“பரவாயில்லை தாத்தா, ஆச்சிக்கு துணைக்கு போறேன்” என பார்த்தி சொல்ல, தாத்தாவும் சரிதான் என விட்டு விட்டார்.

ஆஷுதோஷுக்கு உயர் இரத்த அழுத்தம், மகள் மருமகனை நேரில் காணவும்தான் காயத்ரி தைரியம் கொண்டார்.

அப்பாவை காண ஐ சி யூ உள்ளே சென்றாள் சுஹானா. மகளை காணவும் ஆஷுதோஷின் கண்கள் எல்லாம் நீரால் நிறைந்து விட, மூச்சை உள் இழுத்துக் கொண்டு அவளைப் பார்த்தார்.

அப்பாவின் கை பற்றிக் கொண்டவள், “எமோஷனல் ஆகாதீங்க டாடி, ரிலாக்ஸ்” என்றாள்.

மகளின் கையை பிடித்து மார்பில் வைத்துக் கொண்டவர் கண்களை மூடிக் கொண்டு அழுதார்.

“நிவாஸும் என் பேச்சு கேட்க மாட்டேங்குறான் சுஹா, உன்னை மாதிரியே அவனுக்கும் இந்த டாடியை பிடிக்கல” என புலம்பினார்.

சரி தவறெல்லாம் இப்போது பேச முடியாதே, ஆதலால் மனதை குழப்பிக் கொள்ளாமல் இருங்கள், எங்களுக்கும் உங்கள் மீது அன்பிருக்கிறது, நீங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம் என ஆறுதலாக பேசினாள்.

மகள் வந்ததில் மகிழ்ச்சி என்பதை வெளிப்படையாக சொன்னார்.

உங்களுக்கு குணமாகும் வரை உடனிருப்பேன் என உறுதி தந்தாள் சுஹானா.

காயத்ரியை வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்டு வரும் படி சொல்லி விட்டு கணவனும் மனைவியுமாகத்தான் அங்கே தங்கியிருந்தனர்.

அடுத்த நாள் ஆஷுதோஷ் அறைக்கு மாற்றம் செய்யப் பட்டு விட்டார். பார்த்தி அவரை காணவெல்லாம் செல்லவில்லை, சுஹானாவும் கணவனுக்கு அந்த சங்கடத்தை தரவில்லை.

குளிக்க, ஓய்வெடுக்க என மருத்துவமனை பக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துக் கொண்டான் பார்த்தி. வீட்டுக்கு போகலாமே என சுஹானா சொல்லவில்லை, போகிறேன் என்று அவனே சொல்லியிருந்தால் கூட வேண்டாம் என மறுத்திருந்திருப்பாள்.

காயத்ரி கூட ஏன் இப்படி என மகளிடம் மனத் தாங்கல் கொண்டார்.

“பார்த்தி எனக்காக வந்திருக்கார்மா, டாடி பார்த்திகிட்ட ஸாரி கேட்க வேணாம், அட்லீஸ்ட் அவர் தப்பை உணரவாவது செய்யணும்ல மா? அதுவரை பார்த்திய வீட்டுக்கு வர சொல்லி கேட்க மாட்டேன், ஓட்டல்லேயே ஸ்டே பண்ணிக்கட்டும்” என  சொல்லி விட்டாள் சுஹானா.

மகளின் திருமணத்திற்கு முன் கணவர் பார்த்தியிடம் நடந்து கொண்ட முறை குறித்து பேசுகிறாள் மகள் என நினைத்துக்கொண்ட காயத்ரியும் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை.

இரண்டு தினங்களில் ஆஷுதோஷ் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு விட்டார். பார்த்தி மும்பை வந்ததே அவருக்கு தெரியாது. மகளை சில நாட்கள் தன்னுடன் தங்கும் படி அவர் கேட்டுக் கொள்ள, சுஹானாவால் மறுக்க முடியவில்லை.

அன்று மனைவியுடன் சென்னை திரும்பும் திட்டத்தில்தான் இருந்தான் பார்த்தி. அம்மாவிடம் சொல்லி விட்டு கணவனை சந்திக்க வந்தாள் சுஹானா.

“சீக்கிரம் வந்திட்ட” என்றவன் அவளது அப்பா பற்றி கேட்டறிந்து கொண்டான்.

இங்கே தங்கப் போவதை எப்படி சொல்ல என அவள் யோசித்துக் கொண்டிருக்க, “கொஞ்ச நேரம் முன்னதான் அம்மா கால் பண்ணினாங்க, ஊர்ல திருவிழா வருது, நாம கண்டிப்பா வரணுமாம், உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க, லீவ் எல்லாம் எடுக்க வேணாம், சண்டேலதான் வருது, போலாம்தானே சுஹா?” என்றான்.

“பார்த்தி…” என தயக்கமாக அழைத்தாள்.

பேக் செய்து கொண்டிருந்ததை விட்டவன் அவள் பக்கத்தில் அமர்ந்து, “ஊருக்கு வர முடியாதா? வேற வேலை இருக்கா? என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்? அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன்” என்றான்.

“அதில்ல பார்த்தி”

“நிவாஸ் பத்தின கவலையா? அவர் ஒன்னும் விவரம் இல்லாதவர் இல்லை, அப்பாவாவே இருந்தாலும் எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்க முடியாது, கோவம் குறைஞ்சதும் தானா வருவார்” என ஆறுதலாக சொன்னான்.

“நான் அண்ணாவை நினச்செல்லாம் பயப்படல பார்த்தி, மார்னிங்தான் நிவாஸ் பெங்களூருல இருக்கிறது தெரிஞ்சது, கான்டாக்ட் பண்ண முடியலை, பொறுமையா அவன்கிட்ட பேசிக்குவேன்”

“அப்புறம் என்ன ஆச்சி?”

“டாடி கொஞ்ச நாள் என்னை அவர் கூட ஸ்டே பண்ண சொல்லி கேட்கிறார் பார்த்தி, இப்ப அண்ணாவும் இங்க இல்லை, அம்மாவும் டல்லா இருக்காங்க, டாடிகிட்ட முடியாதுன்னு சொல்ல வரலை, உங்கள்ட்ட டிஸ்கஸ் பண்ணாமலேயே சரின்னு சொல்லிட்டேன்” என்றாள்.

அவன் என்ன சொல்வானோ எப்படி எடுப்பானோ என உள்ளுக்குள் ஒரே தவிப்பு.

ஆஷுதோஷ் மருத்துவமனையில் இருந்த போது அவரின் நிலை பற்றி கேட்டறிய சுஹானாவுடன் பார்த்தியும் மருத்துவரை காண சென்றிருந்தான்.

இரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை போடாமல் விட்டதால் வந்த விளைவு இது, இப்போது நன்றாக இருக்கிறார், முழு பரிசோதனையும் செய்தாகி விட்டது, அறிவுறுத்தியபடி மருந்துகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் போதும், பயப்பட தேவையில்லை, ஆஷுதோஷ் அவரது அன்றாட பணிகளை கவனிக்க ஆரம்பிக்கலாம் எனதான் மருத்துவர் சொல்லியிருந்தார்.

ஆதலால் சுஹானா இங்கு தங்குவது குறித்து அவன் சிந்தித்திருக்கவே இல்லை, அவளுக்கும் வேலைக்கு செல்ல வேண்டும், ஆஷுதோஷும் வீட்டுக்கு வந்து விட்டார் என்பதால் இன்று தன்னுடன் சென்னைக்கு புறப்பட்டு விடுவாள் என்றுதான் நினைத்திருந்தான்.

அவள் கேட்பது அவன் எதிர்பாராதது என்பதால் சில நொடிகள் மௌனமாகி விட்டான்.

“டாடி மேல எனக்கிருக்க கோவம், வருத்தம் எல்லாம் அப்படியேதான் இருக்கு பார்த்தி, ஆனா இப்ப அதை காட்டுறது சரியா இருக்காதுதானே?” எனக் கேட்டாள்.

“சேச்ச… அவர்கிட்ட கோவ படுன்னு எங்க நான் சொன்னேன். திடீர்னு நீ வர மாட்டங்கவும்…” என்றவன் அடுத்து எதுவும் சொல்லாமல் அவளை பாவமாக பார்த்தான்.

“கோயில் திருவிழா எப்போன்னு சொல்லுங்க, நான் வர பார்க்கிறேன்”

தலையை கோதி கொண்டவன், “அதெல்லாம் பார்த்துக்கலாம், தங்கிட்டு வா” என்றான்.

“நிவாஸ் இங்க வந்திட்டா அடுத்த நாளே வந்திடுவேன்” என அவள் சொல்ல தலையாட்டிக் கொண்டான்.

கணவனை பிரிவது என்பதை விட அவனுக்கு நியாயம் செய்யாத நிலையில் இருப்பதாக உணர்ந்தவள், அப்பாவுடன் இப்போது இருக்க வேண்டிய அவசியத்தை இன்னொரு முறை விளக்கினாள்.

“இவ்ளோ எக்ஸ்பிளைன் பண்ண வேணாம் ஆச்சி, இங்க இருக்கிறது உன் விருப்பம், அதுக்கெல்லாம் நான் மறுப்பு சொல்ல மாட்டேன். அவர் பேசினதையும் நீ நினைச்சிட்டே இருக்க வேணாம், அம்மா வீட்ல இருக்க உனக்கும் ஆசை இருக்கும்தானே, அவர் என்னை பேசினதை போட்டு குழப்பிக்காம ரிலாக்ஸா இருந்திட்டு வா” என்றான்.

அவனது தோளில் சாய்ந்து கொண்டவள், “என்னாலேயும் ரொம்ப யோசிக்க முடியலை பார்த்தி, நானே டவுனாதான் ஃபீல் பண்றேன், இப்போதைக்கு இங்க தங்குறேன், சீக்கிரம் உங்கள்ட்ட வந்திடுறேன்” என்றாள்.

“உங்கப்பா நல்லாருக்காங்க ஆச்சி, ஏன் டவுனா இருக்கீங்க?”

“தெரியலை, என் பார்த்தி என் கூட இருக்க மாட்டார்ங்கிறதாலயா இருக்கும்”

“ப்ராக்டிகலா அது சரியா வராதுன்னு தெரியும்தானே ஆச்சி?” என அவன் கேட்க, ம் என்றாள்.

“உனக்கு லீவ் கிடைக்குமா?” என விசாரித்தான். சாதாரணமாக என்றால் கடினம்தான், அப்பாவின் உடல்நிலை சொல்லி கேட்டால் கிடைத்து விடும் என்றாள்.

இப்போதே கேட்க சொன்னான். ஒரு வேளை விடுப்பு கிடைக்காது போனால்? என நினைத்தான்.

“பார்த்தி… சப்போஸ் ரொம்ப நாள் லீவ் கிடைக்காட்டாலும் டூ த்ரீ டேஸ் கண்டிப்பா கிடைக்கும், எப்படி இருந்தாலும் இன்னிக்கு நான் வரலை” என்றாள்.

“ரொம்ப சுயநலமா இருக்கேன்ல நான்?”

“சுஹானாமேனியா உங்களுக்கு”

“ம்… நைட் நான் கிளம்பற வரைக்குமாவது கூட இருப்பியா?”

“பார்த்தி! உடனே உங்களை விட்டுட்டு கிளம்புவேன்னு நினைச்சீங்களா?”

“இருக்க கொஞ்ச நேரத்துல சண்டை வம்புக்கெல்லாம் தடா போட்ரலாம், இங்க வந்த அன்னிலேருந்து நமக்கே நமக்குன்னு டைம் கிடைக்கவே இல்லை, இப்ப ஸ்பாயில் பண்ணிக்கணுமா?” என அவன் கேட்க, அவனது மடியில் படுத்து விட்டாள்.

அவனும் அப்படியே படுக்கையில் சாய, இவள் மேலே நகர்ந்து அவன் நெஞ்சில் தலை வைத்துக் கொண்டாள்.

“வீட்டுக்கு போய் ரொம்ப சோக பாட்டு பாடாம நார்மலா இருங்க” என அறிவுரை சொன்னாள்.

சிரித்தவன், “வைஃப் ஊர்ல இல்லைனா ஜாலியாதான் இருப்பாங்க ஆச்சி” என்றான்.

“ம்ம்… விசாரிச்சு தெரிஞ்சுப்பேன், ஓவர் ஜாலின்னு தெரிஞ்சா வந்து சும்மா விட மாட்டேன்” என மிரட்டினாள்.

“என்ன பண்ணுவ?”

“ரொம்ப மோசமா சமைச்சு மிச்சம் வைக்காம சாப்பிடணும்னு சொல்லிடுவேன்” என அவள் தீவிர தொனியில் சொல்ல, நன்றாக சிரித்தான்.

அவளும் சேர்ந்து சிரித்தவள், சிறிது நேரத்தில் அமைதியாகி விட்டாள். அவனும் அமைதியாக அவளை அணைத்துக் கொண்டான்.

இதென்ன சிறு பிள்ளைகளை போல சில நாள் பிரிவுக்கு போய் இத்தனை வருத்தம் கொள்வது என இருவருக்குமே தோன்றாமல் இல்லை.

சில விஷயங்கள் எல்லாம் வயது, பக்குவம், அறிவு என அனைத்திற்கும் அப்பாற்பட்டதாகி விடுகிறது!