மணி இரவு ஏழு, வேக நடை போட்டு வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தாள் சரண்யா. மனம் எல்லாம் பயம் அடித்து கொண்டது. பிள்ளைகளை தனியாக வீட்டில் விட்டு வந்திருந்தாள். தற்போது அமுதா அக்காவிடம் டியூசன் அனுப்பவில்லை. வேலை பார்க்கும் கடையில் தான் இந்த மூன்று நாட்களும் இருந்தார்கள்.
எத்தனை நாட்கள் அப்படி கூடவே வைத்திருக்க முடியும். இரு பிள்ளைகள், அவர்கள் கூடவே திரியும் படி தான் இருந்தது. சரண்யாக்கு பயம் தான். அந்த வேலை வைத்து தான் அவர்கள் மூவரின் வாழ்க்கையும்… வேலையில் நேர்த்தி அவசியம்.
மூன்று நாட்கள் மட்டுமே பிள்ளைகளை தன்னுடன் வைத்து கொண்டவள். இன்று தான் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். மாலையில் வீடு வந்தவள், பிள்ளைகள் தேவையை கவனித்து விட்டு, கொஞ்சம் பண்டங்களை அதிகம் கொடுத்து விளையாட விட்டு வந்தாள். ஓனர் பாட்டியை பார்த்து கொள்ளுமாறு கேட்டு கொண்டாள். சிடுசிடுவென இருந்தாலும் சில உதவிகள் செய்வார். பிள்ளைகள் தனியே இருக்கும் காரணத்தில் ஏழு மணிக்கே வீட்டுக்கு கிளம்பி விட்டாள். தேவி அக்காவும் நிலை புரிந்து கொஞ்சம் சலுகை கொடுத்தார்.
இனி என்ன செய்ய, மாலை வேளையில் பிள்ளைகளை யாரிடம் விட, யார் பார்த்து கொள்வார்கள். தன் தாய் வீட்டை நினைக்க கூட முடியாது. நேற்று தான் நீண்ட நாட்களுக்கு பின் சென்று வந்தாள். வெற்றி இவர்கள் வாழ்வில் வராமல் இருந்து இருந்தால் போய் நின்று இருக்க மாட்டாள்.
சுகுமார், வெற்றி வேல் இருவரையும் யோசித்தால், நிச்சயம் ஒரு பாதுகாப்பு தேவை. உறவு என்று தான் போய் வந்து கொண்டிருந்தாள், மற்றவர்களுக்கு தனியாக இருக்கிறாள் என்ற எண்ணம் தோன்றாதே.
தற்போது தன் மேல் வெறுப்பு காட்ட திவ்யாக்கு காரணம் இல்லையே… மகிழ்ச்சியாக தான் வரவேற்றார்கள். அண்ணன் இல்லை மற்ற அனைவரும் இருந்தார்கள். தாய் மட்டும் குறை பட்டு கொண்டார்.
“ரோசகாரி, ஒரு தடவை கூட வீம்பை விட்டு பெத்தவங்களை பார்க்க வந்தா என்னவாம். அப்படி என்ன அழுத்தம்?…”
அதே அழுத்தம் உங்களுக்கும் இருந்ததே. நாலு தெரு தள்ளி இருக்கும் வீடு, ஒரு நாள் கூட வந்து பார்க்க வில்லை. இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு, வேலைக்கும் போய் மகள் எப்படி சமாளிக்கிறாள் என்று பார்க்க நினைக்க வில்லை தானே…
திவ்யா மகனுடன் வெளியே சென்றாள், மதிய உணவுக்கு வந்துவிடுவதாக சொல்லி சென்றாள். மதிய உணவுக்கு வருவதா… யார் சமைக்க? என்ற கேள்விக்கு தாயே பதில் சொன்னார்.
“ஆட்டு கறி வாங்கி இருக்கு, பிரியாணி வச்சு கொடு சரண். உன் கையால சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. நீ வாரேன்னு சொல்லவும் அண்ணன் எடுத்து வந்தான்…” என்ற தாயின் பதிலில் ஒரு நொடி முகம் மலர்ந்தவள் திரும்பி பார்க்க,
“ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க, நல்லது செஞ்சு சாப்பிட முடியலை. உன் கை பக்குவம் திவ்யாக்கு வரலை. எனக்கும் நிதானம் மாறி போச்சு. சரண்யா கை பக்குவம் யாருக்கும் வராதுன்னு அண்ணன் சொல்வான். நீ வாரேன்னு சொன்னேன், காலையிலே போய் கறி, மீன் எல்லாம் வாங்கி வந்துட்டான். திவ்யாவை வச்சு கிட்டே சொல்றான் ஒரு நாளாவது நல்ல சாப்பாடு வேணுமாம். ரொம்ப வருசமா உன் கையால சாப்பிட்டு பழகின உங்கப்பாக்கு வேற சாப்பாடு ருசிக்கலை…” சிரித்த முகமாக சொன்ன தாய்க்கு, மறுமொழி எதுவும் சரண்யா சொல்ல வில்லை.
மகள் முகத்தை தான் பார்த்திருந்தார் தந்தை. அவள் மனநிலை அவருக்கு புரிந்தது. தன் சின்ன மகளை விட்டு விட்டோமோ என்ற உணர்வு எழுந்து வந்தது.
“என்ன சரண் நீ அமைதியா இருக்க?…” என்ற தாயை தான் பார்த்தாள்.
அவருக்கு புரியவில்லை. மகளை தானே பாராட்டினேன். அவளுக்கு புரிந்தது, பிரிவு கூட அவர்கள் தேவையை தான் உணர்த்தியது, தன் தேவையை உணர்த்த வில்லை.
“என்னம்மா சொல்லணும். ஒரு யோசனை தான். இவ்வளவு நாள் கழிச்சு வந்தும், அடுப்படி தான் எனக்கு போல… அதை தான் யோசிச்சேன்…” என்று அடுப்படி சென்று விட்டாள்.
சுகந்தி திரும்பி கணவனை பார்க்க, “பேச தெரியலை சுகந்தி உனக்கு… இம்புட்டு நாள் கழிச்சு வார பிள்ளைக்கு நாம ஆசையா எதுவும் எடுத்து வைக்கலை…”
அந்த குறை தான் சரண்யா மனதிலும், ஏன் எங்களை பார்க்க வில்லை அல்லது யோசிக்கவே இல்லை. நான் வருகிறேன் என்று தெரிந்தும் அண்ணன் வெளியில் சென்று விட்டான். என் பிள்ளைகளை பார்த்து மூன்று மாதம் இருக்கும். பார்த்து விட்டு சென்று இருக்கலாம் தானே… நீ வருகிறாய் என்று உனக்காக தான் அண்ணன் வாங்கி வைத்தான் என்ற சொல்லை தான் எதிர்பார்த்தாள்.
மதிய சமையல் வேலையை சரண்யா தொடங்க, உடன் உதவி செய்தார் சுகந்தி. மருமகளை பற்றி ஓராயிரம் குற்ற பத்திரிக்கை… ம்ம் என்று கேட்டு கொண்டாள் சரண்யா. அவர் சொல்வது எல்லாம் முன்பே இவள் யுகித்தது தான்.
சரண்யா இருந்த வரை அவள் வேலை சமையல், வீட்டு வேலை எல்லாம் அவள் தான். சுகந்தி உடம்பு முடியாமல் போனதில் இருந்தே வீட்டு வேலையை இழுத்து கொண்டது இல்லை. எல்லாவற்றிற்கும் மகள் இருக்க, எந்த சங்கடமும் நேர வில்லை.
ஆனால், திவ்யா வேலைக்கு செல்கிறவள். சரண்யா போல சமையல் மட்டுமே என்று இருக்க முடியாதே…
தற்போது உணவில் தான் நிறைய மாறுதல். எந்த குழம்பு வைத்தாலும் ரசம் வேண்டும் தந்தை சிவ குமாருக்கு. மாலை காபியோடு சுண்டல், பச்சை பயிறு, வேர்கடலை அவித்து தேங்காய் துருவல் இருக்க வேண்டும். இரவில் மிளகு பால் வேண்டும்.
காலை நேர பரபரப்பு திவ்யாக்கு. தானும் கிளம்பி, பிள்ளையையும் கிளப்பி, உணவையும் செய்ய வேண்டும் எனும் போது சிடுசிடுவென தான் சுத்துவாள். சரண்யா இருந்து சௌகரியத்துக்கு பழகியவள், நிற்காத வேலை எரிச்சலை கிளப்பியது. இதில் ஆறு மணிக்கே டிகாஷன் காபிக்கு காத்திருக்கும் மாமனாரை கவனிக்க தோது இல்லை.
சாப்பாடு செய்யும் போது மாமியார் உடன் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டாள். தன் அவசரத்திற்கு சிறு சிறு உதவிகள் செய்யலாம் அல்லவா… மகனை பார்த்தால், “ வேலைக்கும் போய் சமையலும் பார்க்கிறா, கூடமாட உதவி செய்ங்கம்மா…” என்பான். ஒன்றும் பேச முடியாது.
சரண்யா இருக்கும் போது எல்லாம் தாய், தந்தையை என்ன வேண்டும் என்று ஒரு வார்த்தை கேட்காமல் சமையல் தொடங்க மாட்டாள். திவ்யா சமையல் சுமார் தான். ஏதாவது சொன்னால் நீங்க பார்த்துக்கோங்க என்று ஒதுங்கி விடுவாள். அதன் கொண்டு மருமகளிடம் வாய் திறக்க முடியாது. வேலைக்கு செல்லும் மகன் ஒரு வார்த்தை சொல்லாமல் சாப்பிட, தாங்கள் குறை சொல்ல முடியாதே…
அவரவர் துணிகளை அவரவர் தான் துவைத்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைக்கு மாமியார் உடன் இருந்தால், ரேசன் வாங்க, காய் வாங்க, கடைக்கு போக மாமனார். பலர் வீட்டில் இந்த மாதிரி சின்ன சின்ன வேலையை பெரியவர்கள் செய்வார்கள் தான். சரண்யா எல்லாவற்றையும் பாத்து கொள்ள, முழு ஓய்வில் இருந்தவர்களுக்கு சிரமமாகி போனது.
மகளிடம் கேட்பதற்கும், மருமகளிடம் சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தார்கள். “சரண்யா சாப்பாடு எடுத்து வை” என்பதற்கும், “திவ்யா, சாப்பாடு ஆச்சாமா, சாப்பிட வரவா” என்பதற்கும் பொருள் வேறு தானே. மகளிடம் ஒரு உரிமை,ஒரு அதட்டல் இருக்கும். மருகளிடம் தயவு மட்டுமே வரும்.
சரண்யா வெளியே போனது சுகந்திக்கு தான் பாடு அதிகம். சிவக்குமார் எப்போதும் வெள்ளை சட்டை, வேட்டி தான். மிஷினில் போட முடியாது, சரண்யா எப்போதும் கையில் துவைத்து விடுவாள். திவ்யாவிடம் சொல்ல முடியுமா, அதுவும் வேலைக்கு போகும் மருமகள்… சுகந்தி தலையில் தான் விழுந்தது. அத்தோடு கூடுதல் வேலையாக,
சட்னி அரைக்க வேண்டும் என்றாலும், தேங்காய் துருவ மாமியார் வேண்டும். காய் வெட்ட, வெங்காயம் அரிக்க, அளவு சொல்ல கூட சுகந்தி வேண்டும். தாய் முடியாதவர் என்று எல்லா வேலையும் சரண்யா பார்த்து கொள்வாள். திவ்யா அப்படி அல்ல, “பெரிய வேலை செய்ய சொல்லலை தானே, சின்ன சின்ன வீட்டு வேலை செய்யட்டும்” என்று யாரும் மறுப்பு சொல்ல முடியாத வகையில் தான் அவள் வாதம் இருக்கும்.
மதிய சமையல் முடிக்க, வந்து விட்டார்கள் அண்ணன் குடும்பம். சரண்யா அண்ணன் முகத்தை தான் பார்த்தாள். ஒரு சிரிப்பில் நல விசாரித்தவன் சாப்பிட அமர்ந்து விட்டான்.
மூன்று மாதம் பின் பார்க்கும் தங்கை மக்களுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் கூடவா வாங்கி தர முடியாது. எல்லாவற்றையும் கண்டிக்க மாட்டாள் திவ்யா. தன் பிள்ளை தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள் தவிர, தங்கை மக்களுக்கு சிறு சிறு பொருள் வாங்கி கொடுப்பதை தடுத்தது இல்லை.
அதுசரி சரண்யா, உன்னை பெற்றவர்கள் மட்டும் என்ன வாங்கி கொடுத்தார்கள். ஆசையாக உண்டார்கள், இதில் அண்ணன் வேறு, “சரண் சண்டே மட்டுமாது வீட்டுக்கு வாயேன். உன் சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்றேன். உன் கை ருசி அம்மாக்கு கூட வர மாட்டது…” என்று சிரித்தபடி சொல்ல, தந்தை தான் சங்கடமாக மகள் முகம் பார்த்தார்.
“இன்னும் என்னை பைத்தியகாரனாவே நினைக்கிறாயா…” என்று லுக்கு விட்டு பார்த்து நின்றாள் சரண்யா.
ஒரு சேர் முழுக்க தந்தையின் துவைக்காத உடைகள் குவிந்து கிடந்தது. தாய் கொஞ்சம் தயங்கி தான் கேட்டார்.
“சரண், அப்பா துணியை மட்டும் துவைச்சு குடேன். ஒரு பக்க கை ரொம்ப வலி, அம்மாக்கு முடியலை சரண்…” நயந்து தான் கேட்டார். வந்ததில் இருந்து நிற்காத வேலை தான் அவளுக்கும் பிள்ளைகளை உறங்க வைத்தவள், துவைக்க தொடங்கினாள்.
“நீ இருக்க தான் சரண், நான் மதிய தூக்கம் போட்டேன். இல்லைன்னா, துணி துவைக்க, மடிக்க, ஒதுங்க வைக்க ஏதாவது வேலை இருந்துக்கே இருக்கும்…” என்ற தாயை அமைதியாக பார்த்தாள் சரண்யா.
“நான் எப்போது உறங்க, எனக்கும் ஒரு நாள் தானே வார விடுமுறை. அந்த ஒருநாளில் அக்காடா என்று காலை நீட்டி வைத்து மதிய தூக்கம் போட மனம் விரும்பாத என்ன!…” வெளியில் எதுவும் சொல்லி கொள்ள வில்லை. ஆறு மணிக்கு தன் வீட்டுக்கு கிளம்ப, பிள்ளைகளை தயார் செய்தாள்.
“சரண், இப்போ நீ வீட்டுக்கு நடந்து போய், பிள்ளைகளை பார்த்து, நைட் சாப்பாட்டு வேலையையும் பார்க்கணும். அதுக்கு ஒரேதா சாப்பிட்டு போங்க. மாவு இருக்கு இட்லி ஊத்துவோம், கொஞ்சம் சப்பாத்தி போட்டுகலாம்…” என்று திவ்யா ஆரம்பிக்க, சுகந்தி பிடித்து கொண்டார்.
எல்லா வேலையும் முடித்து கொண்டு கிளம்பும் போது மணி எட்டு, தூக்கத்திற்கு சிணுங்கும் சின்ன குட்டியை தோலில் போட்டு கொண்டு இறங்க, தனியாக செல்லாதே துணைக்கு வாரேன் என்றோ, வீட்டில் விடவா என்றோ யாரும் கேட்க வில்லை.
“ வாரம், வாரம் வந்து விடேன் சரண்யா. நீ வந்த தான் வீடு கலகலன்னு இருக்கு…” என்ற அண்ணிக்கு ஒரு மாதிரி சிரித்து வைத்தாள்.
பிள்ளைகள் கையில் ஆயிரம் ரூபாய் கொடுக்க போன தந்தையை தடுத்து விட்டாள் சரண்யா.