புதுப்புது அர்த்தங்கள்… நாள் – 20
அத்தியாயம் -57
வீட்டிற்கு வந்த ரஞ்சனி வானில் பறப்பதைப் போல் உணர்ந்தாள் . வரையறுக்க முடியாத , வார்த்தையில் வடிக்க முடியாத மகிழ்ச்சியில் திளைத்தாள் .
பின் தன்னை நிதானித்து கொண்டு அப்பாவை அழைத்தாள் .
“சொல் ரஞ்சும்மா” என்றார் ராமநாதன் .
“அப்பா…..” என்று தயக்கத்துடன் அழைக்க , ராமதாதனுக்குப் பதட்டமாக ,
“டேய் ரஞ்சும்மா , ஏதாவது பிரச்சனையா?”
ரஞ்சனி நிலவரம் புரிந்து , “ஒரு பிரச்சனையும் இல்லைப்பா , ஒரு விசயம் பேசவேண்டும் , அதான்….” என்று இழுத்தாள் .
ஏற்கனவே ராமநாதனின் படபடப்பைக் கேட்டு , கோகிலா, ராகவ் மற்றும் வான்மதியும் அருகே வந்திருக்க ,
சற்று ஆசுவாசத்துடன் , “சொல்லுடா ..” என்றார் ராமநாதன் .
“அப்பா…..” என்று மீண்டும் தயங்க , ரஞ்சனியின் தயக்கம் வீட்டில் அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது .
“சொல்லுடாம்மா…” என்று மீண்டும் ஊக்க ,
“ரகு ஸார் என்னைத் திருமணம் செய்யக் கேட்டார்…” என்று ஒருவாறு சொல்லி முடிக்க ,
அந்தப்பக்கம் அமைதியே நிலவ , “அப்பா….. , அப்பா…..” என்று ரஞ்சனி படபடக்க ,
“ தெளிவாகச் சொல்லு ரஞ்சும்மா…”
“ரகு ஸார் என்னை விரும்புவதாகச் சொன்னார் அப்பா”
இங்கே வீட்டில் அனைவரும் திகைத்தனர் . “அடுத்து என்ன கேட்பது , பேசுவது…?” என்று புரியாமல் தடுமாறினர் .
சற்று சுதாரித்த ராமநாதன் , “ நீ என்னடாம்மா சொன்னாய்?”
“யோசித்துச் சொல்கிறேன் என்று இருக்கிறேன் அப்பா.”
“ஓ …..!” என்று மட்டும் சொன்னவர் , “சரிம்மா , நாங்கள் நாளை காலை புறப்பட்டு வருகிறோம் . நேரில் பேசலாம்…”
“அப்பா…” என்று தயங்க ,
“இதையெல்லாம் நேரில் தான் பேச வேண்டும் ரஞ்சிம்மா.”
“சரி அப்பா , நேரில் பேசுவோம்” என்று போனை வைத்தாள் .
“ காலையில் கிளம்ப வேண்டும் கோகிலா , அதற்கான ஏற்பாடுகளைப் பார் . டிரைவருக்குச் சொல்லுப்பா” என்று அடுத்தடுத்து கட்டளைகளை இட ,
கோகிலா இடைமறித்து , “ரஞ்சனி என்ன சொல்வாள் ?” என்று ஆர்வமுடன் கேட்க ,
“நல்லதே நடக்கும் கோகிலா .”
“எப்படிங்க? அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்…?” என்று ஐயத்துடன் கேட்க,
“அவளுக்குப் பிரியமில்லை என்றால் இந்த விசயம் நம் காதிற்கே வந்திருக்காது .”
“ஆமாம் அம்மா , அப்பா சொல்வது சரிதான்.” என்று ராகவ் அவசரமாக ஆமோதித்தான் .
கோகிலா மகிழ்வுடன் , “ நல்ல இடம் , நல்ல பையன் எல்லாம் நல்லபடியாக கூடி வர வேண்டும் பெருமாளே….” என்று வேகமாகக் கடவுளுக்கு ஒரு வேண்டுதலை போட ,
அதை ஆமோதித்த ராமநாதன் , “நீ என்னடா ராகவ் நினைக்கிறாய்?”
“பக்குவமான குடும்பம் அப்பா , ரகு நிச்சயமாக நன்றாக பார்த்துக் கொள்வார் . எனக்கு முழு சம்மதம் .”
ராமநாதன் நிம்மதியானார் . “ சரிப்பா , நானும் அம்மாவும் போய் பேசிவிட்டு வருகிறோம்”
“நானும் வருகிறேன் அப்பா.”
“இல்லைடா , வான்மதி கர்ப்பமாக இருக்கிறாள் , அவளை அவ்வளவு தூரம் காரில் அழைத்துச் செல்வது சரி கிடையாது , அதே போல் தனியாக விடுவதும் சரி வராது” என்று முடித்தார் .
“இல்லை அப்பா , வான்மதிக்குத் துணையாக ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யலாம் . மாமாகிட்ட பேசுகிறேன்….”
“இல்லைடா ராகவா , நாங்கள் முதலில் போய் பேசுகிறோம் .”
“அப்பா …..” என்று இழுக்க ,
“இல்லைடா , நாம் எல்லோரும் ஒரே நேரம் போய் பேசி , அவள் ஏதாவது யோசனையில் மறுத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடும் .”
“அதுவே நீ தாமதித்து வந்தால் , மீண்டும் பேச்சைத் தொடங்கவும் , அழுத்தம் கொடுக்கவும் வசதியாக இருக்கும் . மேலும் வான்மதிக்கு மாற்று ஏற்பாடு செய்ய நேரமும் இருக்கும்.”
அப்பாவின் எண்ணம் சரியாகப் பட , “அப்படியே செய்வோம்”
‘எல்லோரும் நாளை பொழுது நல்லபடியாக இருக்க வேண்டும்’ என்ற வேண்டுதலுடன் படுக்கச் சென்றனர் .
இங்கே ரஞ்சனியும் இன்றைய நிகழ்வுகளால் தூக்கம் வராது தவித்தாள் . ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓடியது .
ரகு அருகில் இருக்கும் வரை எல்லாம் சரியாக தோன்றியது. இப்போது கலக்கத்தைக் கொடுத்தது .
நாளை பெற்றோர் வந்தபின் என்ன நடக்கும்? என்ற யோசனையும் வரவும் , அப்படியே காற்றாடியை பார்த்தபடியே படுத்திருந்தாள் .
அப்போது அவள் கைப்பேசியில் இருந்து , புதிய மெஸேஜ் வந்ததற்கான ஒலி வர , அதை எடுத்துப் பார்த்தாள் .
“நல்லதே நடக்கும் கண்ணம்மா , நிம்மதியாக தூங்கு” என்று ரகு அனுப்பியிருக்க ,
இனம்புரியாத நிம்மதியை உணர்ந்தாள் . “நல்லதே நடக்கும்” என்ற வாக்கியத்தை ஜபித்து கொண்டே உறங்கிப் போனாள் .
அத்தியாயம் 58
சந்தியா…..
சந்தியா சென்னை வந்து சேர்ந்தாள் . “என்னதான் குழந்தைக்காக…” என்று மனதைத் தேற்றி வந்திருந்தாலும் உள்ளுக்குள் ஒருவித பயத்தோடே இருந்தாள் .
அதே போல் ஓரளவு உடம்பு தேறியிருந்தாலும் முழுவதுமாக பலம் பெறவில்லை . ஹீமோகுளோபின் அளவை ஏற்றுவதற்காக உடனடி தீர்வாக இரத்தம் ஏற்றியிருந்தாலும் மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க , இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் சாப்பாட்டு முறையில் சில மாற்றங்களை பரிந்துரைத்திருந்தனர் . அதை பின்பற்றிக் கொண்டிருந்தாள் .
மேலும் ராஜியும், சந்தியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் அடக்கியே வாசித்தார் .நாட்கள் ஓடியது.
அப்பாவின் அறிவுரைபடி , காலையில் சந்தியாவுடன் சாப்பிட்டான் . “சேர்ந்து உணவு அருந்த முடியாத வேளைகளில் , போனில் அழைத்து உண்டாயா?” என்று கேட்டான் .
என்னதான் அக்கறையுடன் விஸ்வா கவனித்துக் கொண்டாலும் சந்தியாவிற்கு ஏனோ அவன் மீது நம்பிக்கை வரவில்லை . அதனால் சந்தியா பெரிதாக எதையும் பகிர்ந்து கொள்ள வில்லை, பெரும்பாலும் அமைதியாகவே இருந்தாள் .
விஸ்வா பேச்சைத் துவக்கினால் மட்டுமே பதில் பேசுவாள் . அவை பெரும்பாலும் ஆகாஷ் பற்றியவையாகவே இருக்கும் .
இருவருக்கிடையே பெரிய இடைவெளி வந்து விட்டது என்பதே விஸ்வா உணர்ந்தேயிருந்தான் . சந்தியா உடல்நிலையை கருதி , இதைக் குறித்து பேசாமல் தள்ளி போட்டான் .
பெரிய பிரச்சனைகளின்றி வாழ்க்கை சக்கரம் அமைதியாகவே ஓடிக் கொண்டிருந்தது .
என்ன தான் மருந்து மாத்திரைகள் கொடுத்தாலும் , நோயில் இருந்து சீக்கிரமாக மீள்வதற்கு மனவலிமை மிகவும் அவசியம் . அதே போல் விரைந்து குணமாக வேண்டும் என்ற எண்ணமும் , அதற்கான முனைப்பும் வேண்டும் .
சந்தியா மனச்சோர்வோடு அதற்கான முனைப்பு இல்லாமல் இருந்தாள் .
ஹீமோகுளோபின் குறைபாட்டால் சீக்கிரமே உடலாலும் சோர்வடைந்தாள் . குழந்தையை முழுமையாகப் பார்க்க முடியாமல் திணறினாள் .
சந்தியாவால் குழந்தையை முழுமையாக கவனிக்க முடியவில்லை என்பதைக் கண்டு , சங்கரனிடம் ராஜி புலம்ப ,
இப்படியே விட்டால் மீண்டும் சந்தியாவிடம் போய் நிற்கும் என்பதை உணர்ந்தவர் , “அவள் சரியாகும் வரை நீ பாரேன் ராஜி . இரண்டு மாதம் சமாளித்தாய் என்றால் சரியாகி விடுவாள்….”
“வேற வழி , என் பேரன் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?” என்று அங்கலாய்த்தபடியே பொறுப்பை எடுத்துக் கொண்டார் .
அந்த வயதிற்கேற்ற துறுதறுப்புடன் ஆகாஷ் இருந்தான். இப்போதெல்லாம் வெளியே போக மிகவும் பிரியப்பட்டான் .
அப்பா , தாத்தா கிளம்பும் போது பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியிருந்தான் , அவர்களும் அவனை வண்டியில் ஒரு சுற்று சுற்றி விட்டு , இறக்கிவிட்டு சென்றார்கள் .
மாலை வேளையிலும் அடம்பிடித்தான் . ஆனால் குழந்தையை தனியாக வெளியே கூட்டிப் போக சந்தியா பயந்தாள் . குழந்தையோடு தனித்து இருக்கும் போது மயக்கம் ஏதும் வந்து விட்டால் என்று யோசித்து வெளியே போவதைத் தவிர்த்தாள் .
இதைக் கவனித்த ராஜி , தினமும் வெளியே கூட்டிப் போக ஆரம்பித்தார் . பூங்கா , கோவில் என ஆகாஷோடு சுற்றினார் .
குழந்தையோடு இருப்பது மிகவும் சந்தோஷத்தை தர , அவனுடன் ஐக்கியமானார் .
இரு மாதங்கள் போக , சந்தியாவின் உடல்நிலை சீராக ஆரம்பித்தது . ஆகாஷை முழுமையாகப் பார்த்துக் கொள்ள நினைத்தாள் .
ஆனால் இடைப்பட்ட காலத்தில் , பாட்டியுடன் குழந்தை மிகவும் நெருக்கமாகி விட்டான் . எது வேண்டுமென்றாலும் ராஜியிடம் போய் நின்றான் .
ஞாயிறு மாலை விஸ்வா , சந்தியாவையும் குழந்தையையும் வெளியே கூட்டிப் போக திட்டமிட்டான் .
கிளம்பும் வேலையில் விஸ்வாவிற்கு முக்கியமான அழைப்பு வர , வாசலில் ஷூவை அணிந்தபடி பேசிக் கொண்டிருந்தான் .
இவன் ஷூ அணிவதைப் பார்த்த ஆகாஷ் , அவனுடயதை எடுத்து வந்து கொடுக்க , “அம்மாவிடம் போய் போட்டுக் கொண்டு வா”
ஹாலில் ஒரு ஓரத்தில் இந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு குழந்தைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டோமா.. ? என்று சரிபார்த்து பார்த்து கொண்டிருந்த சந்தியா , “ரொம்ப நேரமாகியும் ஆகாஷ் வரவில்லை…?” என்று திரும்பிப் பார்க்க ,
ராஜியிடம் ஷூவைப் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்கவும் , ஏமாற்றம் அடைந்தாள் . கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள் . குழந்தை தன்னைத் தாண்டி , அவரிடம் சென்றதை சந்தியாவால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை .
“சந்தியா நேரமாகிவிட்டது , கிளம்பலாமா?” என்று விஸ்வா கேட்க , அவனுடன் கிளம்பினாள் .
சந்தியாவிற்குக் கிளம்பும் போது இருந்த உற்சாகம் குறைந்தது . ஏதேதோ சிந்தனைகள் ஓட , சந்தியா ஒருவித அலைப்புறுதலுடன் இருந்தாள்.
சந்தியாவை கவனித்த விஸ்வா , என்னவென்று விசாரிக்க? ,
“ஒன்றும் இல்லை , கொஞ்சம் அசதியாக இருக்கிறது” என்று சமாளித்தாள்.
“ஓ…. ! , குழந்தை ஏமாந்து விடுவான்.
“ம்ம்….” என்று நிறுத்தி கொண்டாள் .
அடுத்து வந்த நாட்களில் , ராஜியையும் ஆகாஷையும் ஆழ்ந்து கவனிக்க , இருவருக்குள்ளும் இருந்த நெருக்கத்தை உணர்ந்தாள் . ஆகாஷ் தன் தேவைகளுக்குப் பாட்டியையே அதிகம் சார்ந்து இருப்பதைக் கவனித்தாள் .
மனதில் பயப்பந்து உருண்டது . சிந்தனைகள் தறிகெட்டு ஓடியது.
தன் குழந்தை தான் வாழ்வின் ஆதாரம் என்று இருக்க , அதுவும் தன்னை விட்டு நழுவிப் போய்விடுமோ என்ற பயம் பிடித்தது . எங்கே தன்னையும் குழந்தையையும் பிரித்து விடுவார்களோ என்று தப்பும் தவறுமான எண்ணங்கள் ஆட்டிவிக்க தொடங்கியது .
” இன்னொரு விஸ்வா உருவாகிவிடுவானோ…” என்று பயம் வந்தது .
பாட்டி தாத்தாக்கள் ,பேரன் பேத்தியோடு நெருக்கமாக , ஆசையாக இருப்பது இயல்பே .
ஆனால் விஸ்வாவின் மீது ராஜியின் அதிக்கத்தை கண்டவளால் , இதைச் சாதாரணமாக நினைக்க முடியவில்லை . மேலும் குழந்தைதான் தன் பிடிப்பு என்று நினைத்திருக்க , அந்த எண்ணத்தில் இடி விழுந்ததை போல் உணர்ந்தாள் .
உரிமைப் போராட்டம் தொடங்கியது .
தொடரும்….