அதன் கூர்தீட்டப்பட்ட கொம்பும், மேனியின் மினுமினுப்பும், மேடிட்டிருந்த திமிலும் பார்ப்பதற்கு பரவசத்தையும், பயத்தையும் ஒருங்கே அள்ளித்தர, “காளை…” என்றபடி கணவனை நெருங்கி நடந்தாள் ஷக்தி.
“வெறுங்காளை இல்லம்மா… ஜல்லிக்கட்டு காளை” என்றான் விஸ்வா.
“அப்பிடியா?” என்றவள், இன்னும் நன்றாக அந்த காளையை பார்வையிட்டாள்.
“மதுரை அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டுக்கு ஃபேமஸான ஊருன்னு நீ கேள்விபட்டுருப்பியே ஷக்தி. பொங்கல் அன்னைக்கு அங்க ஜல்லிக்கட்டு நடக்கும். அதுல கலந்துக்க போற காளையா தான் இது இருக்கும்.”
விபரம் சொல்லிய விஸ்வா, “காளையோட மூக்கு வழியே சொருகி, பின்கழுத்துல கொண்டு முடிஞ்சிருக்க கயிறை பாத்தியா ஷக்தி? அதுக்கு பெயர் தான் மூங்கணாங்கயிறு. அதை, நீ எதுகூட கம்பேர் பண்ணுனன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” கேட்டுவிட்டு விழியகற்றாது அவளையேப் பார்த்தான்.
ஷக்திக்கும், தான் எதோடு அதனை ஒப்பீடு செய்தோம் என்பது ஞாபகத்துக்கு வர, கணவனைப் பார்த்து அவஸ்தையாக சிரித்தாள்.
“உனக்கொன்னு தெரியுமா ஷக்தி? இந்த கயிறை அந்த காளைக்கு போட்டுருக்க முக்கிய காரணமே, அதை கட்டுப்படுத்த தான்.”
“ஆனா இந்த காளை…” சொல்லும் போது தன்னை தானே சுட்டிக் காட்டிக்கொண்ட விஸ்வா, “இதை உங்கழுத்துல போட்டுட்டு, அது இல்ல உனக்கு கட்டுப்பட்டு நிக்குது. அப்போ எப்பிடி உன்னோட கம்பேரிசன் சரியாகும்? சொல்லு…” தன் ஒற்றை விரலால் மனைவியின் கழுத்தில் கிடந்த தாலிச்செயினை லேசாக நிமிண்டியபடியே கேட்டான் விஸ்வா.
“எதே! நீங்க காளையா? எங்க கொம்பை காணோம்? ம்ம்… ஒருவேளை இனிமேதான் முளைக்குமோ? முளைக்கட்டும்… முளைக்கட்டும். அப்படியே பிடிச்சு ஒடிச்சு விட்டுறலாம்.” நம்பியார் பாணியில் கைகளை பிசைந்து கொண்டே பதிலுக்கு பேசினாள் ஷக்தி.
“அடேய்… உயிரைக் கொடுத்து நான் டயலாக் பேசினா, நீ என்னை கலாய்க்கிறியா? உன்ன…” என்றபடியே சுற்று முற்றும் பார்த்தவனின் கண்களில் சிறுகுச்சி தென்பட்டது. அதை எடுத்து விளையாட்டாக மனைவியை அடிக்க முயல,
சில்லறையை சிதறவிட்டதுபோல சிரிப்பை சிந்திக் கொண்டு, கணவனின் கைகளில் சிக்காமல் ஓட்டமெடுத்தாள் ஷக்தி.
*******
பொங்கலுக்கு, விஸ்வாவும் ஷக்தியும் மதுரைக்கு சென்று வந்து, முழுதாக மூன்று மாதங்கள் முடிவடைந்திருந்தது. அன்றைய பொழுதுக்குப்பிறகு, அங்கிருந்து சென்னைக்கு கிளம்பும் வரை, சௌந்தர் ஷக்தியின் கண்களில் தட்டுப்படவேயில்லை.
அதுபோல சென்னைக்கு கிளம்பும்போது, அத்தை மீனாட்சியிடமிருந்து எதுவும் எதிர்ப்பு வரலாம் என்று ஷக்தி எதிர்பார்க்க, அப்படி எதுவுமே நடக்கவில்லை.
பதிலாக, “அப்பப்போ லீவு கிடைக்கும் போதெல்லாம் இரண்டு பேரும் இங்க வந்துட்டு போங்க” என்ற வார்த்தையோடு, நல்லவிதமாகவே அனுப்பி வைத்திருந்தார்.
இந்த மூன்று மாதங்களில், விஸ்வாவின் தங்கை அஸ்வினிக்கு திருமணம் முடிந்திருந்தது. அதற்காக ஒருமுறை மதுரை சென்று வந்திருந்தார்கள் தம்பதியினர்.
அஸ்வினியின் திருமணத்திற்காக, அங்கு தங்கியிருந்த நாட்களிலும், அநாவசியமாக ஒருமுறை கூட ஷக்தியின் கண்களில் சௌந்தர் படவில்லை.
அப்படியே பார்க்க நேரும் பொழுதுகளில் கூட, ஒரு சிறு புன்னகையோடு கடந்துவிடும் சௌந்தர், ஒருமுறை கூட, நான் உன் தகப்பன், நீ என் மகள் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள முயலவே இல்லை.
இது ஒருவிதத்தில் ஷக்திக்கு ஆறுதலாக இருந்தது. சந்தோஷமாக அஸ்வினியின் திருமணத்தில் கலந்து கொண்டு, சென்னைக்கு கணவனோடு திரும்பியிருந்தாள் ஷக்தி.
அதுபோக, சௌந்தர் மதுரையிலேயே, ஒரு குழந்தைகள் காப்பகம் ஒன்றை நிறுவப்போகிறாராம். அதற்கான கட்டடம் கட்டுதல் போன்ற முதல்கட்ட வேலைகளைக் கூட தொடங்கிவிட்டாராம். இது தன் மாமனைப் பற்றி, ஷக்தியிடம் விஸ்வா சொன்ன சமீபத்திய தகவல்.
நாளும் பொழுதும் இறக்கைகட்டி பறந்தது. தங்களுக்குள் ஒரு புரிதலுக்கு வந்திருந்த விஸ்வா, ஷக்தியின் வாழ்க்கைச் சக்கரம் சுமுகமாகவே சுழன்றது.
அன்று தங்கள் அலுவல் முடிந்து வீடு திரும்பியிருந்த இருவரும், தங்களறையில், தங்களுக்கான தனிமையில் லயித்திருக்க, “நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் விஸ்வா” என்று தொடங்கினாள் ஷக்தி.
“விஷயமா? ம்ம்… நாம ரெண்டு பேரும் அப்பா, அம்மா ஆகப்போறோமா ஷக்தி?” ஆவலாக கேட்டான் விஸ்வா.
“ஏன்? கல்யாணம் ஆனதும் பொண்ணுங்க இந்த விஷயம் தான் சொல்லணுமா? வேற எதுவும் சொல்லக்கூடாதா?” முறைத்தாள் ஷக்தி.
“ஐயோ… அம்மா… ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன். என்னன்னு நீயே சொல்லிடு.”
அழகாக ஜகா வாங்கிய கணவனிடம், “எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு விஸ்வா, வித் ட்ரான்ஸ்ஃபரோட. மும்பை ஹெட்ஆஃபீஸுக்கு போகணுமாம்.” முகத்தில் துளியும் மகிழ்ச்சி இல்லாமல் சொன்னாள் ஷக்தி.
“ஹேய்… இதுவும் சந்தோஷமான விஷயம் தானே ம்மா. அதுக்கு ஏன் மூஞ்சியை ஃப்யூஸ் போன பல்ப் போல டல்லா வச்சிருக்க? நல்லா சிரி ம்மா” என்றான் விஸ்வா.
“இல்ல விஸ்வா, உங்களை விட்டுட்டு என்னால தனியாலாம் அங்கபோய் இருக்க முடியாது.” முகத்தை சுருக்கியபடி சொன்னாள் ஷக்தி.
“ஒஹ்…ஹோ… நீயே தனியாத்தான் போவேன்னு அடம்பிடிச்சாலும், எனக்கு உன்னை தனியா எல்லாம் அனுப்புற ஐடியா இல்லையே. கண்டிப்பா நானும் உங்கூட வருவனே” என்றான் விஸ்வா.
“ஏற்கனவே மதுரைல வளர்த்து வச்சிருக்க தொழிலை காப்பாத்திக்க, அங்கேயும் இங்கேயும், நீங்க அலையுறதை நான் பாத்துட்டு தானே இருக்குறேன் விஸ்வா. இந்த கஷ்டம் உங்களுக்கு என்னால தான் ங்குற எண்ணம் எனக்குள்ள இருந்துட்டே இருக்கு.”
“இப்போ இதையும் விட்டுட்டு, எங்கூட மும்பைக்கு வாங்கன்னு, மனசாட்சியே இல்லாமல் நான் எப்படி உங்ககிட்ட சொல்ல முடியும் விஸ்வா? அதான் ப்ரமோஷன் வேண்டாம்னு சொல்லிடலாம்னு நினைக்கிறேன்.” சோர்ந்து போன குரலில் சொன்னாள் ஷக்தி.
“ஐயையோ… அப்படியெல்லாம் சொல்லிடாதம்மா. உன் தயவுல மும்பைக்கு வந்து, ஹிந்தி எல்லாம் கத்துகிட்டு, உனக்கும், எம்மச்சானுக்கும் டஃப் காம்படீசன் கொடுக்கணும்னு, இப்போ தான் கனவு கண்டேன். தயவு செய்து அதை கலைச்சுடாத” என்றான் விஸ்வா.
“நான் சீரியசா பேசிட்டு இருக்குறேன், நீங்க விளையாடாதீங்க விஸ்வா.” சிணுங்கினாள் ஷக்தி.
“ஹ்ம்ம்… சீரியஸா பேசணுமா? ஓகே, பேசிடலாமே.” சிரித்தபடியே சொன்ன விஸ்வா, “ஷக்தி… வைஃப் மட்டும் தான், ஹஸ்பெண்ட் தன்னோட கேரியர்ல முன்னுக்கு வர்றதுக்காக விட்டுக் குடுக்கணுமா? அதே, ஹஸ்பெண்ட் தன் வைஃப் க்காக விட்டுக்கொடுத்தா குறைஞ்சா போயிடுவான்?”
“நான் என்னைக்குமே உன்னோட முன்னேற்றத்துக்கு, ஏற்றிவிடுற படிக்கல்லா தான் இருக்க ஆசைபடுறேன் ஷக்தி. ஒருநாளும் தடைகல்லா மாறவே மாட்டேன். அதனால ட்ரான்ஸ்ஃபரை அக்சப்ட் பண்ணிக்கோ, நாம ரெண்டு பேருமே மும்பை போலாம்.” உறுதியாக சொன்னான் விஸ்வா.
“இல்ல… இதால உங்க கேரியர்…”
“எனக்கென்னமா? மும்பைக்கு என்னோட கேமராவை தூக்கிட்டு வரப்போறேன். அங்கயும் என் மனசுக்கு பிடிச்சவங்க கூட சேர்ந்து வேலை பாக்கபோறேன். அவ்வளவு தான்… சிம்பிள்.”
நாள் முழுவதும், தான் எண்ணி எண்ணி குழம்பிய விஷயத்தை, மிக எளிதாக கையாண்டு, அதற்கு தீர்வும் சொன்ன கணவன் மீது, காதலோடு மரியாதையும் பொங்கியது ஷக்திக்கு.
அதை கணவனிடம் மறைக்காது ஷக்தி சொல்ல, “மரியாதை…என்னைப் பொருத்தவரை, புருஷன் பெஞ்சாதிக்குள்ள அது தேவையேயில்லை. ஆனா… அந்த காதல்… அதை எவ்வளவு அள்ளி, அள்ளி நீ தந்தாலும் போதாது, போதாதுன்னே நான் சொல்லுவேன், ஓகேயா…” கண்களைச் சிமிட்டியபடிச் சொன்னான் விஸ்வா.
மறுநாள் காலை, விஷயத்தை வீட்டினரிடம் சொல்லி, தாங்கள் எடுத்திருக்கும் முடிவையும் ஷக்தி சொல்ல, தன் குடும்பத்தாரிடம் விஸ்வா சொன்னான்.
பிள்ளைகளின் முடிவில் இருகுடும்பத்தாருமே தலையிடாமல், அவர்களின் முடிவை ஏற்று, மும்பையில் வீடு பார்த்து இருவரையும் குடியமர்த்தி விட்டு வந்தார்கள். கௌரி கூட அவர்களோடு மும்பை வந்தார். ஆனால் சௌந்தர் வரவில்லை.
வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே ஆஃபீஸ் இருந்ததால், ஆஃபீஸுக்கு கால்நடையாகவே சென்று விடுவாள் ஷக்தி.
விஸ்வாவும், ஒரு புகழ்பெற்ற ஃபோட்டோ கிராஃபரிடம் கேமராமேனாக சேர்ந்து கொண்டான்.
இத்தனை மாதகால திருமண வாழ்க்கையில், தனிக் குடித்தனம் போன்றதொரு வாழ்க்கை முறை முதன்முறையாக அமைய, அதையும் ரசித்து வாழ்ந்தார்கள் இருவரும்.
காலம் யாருக்கும் காத்திருக்காமல் நகர, மும்பை வந்த மூன்றாவது மாதம் தாய்மையடைந்தாள் ஷக்தி. தகவல் கைபேசி மூலம் இருவர் வீட்டுக்கும் காற்றலையில் பறந்தது.
ஏற்கனவே எல்லாரிடமும் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்ததால், விஷயத்தை கேள்விபட்டதும் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்தனர். உடனே புறப்பட்டு வந்து ஷக்தியை பார்த்து விட்டு வேறு சென்றனர்.
பஞ்சவர்ணமோ, பேத்தி வேண்டாமென்று எத்தனைச் சொல்லியும், அவர்களோடே தங்கிவிட்டார்.
கர்ப்பகால அவஸ்தைகள் இல்லாததாலும், அப்பத்தாவின் கவனிப்பாலும், ஷக்தியின் உடல்நிலை நன்றாகவே இருந்தது.
அதனால் விடுமுறை எடுக்காமல் எப்போதும் போல வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.
அன்றும் அப்படித்தான் வேலைக்கு நடந்து போய் கொண்டிருக்கும் போது, யாரோ தன்னை உற்று பார்ப்பது போல உள்ளுணர்வு சொல்லியது ஷக்திக்கு.
சட்டென்று ஒரு திசையை குறிவைத்து ஷக்தி திரும்பி பார்க்க, சடாரென்று அங்கிருந்த தூணுக்கு பின்னால் மறைந்து கொண்டது ஒரு உருவம்.
ஆனால் ஷக்தியோ, அந்த உருவத்தை சௌந்தரென்று அடையாளம் கண்டு கொண்டாள்.
‘நேரில் வந்தால் நான் கோபப்படுவேன் என்று மறைந்து நின்று பார்க்கிறார் போலும்.’ எண்ணிக் கொண்டவள், அவரைக் கண்டு கொள்ளாதது போலவே நடக்க, வாரம் தோறும் குறிப்பிட்ட நாளில், தவறாது வந்தார் சௌந்தர்.
அவரின் வருகையை விஸ்வாவிடம் சொன்னபோது, “உன்னை தொந்தரவு பண்ணாம தானே பாத்துட்டு போறாரு… தயவுசெய்து எதுவும் சொல்லிடாத ஷக்தி” என்று பதறினான்.
விரட்ட, விரட்ட காலைச்சுற்றி வரும் பூனைக்குட்டியாய் வரும் மனிதரைக் கண்டு மலைப்பாக இருந்தது ஷக்திக்கு.
இப்போதெல்லாம் அந்த குறிப்பிட்ட நாளில் கண்களில் கூலர்ஸ்ஸோடு நடக்க ஆரம்பித்திருக்கிறாள் ஷக்தி. அதனால் சௌந்தரின் முகத்தில் தோன்றும் உணர்வுகளை, அவரறியாமலேயே இவளால் படிக்க முடிகிறது.
ஷக்தியின் வயிற்று கருவின் வயது ஆறு மாதமாக, பூசினாற்போல லேசாக மேடிட ஆரம்பித்திருந்தது அவளின் மணிவயிறு.
சௌந்தரின் முகத்தில், இப்போதெல்லாம் ஒரு பொருள் விளங்கா தவிப்பையும் படிக்க முடிகிறது ஷக்தியால். புல் முளைத்திருக்கும் கழனி போல, முகமெங்கும் தாடி வேறு முளைத்திருந்தது.
‘இந்த மனுஷன், ஏன் ஷேவிங் பண்ணாம அலையுறார்? ஏதும் பிரச்சனையா என்ன?’ மனதில் கேள்வியெழும் போதே, முகத்தில் தாடியோடு இருக்கும் கணவனும், கடந்த தடவை வீடியோ காலில் பேசும் போது தாடியோடு கண்ட தகப்பனின் முகமும் கண்முன்னே வந்து போனது.
அன்று இரவு கணவனிடம், “ஏன் விஸ்வா… தாடியை ஷேவிங் பண்ணலையா நீங்க?” சாதாரணமாக இவள் கேட்க, “உன்னோட டெலிவரிக்கப்புறம் பண்ணிக்கிறேன் டா” என்றான் கணவன்.
மறுநாள் தாயிடம் பேசும்போது, “அப்பா ஏன் மா ஷேவிங் பண்ணாம இருக்காங்க?” என்று ஷக்தி கேட்க, “உன் டெலிவரிக்கப்புறம் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்க ஷக்தி” என்று கலைவாணியும் சொன்னார்.
ஷக்தி, கலைவாணியோடு பேசும் போது, அருகேயிருந்து கேட்டுக்கொண்டிருந்த பஞ்சவர்ணம், “பொதுவா பொண்டாட்டி கர்ப்பமா இருக்கும் போது, அவ பெத்துபிழைக்குற வரைக்கும் புருஷன்மார் தான், தவவாழ்வு போல தாடியோட இருப்பாங்க. இங்க உன் அப்பனும் இருக்குறான்” என்றார் பெருமையாக.
இப்போது தாடியடர்ந்த சௌந்தரின் முகம் மனதில் நிழலாட, ‘ஓ… அவரும் அதனால் தான் தாடி வளர்க்கிறாரா?’ ஒரு உயிரை சுமந்து கொண்டிருக்கும் ஷக்தியின் மனம் லேசாக நெகிழ்ந்தது.
ஷக்தியின் எட்டாவது மாதம், அலுவலகத்தில் அவள் எடுத்திருந்த ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்து கொடுக்கவே, அவளின் கர்ப்பகாலத்தை முன்னிட்டு வொர்க் ஃப்ரம் ஹோம் ஏற்பாடு செய்து கொடுக்க, மூவரும் சென்னைக்கு திரும்பி வந்தார்கள்.
ஊருக்கு வந்த இரண்டு வாரத்தில், இவளைப் பார்க்க வந்திருந்த விஸ்வாவின் குடும்பத்தினர், ஷக்தியின் வளைகாப்பை பற்றி பேசினார்கள்.
இம்முறை அவர்களோடு சென்னை வந்திருந்த கல்யாணி அம்மா, “வளைகாப்பு மதுரையில் எங்கவீட்டுல வச்சி தான் நடக்கணும். அதுவுமில்லாம, எங்க வீட்டு வாரிசை சுமக்குற ஷக்தியை, எங்களுக்கும் கவனிச்சுக்கணும்னு ஆசையிருக்காதா? அதனால இப்பவே எங்ககூட அனுப்பி வைங்களேன்” என்று ஆசையாக கேட்டார். அவரின் ஆசை நியாயமாக இருக்கவே, அவர்களோடு பயணப்பட்டார்கள் விஸ்வாவும், ஷக்தியும்.
தன் மனம் கவர்ந்த வீட்டில், மேடிட்ட வயிறோடு குட்டித்தேர் போல அசைந்தாடி நடப்பது சுகானுபாவமாக இருக்க, அந்த நாட்களை கணவனோடு இரசித்து கழித்தாள் ஷக்தி.
‘சென்னை வந்துவிட்ட இந்த இரண்டு வாரங்களில் தன்னைப் பார்க்காத சௌந்தர், நான் மதுரை வீட்டுக்கு வந்துவிட்டேன் என்ற தகவல் தெரிந்தால், வந்து நிற்பார்’ என்று ஷக்தி எதிர்பார்க்க, அவர் வரவேயில்லை.
ஒன்பதாவது மாதத்தின் தொடக்கத்தில், ஒரு நல்ல நாளில் ஷக்தியின் வளைகாப்பு வைத்திருக்க, அன்று, மனைவி கௌரியோடு வந்து நின்றார் சௌந்தர்…