நீ மட்டும் நிஜமாக 5

அன்று காலையில் நேரமாகவே எழுந்து இருந்தான் வெற்றி. அவனது அசைவில் அருவியும் எழுந்து கொள்ள, “படு படு” என்று மனைவியின் தோள் தட்டி உறங்க வைத்து விட்டு, தான் மட்டும் எழுந்து வாசலுக்கு வந்தான். அப்போதுதான் லேசாக பொழுது புலரத் தொடங்கியிருக்க, அத்தனை ரம்யமாக இருந்தது கண்ட காட்சி.

இதுவரை தனது தோட்டம், இளைப்பாறுதலுக்கான ஒரு இடம் என்று நினைத்திருந்தவனுக்கு இன்று அத்தனையும் பணமாக தெரிந்தது.

தனது தாத்தாவும் தந்தையும் இதற்காக எத்தனை உழைத்திருக்க வேண்டும் என்பதும் புரிய, அவர்கள் உழைப்பின் வலி மெல்ல புரியத் தொடங்கியது அவனுக்கு.

ஐந்து ஏக்கர் நிலம் தான். ஆனால், சரியாக திட்டமிட்டு, பிரித்து, அடுத்தடுத்து அடுக்குகளாக பயிரிட்டு இருந்தார் சொக்கநாதர். தென்னை, வாழை, மாமரங்கள், தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை, பூக்கள் என்று அத்தனையும் விதவிதமாக காய்த்திருந்தது அங்கே.

இதற்கும் மேலாக எந்த கோடையிலும் வற்றாத கிணறு ஒன்றும் அவர்கள் தோட்டத்தில் இருக்க, உழைக்க தெரிந்தவனுக்கு சொர்க்கம் தான் அந்த இடம்.

வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடிக் கொள்ள முடியும் என்று உணர்ந்தவன் மெல்ல தன் தோட்டத்தை சுற்றி வந்தான். அவன் மொத்தத்தையும் சுற்றி முடிப்பதற்குள் காத்தன் வந்து நிற்க, “ஒன்னும் இல்லண்ணே. சும்மா அப்படியே நடந்து வந்தேன்.” என்றான் அவரிடம்.

அவர் தலையாட்டவும், “காலை சாப்பாடு முடிச்சுட்டு வந்திடுங்க அண்ணே. வேலையை ஆரம்பிப்போம்.” என்றான் மீண்டும்.

“தம்பி தனியா எப்படி? உதவிக்கு யாரையும்” எனும்போதே, 

“பார்த்துக்கலாம். நீங்க வாங்கண்ணே” என்று கூறி வந்துவிட்டான். 

அவன் வீட்டின் திண்ணையில் வந்து அமர, அதற்குள் அருவியும் எழுந்திருக்க, வெற்றியிடம் ஒரு குவளையை நீட்டினாள் அவள்.

“என்னப்பா” என்றவனிடம், 

“குடிங்க. குடிச்சுட்டு வேலையை பாருங்க” என, அந்த குவளையை கையில் வாங்கி கொண்டான் அவன். நேற்றிரவு மீதமான சாதத்தை ஊறவைத்திருக்க அதைத்தான் கரைத்து கையில் கொடுத்திருந்தாள்.

வெற்றி அமைதியாக குடித்து மீதியை அவளிடமே கொடுக்க, “குடிச்சுட்டேன்ப்பா” என்றாள் அருவி.

“நீயாப்பா. அதும் என்னை விட்டுட்டு. குடிப்பா” என்றுவிட்டான்.

அருவி சின்ன சிரிப்புடன் மீதத்தை வாங்கி கொள்ள, “வேலையிருக்கு அருவி. மரம் ஏற போறேன்.” என்றவனை அருவி அமைதியாக பார்க்க, “ஏதாவது பண்ணனும் இல்ல” என்றான் மீண்டும்.

“நான் என்ன பண்ணட்டும்?” என்று அருவி கேட்க,

“என்ன… நான் பறிச்சு போடற காயை காத்தனோட சேர்ந்து பொறுக்கி, எண்ணி வை” என்றான் இலகுவாக.

அருவி பதில் பேசாமல் பார்த்திருக்க, “யோசிப்போம்ப்பா. இப்போதைக்கு எதுவும் வேண்டாம். பார்க்கலாம்.” என்றான்.

“வெற்றி” 

“கொஞ்ச நாளைக்கு நீ இங்கே இருக்கறது தான் நல்லது அருவி. வெளியே போயிட்டு வர்ற வேலை எல்லாம் தற்சமயத்துக்கு வேண்டாம்” என, அருவிக்கும் நிலைமை புரிந்தது. வெற்றியின் பேச்சுக்கு அவள் தலையாட்டிக்கொள்ள, அவள் கன்னம் தட்டிவிட்டு எழுந்து கொண்டான் வெற்றி.

சிறிது நேரத்தில் காத்தனும் வந்து சேர, இடுப்பில் அரிவாளை சொருகிக் கொண்டு பரபரவென மரத்தில் ஏறிவிட்டான் தங்கப்பாண்டியனின் மகன்.

எப்போதோ விளையாட்டாக கற்றுக் கொண்டது, இப்போது கைகொடுத்தது. அன்று மதிய உணவுக்கு கூட கீழிறங்காமல் அவன் வேலையைப் பார்க்க, அருவி வந்து கத்தியதில் தான் கீழே இறங்கினான். 

காத்தன், “தம்பி இதுவே எழுநூறு காய் இருக்குங்க. இந்த வட்டம் சக்க போடு போட்டிருக்கு போங்க. இன்னும் ஒரு ஏக்கர் இருக்குங்க. எப்படியும் இன்னும் 800 காய் வரும். அமோகம் தான்” என்று குஷியாகிவிட்டார் மனிதர்.

வெற்றி சிரித்தவன், “எடுத்து வைங்க அண்ணே. சந்தைக்கு நானும் வரேன்” என்றுவிட, அன்று மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் மரம் என்ற தொடங்கிவிட்டான் அவன்.

அன்று மாலை வேலை வரை வேலை தொடர்ந்தும், இன்னும் சில மரங்கள் மீதமிருக்க, “போதும் தம்பி, அதெல்லாம் நமக்கு இருக்கட்டும்” என்றுவிட்டார் காத்தன்.

அன்று இரவு வீட்டிற்குள் நுழைந்தவனை மீன்குழம்பு வாசம் இழுக்க, “தேனு” என்றுவிட்டான் உற்சாகத்தில்.

 அவன் கத்தியதில் அருவி வேகமாக வந்து எட்டிப் பார்க்க, “தேனு மீனு வைக்குதா” என்றான் சிரிப்புடன்.

அருவி கையில் கரண்டியுடன் அவனை முறைக்க, “சரி சரி சாரி. வாசம் மாமனை மயக்குதுடி” என்றான் ராகமாக.

“போய் குளிச்சுட்டு வாங்க வெற்றி” என்றவள் மீண்டும் சமையல் அறைக்குள் நுழைய, அவள் பின்னோடு தானும் சமையல் அறைக்குள் நுழைந்தான் வெற்றி.

“என்னப்பா” என்று அருவி திரும்ப, அவள் கன்னத்தில் பட்டென முத்தமிட்டவன், “உனக்கு யார் மீனு பிடிச்சு கொடுத்தது?” என்றான் ஒன்றுமே நடக்காதது போல்.

அருவி, ‘இப்போ என்ன நடந்தது‘ என்று விழிக்க, அவள் தலையில் தட்டி, “என் பொண்டாட்டி தான். தப்பில்ல” என்றான் சிரித்துக் கொண்டு.

அருவிக்கு அப்போதுதான் கொஞ்சமாக வெட்கம் வர, “போயிட்டு குளிங்க” என்று அவன் முகத்தைப் பார்க்காமல் சிரிப்புடன் திரும்பிக் கொண்டாள்.

“மீன் ஏதுடி” என்றவன் அவள் தோளில் கைபோட்டுக் கொண்டு நிற்க, 

“பேச்சி அக்காதான் பிடிச்சு கொடுத்தாங்க வெற்றி. அவங்களே சுத்தமாக வெட்டி, கழுவி கொடுத்திட்டாங்க. கொஞ்சம் கூட பயமே இல்ல அவங்களுக்கு. தொப்புன்னு கிணத்துல குதிச்சுட்டாங்க.” என்றாள் ஆச்சர்யத்துடன்.

“கிணத்துல குதிச்சு மீன் பிடிக்கிறது உலக அதிசயமாடி. இப்படி வாயை பிளக்கிற. நீ மதுரைக்காரி தானே” என்றான் சந்தேகமாக. 

“மதுரைக்காரியா இருந்தா, மீன் பிடிக்க தெரியனுமா. போப்பா” என்று அவள் திருப்ப,

“அதெல்லாம் எதுக்கு தெரியணும். மீன் சாப்பிட தெரிஞ்சா போதாது”  என்று வாசம் பிடித்தவன், ” சோத்தை போடு. மாமன் பொறுமையா நீச்சல் பழகிக் கொடுக்கிறேன்” என்று அவள் இடுப்பை லேசாக கிள்ளிவிட்டு ஓடிவிட்டான்.

அவன் செயல்களில் அருவிக்கு தான் இங்கே குளிரெடுத்தது. “இவர் என்னவோ ஆளே சரியில்லையே” என்று தனக்குள் புலம்பிக் கொண்டே அவள் உணவை எடுத்து வைக்க, மீன் குழம்பு, மீன் வறுவல் என்று சுவை அள்ளியது அவள் கைப்பக்குவத்தில்.

“எப்படிடா இப்படி சமைக்கிற?” என்று சிலாகித்தபடியே அவன் உண்ண,

“அம்மா சொல்லி கொடுத்தது” என்றாள் அருவி.

“உங்க அம்மா நல்லவங்க தான் போல தேனு” என்றான் வெற்றி.

“மீன் குழம்பு வைக்க சொல்லி கொடுத்தா மாமியார் நல்லவங்களா?” என்று அருவி சிரிப்புடன் முறைக்க, 

“சாப்பிடும்போது பேசக்கூடாது தேனு” என்று வேகமாக உண்ண தொடங்கினான் அவன்.

இரவு உணவை முடித்துக் கொண்டு இருவரும் படுக்கையில் விழ, “தேனு” என்றான் வெற்றி. அவன் குரல் தயக்கமாக வெளி வந்ததில், அவனது தேனு தடதடத்து திரும்பி பார்க்க, “கொஞ்சம் பக்கத்துல வாயேன்” என்றான் அதே தயக்கத்துடன்.

“என்னப்பா” என்று என்று வெளியே வராத குரலில் அவள் கேட்க,

“அசதியா இருக்குடி. தூக்கம் வரல. நீ பக்கத்துல வந்தா” எனும்போதே, சட்டென அவனிடம் ஒட்டிக்கொண்டாள் தேனு.

அவனது கைவளைவில் அருவி முகம் பதித்துக் கொள்ள, அவள் நெற்றியில் முத்தமிட்டு கையை அவள் இடுப்பில் போட்டுக் கொண்டு மெல்ல உறங்க ஆரம்பித்தான் வெற்றி.

‘இதற்கா இத்தனை பயந்து கொண்டோம்‘ என்று அருவிக்கு தான் சிரிப்பு வந்தது. திருமணமான நாள் முதலாகவே வெற்றி அவளிடம் நெருங்கவில்லை. என்னவோ காமத்தை அவன் தேடவே இல்லை.

அருவிக்கும் அவனைப் புரிந்ததால் தான் அவளும் அவன் வழியிலேயே நடக்க தொடங்கியது. இன்று அவனாக பழையபடி அவளிடம் நெருக்கம் காட்ட, என்ன செய்ய போகிறானோ என்று அவள் சற்று தடுமாறி நிற்க, அதற்கெல்லாம் தேவையில்லை என்பது போல் அணைப்புடன் உறங்க தொடங்கினான் அவன்.

அருவிக்கும் இப்போது இருக்கும் மனநிலையில் அவனுடன் ஒன்றி உறவு கொள்ள மனமில்லை தான். ஆனால், வெற்றியாக நெருங்கினால், நிச்சயம் மறுக்கமாட்டாள்.

அவளை பொறுத்தமட்டில், ‘வெற்றிக்கு எல்லாம் தெரியும். அத்தனையும் அவன் பார்த்துக் கொள்வான்‘ என்று ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. எப்படி, எப்போது என்பதெல்லாம் தெரியாது. ஆனால், எல்லாம் வெற்றிமயம் தான் அவளுக்கு.

ஏதேதோ சிந்தனைகள் ஓடி மறைய, அவன் கைப்பிடிக்குள் அவளும் உறங்க தொடங்கினாள்.

—–

தனது வீட்டின் பின்பக்கம் இருந்த தோட்டத்தில் உறக்கம் வராமல் நடந்து கொண்டிருந்தார் முத்தையா. மனது முழுவதும் ஆதங்கம் தான். ‘தன் வீட்டில் தேவதை போல் தன் மகள் இருக்க, இந்த பயலுகளுக்கு கண் தெரியவில்லையே. அப்போ உறவென்று நான் எதற்கு‘ என்று மனது ஆறவே இல்லை அவருக்கு.

‘இந்த பெருசுங்களும் தான் என்ன. எப்பவும் என் பேத்தி, என் மருமக எல்லாம் சொல்லிட்டு, இன்னைக்கு பேரனுக்கு வேற பொண்ணு பார்க்கிறாங்களா. பாக்கட்டும். என் பிள்ளைக்கு அப்பன் நான் இல்ல. அதெல்லாம் தங்கமா மாப்பிள்ளை பார்ப்பேன். இவனுங்களை விட மேல பார்ப்பேன் என் மகளுக்கு” என்று கொதிக்கும்போதே அவருக்கு மனதில் சக்தியின் முகம் ஓடி மறைந்தது.

அவர் தூக்கி வளர்த்த பிள்ளை அவன். முதல் முறை திருமணப் பேச்சு தொடங்கியபோது, வெற்றிக்கும், மீனாட்சிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெரியவர்களின் ஆசை தெரிந்ததால் மனிதர் வாய் திறக்கவில்லை.

ஆனால், இன்று அது எதுவுமே இல்லை என்று ஆனபின்னும், சக்திக்கு வெளியில் பெண் தேடுவதை பொறுக்க முடியவில்லை அவரால்.

பிறப்பிலேயே ஒற்றைப்பிள்ளையாய் பிறந்தவர் முத்தையா. இளம்வயதில் தாய் தந்தையை இழந்துவிட, அதற்குப்பின் தான் அவர் வள்ளியம்மையை மணம் முடித்தது.

தனது நிலை தனது மகளுக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்க, அப்போதும் இறைவன் மறுத்துவிட்டான். வள்ளியம்மையின் உடல்நிலை மற்றொரு குழந்தையை தாங்கும் அளவுக்கு இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட, அன்றோடு பிள்ளை ஆசையையும் விட்டுவிட்டார்.

இன்று சொந்தம் என்று எத்தனை இருந்தாலும், அத்தனையும் தாண்டியது தான் தங்கப்பாண்டியனுக்கும், அவருக்குமான உறவு. அதுவும் மனைவியின் குடும்பம் என்று ஆகிவிட, தன் மகள் தன் வீட்டை போலவே அரசியாக வாழ்வாள் என்று அவர் கனவு காண, அவர்கள் யாருக்குமே அந்த எண்ணம் இல்லை என்பதை பொறுக்க முடியவில்லை முத்தையாவினால்.

மனைவியிடம் கூட தனது ஆதங்கத்தை காட்டிக் கொள்ளவில்லை அவர். மனதோடு வைத்துக் கொண்டிருக்கிறார். ‘என் மகள் என்ன இளப்பமாக போய் விட்டாளா?’ என்று ஒரு கோபம்.

இது விஷயமாக இனி யாரிடமும் வாய் திறப்பதில்லை என்று முடிவெடுத்துக் கொண்டார். தன் மகளுக்கு வரன் தேட தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் பலமாக,  நாளை காலையே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவிடும் வேகத்தோடு வீறுகொண்டு நடந்தார் அவர்.

வள்ளியம்மை வெகுநேரமாக இவரைக் காணாததால் தேடிக்கொண்டு வர, இவர் தோட்டத்தை அளந்து கொண்டிருக்கவும், “என்ன மாமா பசிக்கு வெண்டையும், அவரையும் பிச்சு திங்கலாம்னு வந்தீங்களா” என, மனைவியை ஏகத்திற்கும் முறைத்தவர் எதுவும் பேசாமல் உள்ளே நடக்க, “சாப்பிட்டு போய் படுங்க” என்று பின்னே நடந்தார் வள்ளியம்மை.

படியேறச் சென்றவர் மகள் டைனிங் டேபிளில் அமர்ந்திருப்பது கண்ணில் படவும் அங்கே நடந்தார். வள்ளியம்மை அமைதியாக உணவு எடுத்து வைக்க, அவர் இருந்த மனத்தாங்கலில் மக்களிடம் கூட சரியாக பேசாமல் உணவை முடித்து எழுந்து சென்றுவிட்டார் முத்தையா.

இங்கு தங்கபாண்டியன் தன் தந்தையிடம் நடந்தவற்றை கூறியிருக்க,”அறிவுகெட்டவனே” என்று இந்த வயதில் மகனை வசைபாட தொடங்கி இருந்தார் சொக்கநாதர்.

“என்னப்பா” என்று தங்கம் நிற்க,

“உன் அம்மைக்கும் புத்தி இல்ல, உனக்கும் புத்தி இல்லடா மகனே. கிழவி பேரன் மேல இருக்க பிரியத்துல கிறுக்கு பிடிச்சிருக்கா. ஆற அமர்ந்து யோசிச்சா தெளிஞ்சிடுவான்னு பார்த்தா, அவ உனக்கு வேப்பிலை கொடுத்து அனுப்பி இருக்கா. நீயும் அதுக்கு தக்க ஆடிட்டு இருக்க. என் பேத்தி நினைப்பே வரலையாடா உங்களுக்கு” என்று முறுக்கிக்கொண்டு அமர்ந்துவிட்டார் சொக்கநாதர்.

“அப்பா” என்று மகன் நிற்க,

“எந்த முகத்தை வச்சுட்டு, என் மருமகனை பார்ப்பேன். நீ எப்படிடா அவன்கிட்ட கேட்ட. என் மருமக, என் மருமகன்னு அத்தனை பேரும் பேசிட்டு அவ அப்பன் கிட்டவே உன் பிள்ளைக்கு பொண்ணு விசாரிக்க சொல்லுவியா. புத்தியை புல்லு திங்க விட்டுட்டியா தங்கம்” என்று சொக்கநாதர் மகனை பிடிபிடியென்று பிடிக்க, 

“மீனாட்சியை எப்படிப்பா சக்திக்கு கேட்க முடியும்? அவன் வயசென்ன, இவ வயசென்ன? அப்படியே வயசை பார்க்கலைன்னாலும், நேத்து வரைக்கும் சின்னவனுக்கு பேசிட்டு, இன்னைக்கு பெரியவனுக்கு எப்படி கேட்க முடியும்?” என்று தன் பக்கத்தை உரைத்தார் தங்கபாண்டியன்.

“அதெல்லாம் அடுத்த விஷயம்டா. நீ மொத மருமகன் என்ன நினைக்கிறார்ன்னு கேட்டிருக்கணுமா இல்லையா?” என்று பெரியவர் கேட்கவும், அமைதியானார் தங்கம்.

“நீ முதல்ல கிளம்பு. அவரைப் பார்த்து ஒரு வார்த்தை எடுத்து சொல்லிட்டு வருவோம்” என்று அப்போதே சொக்கநாதர் கிளம்ப, 

“அப்பா இந்த நேரத்துல எங்க கிளம்புறீங்க” என்று தங்கம் பின்னோடு வர,

“நேரத்துக்கு என்னடா? என் வீட்டு மருமகன். நான் பதில் சொல்லியாகணும்” என்று கிளம்பிவிட்டார் சொக்கநாதர்.