கொஞ்சும் கிளிகள் 

   அத்தியாயம் 14

        மெல்ல படி ஏறி மேலே செல்ல, பிள்ளைகள் சத்தம் மட்டுமே கேட்டது. ஒரு யோசனையோடு தான் உள்ளே சென்றாள். அங்கு பிள்ளைகள் தாயை கண்டதும் ஓடி வந்தார்கள். அவள் ஒரு கையில் மாவு இருக்க, மற்றொரு கையில் டீ கேக் இருந்தது.  தாயிடம் இருந்து வேகமாக வாங்கியவர்கள்,  ஒரு இடத்தில் அமர்ந்து பிரித்து உண்ண தொடங்கினார்கள். பசி போல, மனம் கலங்கியது தாய்க்கு.  இவர்கள் இப்படி எத்தனை நாள் பசியில் தனியே விட முடியும். ஒரு யோசனையும் வர மாட்டாது. 

     இந்த தெருவில் வேற டியூசன் இல்லை. பக்கத்து தெரு என்றாலும் இவர்கள் வயதுக்கு எடுக்க மாட்டார்கள். தனியே ஆள் வைத்து கவனித்து கொள்ளும் அளவுக்கு வசதி இல்லை. இவள் வீட்டில் இருந்து பிள்ளைகளை பார்க்க வறுமையும் விடாது. சோர்ந்து போய் திரும்பி பார்க்க, அங்கு ஒரு மூலையில் அமர்ந்து இருந்தான் வெற்றி வேல்.

        அவனை பார்த்ததும் ஒரு பெருமூச்சு வந்தது. கையில் இருந்த மாவை உள்ளே வைக்க போக, காலில் பல தட்டு பட்டது. குனிந்து பார்க்க, நிறைய பொருட்கள்.  எல்லா வகை சாக்லெட், இனிப்பு, கேக், பிஸ்கெட், பழம் வகை, கார வகை அத்தோடு  விளையாட்டு பொருட்கள். பெண் பிள்ளைகள் விளையாடும் அனைத்தும்  இருந்தது. அதற்கு அடுத்து உடைகள் சிதறி கிடந்தன. எப்படியும்  இருபது உடைகளுக்கு மேல் இருக்கும். அன்று பிள்ளைகள் உடையை பார்த்ததில் கவனம் வைத்து ஒரே மாதிரி வேற கலரில் எடுத்து வந்துள்ளான் போல… 

    என்ன இதெல்லாம் என்பது போல் பார்க்க, பாவமாக இருந்தான் வெற்றி வேல். அவனை கடந்து உள்ளே அடுப்படி சென்றவள், வாங்கி வந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்க, அதிர்ந்து பார்த்தான் வெற்றி.

       ‘ஏன் வந்தாய்? என்ன வேண்டும்? வெளிய போ, என் முகத்தில் முழிக்காததே…” என்று பலதும் எதிர் பார்த்து தான் வந்தான். ஆனால், சரண்யா அவனை ஒரு பொருட்டாக கூட  எண்ண வில்லை. வீட்டில் இருக்கும் நாற்காலி போல், நாற்காலி மீது அமர்ந்து  இருப்பவனையும் நினைத்தாள் போல…

        பிள்ளைகள் தங்கள் செயலில் மூழ்கி இருக்க, வேகமாக  அடுப்படி சென்று ஒரு பாத்திரத்தில் மாவை ஊற்றி வைக்க, பூனை நடை போட்டு அருகில் வந்தான் வெற்றி வேல். அவள் உடலில் ஒரு இறுக்கம், கண்களில் எச்சரிக்கை உணர்வு வர, ஜாக்கிரதையாக அவனை திரும்பி பார்த்தாள்.

      வெற்றி சங்கட பட்டு போனான். வெளி ஆட்களிடம் தான் கவனம் வேண்டும், வீட்டு மனிதர்களிடம் என்ன எச்சரிக்கை, பயம். இதை சொல்ல முடியாது, தன் செயலும் அப்படி தான். நான் வெளி ஆளா என்று கேட்டால், ஆமாம் என்று தயங்காமல் சொல்லுவாள்.  அவள் முகத்தில் உஷ்ணம் ஏறியது, தான் நெருங்கி நின்றதில் தான் என்று புரிந்து தள்ளி நின்று கொண்டான். தன் வாசம் அருகில் செல்வதை கூட அவள் விரும்ப வில்லை, புரிந்தது. ஆனாலும், தள்ளியே நிற்க முடியாது.  வாழ்க்கையை சரி செய்தே ஆகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. தற்போது விவரம் அறியா பிள்ளைகள், விவரம் அறியும் போது குடும்பமாக தான் நிற்க வேண்டும். அப்பா, அம்மா என்ற கூட்டுக்குள் தான் பிள்ளைகள் வளர வேண்டும். அதற்கான கடமை, பொறுப்பு இருவருக்குமே உண்டு.

      அவள் கையை கட்டி கொண்டு அழுத்தமாக திரும்பி அவனை பார்க்க, சங்கடமாக தன் கையை அவள் முன் நீட்டினான்.  கையில் இரத்த காயம், நன்றாக வீங்கி சிவந்து போய் இருந்தது. பதற்றமெல்லாம் எதுவுமில்லை கேள்வியாக தான் பார்த்தாள். உன்னோடு எனக்கு என்ன பேச்சு…

      “அது, விஜி குட்டி தான் கடிச்சு வச்சிருச்சு…” என்றான் தயங்கி.

       அதிர்ந்தவள் , புருவத்தை நெறித்து ஏன் என்று பார்த்தாள். சேட்டை கார பெண் தானே தவிர இதுவரை யாரையும் கடித்தாள் என்று ஒரு  புகாரும் வந்ததில்லை. பள்ளி செல்லும் குழந்தை, பள்ளியில் கூட யாரிடமும் அவ்வாறு நடந்து கொண்டது இல்லையே…

       “அது, நான் தூக்குனேன்… அதான் பயந்து அலறி”

       சரண்யா பார்வை கூர்மை பெற்றது. அதற்காகவே இரத்தம் வரும் அளவு கடிக்க போகிறாள்.

            அவளின் சந்தேக பார்வையில் முழுதாக உடைந்தவன் கண்களும் கலங்கியது.   “நான் அவங்க அப்பா…” என்று பல்லை கடித்தவன்.

      “ஸ்கூல் யூனிஃபார்ம் தான் போட்டு இருந்தாங்க. எல்லாம் மண்ணு, அதான் உடம்பு கழுவி வேற உடுப்பு போட ட்ரெஸ  மாத்த போனேன்…” என்றான் சோர்ந்து, அதற்கு பிள்ளைகள் பண்ணிய ஆர்ப்பாட்டம் கணக்கில் கொள்ளாது. அவனின் இடத்தை அவனுக்கு புரிய வைத்து விட்டார்கள்.

         தலையில் அடித்து கொண்டாள் சரண்யா. மாலை கடைக்கு செல்லும் அவசரத்தில் உணவு பொருட்களை வாங்கி கொடுத்தவள் உடை மாற்றி விட மறந்து விட்டாள். அத்தோடு தினமும் பிள்ளைகளுக்கு அவள் சொல்லி கொடுப்பது தான், நாடு இருக்கும் சூழலில் குட் டச், பேட் டச் என்று பிள்ளைகளுக்கு புரியும் படி தினமும் விளக்கி விடுவாள். தானும் வேலைக்கு செல்கிறோம், பிள்ளைகளை பார்த்து கொள்ள உடன் யாரும் இல்லை எனும் போது வயதுக்கு மீறிய பக்குவத்தை புகுத்த  முயன்றாள். வேற வழியும் இல்லையே, ஏதேனும் நடந்த பின் கதறி அழுதாலும் பயன் என்ன?…

      அதை யோசித்து தான்  பிள்ளைகளுக்கு  காரண காரியத்தோடு விளக்க  முடியாது புரிய வைக்க முயன்றாள். அதன் படி, “ அம்மா, ஆயம்மா, பாட்டி தவிர வெற யாராவது உங்க ட்ரெஸ கலட்டா வந்தா, கையை நல்லா கடிச்சு வச்சு, சத்தமாக அழுகணும். இல்லைன்னா, அந்த பூச்சாண்டி உங்களை தூக்கிட்டு போயிடுவாங்க…” என்று பிள்ளைகள் மனப்பாடம் செய்யும் அளவு சொல்லி வைத்திருந்தாள்.

        அவர்களுக்கு எந்தளவு புரிந்தது என்பது அவளுக்கு டவுட் தான். தற்போது தெரிந்து விட்டது. எந்தளவு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று… நேற்று உறவு கொண்டாடி வந்து, இன்று உரிமை எடுத்தால், சின்ன பிள்ளைகளுக்கு எவ்வாறு தெரியும். இவன் தான் உங்கள் தந்தை என்று சரண்யா சொல்லவே இல்லையே. அவனும் தான் சொல்லவில்லை, சொன்னாலும் அவர்களுக்கு என்ன புரியும் என்று தெரியாது… தங்கள் கூடவே இல்லாமல் என்றோ ஒரு நாள் வருபவன் எவ்வாறு அப்பா என்று ஆவான். குடும்பமாக நில்லாமல் குழந்தைகளுக்கு புரியாது தான்…

       “அவங்களுக்கு நீங்க தான் அப்பான்னு தெரியாது…” நிதானமாக மனைவி சொல்ல.

   என்ன மறைத்தும் ஒரு துளி கண்ணீர் வந்து விட்டது. என் பிள்ளைகள் என்று மார்தட்டிக் கொண்டேனே, உறவு இருந்தும், உரிமை இருந்தும் நெருங்க முடியாது. நான் தான் உங்கள் அப்பா என்றால் ஓடி வந்து கட்டி கொள்வார்களா!… மாட்டார்கள். அவர்களுக்கு அப்பா என்ற ஒருவன் இருக்கிறான் என்று தெரியும். அதன் முக்கியத்துவம் உணர வில்லை. தந்தை என்ற ஒருவனின் தேவையை அறியும் போது தந்தையாக அவர்கள் உடன் நான் இருக்க வேண்டும், இருப்பேன். 

     நல்ல வளர்ப்பு சரண்யவோடது…  அவ்வளவு பண்டங்கள் அவன் வாங்கி வந்து தாவு கிடக்க, தொடக்கூட இல்லை. அவன் ஆசையாக தூக்கி கொடுத்தும் கை நீட்டி வாங்க வில்லை. நிச்சயம் பசி தான், தாய் கையில் இருக்கும் ஒரு துண்டு கேக்கை அவசரமாக உண்ணுபவர்கள், தான் அள்ளி கொடுத்தும் முகரவில்லை. 

         குழந்தைகள் வளர்ப்பில் சாதரணமாக சொல்வது தான். அடுத்தவர்கள் யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாது என்று… சாத்வீக்  பொருட்களை எடுக்கிறார்கள் என்று திவ்யா கடுமையாக சாடிய பின், சுள்ளென்று போட்டு சரண்யா பழகிய பழக்கம். இங்கு அடுத்தவர் என்று சொல்லி ஒதுக்குவது அவர்களின் தந்தை என்பது தான் விந்தை போல…

        தளர்ந்து போய் நடந்து சென்றவன், பழைய இடத்திற்கே  போய் அடைந்து கொண்டான். 

      “நீங்க போய் டிடி போடுங்க. நல்ல காயம்…” என்ற சரண்யா தன் வேலையை பார்க்க போய் விட்டாள்.

   எண்ணி அளந்து தான் வார்த்தை வரும். முகத்தில், பாவனையில் மரியாதை துளி இருக்காது. அவள் அழுத்தி சொன்னால் செய்ய தான் வேண்டும். வீட்டை விட்டு கீழ இறங்க, அவனை கண்டு கொள்வார் யாரும் இல்லை. அம்மா, பிள்ளைகள் எல்லாம் அவர்கள் வேலையில்…

          அடுத்த கால் மணி நேரத்தில் திரும்பி வந்து, பழைய இடத்திலேயே அடைந்து கொண்டவனை, அதிர்ந்து பார்த்தாள் சரண்யா. “இவன் போகவே மாட்டானா…  ஒரு கப் மாவு, ஒரு டம்ளர் பால் என்று சிக்கன வாழ்க்கை எங்களது, அதற்கும் பங்குக்கு வந்து நிற்கிறானே… தங்களையே உத்து பார்க்கும் ஒருவனை விட்டும் உண்ண முடியாது..”

          அவசரமாக கறிவேப்பில்லை சட்னி அரைத்து, தோசை ஊற்றி சாப்பிட அமர, வந்து விட்டான். இனி என்ன செய்ய, அவனுக்கும் ஒரு  தட்டு வைத்து தோசை கொடுத்தாள். கூச்சமெல்லாம் இல்லை, சாப்பிட அமர்ந்து விட்டான்.  சரண்யா கை ருசி தனி தான், இன்று ஏனோ  உப்பு, காரம் எதுவுமில்லாமல் மழுப்பலாக இருந்தது. அவன் முகத்தை தான் பார்த்தாள் சரண்யா.