என் ஆயுள் வரை உன்னருகில் இருப்பேன் காதலுடன் காதலே….
மகேஷ் கேட்ட கேள்விக்கு முகம் பிரகாசிக்க சிரித்தவன்
“ அவள பாத்தப்போ…. எனக்கு தோனிச்சி மாமா… என் தொடக்கம் வேணா அவள் இல்லாம தொடங்கிருக்கலாம். ஆனா என் முடிவு, அவன் கூடாதான்னு தோனிச்சிடா…”
“என்ன மாமா முடிவுனு லாம் பேசுற வாய கழுவு..” என்று இன்பா வாயில் ஒரு அடி வைக்க இன்பா
“டேய்… என்ன ஃபீல் பண்ண விடுடா மாமா…”
“என்ன கன்றாவியோ பண்ணி தொலையும் “
“ அது எத்தனையோ பொண்ண பாத்துருக்கேன் அழகா இருக்கான்னு சைட் அடிச்சிருக்கேன் ரசிச்சிருக்கேன் ஆனா அவுங்க கிட்டலாம் இந்த ஃபீல் வந்தது இல்ல மாமா.
ஆனா அவள பாக்கும் போது எதோ நானே முழுமையான ஃபீல்டா மாமா. என்னோட பாதியே என் கிட்ட வந்துட்ட மாதிரி இருந்துச்சிடா அந்த ஃபீல் உனக்கு எப்படி சொல்லு புரிய வைக்க”
என்று தலைமுடியை கோதியவனை பார்த்த மகேஷ்
“ என்ன சரக்கு மாமா அது….. வசைனையே வரல… இப்படி உளர்ற “ என்று கிட்டே வந்து மோந்து பார்த்தவனை தள்ளி விட்ட இன்பா
“சீ… பக்கி… சரக்கு அடிக்கிறதையே நான் விட்டேன் டா. நான் குடிச்சி ஆறு மாசம் ஆகுது” என்று தள்ளி விட்டவனை நெஞ்சில் கை வைத்து
“என்ன மாமா… சொல்ற குடிக்கிறத விட்டியா…. “ என்று அதிர்ந்தவனை பார்த்து
“ம்ம்ம் அவள பாத்ததுல இருந்து விட்டேன் டா. எப்பவும் ரொம்ப லோன்லியா இருக்கும் போது ஒரு மாதிரி அழுத்தம் அதிகமா இருந்தா குடிப்பேன்.
இப்போ தான் என் தங்கம் இருக்காளே. எங்க என்ன தனியா விடுறா… டெய்லி எத்தனை வாட்டி என்ன பாக்குறா எத்தன வாட்டி முறைக்குறான்னு என்னவே எனக்கு டைம் சரியா இருக்கு… இதுல எங்க இருந்து தனிமையா உணர “
என்று இன்பா ரசித்து பேச மகேஷ் வாயை பிளந்த படி தான் அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தான்.
“அதுவும் இல்லாம என் தங்கத்தோட ரொம்ப நாள் நான் வாழனும் டா மாமா அதான் விட்டேன் “ என்று சிரித்தவனை பார்த்து மகேஷ்
“ கடவுளே என் நண்பன் இப்போ மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கனும் “ என்று மனதார வேண்டி கோண்டான்.
மகேஷின் வேண்டுதலை கேட்ட கடவுள் “ நீ தப்பான ஆள் கிட்ட வேண்டிட்டு இருக்கடா…. இனி உன் நண்பனோட சந்தோஷம் மட்டும் இல்ல நிம்மதி கூட என்கிட்ட கிடையாதுடா… போய் அந்த பொண்ணு கிட்ட இந்த பெட்டிஷன போடு “
என்று அவர் சொன்னது எங்கே இவன் காதில் விழுந்தது.
அதன் பின் மகேஷ் அவன் வீட்டிற்கு அழைத்து அன்று இரவு இங்கேயே தூங்குவதாக சொல்லி தப்பி விட்டான்.
“என்னது இங்க தூங்க போறியா? டேய்…. நைட் எழுந்து ரசம்லாம் கேக்க மாட்ட தானே “ என்று கேட்டவனை பார்த்து முறைத்த மகேஷ்
“அதெல்லாம் போதையில தான் கேப்பேன் அதான் தெளிய வச்சிட்டியே “
“ அதுவும் சரி தான். ஆமா, அதென்ன குடிச்சா எல்லாம் வித விதமா கேட்டு டார்ச்சர் பண்ணுவாங்கன்னா நீ ரசம் கேட்டு டார்ச்சர் பண்ற “
“அதுவா… மாமா எங்க அம்மா ரசத்துல என்ன போட்டு வைப்பாங்கன்னு தெரியாது…
ஆனா அதை ஒரு க்ளாஸ் குடிச்சா போதும் வாய்ல இருந்து சரக்கு ஸ்மெல்லே வராதுடா. அதான் குடிச்சா அம்மா வைக்கிற ரசம் கேட்டு வாங்கி குடிச்சிடுவேன் அம்மாவும் நான் குடிச்சத கண்டு பிடிக்க மாட்டாங்க “
“ரோம்ப அறிவுதான்…” என்ற இன்பா அவனுக்கு அவன் உடையை எடுத்து வந்து கொடுத்துவிட்டு
“நாளைக்கு நீ யாரைடா கூட்டிட்டு வர போற” என்று கேட்க , அதற்கு அவன்
“ப்ச்… நீ வேற அம்மா வந்தாலும் சரி, தங்கச்சி வந்தாலும் சரி, ஃப்ரீயா என்ஜாய் பண்ண முடியாது. சோ எப்பவும் போல சிங்கிள் தான்.”
“என்னமோ பண்ணித் தொலை” என்று இன்பா தூங்க சென்று விட்டான்.
மறுநாள் காலை நான்கு சகோதரிகளும் ஒரே போல அனார்கலி உடை அணிந்து இருந்தனர்.
மகா கருப்பு மற்றும் தங்கம் பார்டர் கொண்ட அனார்கலி அணிந்திருந்தாள். சுபா மற்றும் குணா வெள்ளை மற்றும் தங்க பார்டர் நிறத்தில் போட்டிருக்க ஜெயா வும் மகாவும் ஒன்று போல அணிந்திருந்தனர்.
இந்த உடைக்கே அடி பிடி சண்டை தான் நடந்தது. எப்படியோ ஒருவழியாக நால்வரும் அவரவர் பேருக்கு ஏற்றபடி தேவிகளாக கிளம்பி நின்றிருந்தனர்.
இவர்கள் நால்வரையும் பார்த்த அமிர்தம் “என் செல்லங்களா நாலு பேரும் அப்படியே அம்சமா இருக்கீங்கடி” என்று நெட்டி முறித்தவர்,
“அடியே… இதோ பாருங்கடி செமத்தா சித்தர சித்தி பேச்சு கேட்டு அவங்க கூட தான் இருக்கனும் சரியா அக்காக்கு தொந்தரவு எதுவும் தர கூடாது”
என்று அத்தனை அறிவுரை சொல்லியே அனுப்பி வைத்திருந்தார்.
அனைத்தையும் பவ்வியமாக கேட்டு விட்டு நால்வரும் ஆட்டோவில் அலுவலகத்திற்கு சென்றனர்.
“மகா எந்த இடத்துல ஃபங்ஷன்? ஆபிஸ்லயேவா என்ன” என்ற ஜெயா கேட்டதும் அத்தனை நேரம் ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தவள் அதில் இருந்து கலைந்து,
“ஓ.எம்.ஆர் ல ஜெயா. இங்க ஆபிஸ்ல இருந்து பஸ் அரேஞ்ச் பண்ணிருக்காங்க அதுல தான் போறோம்”
“ஃபங்ஷன் எப்போ முடியும் மகா”
“அது நைட் நைன் ஆகும்னு நினைக்கிறேன் ஜெயா.
டூ ஹாவர் ஸ்பீச் அண்ட் அவார்ட் கொடுக்குற செரிமனி நடக்குமாம் அதுக்கு அப்பறம் சின்ன சின்ன ஈவென்ட் இருக்குன்னு சொன்னாங்க அதெல்லாம் முடிய ஆகிடும் பத்து கூட”
“என்னது பத்தா அவ்ளோ நேரம் நான் எப்படி முழிப்பேன்” என்று குணா புலம்ப,
“அப்போவே சொன்னேன் இந்த குண்டாத்தா வேணா. அங்க வந்து தின்ன தூங்க தான் செய்வான்னு எங்க கேட்ட மகா” என்று சுபா சலித்து கொள்ள,
“யார குண்டுன்னு சொல்ற பெருச்சாளி” என்று அடி பிடியோடு அலுவலகத்திற்கு போய் சேர்ந்தனர்.
அங்கே ஆபிஸ் வெளியே ஆட்டோவில் நால்வரும் இறங்கி நின்று கொண்டிருக்க மகா கண்கள் என்னமோ இன்பாவை தான் தேடியது.
“அவன் இன்னும் வரல்லை போல..ப்ச்…” என்று சலிப்பாக தலையை திருப்பி கொள்ள அவள் மனமோ
“ஏதோ நேத்து தான் ஒருத்தி தங்கச்சி தான் சொத்து இன்பாலாம் வெத்துன்னு அழுது புலம்பினா…. அவ… எங்கப்பா இப்போ”
என்று அவளை அவள் மனமே இடிக்க. அதில் அவளை அவளே திட்டிக்கொண்ட படி வாசலை பார்க்க சரியாக அந்நேரம் பார்த்து அலுவலகம் உள் இன்பா பைக்கொடு நுழைந்தான்.
உள்ளே வந்தவன் நேராக பைக் நிறுத்தும் இடத்தில் பைக்கை நிறுத்தி அவன் ஹெல்மெட்டை கழற்றி தலையை கைகளால் கோதி அவன் பைக்கின் கண்ணாடியில் சரிபார்த்து கொண்டிருந்தவனுக்கு ஏதோ தோன்ற வேகமாக தலையை திருப்பி பார்த்தான்.
அங்கே கண்களை பெரிதாக விரித்து திரு திருவென முழித்தபடி நின்றாள் மகா.
இத்தனை நேரம் அவனைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கருப்பு சர்ட், கிரே பேன்ட் என்று கவர்ந்து இழுத்தவனை விட்டு கண்கள் நகர மறுத்து அப்படியே அவனை பார்த்தபடி அவள் நின்றுவிட்டாள்.
யாரோ ஆழ்ந்து பார்ப்பது போல இன்பாவுக்கு தோன்ற அவன் திரும்பி பார்க்க. மகாவின் பார்வையை கண்டுகொண்டவன் முகத்தில் அழகாக சிரிப்பு மலர்ந்து அவளை பார்த்து சிரிக்கவும்.
அவன் சிரிப்பில் சுயம் வந்தவள் வேகமாக தன் தங்கைகளுடன் ஆபிஸை பார்ப்பது போல ஒளிந்து கொண்டாள்.
அதில் மேலும் முகம் மலர நின்றவனை போட்டு உலுக்கினாள் சித்திரா.
“டேய் இன்பா… டேய்…. என்னடா ஆச்சு மந்திரிச்சி விட்ட மாதிரி நிக்கிற “
“அ… அத்தை” என்று முழித்து நின்றவனை தலையை மறுப்பாக அசைத்து
“கனவெல்லாம் பஸ்ல என்ன உக்கார வச்சிட்டு காணுடா, இப்போ இங்க வேண்டாம் “
“அச்சோ அத்தை கனவெல்லாம் இல்ல வாங்க போலாம் “ என்று அவரின் தோளில் கை போட்டு அழைத்து சென்றான்.
இவர்கள் இருவரும் சிரித்த முகமாக நான்கு பேரையும் பார்த்து வரவும் சுபா
“யாரு மகா அது செம்மையா இருக்காங்க, அவங்க கூட வர்றவங்கள பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு “ என்று நாடி தட்டி யோசித்தவளின் மண்டையில்
குணா மற்றும் ஜெயா என்று இருவரும் ஒன்று போல கொட்ட
“எருமை பக்கி அவுங்க நம்ம சித்தி டி “ என்று சொல்லவும்
“அதை வாயால சொன்ன என்ன இப்படி கொட்டி தான் சொல்லனுமா “ என்று தலையை தேய்த்து கொண்டிருக்கும் போதே இருவரும் அருகில் வந்திருக்க
“என்னடி சுபா…. என்ன யாருன்னு கேட்டு கோட்டு வாங்கிட்டியா “ என்று சித்திரா சிரிக்கவும் சுபா
“நான் என்ன பண்ண சித்தி மத்தது எல்லாம் நினைவு இருக்கு இந்த முகம் மட்டும் மறந்து போயிடுது “
என்று சிணுங்கியவளை சமாதானம் அவர் செய்து கொண்டிருந்த அதே நேரம் இன்பா
“என்ன ஆச்சு இவளுக்கு… தூரத்துல இருந்து நல்லா தான சைட் அடிச்சா இப்போ என்னவாம் தரைய அளந்துகிட்டு இருக்கா “ என்று முனங்கியபடி அவன் அவளையே உற்று உற்று பார்த்துக்கொண்டிருக்க.
மகாவோ அப்படி ஒருவன் அங்கே இல்லவே இல்லை என்பதை மனதில் உரு போட்டுக்கொண்டிருந்தாள்.
இப்படி அவள் அவனை பார்க்கவே கூடாது என்று நின்றிருக்க, அவனோ அவளை மட்டுமே பார்த்திருப்பேன் என்று நின்றிருக்க, சுற்றியுள்ளவர்களோ நீங்க என்னத்தையாவது பண்ணுங்க என்பது போல சித்திரா உடன் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர்.
“டேய் மாமா….” என்ற சத்தத்தில் தான் அனைவரும் கலைந்து சத்தம் வந்த இடத்தை பார்த்தனர்.
“ டேய் எவ்ளோ நேரமாடா கூப்பிடுறது. காது ஏதாவது டமாரா ஆயிடுச்சா உனக்கு மாமா “ என்று மகேஷ் இன்பா மீது கைபோட்டு நிற்க இன்பா
“ எங்கயோ இருந்து மாமா மாமான்னா…. நான் அந்த பேலீஸ் காரர தான் செல்லமா கூப்பிடுற போலன்னு நினைச்சேன் “
“டேய்…. வாய்ல அடி, வாய்ல அடி என்ன ஏன்டா அவர் கிட்ட கொத்து விடுற ஏற்கனவே அவர் என்கிட்ட பட்ட பாடு பத்தாத டா “
என்று அவன் அவருக்கு அவன் முகத்தை காட்டாது இன்பா பின்னே மறைத்து கொண்டு நிற்க
“என்னடா சொல்ற, அவர என்ன பண்ணி வச்ச?” என்று இன்பா சந்தேகமாக பார்க்கவும்
“அதுவா மாமா, ஒரு முறை பார்ல நல்லா குடிச்சிட்டு வெளியே வந்தேனா. அங்க இந்த போலிஸ்காரரும் லைட்டா போட வந்திருந்தாரு.
“நான் என்னடா பண்ண அன்னைக்கு எதோ சோகத்துல நான் இருந்திருப்பன் போல.
ஏதோ ஸ்டெரஸ்ஸ குறைக்க அங்க வந்தவர் கிட்ட போய் நான் ஒரு கொசுவை கொலபண்டின்னு அரெஸ்ட் பண்ண சொல்லி ஒரே டார்ச்சர் பண்ணிட்டன் போலடா “
என்று உதட்டை பிதிக்கியவனை பார்த்து தலையில் அடித்து கொண்டவன்
“அப்புறம் எப்படி தப்பிச்சி வீட்டுக்குப் போன? எருமை”
“அதுக்கு அப்பறம் எங்க இருந்து தப்பிக்க?
நானே என் வாய்யால….என்ன தூக்குல போடுறதுக்கு முன்னாடி கடைசி ஆசன்னு அந்த நடு ராத்திரி அம்மாக்கு கால் பண்ணி ஓ….ன்னு ஒப்பாரி வச்சி அவுங்கள பயமுறுத்தி….” என்று கதை சோன்னவனை தான் அனைவருமே அடுத்து என்பது போல பார்த்து
“அப்பறம்… “என்று கோரஸ்ஸாக அனைவரும் கேட்க
“அப்பறம் என்ன…. அப்படியே வரும் போது ரசத்தோட வாம்மான்னு சொல்லிட்டு வச்சிட்டேன்.
அதுல தான் அந்த போலீஸ்காரர் கடுப்பாகி நாலு தட்டு தட்டி ஓரமா போட்டு போக எங்க அப்பா வந்து கூட்டிட்டு போய்ட்டாரு தி என்ட்.”
என்று கைகளை இணைத்து முடித்தவனின் காதை திருவிய சித்திரா.
“குடிக்காதன்னு சொன்னா கேக்காம கதை சொல்றியாடா?”
“அய்யோ… அத்தை…. என் காது பாவம். அதை இன்னைக்கு ஒரு நாள் மன்னிச்சி விட்டுருங்க…” என்று அலறியவனை சிரித்த படி அனைவரும் பார்த்து விட்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்.
இன்பா என்ன தான் மகேஷ் கூட பேசி சிரித்த படி பஸ்ஸில் வந்தாலும் கவனம் முழுதும் மகாவிடம் தான்.
இன்பா எப்போதும் பார்க்கும் மகா இல்லை இவள். இந்த மகா ஏதோ இருக்கத்துடன் சுற்றி இருப்பவர்களை கவனித்தும் அவள் தங்கைகளை அதட்டி பின் அவர்களுடன் சிரித்தும் என்று இருப்பவளை தான் கவனித்து வந்தான்.
மகா அனைவருடனும் பேசி சிரிக்கும் ஆள் இல்லை என்றாலும் அனைவரும் பேசுவதை சிரித்த முகமாக பார்த்து கொள்வாள்.
ஆனால் இன்று அந்த சிரிப்பு கூட அவள் முகத்தில் இல்லை. ஏதோ தங்கைகளுக்காக மட்டும் அவ்வப்போது சிரிப்பது போல இருந்தாள்.
இப்படி அவளையே நோட்டம் விட்டபடி செலப்ரேஷன் நடக்கும் இடமும் வந்தது.
அனைவரும் வந்ததும் மதிய உணவு உண்ண வைத்து உள்ளே அழைத்து சென்றனர்.
முதலில் அவார்ட் கொடுக்கும் நிகழ்வே நடந்தது.
அதில் இன்பாவுக்கும் அவார்ட் கொடுத்தனர். அதை தொடர்ந்து குட்டி குட்டி ஈவென்ட் ஆக பல இருந்தனர்.
முடியை டெம்ப்ரவரியாக கலர் செய்து கொள்வது, கையில் பெயிண்ட் கொண்டு வரைவது, மெஹந்தி போட்டு கொள்வது, போட்டோ எடுத்துக்கொள்வது என்று பலதும் இருக்க
அனைத்தையும் ஆசையாக பார்த்து ரசித்த படி மூன்று சகோதரிகளும் தலையில் வண்ணம் பூசி, மெஹந்தி வைத்து ஃபோட்டோ எடுத்து என்று அனைத்திலும் பங்கேற்று வர மகா மட்டும் இங்கு வந்தது தவறோ என்பது போல தான் சுற்றி வந்தாள்.
“என்ன இவ ஒரு மெகந்தி கூட போடாம வர. என்ன தான் ஆச்சு இவளுக்கு…”
என்று யோசித்தவன் சித்ராவிடம் சென்று மகாவை காட்டி ஏதோ பேச அடுத்த நிமிடம் அவள் கையிலும் மெஹந்தி போட்டு தலையில் கலர் பூசி என்று அவள் சிரித்த முகத்தை பார்த்து ரசித்தான் இன்பா.
அப்படி இப்படி என்று இரவு உணவை முடித்து ஆட்டம் பாட்டம் முடிந்து கம்பெனி பஸ்ஸில் அனைவரும் ஏறி அமர மகாவிற்கு அமர இடம் இன்றி வேறு வழியின்றி இன்பா அருகில் தான் அமர்ந்தாள்.
மகா உடன் அமரும் ஜெயாவை சித்ரா அவர் அருகே அமர வைத்துக்கொள்ள இவளுக்கு வேறு வழியின்றி தலையை திருப்பி வெளியே பார்த்த படி அமர்ந்து கொண்டாள்.
இன்பாவும் மகாவின் முகம் திருப்பளை யோசனையுடன் பார்த்த படி அவள் அருகே அமர்ந்தான்.
போன போது இருந்த குத்து பாட்டு எதுவும் இன்றி இனிமையான காதல் பாட்டுகளை ஓட விட்ட படி அந்த பஸ் மெல்ல நகர்ந்து சென்றது.
உண்ட மயக்கத்தில் அனைவரும் தூங்கி போக இங்கே இந்த இரு காதல் ஜோடி மட்டும் விழித்தே இருந்தது.
மகா ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி திரும்பவே கூடாது என்று வர. இவளை பார்த்த இன்பா பெருமூச்சு ஒன்று விட்ட படி கண்களை மூடி சீட்டில் படுத்து விட்டான்.
இன்பாவிடம் எந்த அசைவும் உணர முடியாத மகா மெல்ல திரும்பி பார்க்க, அவன் கண்களை மூடி நன்றாக தூங்குவது தெரிந்தது.
தூங்கும் இன்பாவை ஒரு வித ஏக்கத்துடன் பார்த்தவள், அவள் சீட்டில் சாய்ந்தபடி அவனை பார்த்தபடியே தூங்கி போனாள்.
மகா தூங்கிய அடுத்த நிமிடம் கண்களை திறந்த இன்பா, காற்றில் அலைமோதும் அவளின் கூந்தலை ஒதுக்கிவிட்டபடி அவள் முகத்தில் இருந்த சோகத்தை படிக்க முயன்று கொண்டிருந்தான்.
அப்போது அவளின் தலை சரிந்து கீழே விழப்போக, அழகாக தோளில் தாங்கி கொண்டான் இன்பா. அந்நேரம் சரியாக
“இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உரையாதா….”
இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா…” என்ற பாடல் சத்தம் கேட்டு சிரித்த இன்பா, அந்த வரிகளை ரசித்தபடி கண்களை மூடி அவள் மீது சாய்ந்து கொண்டான்.