காலையில் விடிந்தது முதலாகவே ஏதோ யோசனையுடன் தான் இருந்தான் வெற்றி. மீனாட்சியின் தயவில் கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும், அது அடுத்த பத்து தினங்களுக்கு கூட தாக்கு பிடிக்காது என்று புரிந்தது அவனுக்கு.
இப்படியே உட்கார்ந்திருக்க முடியாது என்று உணர்ந்தவன், சீக்கிரமே ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்க, தனது சான்றிதழ்கள் அத்தனையும் தனது வீட்டில் இருக்கிறதே என்று ஒரு நிமிடம் தயங்கியவன் அடுத்த நொடி தன் அன்னையையும் அப்படியே பார்த்து விடலாம் என்று ஆசை கொள்ள தன் வீட்டை நோக்கி புறப்பட்டுவிட்டான்.
தேனருவியிடம் சொல்லிக்கொண்டு அவன் கிளம்பிய அதே நேரம் தான் இங்கே சக்தி தட்டை தூக்கி அடித்தது. “என்ன வேணும் உங்களுக்கு. ஒருமுறை நான் அசிங்கப்பட்டது பத்தலையா? இன்னும் என்ன செய்ய நினைக்கறீங்க?” என்று அவன் மனோன்மணியிடம் கத்த, சுந்தரவடிவு, “தம்பி” என்று குரல் கொடுத்திருந்தார்.
அவன் கோபத்துடன் அன்னையை திரும்பி முறைக்க, அவரோ, கண்ணீருடன் நின்ற தன் மாமியாரை கண்காட்டினார்.
சக்திக்கும் தன் தவறு உரைக்க, “பாட்டி” என்று மனோன்மணியின் கையைப் பிடிக்க முற்பட்டான் அவன். மனோன்மணி கோபம் கொண்டவராக அவன் கையைத் தட்டிவிட்டு விலகிச் செல்ல, பாட்டியின் கையைப் பிடித்து மீண்டும் இருக்கையில் அமர்த்தி அவர் அருகில் தானும் அமர்ந்தான் சக்தி.
மனோன்மணியின் கண்கள் கலங்கி இருக்க, “அழாதீங்க பாட்டி. ப்ளீஸ்” என்று சக்தி அவர் கண்ணீரை துடைக்க,
“விடுடா என்னை” என்று அவன் கையைத் தட்டிவிட்டார் மனோன்மணி.
“ம்ச். பாட்டி”
“என்னடா பாட்டி. என்ன உன் இஷ்டத்துக்கு தட்டை தூக்கி அடிக்கிற. என்ன தப்பா கேட்டுட்டேன் நான்? அய்யா ஆமா சாமி. நிச்சயம் நின்னு போச்சு தான். ஆனா, அதுக்காக என்ன பண்ணலாம் சாமி. சொல்லு. இப்படியே துக்க வீடு போல வரவங்களுக்கு பதில் சொல்லிட்டே நிற்கவா. அதைக்கூட விட்டுடுய்யா. எங்களுக்கு ஆசையிருக்காது.”
“ஒண்ணுதான் உருப்படாம போயிடுச்சு. என் மருமக மூத்தத முத்தா தானே பெத்து எடுத்திருக்கா. உனக்கு ஒரு நல்லது கெட்டது பண்ணிப் பார்க்கணும்னு எங்களுக்கு ஆசையிருக்காது. முடிஞ்சதையே நினைச்சு அழுது கரைஞ்சு யாருக்கு என்ன புண்ணியம் சாமி.”
“நிச்சயம் நின்னு போச்சு தான். அதுல உன் தப்பு என்னய்யா இருக்கு. ராசா போல இருக்க என் பேரனை வேண்டாம்னு சொல்ல என்ன நெஞ்சுரம் இருக்கணும் அவனுக்கு. அந்த மேலூர்காரன் என் பேரனைவிட உசத்தியா ஒருத்தனை அவன் மகளுக்கு பார்த்திட முடியுமா.”
“அவன் கதை கூட எனக்கு எதுக்குய்யா. என் பேரன் வாழ்க்கையை நான் அப்படியே விட்டுட முடியுமா? என் குழந்தை, எங்க வீட்டு தலைப்புள்ள உன்னை வாழ வச்சு பார்க்கணும்னு எங்களுக்கு ஆசையிருக்காதா சாமி. எனக்கும், உன் தாத்தனுக்கும் என்ன வயசு குறையுதா? ராத்திரி கண்ணை மூடுறவங்க, காலையில எழுந்துப்போமோ, இல்லையோ கடவுளுக்கு தான் வெளிச்சம்” எனும்போதே,
“அத்தை” “பாட்டி” என்று சக்தியும், வடிவும் ஒரே நேரத்தில் பதற,
“சொல்லும்போதே பதறுதே. எனக்கும் இப்படித்தான சாமி துடிக்கும். இந்த கிழவி என்ன கேட்டுட போறேன். என் பேரன் பெத்த பிள்ளை எனக்கு நெய்ப்பந்தம் பிடிக்கணும்னு தானே கேட்கிறேன்.” என்று கண்களில் வழிந்த கண்ணீரை மனோன்மணி துடைத்துக் கொள்ள, சக்தி வாயைத் திறக்கவில்லை.
சுந்தரவடிவு மகனின் அருகில் வந்து நின்றவர், மகனது தோள் மீது கையை வைத்து அழுத்த, இந்த இரு பெண்களின் பாசத்தில் மூச்சு முட்டியது சக்திக்கு.
“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க பாட்டி. நானும் நடந்த அத்தனையும் மறக்கணும் இல்லையா. வெற்றி பிரச்சனையும் கொஞ்சம் ஓயட்டும் பாட்டி. கொஞ்சம் நிதானமா செய்வோமே” என்று சக்தி எடுத்துரைக்க
“நான் நாளைக்கே கல்யாணம் பண்ண சொல்லல சக்த்தி. நாங்க பார்க்கிறத பார்க்கிறோம். நீ உனக்கு பிடிச்சா சொல்லு. இல்லையா, வேற பொண்ணு பார்க்கிறேன். மனசை அடுத்ததை நோக்கி நகர்த்தினா தானய்யா மாற்றம் கிடைக்கும்.”
“நீ போனதையே பிடிச்சுட்டு இருந்தா எப்போ மறப்ப. அதோட வெற்றி. அவன் பேச்செல்லாம் ஒரு பேச்சுன்னு என்கிட்டே பேசாத. யாரையும் யோசிக்காம போனவனுக்காக நான் என் பேரன் வாழ்க்கையை பலியாக்க முடியாது. நீ சம்மதம்னு சொல்லுய்யா. மத்த எல்லாத்தையும் நானும், அம்மாவும் பார்த்துக்கிறோம்” என்று அவர் மருமகளையும் கூட்டு சேர்க்க,
“இந்த முறை எந்த தப்பும் நடக்காம பார்த்துக்கலாம் சக்தி” என்று வடிவும் அவன் தோளை அழுத்திக் கொடுத்தார்.
சக்தி பதில் கூறாமல் சில நொடிகள் மெளனமாக, “என்ன நினைக்கிற சாமி? பாட்டிகிட்ட சொல்லு” என்று மனோன்மணி சக்தியின் தலையில் கைவைக்க,
“பயமா இருக்கு பாட்டி” என்றுவிட்டான் சக்தி.
“என்னய்யா” என்று கலங்கியவர், “உனக்கெதுக்கு ராசா பயம்” என்று பேரன் கையைப் பிடிக்க,
“உன் பேரன் செஞ்சு வச்சிருக்க காரியத்தால ஏகப்பட்ட பிரச்சனை. அந்த பொண்ணோட அண்ணனும், அப்பனும் எப்போ என்ன செய்வானுங்கன்னு அவங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேன். இதுல என்னோட ஷோரூம். அதையும் பழையபடி கொண்டு வரணும். அப்படியே வந்தாலும், அங்கே நடந்த எல்லாத்தையும் மக்கள் மறக்கணும். மறுபடி ராசியான கடைன்னு நம்மளை தேடி வரணும். இது போல இன்னும் நிறைய இருக்கு பாட்டி.”
“நான் இப்படியே எல்லாம் இருந்திட மாட்டேன். ஆனா, கொஞ்சநாள் போகட்டும். சின்னவன் பிரச்சனை கொஞ்சம் ஓயட்டும். அப்புறம் நீயே பாரு. நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன்.” என்று கூறியவன் சட்டென எழுந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.
சுந்தரவடிவு அவன் தலை மறையும்வரை பொறுத்தவர், தரையில் மடங்கி அமர்ந்து கதறி அழ, அவரை இருக்கையில் அமர்ந்தபடியே மடியோடு சாய்த்துக் கொண்டார் மனோன்மணி.
“என் புள்ள சொன்னதெல்லாம் கேட்டிங்களா அத்த. என் பிள்ளை நொந்து போயிருக்கானே. அய்யா வேலய்யா உனக்கு கண்ணே இல்லையா. என் பிள்ளையை இப்படி கலங்க வைக்கிறீயே.” என்று சுந்தரவடிவு அழுது அரற்ற,
“ம்ச். முதல்ல கண்ணை துடை வடிவு. உனக்கு எப்போ என்ன செய்யணும்னு இன்னும் கூட தெரியல. அழுது புலம்பி எல்லாம் ஒரு பயனும் இல்ல. எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரம் உன் பிள்ளை கல்யாணத்தை முடிக்கணும்.” என்று மனோன்மணி முடிவெடுத்தவராக கூற,
“எப்படி அத்த, அவன் தான் சொல்றேன்னு சொல்லியிருக்கானே” என்று வடிவு தயங்க,
“அவன் சொல்றதுக்கெல்லாம் விட முடியாது வடிவு. அப்புறம் நாமெல்லாம் எதுக்கு இருக்கோம். குழந்தை இத்தனையும் மனசுல வச்சு மருகிட்டு நிற்கிறான். அவனை அப்படியே விட்டுட்டு வேடிக்கை பார்க்க சொல்றியா? காலாகாலத்துல நடக்க வேண்டியதை நடத்திடனும்.”
“நான் உன் மாமன்கிட்ட பேசிட்டு சொல்றேன். நாம பொண்ணு பார்க்கிற வேலையை ஆரம்பிப்போம். நீ இந்த பொண்ணு போட்டோவை பாரு. எல்லாம் சரியா இருக்கானு தங்கத்தை விசாரிக்க சொல்லு. மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்ப்போம்” என்று மனோன்மணி அடுத்தடுத்து வேளைகளில் இறங்க, வடிவு சமர்த்தாக மாமியாருக்கு தலையாட்டிக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் வாசலில், “அம்மா” என்று வெற்றியின் குரல் கேட்க,
“வெற்றி அத்த” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார் வடிவு.
“இவன் எங்கே இங்கே வந்தான்? இவனை” என்று கோபத்துடன் மனோன்மணி எழ,
“அத்த சக்தியை” என்று அவர் முடிக்கும் முன்னே,
“கூப்பிடுடி என் பேரனை” என்றபடி வாசலுக்கு விரைந்தார் மனோன்மணி.
வாசலில் வெற்றி நிற்க, “எதுக்குடா இங்கே வந்த?” என்று அதட்டலாக கேட்ட மனோன்மணியை, “பாட்டி” என்று பாசத்துடன் பேரன் அழைக்க, அவன் முகத்திலும், மற்ற இடங்களிலும் இருந்த காயங்களை கண்டவருக்கு உள்ளுக்குள் பதறத் தான் செய்தது.
ஆனால், அவன் மீது கொண்ட கோபம் அதை மறக்கச் செய்துவிட, சக்தி பேசிய வார்த்தைகளும் நினைவு வர, வெற்றியை முறைக்க தொடங்கிவிட்டார் மனோன்மணி.
“பாட்டி” என்று வெற்றி மீண்டும் அவரை அழைத்த நேரம், “எதுக்கு இங்கே வந்திருக்க?” என்று வந்து நின்றான் சக்தி.
வெற்றி அவனை முறைத்துக்கொண்டே, “எனக்கு என் அம்மாகிட்ட பேசணும்.”
“உன்கிட்ட பேச இங்கே யாரும் தயாரா இல்ல. வெளியே போ” என்றுவிட, வடிவுக்கு சற்றுமுன் வேதனையுடன் நின்ற சக்தி தான் கண்ணுக்கு தெரிந்தான்.
“எல்லாம் இவனால் தானே” என்று மனத்தை இறுக்கிக் கொண்டவர், அமைதியாக உள்ளே சென்றுவிட்டார். வெற்றியின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை அவர்.
“அம்மா. அம்மா” என்று வெற்றியின் குரல் காதில் விழாதது போல் அவர் நடந்துவிட, மனோன்மணிக்கு பேரனைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது.
எங்கே அவன் பேச்சில் கரைந்துவிடுவோமோ என்று பயந்தவராக அவரும் மருமகளின் பின்னே உள்ளே நுழைந்துவிட, வெற்றி தான் தோய்ந்து நின்றான் அங்கே.
“வேற… வந்த வேலை முடிஞ்சதா” என்று சக்தி சற்றே நக்கலுடன் விசாரிக்க, வெற்றி சற்றே நிமிர்ந்து, “எனக்கு என் செர்டிபிகேட்ஸ் வேணும்” என்றான்.
“எந்த சர்டிபிகேட்ஸ்… அதெல்லாம் எதுவும் இங்கே இல்ல.” என்றான் கொஞ்சமும் இறங்காமல்.
“அண்ணா” என்று வெற்றி அழைக்க,
“சக்தி. அப்படியே கூப்பிடு. உறவு முறையெல்லாம் வேண்டாம்” என்றுவிட்டான் சக்தி.
“எனக்கு என் சர்டிபிகேட்ஸ் வேணும் சக்தி” என்று மீண்டும் வெற்றி கேட்க,
“அதெல்லாம் தொலைஞ்சு போச்சு. நீ மறுபடியும் இப்படி ஏதாவது கேட்டுட்டு வந்து நின்றால், அதெல்லாம் எரிஞ்சு சாம்பலாகிடும்.” என்றான் நிதானமாக.
“சக்தி”
“எல்லாம் என் அப்பா காசுல படிச்சு வாங்கினது தானே. எதுவும் வேண்டாம்ன்னு சொல்லித்தானே போன. இப்போ இது மட்டும் ஏன் தேவையா இருக்கு.” என்றவனுக்கு என்ன பதில் சொல்வான் வெற்றி.
“ஒழுங்கா கிளம்பிடு. இல்ல, இன்னும் அசிங்கப்பட வேண்டி இருக்கும்” என்று சக்தி எச்சரித்ததில் அமைதியாக திரும்பி நடந்தான் வெற்றி.
வெற்றி தலையைக் குனிந்தபடி நடந்து செல்வதைப் பார்த்தபடியே தான் நின்றான் சக்தி. அவன்மீது இருந்த கோபத்தில் அத்தனையும் செய்து கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் எங்கோ ஏதோ ஒன்று, இலை மறை காயாக துடித்துக் கொண்டு தான் இருந்தது.
ஆனால், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பாறை போல் இறுகி நின்றான் சக்தி. “படட்டும். பட்டு வரட்டும்” என்று தனக்குள் கூறிக்கொண்டு அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிட்டான்.
இங்கு வெற்றி யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்காமல் நேரே வீட்டிற்கு வந்து சேர, அந்த வீட்டின் பின்புற அறையில் இருந்து சமைக்க தேவையான சில பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேனருவி.
அத்தனையும் சுத்தமாக கழுவி வீட்டின் திண்ணையில் காயவைத்து விட்டு அருகில் அமர்ந்திருந்தாள் அவள்.
வெற்றியின் சோர்ந்த முகம் கண்டவள், “என்னாச்சு வெற்றி. ஏதும் பிரச்சனையா?” என்று கேட்க,
“இல்ல. அதெல்லாம் ஒண்ணும் இல்ல. இதெல்லாம் எங்கே இருந்து எடுத்த?” என்று சட்டென பேச்சை மாற்றிவிட்டான் வெற்றி.
ஏற்கனவே தன்னால்தான் எல்லாம் என்று புழுங்கிக் கொண்டிருக்கிறாள். இப்போது இதை வேறு சொல்லி, மீண்டும் அழ வைக்க வேண்டாம் என்று அவன் மறைத்துவிட, அவன் எதிர்பார்த்தது போலவே அந்த பாத்திரங்களின் கதையை கூற தொடங்கினாள் அருவி.
வெற்றி அவள் கதையை கேட்டு முடித்து, “இங்கே வர்றப்போ கிணத்துல இருக்க மீனை பிடிச்சு சமைப்போம் அருவி. அம்மா சூப்பரா சமைப்பாங்க. அவங்க யூஸ் பண்ணது தான் இதெல்லாம்.” என்று வெற்றி கூற, தலையசைத்து கேட்டுக் கொண்டாள் அருவி.
“இதெல்லாம் இங்கே தான் இருக்குன்னு எனக்கும் தெரியும். ஆனா, சமைக்க மளிகைசாமான் மத்த விஷயம் எல்லாம் வேணும். எல்லாத்துக்கும் முதல்ல காசு வேணும். சீக்கிரம் ஒரு வேலை தேடணும்” என்று தன் போக்கில் வெற்றி கூற, அந்த தோட்டத்தின் வேலையாள் காத்தன் வந்து நின்றான்.
“வாங்க அண்ணே” என்று வெற்றி வரவேற்க,
“ஊருக்குப் போய் இருந்தேன் தம்பி. இன்னைக்கு தான் விஷயம் கேள்விப்பட்டேன். சட்டுன்னு கிளம்பி வந்துட்டேன்.” என்று அவர் கூற, புன்னகைத்தான் வெற்றி.
“சொல்லுங்க தம்பி” என்று அவர் நிற்க, உடன் அவர் மனைவியும்.
“தாத்தா போல கூலி எல்லாம் கொடுக்க முடியாதுண்ணே. நானே அடுத்து என்ன செய்ய போறேன்னு தெரியல. நீங்க ஊருக்கே போங்க. தேவைபட்டா சொல்லி விடறேன்.” என்று வெற்றி பட்டென கூறிவிட,
“அதென்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. நான் கூலிக்காகவா அய்யாகிட்ட வேலை செஞ்சேன். அந்த மூலையில இருக்கே அந்த குடிசை போதும் தம்பி. கூலிக்கு நான் வேற வேலை பார்த்துக்கறேன். என்னை போன்னு சொல்லிடாதீங்க” என்றார் காத்தன்.
“நீங்க இங்கே இருக்கறதால எனக்கு எந்த தொந்தரவும் இல்ல அண்ணே. ஆனா, உங்க பொழைப்புக்கு என்னால உதவி பண்ண முடியாதே, அதனால தான் சொன்னேன். நீங்க தாராளமா தங்கிக்கோங்க.” என்று வெற்றி உரைத்துவிட, அவனை கையெடுத்துக் கும்பிட்டான் காத்தன்.
“தென்னை மரம் எல்லாம் நல்லா காய் காய்ச்சு இருக்கு தம்பி. நாளைக்கு ஆளை வர சொல்லவா?” என்று காத்தன் கேட்க, சட்டென ஏதோ தோன்றியது வெற்றிக்கு.
காத்தனை நிமிர்ந்து பார்த்தவன், “ஆள் எதுக்கு” என,
“அறுத்துட்டா சந்தைக்கு ஏத்திடலாம் தம்பி”
“நாம பார்த்துக்கலாம்ண்ணே”
“தம்பி எனக்கு மரம் ஏற முடியாது.”
“தெரியும்ண்ணே. நான் இருக்கேன்ல”
“தம்பி. ரெண்டு ஏக்கர். ஒத்த ஆள என்ன பண்ணுவீங்க. விளையாட்டு இல்ல”
“நாளைக்கு பார்க்கலாம் காத்து அண்ணா. நாம முடிப்போம்” என்று முடிவாக கூறிவிட்டான் வெற்றி.
திக்கற்றவனுக்கு தெய்வமே வந்து வழிகாட்டியது போல இருந்தது அவன் நிலை.
அன்றே, அருவியை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றவன் தற்போதைக்கு தேவையான மளிகைப் பொருட்கள், கொஞ்சம் காய்கறி என்று அத்தியாவசிய தேவை என்று தோன்றியதை மட்டும் வாங்கி வந்தான்.
அன்று இரவு உணவுக்கு தேனருவி சமைத்து கொடுத்த பருப்பும், உருளைக்கிழங்கும் தேவாமிர்தமாக இறங்கியது வெற்றிக்கு.
ஏதோ ஒரு நிறைவுடன் படுக்கையில் விழுந்தான் அவன்.
இவர்கள் நிலை இப்படியிருக்க, இங்கே முத்தையா தான் தாங்கலில் இருந்தார். சக்திக்கு மீண்டும் பெண் பார்க்கும் விஷயம் தங்கபாண்டியன் வழியாக அவர் காதுக்கு வந்து சேர்ந்திருக்க, “இது சரியா வராது தங்கம்” என்றுவிட்டார் எடுத்த எடுப்பில்.
“என்னப்பா” என்று தங்கபாண்டியன் அலற,
“இதெல்லாம் வேண்டாம் விட்டுடு.” என்று அவர் ஒரேடியாக மறுக்க,
“என்னன்னு சொல்லு மச்சான்”
“என்ன சொல்லணும் உனக்கு. எல்லாத்தையும் விளக்கி புரிய வைக்கணுமா. என்னைப் பார்த்தா ஒன்னுமில்லாதவன் போல தெரியுதா உனக்கும், உன் பிள்ளைகளுக்கும்.” என்றவர் விருட்டென அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டார்.
என்னமோ அவருக்கு மனது ஆறவே இல்லை. எப்போதுமே வெற்றியைக் காட்டிலும் பொறுப்பான சக்தியின் மீது ,மதிப்பும், பிரியமும் அதிகம் அவருக்கு.
இப்போதும் அவன் திருமணம் நின்று போனதில் அவனை பெற்றவர் அளவுக்கு அவருக்கும் வருத்தம் தான்.
ஆனால், மீண்டும் ஒருமுறை வெளியில் பெண் தேடுவதா? என்றுதான் கொதித்துப் போய் இருந்தார் மனிதர்.