அந்த வார இறுதியில் வர்ஷினி சர்வேஷ்ஷூக்கு செய்தி அனுப்பியிருந்தால் “எப்படி இருக்கீங்க சர்வேஷ்” என.

“ஒகேதான்.. கால் பரவாயில்ல ஸ்டிக் இல்லாமல் நடக்க முடியுது. கைதான் இன்னமும் அசைக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.” என செய்தி அனுப்பினான்.

“ராக்கி கூப்பிட்டாங்களா” என்றாள்.

“தினமும் பேசுகிறோம்.. அபீஸ் ஓகேன்னு சொன்னான்.” என்றான்.

“மஞ்சரியிடம் பேசினேன்.. துருவ் அழுகையாம் தாத்தா பாட்டி பார்க்கனும்ன்னு.. பாவமில்ல” என்றாள்.

சர்வேஷ் இப்போது அவளை அழைத்தான்.

வர்ஷினி ஹாலில் அமர்ந்திருந்தவள் எழுந்து தன்னறைக்கு வந்து அழைப்பினை ஏற்றாள்.. “ப்ரீயா இருப்பேன்னு கூப்பிட்டேன்” என்றான்.

பெண்ணவளும் “ம்.. சொல்லுங்க” என்றாள்.

“உனக்கு ஞாபகம் இருக்கா.. முன்னாடி டியூஷன் பக்கத்தில் ரோடோரத்தில் ஒரு பானிபூரி கடை இருக்குமில்ல.. நாம போவோமே” என நினைவுப் படுத்தினான்.

“ம்.. சொல்லுங்க” என்றாள்.

“அவங்க இப்போ பெரிய கடையாக போட்டுட்டாங்க.. நம்ம பிரென்ட்ஸ் எல்லோரும் போயிருந்தோம்.. உமர் கல்யாணம் முடிந்து.. எங்களை எல்லாம் அடையாலமே தெரியலை.. ஆனால், உன்னையும் ஷர்மி போரையும் சொன்னதும்.. ஞாபகம் இருக்குன்னு சொன்னார்.. நீங்க அடிக்கடி வருவீங்கன்னு சொன்னார்” என்றான்.

வர்ஷினி “ம் எனக்கு கோவமாக இருந்தால் நிறைய சாப்பிடுவேன் புலம்பிகிட்டே.. சந்தோஷமா இருந்தாலும் சாப்பிடுவேன் பேசிக்கிட்டே.. அந்த அங்கிள்.. மேலே கார்னெர் சீட் கொடுத்திடுவார் நானும் அவளும் போனால்.. காரமாக பேல்பூரி மசால்பூரி என நாங்க கேட்க்கிரதெல்லாம் வரும்.. அவளை ரொம்ப மிஸ் பண்றேன்..” என்றாள்.

இருவருக்குள்ளும் சின்ன அமைதி.

சர்வேஷ் “நீ நிறைய மாறிட்ட..” என்றான்.

பின் அவனே “இப்போ வந்து என்னை கூட்டிட்டு போயேன்.. நானும் கோவமா இருக்கேன்.. ஏதாவது சாப்பிடனும் போல இருக்கு, வா.. வந்து கூட்டிட்டு போயேன்” என்றான்.

“நானா” என்றாள்.

“ம் வா.. வீட்டில் யார்கிட்ட கேட்டாலும் செய்வாங்க.. நீ வா ப்ளீஸ்” என்றான்.

விடுமுறை நாள், மதியம் நான்குமணி இருக்க.. பேச்சுகள் நடந்தது.

வர்ஷினிக்கு ஏதும் நெருடவில்லை.. அவனுக்கு உடல்நலமில்லை என எண்ணி கூட்டி செல்ல கிளம்பினாள்.

வர்ஷினி காரெடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

45 நிமிடங்கள் ஆனது அவன் வீடு வந்து சேர, தயாராகியிருந்தான் சர்வேஷ். வர்ஷினி போனில் அழைக்க.. தன்வீட்டில் ‘நண்பனோடு வெளியே செல்லுகிறேன்’ என சொல்லி கிளம்பி வந்துவிட்டான் வாசலுக்கு.

கையில் இன்னமும் கட்டு இருந்தது.. கழுத்தோடு சேர்த்து, கால்கள் நடக்கும்படி சரியாகியிருந்தது. மிதமான வேகத்தில் வந்தான் காரின் முன்.. கார் கதவை திறந்து கொண்டு.. “ஹாய்.. சீக்கிரமா வந்துட்ட” என சொல்லி கொண்டே காரில் ஏறினான்.

இருவருக்கும் அடுத்து என்ன பேசுவது என தெரியவில்லை.. இரண்டொரு நிமிடங்கள் அமைதி. இயல்பாக இந்த நேரத்தை செலவழிக்கனும் என தனித்தனியாக இருவரும் எண்ணிக் கொண்டனர்.

வர்ஷினி “கால் காயம் ஆறியிருக்கு போல” என்றாள்.

“ம்.. கைதான் இன்னும் இரண்டு வாரம் ஆகும் கட்டு பிரிக்க.. அதன்பின் பிசியோ பண்ணனும்ன்னு சொல்லியிருக்காங்க” என்றான்.

பின் தானாக “நான் டூ வீலரில் வருவேன்னு நினைத்தேன்” என்றான்.

வர்ஷினி “உங்களுக்கு இது கன்வீனியண்டா இருக்கும்ன்னு நினைத்தேன்” என்றாள். பின் “எங்க போலாம் எனக்கு இடம் தெரியாதே” என்றாள்.

‘அப்படியே ஈசியார் ரோடு  போலாம்..’ எனதான் சொல்ல ஆசை. எல்லாவற்றையும் தொண்டையில் விழுங்கிக் கொண்டு.. “சௌக்கார் பேட் போலாம்” என்றான்.

“கூட்டமா இருக்குமே” என்றாள்.

“இன்னிக்கு லீவ்தான் பாதிகடை இருக்காது.. வா, நான் ஒரு கடை சொல்றேன்” என வழி சொன்னான்.

காரினை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு.. இருவரும் இறங்கினர். வர்ஷினி ஜீன்.. வைட்நிற ஷாட் டாப் அணிந்து இறங்கினாள். சர்வேஷ் உமர் திருமணத்தில் அவளை பார்த்தது போல ஆழமாக ஒருமுறை அவளை விழிகளில் நிரப்பிக் கொண்டான்.

சின்ன நடையாக எங்கோ கூட்டி சென்றான். 

நார்த்வாலா ஒருவர்.. சின்ன இடத்தில்  டீ கடை வைத்திருந்தார்.. உள்ளே பிரட் பஜ்ஜி.. வட்பாவ்.. என சிற்றுண்டி தயாராகிக் கொண்டிருந்தது.

அந்த தெருவே காலியாக இருந்தது.. சிலர்மட்டும் உண்பதற்காக வந்தவர்கள் போல.. கடை வாசலில் இருந்த இரும்பு சேரில் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தனர்.

சர்வேஷ் பெண்ணிடம் என்ன வேண்டும் என கேட்டு கடைகாரரிடம் சொல்லிவிட்டு அமர்ந்தான்.

வர்ஷினி பார்வையை சுழலவிட்டாள்.

சர்வேஷ் “எந்த காலேஜ் படிச்ச” என தொடங்கினான்.

சொன்னாள்.. “நானும் ஷர்மியும்தான் ஒரே குரூப்.. ஒரே காலேஜ்.. வேலையில் மட்டும் வேற கம்பெனி கிடைச்சிடுச்சி.” என்றாள்.

“நான் உமர் கூட எப்போவதுதான் பேசுவேன்.. அதன் உன்னைபற்றி தெரியலை.” என்றான்.

வர்ஷினி அமைதியாகிவிட்டாள்.

சர்வேஷ் சுதாரித்து “இந்த இடம் அவ்வளவு பிசியாக இருக்கும் உட்காரக்கூட இடம் இருக்காது. சண்டே அப்படின்றதால உட்கார முடியுது” என்றான்.

வர்ஷினி “என்கிட்டே ஏதாவது சொல்லனுமா” என்றாள்.

சர்வேஷ் அமைதியாகிவிட்டான் இப்போது.. ‘நிறைய சொல்லணும்.. ஆனால், எதோ முந்திக் கொண்டு.. என்னை நல்லவன்னு காண்பிக்க சொல்லணுமோ இவளிடம்.. இவள் வேறு.. பழையகதைகளை பேசினாலே அமைதியாகிடுறா’ என தோன்ற.. தலையசைத்தான் ‘ஏதுமில்லை’ என.

டீ கொண்டுவந்து கொடுத்தார் பணியாளர். சர்வேஷ் “டிஷ்யூஸ் கொடுங்க” என்றான் அவரிடம்.

அவர் முறைத்தார்.

வர்ஷினி “ஜாயியே பையா..” என புன்னகையோடு வந்தவரை பார்த்து சொல்லிவிட்டு, சர்வேஷ்ஷினை பார்த்துக் கொண்டே தன் கைக்குட்டை எடுத்து கொடுத்தாள்.

சர்வேஷ் தலைகோதிக் கொண்டே “என்ன இப்போ எல்லா இடத்திலும் வைச்சிருக்காங்க” என நியாயம் பேசினான்.

“சரி இதை யூஸ் பண்ணிக்கோங்க” என்றாள்.

“இல்ல பராவாயில்ல..” என சொல்லி டீ குடிக்க ஆரம்பித்தான்.

ஜனவரி மாத மாலை நேரம்.. சூரியன் கடலில் இளைப்பாற செல்ல.. கடலின் குளிர் காற்று.. அந்த சந்துபொந்துகளில் நுழைந்து.. மக்களை குளிர்வித்துக் கொண்டிருந்தது.

வர்ஷினி “இந்த இடம் ஹைத்ராபாத் மாதிரியே  இருக்கு.. ஷர்மியை மிஸ் பண்றேன்” என்றாள்.

சர்வேஷ்ஷூக்கு இதை கேட்கவே முடியவில்லை “அதான் நான் இருக்கேன்னில்ல.. வா.. உனக்கு பிடிச்ச பாதம்பால் கிடைக்குதா பார்க்கலாம்” என கூறி எழுந்தான் சட்டென.

வர்ஷனிக்கு சட்டென்ற அவனின் பேச்சு ஒருமாதிரி ஆகியது, ஆனாலும் பாதாம்பால்  ‘ஞாபகம் வைச்சிருக்கான்’ என எண்ணிக் கொண்டே எழுந்தாள்.. “நடக்கணுமா.. உங்களால் முடியுமா” என்றாள்.

சர்வேஷ் ஆழ்ந்த புன்னகையோடு ‘உனக்காக இல்லையென்றால் யாருக்காக நடப்பேன்’ என வாய்க்குள் முனகிக் கொண்டு “அதெல்லாம் முடியும்..” என சத்தமாக சொல்லி நடந்தான்.

நிறைய தூரம் நடந்தனர்.. நிறைய கேட்டான், பேசினான். சட்டென  சர்வேஷ் “வேலை பிடிச்சிருக்கா உனக்கு” என்றான்.

வர்ஷினி “ம், இப்போவெல்லாம் அதுதான் உயிர்மாதிரி இருக்கு.. அப்பா அம்மாவை மறக்க வைக்குது.. சிலபல நினைவுகளையும் மறக்க வைக்குது.. புதிதாக யோசிக்க வைக்குது.. அதனால் அது என்னோட உயிர் மாதிரி” என்றாள்.

சர்வேஷ் அதில் வாடி போனான்.. ஏதும் பேசாமல் வந்தான்.

வர்ஷினிக்கு தான் சொன்னாதில் காயம் பட்டிருப்பான் என எண்ணினாள். அதனால் “இன்னமும் எவ்வளவுதூரம், கடையே இல்ல..” என்றாள்.

சர்வேஷ் வழியில் செல்லும் யாரிமோ விசாரித்தான்.. அவர்கள் ‘இன்னிக்கு எல்லா கடையும் லீவாகதான் இருக்கும்.. வீக் டேஸ்சில் வாங்க.. இருக்கும்’ என பதில் சொல்ல.. சர்வேஷ் பெண்ணவளை பாவமாக பார்த்தான்.

வர்ஷினி “பரவாயில்ல சர்வேஷ்.. இன்னொருநாள் வரலாம்” என்றாள். சற்று தூரம் நடந்தனர்.

சர்வேஷ் யோசனையோடு “அப்போவெல்லாம் உனக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் சூடா பாதம்பால் குடிக்கனும்.. நானும் ஷர்மியும் பக்கத்தில் அந்த கடை இருப்பது போலதான் பிளான் போடுவோம்” என்றான்.

வர்ஷினி வாய்பிளந்து பார்த்தாள் ஒரு நொடி.. சர்வேஷ் அவள் பார்ப்பது தெரிந்ததும் “வா வா.. ஷாக் ஆகாத” என சொல்லி மெதுவாக நடந்தனர்.

சர்வேஷ்க்கு நேரம் முடிய போகிறது என தோன்ற.. மனம் வாட தொடங்கியது.. அவளை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டான்.. மஞ்சள் நிற விளக்குகளின் ஒளி.. அவளிடம் எதிரொளிக்க.. தேவதையாக மின்னினாள் அவன் கண்களுக்கு. அவளின் மிதமான வாசனை.. அவன் நாசியை தொட.. இந்த ஆடவன்.. உள்ளுக்குள் ஆடிக் கொண்டிருந்தான்.. இரவுநேரம் மக்கள் நடமாட்டம் வேறு அதிகமாக.. அவளோ, அவனோடு ஒட்டி நடக்கத் தொடங்கினாள்.. காலத்தை சபித்தான் ‘இத்தனை வருடங்கள்.. என்ன செய்தீர்கள் எங்களை சேர்க்காமல்.. எல்லாம் வீண்ணாகிற்றே’ என. 

இப்போதும் போதவில்லை இந்த சர்வேஷ்ஷூக்கு.. அடிக்கடி அவள் பேச.. இவன் பார்த்துக் கொண்டே வந்தான்.. அவளை.

“உன் அழகை பருக..

என்கண்கள் போதாதடி..

என் நிலையை எழுத

வானங்கள் போதாதடி..

நேரமுள்ளை  பின்னிழுத்து..

வாரம் எட்டு நாள் கொடுத்தும்..

சுற்றும் பூமியை தடுத்தும்..

போதவில்லையே.. போதவில்லையே..”