட கேள்வியில் என்ன சொல்ல என்று ஒரு நிமிடம் விழித்தவள்

“அது அம்மா… நைட் கெட்ட கனவுல முழிச்சிட்டேன்மா. அதுக்கு அப்பறம் தூக்கம் வரல. அதான் இப்படி வீங்கியிருக்கு “ என்று தட்டு தடுமாறி மகா சமாளித்து வைக்க

“கெட்ட கனவுனா அம்மா கிட்ட எழுந்து வரவேண்டியது தான மகா “ என்று சொன்னவர் சாமி ரூம் சென்று திருநீற்றை எடுத்து வந்து அவள் நெற்றியில் பூசி விட்டு

“ ஊர் கண்ணே இங்க என் புள்ளைங்க மேல தான் இருக்கு. நல்ல ஊர் சொல்ல உங்க நாலு பேரையும் வளத்துட்டேன்னு எல்லாரும் இங்க தான் பாத்து அழுவுறாங்க” என்று நெட்டி எடுத்து முறித்தவர்

“பாரு எத்தன சொடக்கு. இது சரி வராது நீ போய் மூனு பேரையும் எழுப்பி கூட்டிட்டு வா “

என்று சொல்லி விட்டு சமையல் அறை சென்று ஒரு பேப்பரில் கல்லுப்பு கொஞ்சம் வரமிளகாய் கொஞ்சம் எடுத்து பொட்டலமாக முடிந்து எடுத்து வர

இங்கே மகா மூவரையும் அரை தூக்கத்தில் எழுப்பி கொண்டு வந்து நிற்க வைத்திருந்தாள்.

பொட்டலத்துடன் வந்த அமிர்ந்தம் நால்வருக்கும் ஒன்றாக சுற்றி வெளியே சென்று வீட்டின் முக்கில் வைத்து எரித்து விட்டு உள்ளே வந்தவர்

“எப்படி பொடியுது ? ஊர் கண்ணே என் புள்ளைங்க மேல தான் போல “ என்று முனங்கிய படி வந்தவர் கண்டது மகாவின் மடியில் ஒரு பக்கம் சுபா குணா படித்திருக்க மறுபக்கம் ஜெயா உறங்கி கொண்டிருப்பதை தான்.

அதை பார்த்து மகிழ்ந்தவர் “ இன்னும் குழந்தை மாதிரி மகா வால பிடிச்சிட்டு சுத்துறத பாரு “ என்று பெருமூச்சி ஒன்றை விட்டவர்

“மகா கல்யாணத்துக்கு அப்பறம் நான் என்ன பண்ண போறேனோ “ என்று முனங்கியவராக அங்கு வந்து அனைவரையும் எழுப்பி விட்டவர் நால்வருக்கும் நான்கு வேலையை கொடுத்து விட்டு சென்றார்.

மகாவும் அமிர்ந்தம் சொன்ன வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அலுவலகத்திற்கு பஸ்ஸில் ஏறியவள் முகம் சரியே இல்லை பஸ் அலுவலகத்தை நெருங்க நெருங்க ஒரு வித அழுத்தம் நெஞ்சை போட்டு அழுத்தியது

கண்ணில் இருந்து நீர் வழிந்த படியே தான் இருந்தது. கண்களை கைகுட்டையால் துடைத்து துடைத்து அதுவும் நனைந்து போய் இருந்தது.

மகா இப்படி நினைத்து நினைத்து அழும் ஆள் எல்லாம் இல்லை எத்தனையோ விஷயம் அவள் ஆசைப்பட்டு அது கிடைக்காமல் போய் இருக்கிறது.

அதற்கெல்லாம் அழாமல் இருந்தவளால், இதையும் கடந்து போக முடியவில்லை.

ஏதேதோ நினைத்து வருந்தியபடி அலுவலகத்தை அடைந்தவள் முகத்தை துடைத்துக்கொண்டு அவள் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டாள்.

இருக்கையில் இருந்தவளுக்கு நிமிர்ந்து இன்பாவை பார்க்க வேண்டும் போல் தோன்ற ஆனால்  தலையை நிமிர்த்தவில்லை, நிஜம் நெருப்பாக அவள் உடலை சுட தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

உணர முடிந்தது அவளை தான் இன்பா பார்த்திருக்கிறான் என்று அது தெரிந்தும் முகத்தை நிமிர்த்தி காட்டாமல் குனிந்த படியே மகா இருக்க இன்பா நேராக எழுந்து இவள் இடத்திற்கே வந்து விட்டான்.

இன்பா அருகில் நிற்பது தெரிந்து கைகளை இருக்கி மூடியபடி மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

மகாவின் கண்கள் சிவந்து போய் இருப்பதையும் முகம் வாடி போய் இருப்பதையும் பார்த்து அதிர்ந்த இன்பா

“ மகா ! என்ன ஆச்சு உனக்கு ?” என்று அவள் அருகே மேலும் நெருங்க முயன்றவனை கை நீட்டி தடுத்தவள்.

“ப்ளீஸ் இன்பா என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க “ என்று முயன்னு குறளில் கடுமையை வரவழைத்து பேசியவள் எழுந்து கழிப்பறை சென்று விட்டாள்.

மகா எழுந்து சென்றதில் பிரம்மை பிடித்தவன் போல் அங்கேயே நின்றவனின் தோளை தொட்ட அயன்

“இன்பா என்ன ஆச்சு ? ஏன் இங்க நிக்கிறீங்க ஏதும் பிரச்சனையா “ என்ற சத்தத்தில் தான் சுயம் வந்து சுற்றி பார்த்தான்.

மகா இடத்திலயே நின்று விட்டது தெரிய “ நத்திங் அயன் “ என்று அவன் இடத்துக்கு சென்று அமர்ந்து விட்டான் இன்பா.

இப்போதே மகாவை அணைத்து “ என்ன தங்கம் ஆச்சு ? எதுக்கு கலங்காத தங்கமே உனக்கு நான் இருக்கேன் “ என்று சமாதானம் செய்ய வேண்டும் போல் உள்ளம் அழைக்க தலையில் கை வைத்தபடி டெஸ்கில் சாய்ந்து படுத்து விட்டான் இன்பா.

இவன் நினைத்தால் போதுமா அவள் நினைக்க வேண்டாமா.  அவளை ஆறுதல் படுத்தும் உரிமையை தான் அவள் இவனுக்கு தரவே இல்லையே உன்னை கசக்க வேலை எதுவும் செய்ய முடியாமல் படுத்து விட்டான்

அப்போது அவன் போன் “ தங்க தாமரை மகளே வா அருகே

தத்தி தாவுது மனமே வா அழகே….” என்று பாடல் ஒலிக்கவும் உதட்டில் தோன்றிய கசந்த முறுவலுடன் யார் என்று பார்த்தான்.

அவன் அத்தை சித்ரா தான் அழைத்திருந்தாள். போனை எடுத்து காதில் வைக்க

“இன்பா ஓகே ஆகிடுச்சு டா. நாளைக்கே நல்ல நாளுன்னு வந்து பார்க்க சொல்லிடாங்க டா”

என்று இன்பாவின் நிலை புரியாமல் இவர் வேறு தலையும் இன்றி வாலும் இன்றி பேச, அவர் சொல்ல வருவது புரியாமல் தலையை தேய்த்த இன்பா.

“என்ன நல்ல நாளு? யாரை பார்க்கப் போற?” என்று கோபமாக இன்பா பேசியதைக் கேட்டு,

“என்ன இவன் நியாயப்படி இப்போ இவன் சந்தோஷத்துல குதிக்கத்தானே செய்யணும்? அதை விட்டுட்டு கத்திட்டு இருக்கான்”

என்று யோசித்தவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, சித்ராவின் அமைதியில் தான் அவரை கத்தி பேசியது புரிய கம்ப்யூட்டர் மௌஸை கொண்டு தலையில் தட்டியவன்

“அத்தை…..சாரி அத்தை. கொஞ்சம் வொர்க் டென்ஷன் அதான் அத்தை. இப்போ சொல்லுங்க என்னன்னு ” என்று அமைதியாக பேசியவன் குரலில் சிரித்துக் கொண்ட சித்ரா,

“திருப்பி சொல்ற அளவுக்கு எனக்கு நேரம் இல்ல. நான் இப்போ வேலையா இருக்கேன். அப்புறம் பேசுறேன்” என்று சித்ரா கோபமாக இருப்பது போல காட்டிக் கொண்டு போனை வைத்து விட,

இன்பா “பிச்…. இவுங்க வேற” என்று மீண்டும் பழைய பொசிஷனில் படுத்தவனுக்கு திடீரென்று மண்டையில் பல்ப் எரிய

“அத்தை…..” என்று சந்தோஷத்தில் மீண்டும் அவருக்கு அழைத்தான்.

இன்பாவின் அழைப்பில் உடனே போனை எடுத்தவர் “இப்போ புரிஞ்சுதா டா …” என்று நக்கலாக அவர் சிரிக்கவும்,

“ம்ம்ம் புரிஞ்சிது அத்தை…..” என்று சிரித்தவன்,

“அங்க மகா வீட்டுல எல்லாம் ஓகேவா அத்தை? மகா ஓகே சொல்லிட்டாளா?”

“அது தெரியல இன்பா. நாளைக்கு பொண்ணு பார்க்க வர சொல்லிருக்காங்க. அங்க போய் தான் என்னன்னு தெரியும்.”

“ம்ம்ம் சரி அத்தை. அப்போ மகா கிட்ட பேசிட்டு வந்து உனக்கு கால் பண்றேன் அத்தை” என்று போனை வைக்க போன இன்பாவை அவன் அத்தையின் குரல் தடுக்க,

“என்ன அத்தை…. மத்தது எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம். மகா முகமே சரியில்லை. நான் போய் பேசிட்டு வந்து உனக்கு கால் பண்றேன்.”

“இன்பா… நான் சொல்றதை முதல்ல கேட்டுட்டு போ.”

“என்னன்னு சீக்கிரம் சொல்லு.”

“மகா கிட்ட இதை பத்தி எதையும் பேசி வைக்காத டா.”

“ஏன் அத்தை? எதுக்கு சொல்ல கூடாது?”

“அவங்க வீட்டுல மகா கிட்ட இன்னும் பேசலைன்னு தான் நினைக்கிறேன் டா.”

“சரி அதுக்கு என்ன? நான் சொல்லிட்டு போறேன்.”

“டேய் உன் கிட்ட மகா தான் பொண்ணுன்னு நான் சொல்லலைன்னு சொல்லி வச்சிருக்கேன் டா. அதை கெடுத்துடாத.”

“உங்களால யாரு அப்படி சொல்ல சொன்னா அத்தை?” என்று இன்பா சீறினான்.

“இன்பா…. நான் எனக்கு புடிச்சி தான் மகாவ பார்க்குறேன்னு சொல்லிருக்கேன்டா.”

“ப்ச் அத்தை … அப்போ நான் மகா கிட்ட பேச கூடாதா?”

“ம்ஹூன் பேச கூடாது. நீ அவ  கிட்ட லவ் சொல்லி அது அவ வீட்டுக்கு தெரிஞ்சி தேவையில்லாத பிரச்சனை இன்பா.”

“அப்போ என்னதான் இப்போ பண்ண?”

“இன்னைக்கு ஒரு நாள் மகாவ பார்க்காம நாளைக்கு லீவு சொல்லிட்டு வீட்டுக்கு வா. அது போதும்.”

“ம்ம்ம் சரி …”

“வீட்டுக்குன்னா உங்க மாமா வீட்டுக்கு இன்பா” என்று சித்ரா அழுத்தி சொல்ல இன்பா,

“அத்தை… அங்க எதுக்கு நான் வரணும்?”

“இங்க இருந்து தான் இன்பா நாளைக்கு கிளம்பனும்.”

“இல்ல அத்தை நீ இங்க நம்ம வீட்டுக்கு வா இங்க இருந்து போவோம் “

“ப்ச் புரிஞ்சிகோ இன்பா…. தனியா பொண்ணு பாக்க நம்ம ரெண்டு பேரும் மட்டும் போக முடியாது “

“அப்போ அவரும் வர்றாரா “

“அவர் இல்லாம எப்படி இன்பா ” என்று குரல் கம்ம சித்ரா பேச

“எப்படி ஒத்துக்கிட்டாரு அவரு ? அவருக்கு தான் என்ன பிடிக்காதே “

“நான் அவர் கூட இருக்கனும்னா அவர் முன்ன இருந்து பண்ணி தான ஆகனும், அவருக்கு அது தெரியாத என்ன “

என்று இடது பக்கம் சித்ரா திரும்பி பார்க்க அங்கே தான் கோபமான முகத்துடன் சித்திராவை பார்த்து முறைத்த படி அமர்ந்திருந்தார் வீர முத்து.

” மிரட்டுறியா அத்தை அவர நீ ” என்று இன்பா சிரிக்க

“ஏன்டா சிரிக்கிற ஏன் நாங்களாம் மிரட்ட கூடாதா ” என்று சித்ரா பதிலுக்கு வீர முத்துவை பார்த்து முறைக்கவும் அவர் எழுந்து சென்று விட்டார்.

“என்னமோ அத்தை … சரி நான் காலைல அங்க வந்துறேன் அத்தை ” என்று போனை வைத்த இன்பாவுக்கு இப்போவே மகாவை பார்க்க வேண்டும் போல இருக்க அவன் இடத்தை விட்டு வந்து அவளை தேடினான்.

மகாவை காணாது சுற்றியவனை நிறுத்திய அயன் “ மகாவுக்கு ஹெட் ஏக்னு கிளம்பிட்டாங்க இன்பா “

“என்னது ஹெட் ஏக்கா ஏன் என்கிட்ட அவ சொல்லல “

“நீங்க போன் பேசிட்டு இருந்தீங்க இன்பா அதான் மேயில் போட்டு கிளம்பிட்டாங்க ” என்று அவனும் சென்று விட இன்பா குழப்பமாக எதோ யோசித்த படியே அவன் இடத்திற்கு சென்றான்.

இங்கு வீட்டுக்கு வந்த மகாவை பார்த்த அமிர்தம்

“என்ன மகா இந்நேரம் ஆபிஸ்ல தான நீ இருக்கனும் இங்க என்ன பண்ற “

“தலை வலி ம்மா அதான் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன் “

“காலைலயே உன்ன லீவ் போட வச்சிருக்கனும் நான் ஒருத்தி ” என்று தலையில் அடித்து கொண்டவர்.

“சரி வா.. சாப்பிட்டு மாத்திரை போட்டு கொஞ்சம் தூங்கு “

என்று அழைத்து சென்று சாப்பிட வைத்து மாத்திரையும் தர மகா எதோ கொஞ்சத்தை உண்டு விட்டு மாத்திரையை போட்டு விட்டு தூங்க போனவளை நிறுத்திய அமிர்தம்

“மகா… நானே உனக்கு போன் பண்ணனும்னு தான் இருந்தேன் “

என்று தயங்க, அவரின் தயக்கத்திலயே அடுத்து அவர் சொல்ல போவதை யூகித்து அதற்கு தயாராக இருந்த மகா என்ன வென்பது போல அவரை பார்க்க

“அது உனக்கு மாப்பிள்ளை பாத்துருக்கோம் நாளைக்கு பாக்க வராங்க ” என்று மகாவின் முகம் பார்க்க அங்கே எந்த ஒரு மாற்றமும் இல்லை

கல்யாணத்தை பற்றி பேசியதற்கான எந்த ஒரு மாற்றமும் இல்லை வெட்கம், பயம், ஏன் கோபம் கூட இல்லாமல் அந்த வெறுமையான முகத்தில் குழம்பிய அமிர்தம்

“மகா….” என்று பயந்து அழைக்கவும் அவரின் அழைப்பில் லேசாக சிரித்த மகா

“சரிம்மா காலைல தான லீவ் சொல்லிறன் இப்போ போய் தூங்குறேன் ம்மா தலை வலிக்குது “ என்று சிரித்த முகமாக மகா செல்லவும் தான் மூச்சே வந்தது அமிர்தத்திற்கு.

அறைக்குள் சென்ற மகா கட்டிலில் விழுந்து முகத்தை தலைவானியில் புதைத்து கொண்டு அழுக தொடங்கியவள் அவள் உண்ட மாத்திரையின் உதவியால் அப்படியே தூங்கி போனால்.

அதன் பின் மகா உறக்கத்தில் இருந்து முழிக்கும் போது அவள் பார்த்தது. அவளை சுற்றி அமர்ந்திருந்த அவளின் செல்ல தங்கைகளை தான் அவர்களை பார்த்து மகா சிரிக்க

“மகா உனக்கு இந்த கல்யாணம் வேணாமா ” என்று ஜெயா கேட்ட கேள்வியில் அதிர்ந்து போய் எழுந்து அமர்ந்தாள்.