சூரியன் போல் சுட்டாலும் உன்னோடு இருப்பேன் நிழலாக காதலே…
ஏதோ யோசனையுடன் சோபாவில் அமர்ந்தபடி டீவியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மகா. கண்கள் என்னவோ டீவி மேலேதான் இருந்தது, ஆனால் நினைவுகள் எல்லாம் அவனிடமே.
“மூணு நாளா என்ன பார்க்கவும் இல்லை, என் கூட பஸ் ஸ்டாண்டுக்கும் வரது இல்ல. என்ன ஆச்சு? வொர்க் அதிகம் தான் இருந்தாலும் பார்க்கக்கூட மாட்டேன்கிறான்.
சாப்பிடக்கூட முன்னாடி போயிடுறான். மார்னிங் சொல்ற குட் மார்னிங்கோட அவ்ளோதான்” என்று நகத்தைக் கடித்தபடி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தாள் மகா.
அவள் மடியில் படுத்தபடி ஜெயா டீவி பார்த்துக்கொண்டிருக்க
கீழே சுபா மற்றும் குணா அடித்துக்கொண்டு உருண்டு கொண்டும் இருந்தனர். நேரம் ஒன்பது மணி இருக்கும், அமிர்தம் சமையல் அறையில் இருந்து.
“ஏ…. குணா வந்து பாத்திரம் கழுவு டி, நேரம் ஆச்சு “
“அம்மா…. நேத்து தான் நான் கழுவுனேன், இன்னைக்கு ஜெயா டர்ன் ம்மா “
“அப்போ அவளையாவது வர சொல்லுடி “
என்றதும் குணா திரும்பி பார்க்க, இத்தனை நேரம் கடலையை கொறித்தபடி டீவி பார்த்துக்கொண்டிருந்தவள் அப்படியே கண்களை மூடி தூங்குவது போல நடிக்க
“இவள….. இவ்வளவு நேரம் டீவி பார்த்துட்டு….. இதோ வர்றேன் “ என்று அமர்ந்தபடியே டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் ஊற்றிவிட
“எ…. குணா “ என்று கத்தியபடி ஜெயா எந்திரிக்க
“முழிச்சிட்டல, போய் பாத்திரம் கழுவு. இன்னைக்கு உன் டர்ன் தான ?“
“பாத்திரம் கழுவ இப்படித்தான் எழுப்புவியாடி? அதெல்லாம் கழுவ முடியாது போ டி “
“ சரி போ அம்மா வந்தா நீயே சமாளி “
என்று அவள் கீழே படுத்துவிட, ஜெயா அருகில் இருந்த தலையணையை அவள் முகத்தின் மீதே போட்டுவிட்டு எழுந்து செல்ல, சரியாக அந்நேரம் வீட்டின் காலிங் பெல் அடிக்கவும்.
அனைவரும் யார் என்று திரும்பி பார்க்க, அமிர்தம் சமையல் அறையில் இருந்து வேகமாக வந்து கதவைத் திறந்தார்.
சீனி மற்றும் சந்தானம் தான் கையில் ஏதோ பையோடு வந்திருந்தனர்.
எப்போதும் இரவு தாமதமாக வரும் இருவரும் இன்று சீக்கிரமாக வந்திருந்தனர். அதில் அனைவரும் என்னவென்பது போல பார்த்திருக்க
“எ…. நேரம் ஆச்சு, எல்லாம் உள்ள போய் படு “ என்று அமிர்தம் அனைவரையும் துரத்தவும் நால்வரும் ஒன்று போல
“ஏதோ மறைக்கிறாங்க, என்னமோ இருக்கு “ என்று உற்று துரத்தவும் அங்கேயே இருக்க, ஜெயா
“அம்மா பாத்திரம் இன்னும் கழுவுலம்மா, போய் கழுவிட்டு வரேன் “ என்று சமையல் அறை பக்கம் செல்ல போனவளை நிறுத்திய அமிர்தம்
“அதெல்லாம் நானே பார்த்துக்கிறேன், எல்லாம் உள்ள போங்க “என்று அனைவரையும் துரத்தி விட்டார்.
அறைக்குள் சென்ற நால்வரும் தூங்காமல் லைட்டை அணைத்துவிட்டு அந்த நோக்கியா பட்டன் போன் மூலம் டார்ச்சை ஆன் செய்து
“ நம்மள விட்டு ஏதோ பேசுறாங்க, என்னவா இருக்கும் “ என்று சுபா கேட்க
“அதான் என்னென்னு தெரியக் கூடாதுன்னு தனே உள்ள அனுப்பிருக்காங்க “ என்று குணா கொட்டாவி விட
“ப்ச் இவ ஒருத்தி …” என்று சுபா சலித்துக்கொள்ள
“சரி என்னமோ பேசிட்டு போகட்டும் விடுங்க, நாம தூங்கலாம் வாங்க “ என்று மகா கூட்டத்தை கலைக்க பார்க்க
“அட மகா உனக்கு ஆர்வமாவே இல்லையா? அவுங்க என்ன மறக்கிறாங்கன்னு. கொஞ்சம் பொறு நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்” என்ற ஜெயாவை அனைவரும் என்ன என்பது போல பார்க்க.
ஜெயா மெல்ல எழுந்து கதவை லேசாக திறந்து பார்க்க அமிர்ந்தம் உணவு பரிமாறிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
எப்போதும் உணவு உண்ணும் போது இரு அப்பாவும் பேச மாட்டார்கள். உணவு முடித்து ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்தே பேசுவார்கள் எந்த விஷியம் என்றாலும்.
அதை யோசித்த ஜெயா “குணா, அந்த போனை எடுடி” என்று அதை வாங்கி டார்ச்சை அணைக்க,
“ஏ… ஏண்டி அதை அணைச்ச? ரூம்மே இருட்டா ஆகிடுச்சி டி” என்று சுபா கத்தவும்,
“ஷூ… கத்தாத கொஞ்சம் அமைதியா நான் பண்றத பாரு”
என்று சொன்னவள் போனில் ரெக்கார்டரை ஆன் செய்து மெல்ல கதவை திறந்து தவழ்ந்து தவழ்ந்து சோபா அருகில் சென்றவள் போனை சோபா கீழே வைத்து விட்டு சென்ற மாதிரியே திரும்பி வந்து விட்டாள்.
ஜெயா செயலில் மூவரும் “சூப்பர் டி….” என்று குணா, மகா பாராட்ட, சுபா
“பரவாயில்ல என் அளவு அறிவு உனக்கு இல்ல நாளும் ஓரளவு இருக்கே ” என்று சொன்னவள் மண்டையில் கொட்டி விட்ட ஜெயா.
“உன் பெருமையே…. நீயே வச்சுக்கோ” என்று சொல்ல அதற்கு பதிலுக்கு அவள் ஒன்று பேச என்று இருவரும் சண்டை போட குணா கதவிலேயே சாய்ந்த படி குறட்டை விட்டு தூங்கி விட்டாள்.
மகா “என்னவா இருக்கும் எதாவது பிரச்சனையா? எதோ அப்பா கையில எடுத்துட்டு வந்தாங்களே” என்று யோசித்த படியே இருந்தாள்.
பின் அரை மணி நேரம் கழித்தே ஹாலில் லைட் அணைக்கப்பட்டது. அதன் பின் சத்தம் எல்லாம் அடங்கி விட ஜெயா மெல்ல கதவை திறந்து சென்று போனை எடுத்து கொண்டு வந்து விட்டாள்.
ஜெயா கதவை திறந்ததில் குணாவும் எழுந்து விட நால்வரும் ஆர்வமாக கட்டிலில் சுற்றி அமர்ந்து போனை பார்த்தனர்.
பாதி தான் ரெக்கார்ட் ஆகியிருந்தது.
“என்னடி பாதி தான் ரெக்கார்ட் ஆகிருக்கு?”
“அது போன்ல மெமரி அவ்ளோ தான் இருந்திருக்கும் மகா” என்ற படி ஜெயா ரெக்கார்டை ஆன் செய்தால்.
போன் சிறிது நேரம் இடைவெளிக்கு பின் பேச தொடங்கியது.
“என்னங்க ஜோசியர் என்ன சொன்னாரு? பொருத்தம்லாம் சரியா இருக்குன்னு சொன்னாரா?”
“ம்ம்ம் பத்துக்கு ஏழு இருக்குன்னு சொன்னாரு கல்யாணம் யோகம் அருமையா இருக்காம் தேதி கூட குறிச்சி வாங்கியாச்சு அமிர்ந்தம்.”
“ரொம்ப சந்தோஷம்! நான் ரொம்ப பயந்தேன் எங்க பொருந்தாம் இல்லாம போயிடுமோன்னு. நல்ல பையன்ங்க விடவே கூடாதுன்னு தான் இருந்தேன்.”
“ஆமா ஆமா… நான் விசாரிச்ச வரை எல்லாம் நல்லா தான் சொல்றாங்க”
“சரி எப்போ கல்யாணத்த வைக்கலாம்னு சொல்லிருக்காங்க நம்ம மகாவ வேற…” என்று பாதியில் அந்த ரெக்கார்டிங் முடிந்து விட தங்கைகள் மூவரும் இதை கேட்டு விட்டு
“மகா…. உனக்கு கல்யாணம் பண்ண போறாங்களா?” என்று சுபா குதிக்க,
“இதை ஏன் இவ்ளோ சீக்ரெட்டா பேசணும்?” என்ற குணாவை கண்டு கொள்ளாது ஜெயா
“அப்போ மகா இன்னும் கொஞ்ச நாள் தான் எங்க கூட இருப்பியா…”
என்று சோகமாக கேட்க அவள் கேள்வியில் மூவரும் அமைதியாக மகாவை பார்க்க மகா அவள் முகத்தில் இருந்த கலக்கத்தை மறைத்துக்கொண்டு
“ப்ச்…. என்ன ஜெயா எங்க போயிட போறேன். அப்பா எனக்கு பக்கத்துல தான் பாத்துருப்பாரு நினைச்ச நேரம் வந்து பாத்துட்டு போவேன். இதுக்கு போய் பீல் பண்ணிட்டு”
என்று தலையில் தட்டி அனைவரையும் படுக்க வைத்துவிட்டு இவளும் படுத்து கொண்டாள்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் அனைவரும் தூங்கி விட மகா மட்டும் உறங்காமல் நெஞ்சில் அழுத்தும் அழுகையை தாங்காமல் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.
சத்தமின்றி ஒரு போராட்டம், கண்ணில் நீர் இறங்கி தலையணையை நனைக்க, அழுகை சத்தம் கேட்காத படி உதட்டை கடித்து படித்திருந்தவளுக்கு தூக்கம் கனவாக ஓடிச்சென்றது.
அதே இரவு பால்கனியில் நின்றிருந்தவனுக்கும் மனதே சரியில்லை. ஏதோ ஒரு அழுத்தம், கண்களை மூடி தூங்க முயன்றவனுக்கு தூக்கமே வரவில்லை.
அதனாலேயே எழுந்து வந்து நின்று கொண்டிருக்கிறான்.
“என்ன ஆச்சு? ஏதோ ஒரு மாதிரி இருக்கே, ஒருவேளை மூணு நாளா தங்கத்தைப் பார்க்கலைன்னு இப்படி இருக்கோ” என்று நெஞ்சை தடவிக்கொண்டவன்.
“சாரிடா தங்கம், மார்ச் மன்த் அக்கவுன்ண்ட் செட்டில் பண்றதுல ரொம்ப பிஸி ஆகிட்டேன். சாரிடா” என்று அவனுள் நுழைந்திருந்த வளிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
மூன்று நாளாக வேலை மிக அதிகம். அதனாலேயே பஸ்ஸை விட்டுவிட்டு பைக்கில் செல்கிறான். எப்போதும் அவளைப் பார்த்து சிரித்து, கண்கள் சிமிட்டி என்று சுற்றிக்கொண்டிருப்பவன், இப்போது அவளைப் பார்ப்பதே அரிதாகி போகிறது.
“என்ன இன்பா, என்ன ஆச்சு? ஒண்ணுமில்லடா” என்று தவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தலை கோதியவன்.
“பேசாம மகாக்கு மெசேஜ் அனுப்பி பார்ப்போமா” என்று அவனிடம் இருந்த நோக்கியா என்72 மாடல் போனை எடுத்து நார்மல் மெசேஜில் ஹாய் மகா என்று அனுப்பி வைத்திருந்தான்.
பாவம், போனை பார்க்கும் நிலையில் மகா இப்போது இல்லை என்று எப்படி இவனுக்கு புரியும்.
இங்கு அந்த போனை வெறித்தபடி வெகு நேரம் விழித்திருந்தவன், “ஒருவேளை டவர் பிரச்சனையில மெசேஜ் போகாம இருந்திருந்தா” என்று யோசித்தவன்.
“ டெஸ்டிங் டாட் டாட் டாட் “ என்று மகேஷிற்கு மெசேஜை அனுப்பி வைத்திருந்தான்.
இங்கு நைட் ஷிஃப்டில் சரக்கு குடிக்க முடியாத ஃப்லீங்கில் காப்பியை குடித்தபடி மகேஷ் வேலை பார்த்துக்கொண்டிருக்க, அவன் போனில் இருந்து மெசேஜ் வந்ததுக்கான சத்தம் கேட்டு முதலில் கண்டுகொள்ளாதவன்.
பின் தொடர்ந்து “டுவைங்….டுவைங்….” என்று வந்த சத்தத்தில் எரிச்சலாக “யாருடா அது அர்த்த ராத்திரில மெசேஜ் அனுப்பி விளையாடுறது “ என்று வாய்க்குள் திட்டியபடி போனை எடுத்து பார்த்தான்.
முதலில் டெஸ்ட் என்று ஒரு மெசேஜும், பின் டாட் டாட் என்று மெசேஜும் தனித்தனியாக இன்பாவிடம் இருந்து வந்து கொண்டே இருக்க.
“டேய்….. மாமா “ என்று பல்லை கடித்துக்கொண்டு படிக்கட்டில் சென்று நின்று இன்பாவுக்கு அழைக்க, அது அடுத்த நொடியே எடுக்கப்பட்டது.
போனை எடுத்த மறுநொடி இன்பா “ மெசேஜ் வந்துச்சாடா “ என்று ஆர்வமாக பேசியவனை
“என் வாயில நல்லா வருது…”
“என்னது மாமா …”
“டேய் எதாவது அசிங்கமா பேசிட போறேன்டா. இப்போ என்ன இதுக்கு புள்ளி வச்சி அனுப்பிட்டு இருக்க, அதை வச்சி நான் என்ன கோளமா போட போறேன் “
“ அப்பா அப்போ என் மெசேஜ் உனக்கு வந்திச்சாடா “
“டேய் என்ன கொளகாரனா ஆக்கிடாத டா”
“மாமா வெய் டென்ஷன் ரிலாக்ஸ் டா மாமா “
“நானே நைட் ஷிப்ட்ல கை நடுங்க கஷ்டப்பட்டுட்டு இருந்தா, நான் தான் கிடைச்சனாடா உனக்கு புள்ளி வச்சி விளையாட “
“சரி…மாமா, நீ ஏதோ டென்ஷனா இருக்க மாதிரி இருக்கு….. நான் அப்பறம் பேசுறேன் குட் நைட் மாமா “
என்று அடுத்து மகேஷ் அசிங்கமாக திட்டும் முன் பேனை வைத்து விட்டான்.
போனை வைத்தவன் தலையில் போனை கொண்டு அடித்தபடி
“ என்னடா இன்பா மிட்நைட் மேசேஜ் அனுப்புனா அவ எப்படிடா ரிப்ளை பண்ணுவா “ என்று அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொண்டு படுத்து தூங்கிவிட்டான்.
மறுநாள் எப்பவும் போல எழுந்தவன்
“ எப்பா டுடே வொர்க் அவ்ளோவா இருக்காது. பஸ்ல போய் பஸ்லயே வரலாம், என் தங்கத்த நல்லா சைட் அடிக்கலாம் “ என்று சந்தோஷமாக கிளம்பி வந்தவன் பார்த்தது சோகமான முகத்துடன் கண்கள் சிவந்து உதடு தடித்து ஏதோ போல் அமர்ந்திருந்த மகாவை தான்.
மகாவின் நிலையை கண்டு பதறி போன இன்பா நேராக அவள் டெஸ்கிற்கே சென்று விட்டான்.
அங்கே அவனை பார்த்த மகா முகம் சிவக்க கண்கள் கலங்க இன்பாவை பார்த்து “ ப்ளீஸ் இன்பா என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க “ என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட இன்பாவிற்கு அதிர்ச்சி.
மகா முதல் முறை இன்பா என்று அவள் அழைத்ததை கூட அவன் கவனிக்க வில்லை, அவன் கண்ணில் பட்டது எல்லாம் அவளின் கலங்கிய விழிகள் மட்டுமே.