சுஹானாவுக்கு முன் எழுந்திருந்த பார்த்திபன் காலைக்கும் மதியத்திற்குமான உணவை செய்து முடிக்க, அவளும் எழுந்து வந்தாள்.
“ஏன் தனியா செய்றீங்க பார்த்தி, என்னை எழுப்பியிருக்கலாம்தானே?” எனக் கேட்டாள்.
புன்னகைக்க மட்டும் செய்தவன், “நைட் சாவி எங்கேருந்து கிடைச்சது?” என வினவினான்.
சோஃபா முன் இருந்த டீபாய் மேலேதான் வைத்திருந்திருக்கிறாள்.
“அதை மறந்து போற அளவுக்கு ஆச்சிக்கு அப்படியென்ன குழப்பம்?” எனக் கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல, தலைவலில…” என்றவள் அவனது நம்ப மறுத்த பார்வையில் அமைதியானாள்.
தலை குனிந்து நின்றவளிடம், “இட்ஸ் ஓகே ஆச்சி, என்கிட்ட இப்ப சொல்ல வேணாம், உங்களுக்கு தோன்றப்போ சொல்லுங்க. இப்ப ரெடி ஆகுங்க” என்றான்.
காபி கலக்க போனவளை தடுத்து தான் போடுவதாக சொன்னான். மறுத்து விட்டாள். வற்புறுத்தாமல் இருவருக்குமான மதிய உணவை பேக் செய்தான்.
சூடான பாலை கையில் ஊற்றிக் கொண்டு விட்ட சுஹானா அழ, பதறிப் போனவன் குழாய் தண்ணீரை திறந்து விட்டு அதில் அவளது கையை வைத்தான்.
ஆழமான காயமில்லாமல் இரண்டு விரல்கள் மட்டும் சிவந்து போயிருந்தன. ஆனாலும் அவளுக்கு நல்ல எரிச்சல். மருந்து தடவி விட்டவன் அவனே காபி கலந்து அவளுக்கு பருக கொடுத்தான். அமைதியாக கண்ணீர் விட்டுக் கொண்டே பருகினாள்.
மனதில் எதையோ வைத்து மருகுகிறாள் என நன்றாகவே அவனுக்கு தெரிந்தது.
அன்று விடுப்பு கிடைப்பது கடினம் என தெரிந்தும் முயற்சி செய்து பார்த்தான் பார்த்தி. ம்ஹூம் கிட்டவில்லை. அவளிடம் வந்தவன், “இன்னிக்கு ஸ்கூல் போக வேணாம் ஆச்சி” என்றான்.
“இல்லை நான் போறேன்”
“சொன்னா கேட்கணும், ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க, இந்த மனநிலைல போக வேணாம். எனக்கு லீவ் கிடைக்கல ஆச்சி, இல்லைனா நானும் உங்களோட இருப்பேன்”
தன் வயிறோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்டவன், “உங்களுக்கு இப்படி அழுகை வர மாதிரி என்னதான் தப்பு பண்ணிட்டேன் ஆச்சி?” எனக் கேட்டான்.
“இல்லையில்லை, நீங்க அப்படிலாம் யோசிக்காதீங்க” என வேகமாக சொன்னாள்.
“நான் காரணம் இல்லைனா வேற என்ன பிரச்சனை? அந்த பிரச்சனையை மனசு விட்டு என்கிட்ட சொல்ற அளவுக்கு நமக்குள்ள நெருக்கம் வரலையா, ம்ம்ம்?” என ஆதங்கமாக கேட்டான்.
அவனிடமிருந்து விலகியவள் தன் சிவந்து போயிருந்த இடது கை விரல்களை பார்க்க, பேச மறுப்பவளை ஆயாசமாக பார்த்தான். நேரம் ஓட, வேறு வழியின்றி குளித்து தயாராக போனான்.
அவளுக்கு மனம் சோர்வாக இருக்க, பள்ளிக்கு செல்ல வேண்டாம் என முடிவு செய்து விடுப்பு சொல்லி விட்டாள்.
அவளை தன்னுடனே சேர்ந்து சாப்பிட வைத்தவன், “எக்ஸாம் டியூட்டி ஆச்சி, மதியம் கால் பண்றேன், ஏதாவதுன்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க, ஈவ்னிங் வரவும் லேட் ஆகும்” என தகவல் சொன்னான்.
அவள் தலையாட்டிக் கொள்ள, இந்தக் கையை வைத்துக் கொண்டு எந்த வேலையும் செய்யக் கூடாது என அறிவுறுத்தி புறப்பட்டு விட்டான்.
அவளுக்கும் வீட்டு வேலைகள் எது செய்யவும் மனம் நாட்டம் கொள்ளவில்லை. லேப் டாப்பை திறந்து வைத்துக்கொண்டவள் அதில் மூழ்கி விட்டாள்.
மாலையில் தாமதமாக வீடு வந்து சேர்ந்த பார்த்தி, இன்னும் இறுகிய முகத்துடனே அவள் இருப்பதை கண்டு வேதனையடைந்தான். அவனுக்கு பருக, உண்ண என கவனித்தாலும் ஒரு வித விலகல் தன்மை காணப் பட்டது. அவளது விரல்களை ஆராய்ந்து பார்த்தான், கொப்புளிக்கவில்லை என நிம்மதியடைந்தான்.
“காலைக்கு இப்போ பெட்டர் பார்த்தி, விடுங்க, எனக்கு வேலை இருக்கு” என சொல்லி அறைக்கு சென்று விட்டாள்.
சாப்பிட்டிருக்கிறாளா என காலியான பாத்திரங்களை பார்த்து தெரிந்து கொண்டான்.
அவனுக்கும் அவளிடம் அமர்ந்து சாவகாசமாக பேச நேரமில்லை. கட்டாயமாக நாளைக்கே முடித்து கொடுக்க வேண்டிய வேலை இருக்கவும் அதை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
இரவில் ஒன்றாகத்தான் உறக்கம். மிகுந்த தயக்கத்துடன்தான் அவளை அணைத்தான். விலகிச் செல்லாமல் அவனுடன் ஒன்றிக் கொண்டாள். என்னதான் இவளது மனதில் என புரியாமல் அவனுக்குத்தான் மண்டை வெடித்தது.
அடுத்த நாள் அவனுடனே எழுந்து கொண்டாள். சமைக்க உதவிக்கு வந்தவளின் கையை பிடித்து விரல்களை ஆராய்ந்தான்.
“சரியாகிடுச்சு பார்த்தி, நான் காய் கட் பண்றேன், நீங்க அடுப்புல பாருங்க” என்றாள்.
“இன்னிக்கு ஒரு நாள் நானே செய்றேன், நாளைலிருந்து நீங்க ஹெல்ப் பண்ணலாம்” என்றான்.
“நான்தான் ஓகேன்னே சொல்றேனே பார்த்தி, என்ன ப்ராப்லம் உங்களுக்கு? எதுக்கு இப்படி தாங்குறீங்க? நான் வானத்திலிருந்து குதிச்சு வரலை” என்றாள்.
“ஆச்சி என்ன ஏன் இப்படி பேசுறீங்க?”
“என்ன பேசிட்டேன்னு இப்படி ஷாக் ஆகுறீங்க? நான் உங்க மனைவி… உங்கள்ல சரி பாதி பார்த்தி! என்னை ஏத்துக்க இன்னும் என்ன தடை உங்களுக்கு? உங்க பார்வையும் பாடி லாங்க்வேஜும் என்கிட்ட வேற ஏதோ சொல்லுது, அதுக்கு நேர்மாறா நடக்குறீங்க நீங்க, எப்ப பார்த்தி ஹண்ட்ரட் பெர்சண்ட் என்னை உங்க மனைவியா பார்ப்பீங்க?” என அவள் பட படக்க, என்னவானது இவளுக்கு என அயர்ந்து போனாவனாக பார்த்தான்.
பெரிதாக மூச்சிழுத்து விட்டுக் கொண்டவள், “ஸாரி, நான் காய் கட் பண்றேன், வேலைய பாருங்க” என சாந்தமாக சொன்னாள்.
அமைதி ஆட்கொள்ள வேகமாக சமையல் முடிந்தது. பேசிக் கொள்ளாமலேயே தயாரானார்கள். வீட்டிலிருந்து கிளம்பும் போது, மாலை வளர்மதி அக்காவின் மகனுக்கு பிறந்த நாள் என்பதை நினைவு படுத்தினாள் சுஹானா.
இன்றும் தான் வர தாமதமாகும் என்பதை சொன்னான்.
“நான் அக்கா வீட்டுக்கு போயிடுறேன், நீங்க நேரா அங்க வந்துடுங்க” என சொல்லி முடித்துக் கொண்டாள்.
பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் பார்த்தியிடம் எரிச்சலடைந்து விட்டோம், அப்படி நடந்திருக்க வேண்டாம் என அவளுக்கு உறுத்த ஆரம்பித்து விட்டது.
நேரம் ஓடவே இல்லை. மாலையில் அரசியல் பிரமுகர் யாரோ அந்தப் பகுதிக்கு வருகிறார், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மதியம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப் பட்டு விட்டது. ஆதலால் சுஹானா மதியமே வீடு வந்து சேர்ந்து விட்டாள்.
காலையில் பார்த்தி கல்லூரி வந்த உடனே குருமூர்த்தி அவனை சந்தித்தார். சுஹானாவிடம் அவரது மனைவி பேசியது குறித்து அவரது மனைவியே அவரிடம் பகிர்ந்திருக்கிறார். மனைவியை நன்றாக திட்டி விட்டவர் பார்த்தியிடம் விஷயத்தை சொல்லி மன்னிப்பு கேட்டார்.
“எம்மேலதான் தப்பு பார்த்தி, இன்டென்ஷன் எதுவும் இல்லாம பேச்சு வாக்குல அவகிட்ட சொல்லிட்டேன், இப்படி உன் மிஸஸ்கிட்ட கேட்டு வைப்பான்னு நினைக்கல. ரியலி ஸாரி பார்த்தி” என வருத்தம் படர சொன்னார்.
பார்த்திக்கு அவர் மீது அதிருப்தி ஏற்பட்ட போதும், நிஜமான வருத்தத்துடன் மன்னிப்பு கேட்பவரை நோக செய்ய மனமில்லாமல், “பரவாயில்லை ஸார்” என சமாதானமாக சொல்லி விட்டான்.
தன் மனைவியின் நடத்தைக்கு காரணம் அறிந்து கொண்ட பார்த்தியின் மனம் கலவரமாகி விட்டது. மதியம் வரை வேலை செய்தான். உணவு இடைவேளையின் போது அவளுக்கு அழைத்து பேசினான். அப்போதுதான் அவள் வீட்டுக்கு செல்கிறாள் என்பது அவனுக்கு தெரிந்தது.