புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 21

அத்தியாயம் 60

ரஞ்சனி……

தன் பெற்றோர்கள் வர , மதியமாகிவிடும் என்பதாலும் ஏற்கனவே விடுமுறை எடுத்தாலும்  ரஞ்சனி வேலைக்குக் கிளம்பினாள் . ஆனால் மனதில் சின்ன பரிதவிப்புடனே இருந்தாள் . 

அவள் பதட்டத்தைக் கண்ட ரகு , யாருக்கும் தெரியாமல் கண்களால் ஆறுதல் சொன்னான் .

 ஆனாலும் ரஞ்சனி தெளிவில்லாமலே இருந்தாள் . 

இனி, சைகையோ , கண்பார்வையோ தொடர்ந்தால் யாராவது கவனிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதைப் புரிந்து , அவைகளைத் தவிர்த்து,  பதிவுகளை அனுப்பித் தேற்றினான் . 

மாலை அவள் கிளம்பியவுடன் , அவள் காரில் போகும் நேரத்தைக் கணக்கிட்டு போனில் அழைத்து , “உன்னால் அவர்கள் சம்மதத்தைப் பெற முடியவில்லையென்றால் நான் வந்து பேசுகிறேன் . நல்லதே நடக்கும்…” என்று தைரியமூட்டினான் .

“என் பெற்றோர்கள் என்னை நன்றாகப் புரிந்தவர்கள் , அதனால் பெரிய பிரச்சனை வராது என்று  தான் நினைக்கிறேன் . ஆனால் எனக்குத்தான் ,நான் தான் … இப்படிபட்ட விசயத்தை முதல் முறையாக பேசப் போவதால் ஒரு தயக்கம் , கலக்கம்…” என்று இழுக்க ,

“அடிங்க , நான் மட்டும் பலமுறை இந்த மாதிரி விசயங்களை வீட்டில் பேசியிருக்கிறேனா? அப்படியே ஒரு ஃபளோவில் பேச வேண்டியதுதான்….” என்று கேலி பேசி , அவளை இலகுவாக்க , 

ரஞ்சனி தைரியமானாள் .

வீட்டில் அவளைப் பெற்றோர் வரவேற்க , “அப்பா….” என்று அமர ,

“போய் ஃரெபிரஷ் செய்து கொண்டு வாம்மா , அப்புறம் பேசலாம்…” 

அவள் ரெஃபிரஷாகி வர  , சுடச்சுட காப்பியும் பலகாரமும் தயாராக இருந்தது . அவள் சாப்பிடும் வரை பொதுவான  கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் நிதானமாக , “ சொல்லும்மா ….” என்று ராமநாதன் கேட்க,

“அதான் நேற்று சொன்னேனே  அப்பா , ரகு ….” என்று இழுக்க ,

“அது சரி ம்மா  ,  எல்லாவற்றையும் விவரமாகச் சொல் ரஞ்சனி . மேலும் இதில் உன் அபிப்பிராயம் என்னம்மா?”

“எனக்கும் பிடித்திருக்கிறது அப்பா , அவரிடமும் சொல்லிவிட்டேன்…” என்று இரண்டு நாளாக நடந்த விவரத்தை எடுத்துச் சொன்னாள் . 

கோகிலா வந்து மகளின் கைப்பிடிக்க , அவளும் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் .

“அப்புறம் என்ன ரஞ்சனி ?  ஏன் குழப்பமாக இருக்கிறாய்  ?” என்று ராமநாதன் உந்த ,

“அவர் அருகில் இருக்கும் போது , பேசும் போது  நம்பிக்கையாகவும், தைரியமாகவும் இருக்கிறது அப்பா , ஆனால் அவர் விலகினால் ஏதேதோ குழப்பம் வந்து ஒட்டி கொள்கிறது”  என்று பாவமாகச் சொல்ல ,

ராமநாதன் மெல்ல புன்னகைத்தபடி ,  “அதான் நீ தெளிவாக எல்லாவற்றையும் கேட்டு விட்டாயே , மேலும் அவரும் தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கிறாரே , அப்புறம் என்ன குழப்பம் ரஞ்சும்மா?”

“பேசுவது எளிது அப்பா , ஆனால் எதார்த்தம் மிகவும் கடினமானது.”

“மேலும் திருமணத்தினால் வரும் சங்கடங்களை , பிரச்சனைகளை சந்திக்க நான் தயாராக உள்ளேனா? பல விசயங்களை அனுசரிக்க வேண்டியது இருக்குமே… இது சரியாக வருமா? என்று என் மீதே எனக்குப்  பல குழப்பங்கள் அப்பா….” என்று பெரிய பட்டியலே போட்டாள் .

உடனே கோகிலா , “ ரஞ்சும்மா , இதெல்லாம் இயல்பாக எல்லா பெண்களுக்கும் திருமணத்திற்கு முன்னால் வரும் குழப்பம் தான். இது சகஜம் தான் . புதிய அலுவலகத்திற்கு வேலைக்குப் போகும் போது நிறைய குழப்பமும் , பயமும். வந்தது தானே , அதற்காக வேலைக்குப் போகாமல் இருந்து விட்டாயா? ஒரு கை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தாய் தானே , விடாமல் முயற்சி செய்தாய் தானே . இன்று நல்ல வேலையில் மன நிறைவுடன் இருக்கிறாய் தானே . அதே போல் இதிலும் நம்பிக்கை வைத்து , ஒரு கை பார்த்து விட வேண்டும் என்று இறங்கு , நிச்சயமாக நீ இந்த திருமண வாழ்வில் வெற்றி பெறுவாய் . மனநிறைவுடன் சந்தோஷமாக இருப்பாய் ரஞ்சனி” என்று நம்பிக்கையாகச் சொன்னார் .

“கதவுக்குப் பின்னால் பூதம் இருக்கிறதோ ?என்று பயந்தால்  உள்ளேயே  இருக்க வேண்டியதுதான் ரஞ்சும்மா . கதவைத் திறந்துகொண்டு வெளியே வாம்மா . அங்கே உனக்கு அழகான உலகம் காத்திருக்கலாம்” என்றார் ராமநாதன் .

“மேலும் ரகுவின் குடும்பத்தினர் அனைவரும் பக்குவமானவர்களே , நிச்சயமாக எந்த விசயமென்றாலும் உட்கார்ந்து பேசி சரி செய்து கொள்ளலாம் ரஞ்சும்மா…” என்றார் நம்பிக்கையுடன் .

“நீங்கள் சொல்வது அனைத்தும் புரிகிறது அப்பா, ஆனாலும் …” என்று இழுக்க , 

“உன் கண்களை மூடு ரஞ்சும்மா , இப்போது அப்பா கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்”

“கிட்டதட்ட மூன்று வருடம் நீங்கள் இருவரும் சேர்ந்தே பயணத்திருக்கிறீர்கள் . அதனால் சில விஷயங்களை உன்னால் தீர்மானமாக சொல்ல முடியும் என்று நம்புகிறேன் .”

“சரிப்பா . கேளுங்கள்…”

“எங்களுடன் நீ இருக்கும் போது உணரும்  பாதுகாப்பை  ரகுவுடன் உணர்கிறாயா?”

“கட்டாயமாக அப்பா . இந்த மூன்று வருடத்தில் அவர் கண்ணிய குறைவாகவோ , மரியாதை குறைவாகவோ நடந்து பார்த்ததே இல்லை . மேலும் அவருடன் பணிபுரிபவர்களை நன்றாக பார்த்துக் கொள்வார்.”

“அவருடன் எந்தத் தயக்கமும் கவலையும் பயமும் இல்லாமல் அனைத்தையும் பேச முடிகிறதா?”

“ஆமாம் அப்பா ,   எந்தத் தயக்கமின்றி அவருடன் பகிரலாம் , காது கொடுத்து பொறுமையாகக் கேட்பார் .”

“அவருடன் இருக்கும் போது சுதந்திரமாக இருக்க முடியும் என்று நம்புகிறாயா?”

“நிச்சயமாக அப்பா”

“ரகு இல்லாது வேறு யாரையும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்க முடியுமா?”

“இல்லை அப்பா, இல்லை ….” என்று வேகமாக மறுத்து, கண்ணைத் திறக்க ,

“அவ்வளவு தான் . இப்போது புரிந்ததா?” என்று சிரிக்க ,

ரஞ்சுவும் தெளிவானாள் . சின்ன வெட்கச் சிரிப்போடு அம்மாவை அனைத்து முத்தமிட்டாள் .

பின் ரஞ்சனி , “உங்களுக்கு….” என்று இருவரையும் பார்த்து இழுக்க….

“ரொம்ப சீக்கிரம் கேட்டு விட்டாய் . எங்களுக்கு பூரண சம்மதம் “ என்று ராமநாதன் நகைக்க , 

உடனே கோகிலா , “நிச்சயமாக ரகு உனக்கு நல்ல வாழ்க்கை துணையாக இருப்பார்” என்று உச்சி முகர்ந்தார் .

ரஞ்சனி மீண்டும் வெட்கப்பட ,  “இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா ?” என்று ரஞ்சனியின் முகத்தை இரு கைகளாலும் சுற்றி  திருஷ்டி  கழிக்க,

“கல்யாண கலை வந்து விட்டது” என்று ராமநாதன் கேலி செய்ய,

ரஞ்சனி சிணுங்கினாள் .

இதைப் பார்க்க , “ராகவ் இல்லையே…” என்று கோகிலா விசனப்பட,

“ அண்ணாவிற்கு ஓ.கே. தானே அம்மா”

“அவனுக்கு ரொம்ப திருப்திடா , நீ தான் ஏதாவது குட்டையைக் குழப்பி விடக்கூடாது” என்று புலம்பிக் கொண்டிருந்தான்  “என்று சொல்லிச் சிரிக்க ,

“அம்மா…” என்று ரஞ்சனி மீண்டும் சிணுங்கினாள் .

“விடு கோகி..”என்றவர் , “முதலில் ராகவ்விடம் இந்தச் சந்தோஷமான விசயத்தைப் பகிர வேண்டும் . அவன் அங்கே தவித்துக் கொண்டிருப்பான்…” என்று போனை ராமநாதன் எடுத்தார் .

பின் அவனிடம் சொல்ல , அவன் ரஞ்சனியிடம் போனைக் கொடுக்கச் சொன்னான் .

“ரொம்ப சந்தோஷம் டா . இப்போது நான் நிம்மதியாக இருக்கிறது”

அப்போது வான்மதி போனை வாங்கி ரஞ்சனியை ஓட்ட  , அங்கே அனைவரும் மனம் நிறைவுடன் சிரித்தனர் .

“ரகுவிடம் பேசி விட்டீர்களா…?” என்று ராகவன் வினவ ,

“இனிமேல்தான் , நீ எதிர்பார்த்துக் கொண்டிருப்பாயே…” என உனக்கு அடித்தேன் .

“சரி அப்பா , அவரிடம் பேசி விட்டுச் சொல்லுங்கள்” என்று போனை வைத்தான் .

அத்தியாயம் 61

ரஞ்சனி…..

“ரகுவிடம் பேச வேண்டும் ரஞ்சனி…” என்று ராமநாதன் சொல்ல ,

“ சரி அப்பா..” என்று   போனில் அழைத்தாள் , உடனே அந்தப் பக்கம் ரகு போனை எடுக்க , “என்னாச்சு ரஞ்சனி?” என்று படபடத்தான்.

“எல்லாம் ஓ.கே. தான் , அப்பா பேச வேண்டும் என்கிறார்” என்று கொடுத்தாள் .

“சொல்லுங்க அங்கிள்…”

ரஞ்சனி எல்லாம் சொன்னாள் ப்பா .ஆனாலும்  பெரியவர்களாக சில விசயங்களை  தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் .

“கேளுங்கள் அங்கிள் , தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை .”

“நீங்கள் இந்த முடிவில் தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கிறீர்கள் தானே ?”

“நிச்சயமாக அங்கிள் .  எனக்கு ரஞ்சனியை மிகவும் பிடித்திருக்கிறது . அவள் என் வாழ்வில் இணைந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் இருப்பேன் என உறுதியாக நம்புகிறேன் .”

“ரொம்ப சந்தோஷம்ப்பா . உங்கள் வீட்டில் இத்திருமணத்திற்கு முழு சம்மதம் தானே ?”

“எங்கள் வீட்டில் அனைவருக்கும் பூரண சம்மதம் அங்கிள் . உங்களுக்கு?”

“எங்களுக்கும் முழு  சம்மதம்”

 “நன்றி அங்கிள்.”

“அப்புறம் வீட்டில் பேசி விட்டுச் சொல்லுங்கள் . நாம் அடுத்து நடக்க வேண்டிய  விசயங்களைப் பார்ப்போம் .”

“சரி அங்கிள் , அப்பாவிடம் பேசி விட்டு சொல்கிறேன் .”

“சரிப்பா, போனை ரஞ்சனியிடம் கொடுக்கிறேன்.”

ரஞ்சனியும் சின்ன சிரிப்போடு போனை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள் .

“ஏங்க , நம்ம பொண்ணு எனக்கு முத்தம் கொடுத்து மூணு வருஷமாச்சுங்க” என்று கண்கலங்க ,

“நல்லது நடக்கிற போது கண் கலங்கிட்டு….” என்று ராமநாதன் கோகிலாவின் தோளைத் தட்ட ,

கோகிலாவும் முந்தானையில் , கண்களை துடைத்து விட்டு மென்னகை புரிந்தார் .

ரகு அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், அவளிடம் காதல் கதைகள் பேசி சிவக்க வைத்தான் .

ரஞ்சனியும் ஒவ்வொரு நொடியையும் ரசித்தாள் .

மறுநாள் காலை எட்டு மணிவாக்கில் ரகு , ராமநாதனை அழைத்து , “அப்பா வீட்டுக்கு வர சொன்னார்” என்ற தகவலை சொல்ல ,

கோகிலாவும் ராமநாதனும் காலை அங்கே சென்றனர் . சுந்தரியும் சுவாமிநாதனும் வரவேற்றனர் .

” பிள்ளைகள் பிரியபட்டு விட்டனர் ….”என்று ராமநாதன் ஆரம்பிக்க , 

இடைபுகுந்த சுவாமிநாதனும் , “எங்களுக்கு பூரண சம்மதம்  . கல்யாண வேலைகளைப் பார்ப்போம் சம்பந்தி . இனி ரஞ்சனி எங்கள் பெண் . அவள் நிச்சயமாக சந்தோஷமாக இருப்பாள்” என்று சுவாமிநாதன் உறுதியளித்தார்.

“ரஞ்சனி எங்கள் வீட்டுக்கு வருவதில் மகிழ்ச்சி” என்று சுந்தரியும் சொல்ல ,

ராமநாதனும் , கோகிலாவும் கண் கலங்கினர் . 

 “அடுத்து….” என்று ராமநாதன் ஆரம்பிக்க , 

உடனே சுவாமிநாதன், “சில தேதிகளைக் காண்பித்து , இதை எங்கள் குடும்ப ஜோதிடரிடம் பேசி வாங்கினேன் , உங்கள் பெண்ணிடம் கலந்து பேசி விட்டு , எந்தெந்த தேதி ஒத்து வரும் என்று கூறுங்கள். நாம்  கல்யாண வேலைகளை  தொடங்கிவிடுவோம்…”

 ராமநாதனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆமோதித்தார் .

 கல்யாண தேதி முடிவு செய்யப்பட்டு , கல்யாணம் மதுரையிலும் , வரவேற்பு சென்னையிலும் என்று முடிவு செய்யப்பட்டது . திருமணத்திற்கு இரண்டு மாதம் மட்டுமே இருக்க , வேலைகள் வேகமாகத் தொடங்கின .

அலுவலகத்தில் வீண் பேச்சுக்களையும் சலசலப்புகளையும் தவிர்க்க , பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணமாகவே அறிவிக்கப்பட்டது . 

திருமணம் விஷயத்தை கேள்விபட்டு , ரஞ்சனியை  ஹரிணி ஓட்டித் தள்ளினாள் . ரஞ்சனியும் அவள் கேலிகளை ரசித்தாள் .

அலுவலகத்தில் கண்ணியம் காத்தாலும் , இரவுகளில் காதல் பயிர் வளர்த்தனர் .  ரகுவின் கேலியும் கிண்டலும் , ரஞ்சனியை உற்சாகமூட்டின . 

அவனுடன் பழகப் பழக, அவளுடைய குழப்பம் எல்லாம் பறந்தோடி விட்டன . மேலும் தைரியமும் , நம்பிக்கையும் கூடியது .  திருமணத்தையும் , அவனுடனான வாழ்க்கையும் ஆவலுடன் எதிர்பார்த்தாள்.

அத்தியாயம் 62

பத்திரிக்கை கொடுக்கத் தொடங்கினர் . சுவாமிநாதனும் சுந்தரியும் விஸ்வா வீட்டுக்கு நேராகச் சென்று பத்திரிகை கொடுக்க  ,

அப்போது தான் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த விஸ்வா , அவர்களைப் பார்த்ததும் “வாங்க , வாங்க…” என்று வேகமாக வரவேற்றான் .

அவர்களை அமர வைத்து விட்டு , “அம்மா…. , அப்பா…., சந்தியா….” என்று அழைக்க , அனைவரும் வந்தனர் .

“நம்ம ரகுவிற்கு திருமணம் முடிவாகியிருக்கு ….” என்று சுவாமிநாதன் பத்திரிகையை நீட்டினார் .

“ ரொம்ப சந்தோஷம்” என்று சங்கரன் வாங்க , 

“ ரகு சொல்லவே இல்லையே அங்கிள் …” என்று விஸ்வா குறைபட , 

“திடீரென முடிவாக விட்டது . அதனால் வேலை பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது விஸ்வா . இன்னும் அவன் நண்பர்களுக்குக் கொடுக்க ஆரம்பிக்கவில்லை . அடுத்து வருவான் ….”என்று கூறிவிட்டு , 

“கட்டாயமாக அனைவரும் திருமணத்திற்கு வர வேண்டும்.”

அப்போது ஆகாஷ் ஏதோ பிடிவாதம் பிடிக்க , சந்தியா அவனைச் சமாதானப்படுத்தும் நோக்கோடு , உள்ளே தூக்கிச்  சென்றாள் .

“ஏன் இவ்வளவு அவசரம் ?” என்று கேட்க ,

“இந்த நேரமென்றால் என் பெண்ணும் , மாப்பிள்ளையும் அமெரிக்காவில் இருந்து வர சரியாக இருக்கும் . மேலும் பெண்ணோட அண்ணியும் கருவுற்றிருக்கிறாள் , நாட்கள் தள்ளினால் அவர்களுக்கு பிரசவ நேரம் வந்து விடும் . அதான்…” என்றவர் ,

 மீண்டும் ஒரு முறையும்  அழைத்து விட்டு கிளம்பினர்.

அவர்கள் கிளம்பியவுடன், மணமகள் பெயரைப் பார்த்து சங்கரன் அதிர்ந்தார் . சந்தோஷமானார் . “டேய் விஸ்வா …” என்று மகிழ்ச்சியில் கத்த ,

“என்னப்பா…?” என்று விஸ்வா வினவ ,  திருமண பத்திரிக்கையை  நீட்டினார் . விஸ்வாவும் அதிர்ந்தான் .

“என்ன விசயம்?” என்று ராஜி கேட்க , 

சங்கரன் வேகமாக ,  “ரஞ்சனிக்கும் ரகுவுக்கும் தான் திருமணம்.”

ராஜி குழப்பத்துடன் பத்திரிகையை  பார்க்க ,  ஷாக்கானார் . 

அதற்குள் சங்கரன் சுவாமிநாதனை அழைத்து விவரம் கேட்க ,  “இருவரும் பிரியப்பட்டார்கள் . அதான் பெரியவர்கள் சேர்ந்து முடித்துவிட்டோம் .”

“ரொம்ப சந்தோஷம் . நல்ல பிள்ளைகள் , நன்றாக இருப்பார்கள்” என்று வாழ்த்தினார் .

விஸ்வாவும் , ராஜியும் சங்கனையே  பார்த்துக் கொண்டிருக்க ,  சுவாமிநாதன் சொன்னதையே சொல்ல ,

இருவரும் அதிர்ச்சியானார்கள் . பின், “எப்படி அப்பா?” என்று வினவ , 

ரஞ்சனி அங்கு வேலை பார்க்கும் விவரத்தைச் சொல்ல , தன்னைத் தவிர்த்து அப்பாவே ஆடிட்டர் அலுவலகம் செல்லும் காரணம் புரிந்தது . அவன் அப்பாவையே பார்க்க , 

“தர்மசங்கடத்தைத் தவிர்க்க தான் , நானே போனேன்” என்று முடித்தார் .

வழக்கம் விஸ்வாவின் பிரச்சனையைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும் குணத்தால் அப்பாவின் செய்கையால் நிம்மதியாக உணர்ந்தான்.

 இப்போது ரஞ்சனியின் திருமணச் செய்தி அவன் மனதில் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த குற்ற உணர்ச்சியைப் போக்க , நிம்மதியானான் .

“நல்ல அழகு , நல்ல படிப்பு , பணம் , வசதி இருந்தபோதும் இந்த மாதிரி பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறானே… , இந்தக் காலத்துப் பசங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை…” என்று ராஜி அங்கலாய்க்க ,

சங்கரன் வேகமாக , “எதுவும் சொல்லாதே ராஜி” என்று வர  ,

“நான் ஒன்றும் சொல்லவில்லை , பொதுவாகத்தான் பேசினேன் . என் பையனுக்கு அந்தப் பெண் வேண்டாம் என்று நினைத்தேனே தவிர மற்றபடி அந்தப் பெண்ணிற்கு ஒரு நல்வாழ்க்கை அமைந்தால் எனக்கு சந்தோஷம் தான்” என்று நிறுத்திக் கொண்டார் .

‘தொழில் ரீதியான பழக்கமும் , அழைக்கவில்லை என்றால் நண்பர்கள் வட்டத்தில் தேவையில்லாத பேச்சுக்கள் எழும்’ என்பதை யோசித்து ரகு , இதைப்பற்றி ரஞ்சனியிடம் பேச , 

“நான் சின்ன பெண் அல்ல , எனக்குக் காலம் பல பாடங்களைக் கற்று தந்துள்ளது ரகு .  அவர் முடிந்த அத்தியாயம் என்ற தெளிவும் இருக்கிறது . அதனால் எனக்கு எந்தத் தடுமாற்றமோ தயக்கமோ இல்லை…”என்று சிரித்தாள் . 

ரகு, ஒரு மெச்சுதல் பார்வை பார்த்தான் .

விஸ்வாவை அழைக்க, ரகு  கடைக்கு வந்திருந்தான் . விஸ்வாவும் ஆரம்பக் கட்ட அதிர்ச்சியை கடந்ததால்  இயல்பாகவே நடந்து கொண்டான் .

தொடரும்…