“பெர்ஃபெக்ட்!” என சொல்லி நோட்டை எடுத்து தள்ளி வைத்தான்.

“ஷ்ஷ்ஷ் பார்த்தி, இது பார்த்து எழுதிருக்கேன், பார்க்காம எழுத தெரியணும் எனக்கு” என்றவள் மீண்டும் நோட்டை கையில் எடுத்துக் கொண்டாள்.

“ஆச்சி…” பொய்யான அழுகையோடு அழைத்தான்.

“உங்களுக்கும் படிக்க எழுதன்னு ஏதாவது இருக்கும்தானே? கொஞ்ச நேரம் அதை பார்க்க கூடாதா?” எனக் கேட்டவள் தன் பெயரை எழுதி எழுதி பார்த்தாள்.

“எனக்கு உன்னைத்தான் படிக்கணும்” என்றவன், அவளது வெற்று முதுகில் முத்தமிட்டு, “இப்படித்தான் எழுதணும்” என்றான்.

சிரித்தவள், “ம்ம்… பார்த்தி ஸார் பயங்கரமா பேசுறார், எல்லாம் பத்து மணிக்கு மேலதான்” என்றாள்.

“எப்போலேருந்து ஆச்சி உங்களுக்கு ஈவு இரக்கம் எல்லாம் இல்லாம போச்சு?” எனக் கேட்டான்.

“விளையாட்டு போதும் பார்த்தி, நீங்க வம்பு செய்ய செய்ய டைம்தான் போகுது” என அவள் தீவிர தொனியில் சொல்ல, அப்படியே அவளை தூக்கி தரையில் அமர வைத்து விட்டு மனமே இல்லாமல் எழுந்து கொண்டான்.

அவனை கண்டு கொள்ளாமல் அவள் எழுத, செல்லமாக அவளை முறைத்துக் கொண்டே அகன்றான்.

அவளுக்கு பிடிக்கும் என காய்கறி புலாவ் செய்து கொண்டிருந்தான். அவன் எழுதியதை பார்க்காமல் தன் பெயரை தமிழில் எழுத கற்றுக் கொண்ட சுஹானா தான் எழுதியதை காண்பிக்க ஆசையாக அவனிடம் ஓடி வந்தாள்.

“பார்த்தி நான் பார்க்காம எழுதினேன், நல்லா எழுத வருது, பாருங்களேன்” குழந்தை போல ஆர்ப்பரித்தாள்.

அவளது வலது கையை பிடித்து முத்தமிட்டவன், “சூப்பரா எழுதிருக்கீங்க, இப்பவாவாது அந்த நோட்டை ஓரமா வையுங்க” என்றான்.

“நீங்கதான் இன்னும் சமைச்சு முடிக்கலைல, உங்க நேம் எழுதி தாங்க, அதையும் பழகிக்கிறேன்” என்றாள்.

“அதெல்லாம் அவசியம் இல்லை ஆச்சி”

“அவசியம்தான், நீங்களும் நம்ம ரெண்டு பேர் நேம்ஸ் ஹிந்தில எழுத கத்துக்கணும், நான் சொல்லி தர்றேன்” என்றாள்.

“எழுத்து வடிவமே தேவையில்லை ஆச்சி, உங்களை உள்ளுக்குள்ள எழுதி வச்சிருக்கேன்” என இடப் பக்க மார்பை சுட்டிக் காண்பித்து சொன்னான்.

“ஆஹாஹ்! எங்க காட்டுங்க” என அவள் கேட்க, வேகமாக டி ஷர்ட்டை இறக்கி நெஞ்சத்தை காண்பித்தான்.

“ஒன்னும் தெரியலையே பார்த்தி” என உதடுகள் பிதுக்கினாள்.

“அத பார்க்க முடியாது, கேளுங்க” என சொல்லி அவளை இழுத்து அவளின் காதை தன் மார்பில் வைத்து அழுத்தினான்.

“எனக்கு எதுவும் கேட்கல” என சொல்லி அவள் விலக, “சரி விடுங்க, உங்களுக்குள்ள என் பேர் கேட்குதான்னு பார்க்கிறேன்” என்றான்.

“இப்படி விளையாடிட்டு இருந்தா புலாவ் தீஞ்சு போயிடும், பசிக்குது பார்த்தி” என அவள் சொல்ல, “வயித்து பசியை மட்டும் கவனிச்சா போதாது ஆச்சி” என முணு முணுப்பாக சொல்லி சமையலில் கவனம் வைத்தான்.

“பார்த்தி உங்க நேம்?” என அவள் கேட்க, “என் நேம் பெருசா இருக்கும், இன்னிக்கு வேணாம், நாளைக்கு கத்துக்கலாம். நல்ல பிள்ளையா ரைதா ரெடி பண்ணுங்க” என சொல்லி விட்டான்.

அவளும் ரைதா செய்தாள்.

சாப்பிட்ட பிறகு, அதிகமாக சாப்பிட்டு விட்டேன், வயிறு என்னவோ போலிருக்கிறது என்றாள்.

வீட்டின் வெளியில் வராண்டாவில் நடந்தார்கள். கால் மணி நேர நடைக்கு பின் வீட்டுக்கு வந்தார்கள். அவளுக்கு பருக சுடு தண்ணீர் கொடுத்தான்.

 அவள் வேண்டுமென்றே இன்னும் சரியாகாதது போல முகத்தை வைத்துக் கொள்ள, “வீட்டு சாப்பாடுதானே ஆச்சி, எதுவும் செய்யாது, நீங்க அதையே நினைக்காம தூங்குங்க, காலைல நல்லாகிடும்” என்றான்.

“என்ன தூங்கவா?”

“பின்ன?” எனக் கேட்டவனை கட்டிக் கொண்டாள்.

“எனக்கு தூங்க வேணாம்” என அவள் சொல்ல, “முதல்ல உடம்பு சரியாகட்டும்” என சொல்லி அவளை மென்மையாக அணைத்தான்.

“நல்லா தெம்பா இருக்கேன் பார்த்தி” என்றவள் அவனது கன்னத்தை ஆசையாக கடித்தாள்.

“எனக்காக சொல்லக் கூடாது” என்றவனின் இதழ்களையும் தண்டித்தாள். அதன் பின் அவனும் வசமிழந்து விட்டான்.

முதல் நாளிரவு போல தயக்கங்களும் சந்தேகங்களும் அல்லாமல் துணையின் மீதான காதலை அள்ளித் தெளித்து, ஆசை வெள்ளத்தில் தத்தளித்து இணை கூடினார்கள்.

அடுத்த இரண்டு நாட்களும் எப்படி ஓடின என்றே அவர்களுக்கு தெரியவில்லை.

தாத்தாவும் பாட்டியும் சென்னைக்கு திரும்பிய போது மனைவியை தடையில்லாமல் ஒருமையில் அழைத்து பேச பழகியிருந்தான் பார்த்தி.

“அடேய் நாங்க கூட இல்லாம போன இந்த ரெண்டு வாரத்துல எந்த மரத்தடில போய் உட்கார்ந்த, நல்ல படியா ஞானம் வந்திடுச்சே உனக்கு” என கிண்டல் செய்தார் தாத்தா.

பேத்தியின் வதனத்தில் தெரிந்த புதுமையான மலர்ச்சியில் பாட்டியின் மனம் நிறைந்து போனது.

சுஹானாவின் கன்னங்கள் பற்றிய பாட்டி அவளின் நெற்றியில் முத்தமிட்டு, “இப்படியே சந்தோஷமா இருக்கணும் சுஹா!” என வாழ்த்தினார்.

“என்னாச்சி ஆச்சி உனக்கு? நான் எப்பவுமே ஹேப்பியாதான் இருக்கேன்” என்றாள் சுஹானா.

“அதைத்தான் சொன்னேன், எப்பவும் இப்படியே இரு” என சமாளித்து விட்டார் பாட்டி.

தனிமையில் தன் கணவனிடம் பாட்டி சொன்னதை பகிர்ந்த சுஹானா, “ஆச்சிக்கு நம்மள பத்தி ஏதோ தெரிஞ்சிருக்கு, ஆனா சமாளிச்சுட்டாங்க, என் டவுட் என்னன்னா அவங்க எப்படி தெரிஞ்சுக்கிட்டாங்க பார்த்தி?” என வியப்பாக கேட்டாள்.

“எனக்கும் சரியா தெரியலை ஆச்சி, ஆனா இப்ப உன் அழகு கூடி போயிருக்கு” என்றவன் விழிகளால் அவளை விழுங்கினான்.

அவளும் அவனை ஆசையாக பார்த்து, “ம்ம்… நீங்க கூட அப்படித்தான் தெரியுறீங்க” என்றாள்.

“சும்மா வாயால சொல்லக்கூடாது சுஹா”

“வேற என்ன பண்ணணும்?” எனக் கேட்டவளை தன் காதலில் திளைக்க வைத்தான்.

மனைவியாக தனக்கு இதையெல்லாம் செய்ய வேண்டும் என பார்த்தியிடம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை, மாறாக அனைத்தையும் அவளுக்கு பார்த்து பார்த்து செய்தான். அவன் செய்கிறான் என்பதால் தள்ளி நிற்காமல் கணவனுடன் இணைந்தே அவளும் செய்தாள்.

திருமணம் ஆனது முதலாய் தள்ளியிருந்த நாட்களுக்கும் சேர்த்து வைத்து காதலில் கசிந்துருகினார்கள். ஒவ்வொரு நாளும் மிக மிக இனிமையாகவே அவர்களுக்கு நகர்ந்தது.

ஒரு நாள் அதிகாலையில் சுஹானாவுக்கு அவளது அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆஷுதோஷ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார்.

நிவாஸின் காதல் மீண்டும் துளிர் விட்டது தெரிந்து மகனை திட்டியிருக்கிறார், அவனும் எதிர்த்து பேசியிருக்கிறான். இருவருக்கும் சண்டை வலுவடைய, கோவத்தில் மகனை வீட்டை விட்டு வெளியேறும் படி சத்தம் போட்டிருக்கிறார். அவனும் சென்று விட்டான்.

இப்போது நிவாஸ் எங்கே என்றே தெரியவில்லை, அவனது கைப்பேசி அணைத்து வைக்க பட்டிருக்கிறது, ஐ சி யூ வில் இருக்கிறார் உன் அப்பா என மகளிடம் காயத்ரி கண்ணீர் விட, சுஹானாவுக்கும் அழுகையாக வந்தது.

மனைவியிடமிருந்து அலைபேசியை வாங்கி பேசினான் பார்த்தி. மாமியாருக்கு தைரியம் சொன்னவன் உடனே மும்பை செல்ல தங்களுக்கு டிக்கெட் போட்டு விட்டான்.

தாத்தாவும் பாட்டியும் ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய போதே பழைய படி இயல்பாக நடமாட நாட்கள் பிடித்தது. மீண்டும் ஒரு தொலைதூர பயணம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளுமா என பார்த்திக்கு அச்சம், விஷயம் தெரிந்தால் வராமலும் இருக்க மாட்டார்கள். ஆகவே அவர்களிடம் உண்மையை சொல்லவில்லை.

சுஹானாவின் பெயரில் ஏதோ இடம் இருக்கிறது, அதை விற்பனை செய்ய போகிறார்கள், ஆதலால் இருவரும் அங்கே செல்கிறோம் என்றே பெரியவர்களிடம் சொல்லியிருந்தான்.

அங்கே நீ போக வேண்டுமா என கேட்டார்தான் தாத்தா, அவன் சொன்ன பொய் நிஜமாக இருந்திருந்தால் அவனே அங்கு செல்வதை தவிர்த்திருப்பான், இப்போது மனைவியை தனியாக எப்படி விடுவான்?