அத்தியாயம் 13
ஷக்தியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், மீனாட்சியோடு வந்தவர்கள் அத்தனைபேரும் திகைத்துப் போனார்கள்.
அவர்களுடைய திகைத்த முகத்தை கண்ட பஞ்சவர்ணம், “ச்சு… ஷக்தி, கொஞ்சம் பேசாம இரேன்?” என்று பேத்தியின் வாயை அடைக்க முயன்றார்.
“ஷக்தியை தடுக்காதீங்கம்மா, அவ பேசட்டும். இந்த விஷயத்தை பத்தி நாம பேசுறதைவிட, அவ பேசுறது தான் சரியா இருக்கும்” என்றார் தமிழரசு.
“சொல்லுங்க, எம் பொண்ணு, என் அண்ணன் பொண்ணுன்னு இன்னைக்கு வந்து உரிமை கொண்டாடுற நீங்கல்லாம், என்னோட மூனு வயசு வரைக்கும், எங்க போயிருந்தீங்க?” மீண்டும் அழுத்தமாக கேட்டாள் ஷக்தி.
ஷக்தியின் கேள்விக்கு அவர்களிடம் பதில் இருந்தால் தானே சொல்லமுடியும். எனவே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமைதியாகவே இருந்தார்கள்.
விஸ்வாவுக்கு, ஷக்தியின் மூன்று வயது வரை தங்கள் பக்கத்து உறவுகள் யாருமே, அவளை ஒருமுறை கூட நேரில் சென்று பார்த்ததில்லை என்பது புதிய தகவலாக இருந்தது.
அவனறிந்தது எல்லாம், நான் என் பிள்ளையை கேட்டுப்போனேன், கொடுக்கவில்லை. ஊரைவிட்டே போய்விட்டார்கள் போன்ற சௌந்தரின் வார்த்தைகளைத் தானே.
இயல்பாகவே, அடுத்தவர் முதுகில் இருக்கும் அழுக்கை சுட்டிகாட்டும் மனிதர்கள், தங்கள் முதுகில் இருப்பதை வெளியே காட்ட பிரியப்படுவதில்லை தானே. அப்படித்தான் ஆகிப்போனது சௌந்தரின் கதையும்.
ஒரு விஷயத்தில், அரைகுறை ஞானம் எவ்வளவு ஆபத்தானது என்பது இப்போது புரிந்தது விஸ்வாவுக்கு.
“ஒரு கெஸ் வர்க் தான். நீங்க என்ன செய்துட்டு இருந்துருப்பீங்கன்னு நானே சொல்லட்டுமா?” அமைதியாக இருந்தவர்களைப் பார்த்து ஷக்தியே கேட்க, அவளைக் கூர்ந்து கவனிக்க தயாராகினான் விஸ்வா.
முதலில் சௌந்தரை சுட்டிக்காட்டிய ஷக்தி, “அவர், பொண்டாட்டி இறந்து போயிட்டாங்குற சாக்குல, ஒரு தேவதாஸ் வேஷத்தை போட்டுகிட்டு, தன்னோட பிள்ளையை வளத்தெடுக்குற கடமைக்கு டாட்டா பைபை சொல்லிட்டு, ஊர்ஊரா சுதந்திரமா சுத்தியிருக்கலாம்.”
“நீங்க…” என்றபடியே மீனாட்சியின் பக்கம் பார்வையை திருப்பியவள், “உங்க குடும்பம், பிள்ளை, குட்டின்னு அவங்களுக்கு ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ் குடுத்துட்டு, வீட்டை விட்டு வெளியே இறங்க மனமில்லாமல் இருந்துருக்கலாம்.”
ஷக்தி சொல்லி முடிக்கவும், பதறிப்போன மீனாட்சி, “நான் அப்போ டெல்லியில் இருந்தேன் டா. அப்போ நான் செகண்ட் பேபி கேரியிங்கா வேற இருந்தேன். அதனாலத் தான், என்னால உன்னை உடனேப் பார்க்க வரமுடியல. அப்புறம் அஸ்வி பிறந்த பிறகு, சின்னதா இருந்த அவளையும் விஸ்வாவையும் வச்சிட்டு என்னால ட்ராவல் பண்ணமுடியலை. இப்போ மாதிரி, முன்னாடி எல்லாம் ட்ராவல் ஈசி கிடையாது தெரியுமா?” என்று, அன்றைய தன் சூழ்நிலையைச் சொன்னார்.
“அதுசரி… யாரோ ஒரு செண்பகம் பெத்த பிள்ளைக்காக, அதுவும், பெத்தவரே கண்டுக்காத பிள்ளைக்காக, நீங்க, உங்களையும், உங்க பிள்ளைங்களையும் கஷ்டப்படுத்திக்க முடியுமா என்ன?”
கிண்டலாக சொன்ன ஷக்தி, “ஆனா, மனசிருந்தா மார்க்கமுண்டுன்னு சொல்லுவாங்க தானே. உங்க எல்லாருக்கும் நான் தேவையில்லாத சுமையாத் தான் தெரிஞ்சிருக்கேன். அதனால, என் சுமையை ஏத்துக்க உங்க யாருக்கும் மனசில்லை. அதனாலத் தான், என்னை நெருங்க உங்களுக்கு வழியும் தெரியலை” என்றாள் விரக்தி சிரிப்போடு.
“ஆகமொத்தம், நீங்க யாரும் எனக்காக ஒரு சின்ன துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல், உங்களுக்கு வசதிபட்ட நேரம் வந்து, உயிரைக் குடுத்து வளத்தவங்ககிட்ட என்னைக் கேட்பீங்க. அவங்களும், உங்க பிள்ளையாவே… என்னை வளத்து, நீங்க கேட்டதும் வச்சிக்கோங்க சாமின்னு தூக்கி தந்துருக்கணும், இல்ல…” கோபம் நிறைந்திருந்தது ஷக்தியின் பேச்சில்.
“நீ நினைக்கிற மாதிரி எல்லாம், யாரும் உன்னை சுமையா நினைக்கல ஷக்தி. எங்க சூழ்நிலை அந்த நேரம், அப்படி அமைஞ்சி போச்சு. அவ்வளவு தான் டா.” ஷக்திக்கு பதில் சொன்ன மீனாட்சியின் குரலில் குற்ற உணர்ச்சி அதிகமாக இருந்தது.
சௌந்தரோ மகளின் பேச்சில் உறைந்து போயிருந்தார். தன் தயக்கம் எவ்வளவு பெரிய தவறாக முடிந்திருக்கிறது என்று இப்போது அவருக்கு புரிந்தது. அதை எவ்வாறு சரிசெய்வது என்று தெரியாமல், ஷக்தி பேசுவதை மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தார் மனிதர்.
“ஏன்? உங்களுக்கு வந்த மாதிரி சூழ்நிலை, இவங்களுக்கும் வந்திருக்க கூடாதா என்ன?” பஞ்சவர்ணத்தையும் தமிழரசுவையும் கண்களால் காட்டியபடி மீனாட்சியிடம் கேட்ட ஷக்தி,
“எந்த சூழ்நிலையிலும் அவங்க, உங்களை மாதிரி என்னை சுமையா நினைக்கல. என்னை உள்ளங்கையில் தாங்கி வளத்தாங்க. அது எதனாலன்னாவது உங்களுக்கெல்லாம் புரியுதா? அன்பு… அவங்களுக்கு எம்மேல இருந்த மாறாத அன்பு என்னை அவங்களுக்கு முக்கியமானவளா காமிச்சது.”
“அதே அன்பு உங்க எல்லாருக்கும் எம்மேல இருந்திருந்தா, ஏழுகடல், ஏழு மலை, தடையா இருந்திருந்தா கூட, அதையெல்லாம் துச்சமா தாண்டி வந்திருப்பீங்க. சாவகாசமா மூனு வருஷம் கழிச்சு வந்து நின்னுருக்க மாட்டீங்க.”
“இதே, உங்களை மாதிரி அவங்களும் என்னை இரண்டாம்பட்சமா நினைச்சி வளத்திருந்தா, அந்த சின்ன வயசுல என்னோட நிலமை என்ன ஆகியிருக்கும்னு உங்களால நினச்சி பார்க்க முடியுதா?”
இவ்வளவு நேரமும் தெளிவாக பேசிக்கொண்டிருந்த ஷக்தியின் பேச்சு லேசாக தழுதழுக்க ஆரம்பிக்க, தன்னோடு அவளை சேர்த்தணைத்துக் கொண்ட பஞ்சவர்ணம், “விடு டா… அப்படித்தான் எதுவும் நடக்கலையே, அப்புறம் ஏன் அதை நினைச்சு அழுவுற?” என்று தேற்ற ஆரம்பித்தார்.
“இல்ல அப்பத்தா, தப்பை எல்லாம் அவங்க செய்துட்டு, தண்டனையை எனக்கு தரக்கூடாதுன்னு அவங்களுக்கு தெரியலையே” என்றவள்,
“இப்பகூட பாருங்க, என் மனசுல பச்சை குத்துனது போல பதிஞ்சுபோன அப்பா, அம்மா முகத்தை பிச்சி எடுத்துட்டு, அந்த இடத்துல வேற முகத்தை வலுக்கட்டாயமா திணிக்க பாக்குறாங்க. அதுவும் ஒரு குடும்பமே கூட்டு சேர்ந்துகிட்டு பண்ணுறாங்க.”
“அப்படி செய்யும் போது எம்மனசு ரணப்பட்டு போகுமேன்னு, யாராவது ஒருஆளாவது, எனக்காக யோசிச்சாங்களா அப்பத்தா.”
ஷக்தியின் விழிகள் இப்போது குற்றம் சாட்டியடி விஸ்வாவை தொட்டு மீண்டு வர, முகத்தில் ஓங்கி அறைவாங்கியது போல இருந்தது அவனுக்கு.
“எல்லாத்துக்கும் மேல என்னோட அம்மா, வாழ்வா சாவான்னு ஹாஸ்பிடல்ல போராடிட்டு இருக்குறாங்க. என் மனநிலையை கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம, இந்த மாட்டுக்கெல்லாம் மூக்குல ஒரு கயிறு போடுவாங்கன்னு நீங்க சொல்லுவீங்களே, அப்படி எங்கழுத்துல இந்த விஸ்வா தாலியைக் கட்டுறார்.” சொல்லிவிட்டு ஷக்தி தேம்பியழுதாள்.
அவளின் அழுகை பொறுக்கமுடியாத விஸ்வா, தன் மடத்தனத்தை நொந்தபடியே தன்னிடத்திலிருந்து எழும்பி வந்து ஷக்தியின் தலையை தடவியபடியே, “எவ்ளோ பெரிய அநியாயம், உனக்கு நான் பண்ணிருக்கேன்னு இப்போதான் எனக்கு புரியுது. தயவுசெய்து என்னை மன்னிச்சிடு ஷக்தி” என்றான்.
தன் தலையிலிருந்த அவன் கையை வேகமாக தட்டிவிட்டவள், “யாரை மன்னிச்சாலும், உங்க ப்ளானை எக்ஸ்ஸிக்யூட் பண்ண, காதல்னு சொல்லி என்னை ஏமாத்துன உன்னை மட்டும் மன்னிக்கவே மாட்டேன், போ டா…” என்றாள் உட்சபட்ச கோபத்தில்.
“போகச் சொல்லுங்க அப்பத்தா… இவங்க எல்லாரையும் இங்க இருந்து போகச்சொல்லுங்க அப்பத்தா. எனக்கு, நீங்க, அப்பா, அம்மா, தம்பி மட்டும் போதும். புதுசா வேற எந்த உறவும் வேண்டாம். தயவு செய்து இவங்க யாரும் இன்னொரு தடவை என்னைப் பார்க்க வரவேக் கூடாதுன்னு சொல்லி அனுப்பிவிடுங்க அப்பத்தா.”
சிறகொடிந்த பறவை போல தன் அப்பத்தாவை கட்டிக்கொண்டு கதறிக்கொண்டிருக்கும் ஷக்தியை கையாலாகாதனத்தோடு பார்த்த விஸ்வா குடும்பத்தினர், பஞ்சவர்ணத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளாமல் தாங்களாகவே கிளம்புவதற்கு தயாராகி விட்டனர்.
எல்லோரும் சிறிய தலையசைப்போடு அறையை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தார்கள். சௌந்தர், ஷக்தியின் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றியபடியே,
“நீ சொன்ன பிறகு தான், ஒரு அப்பாவா நான் எங்கெல்லாம் தவறியிருக்கிறேன்னு புரியுது ம்மா. ஆனா, எதுவுமே நான் தெரிஞ்சு செய்த தப்பில்லை. முடிஞ்சா அதை நம்பு, அப்படியே இந்த பாவியை மன்னிச்சிடு” என்று சொல்லியபடி அறையை விட்டு வெளியே சென்று விட்டார்.
மறுநாள், கலைவாணி ஐசியூவிலிருந்து இவர்கள் தங்கியிருந்த ரூமிற்கு மாற்றப்பட்டிருந்தார்.
அவர் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் தெரியவே, இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள்.
அதன்பிறகு விஸ்வா வீட்டிலிருந்து யாரும் அனாவசியமாக வந்து ஷக்தியை தொந்தரவு செய்யவில்லை.
அதற்காக அப்படியே ஒதுங்கியும் போகவில்லை. விஸ்வாவின் அப்பா சதாசிவம், தமிழரசோடு தொலைபேசி மூலம் தொடர்பில் தான் இருந்தார்.
ஏதோ ஒரு புரிதல் இன்மையால், சிதறிப்போன உறவுகள், திரும்பவும் சந்தித்து கொள்ளும் போது வாக்குவாதங்கள் வருவது இயல்பான ஒன்றுதான் என்று, அன்று நடந்த நிகழ்வை சரியான புரிதலோடு எடுத்துக் கொண்ட சதாசிவம், தமிழரசோடு தொடர்பிலேயே இருந்தார். தமிழரசுவும் அவர் நீட்டிய நட்புக்கரத்தை விலக்காது பற்றிக் கொள்ளவே செய்தார்.
அறைக்கு வந்த கலைவாணிக்கு, சௌந்தரைக் கண்ட ஆரம்பகட்ட அதிர்ச்சி விலகியிருக்க, இப்போது மகளின் வாழ்க்கையைப் பற்றிய எண்ணம் அவரை வியாபித்தது.
அதனால் அடிக்கடி விஸ்வாவை தேட ஆரம்பித்தார் கலைவாணி. மகளிடம் அவனைப் பற்றி கேட்கும் போதெல்லாம், “நீங்க தூங்கிட்டு இருக்கும் போது வந்துட்டு போனாங்க மம்மிஜி” என்றாள்.
“அம்மாடியோவ்… அந்த அளவுக்கா நான் தூங்குறேன்!” என்று வியந்து போன கலை, “நாளைக்கு நான் தூங்காமல் இருக்கும் போது வரச்சொல்லு, எனக்கு உங்களை ஜோடியா பாக்கணும் போலிருக்கு” என்று தன் ஆசையை சொன்னார்.
தங்களுக்கு நடந்த திருமணத்தை தாய்க்கு சொல்லியிருந்த மகள், நடந்த பிரச்சினை எதையும் சொல்லவில்லையே.
அதனால் வேறுவழியில்லாமல் தந்தை மூலம் விஸ்வாவை அழைத்தாள். அவனோ, அடுத்த ஒருமணி நேரத்திற்குள் அவர்கள் முன்னால் நின்றிருந்தான்.
விஸ்வாவையும் ஷக்தியையும் ஜோடியாக அருகருகே நிறுத்தி பார்த்த கலைவாணிக்கு, மனதெல்லாம் நிறைந்து போயிற்று.
“ரொம்ப சந்தோஷம் தம்பி, என்னால்தான் உங்க கல்யாணத்தை பார்க்க முடியாம போச்சு.” தன்னை மீறி கலைவாணியின் ஆதங்கம் வார்த்தையாக வந்துவிட்டது.
‘தன்னால் தானே அவரின் ஆசை நிறைவேறாமல் போனது’ என்று நினைத்த விஸ்வா, கலைவாணிக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவனைப் போல, “அது… நான்… ஏதோ ஒரு நினப்புல…” என்று தடுமாறினான்.
அவன் அருகில் நின்றிருந்த ஷக்தி, யாரும் அறியாதவண்ணம், விஸ்வாவின் கையில் நறுக்கென்று கிள்ள, பேச்சை நிறுத்தி பெண்ணைப் பார்த்தான் விஸ்வா.
அவள் கண்ணில் தெரிந்த, “இதுக்கு மேல எதுவும் சொல்லாதே” என்ற எச்சரிக்கையில், கலைவாணிக்கு தங்களின் கல்யாணம் நடந்தவிதம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என்பது புரிந்தது. சுதாரித்துக் கொண்டு சிரித்து மழுப்பினான் மாப்பிள்ளை.
அன்று ஷக்தியின் பேச்சை கேட்டபிறகு, தமிழரசு, கலைவாணி மீதான தப்பான அபிப்ராயங்கள் விஸ்வாவின் மனதிலிருந்து விடைபெற்று சென்றிருக்க, நியாயமான முறையில் அவன் மனம் சிந்திக்க ஆரம்பித்திருந்தது.
“அதிலும், உங்களை மாதிரியே, இவர்களும் என்னை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால், என்கதி என்னவாகியிருக்கும்?” என்ற ஷக்தியின் கேள்வி, அவனை நிரம்பவே யோசிக்க வைத்திருந்தது.
‘ஒருவேளை அப்படி மட்டும் நடந்திருந்தால், அப்பாவோடு, அவர்வழி சொந்தங்களான தாத்தா, பாட்டி, அத்தை, மாமா இப்படி எல்லா உறவுகளும் இருந்தும் கூட, யாருமே தனக்கில்லை என்ற மனநிலையில் தானே ஷக்தி வளர்ந்திருக்க கூடும்.’
ஆனால், அப்படி இல்லாமல், தங்களையே தாய், தகப்பன் என்று அறிமுகப்படுத்தி, ஒரு குடும்ப சூழ்நிலையை அந்த பிஞ்சுக்கு கொடுத்து வளர்த்தவர்கள், மிகப்பெரிய மனிதர்களாக விஸ்வாவுக்கு இப்போது தோன்றினார்கள்.
அங்கேயே சிறிது நேரம் இருந்து, எந்த தயக்கமுமின்றி கலைவாணியோடு பேசிக்கொண்டிருந்த விஸ்வா, விடைபெற்று கிளம்பும் போது, “நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாங்க தம்பி” என்றார் கலைவாணி. சரியென்று தலையசைத்தபடியே அறையை விட்டு வெளியே சென்றான் விஸ்வா.
அவன் பின்னோடு வெளியே வந்த ஷக்தி, “அம்மா சொல்லுறாங்கன்னு சும்மா, சும்மா, இங்க வந்து நிக்ககூடாது” என்றாள் கண்டிப்பாக.
“சரிங்க மேடம்… இனிமேல் நீங்க சொல்லி, எதையுமே நான் தட்டப்போறதில்லை” என்றான் விஸ்வா.
“ஏன்? உங்களுக்குன்னு சுய அறிவு, எப்பவுமே கிடையாதா?” என்றாள் ஷக்தி, விஸ்வாவை மட்டம் தட்டும் குரலில்.
ஷக்தியின் கோபத்தில் நியாயம் இருப்பதால், அவள் வார்த்தையில் அனாவசியமாக பொங்கி எழாமல், தன் வீட்டில் அவள் விட்டுவிட்டு வந்திருந்த கைபேசியை, பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான்.
வாங்க மறுத்து நின்றவளிடம், “உங்க அப்பா வாங்கிக் கொடுத்தது, ப்ரீஷியஸ்னு சொன்னியே” என்று ஞாபகப்படுத்தினான்.
உடனே வாங்கியவள், ஃபோனிலிருந்த சிம்கார்டை எடுத்து, அதை வளைத்து உடைத்து, அருகிலிருந்த டஸ்ட்பின்னில் போட்டுவிட்டு, விஸ்வாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
மொத்தம் ஆறு நாட்கள்… அந்த மருத்துவமனையில் கலைவாணியின் சிகிச்சையை முடித்து விட்டு, அன்று ஊருக்கு கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள், தமிழரசு குடும்பத்தினர்.
“சிகிச்சை முடிந்து உடனே பயணப்பட வேண்டாம். இங்கே நம் வீட்டில் தங்கிவிட்டு செல்லலாம்” என்று விஸ்வாவின் அப்பா சதாசிவம் ஏற்கனவே தமிழரசுவிடம் சொல்லியிருந்தார்.
“இல்ல, அது சரி வராது. மதுரையிலிருந்து சென்னைக்கு ஃப்ளைட்ல, நாப்பது நிமிஷ ட்ராவல் தான். கலை ப்ளை பண்ணுறதுல பிரச்சினை ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால நாங்க ஃப்ளைட்லயே கிளம்புறோம்” என்று பதில் சொல்லியிருந்த தமிழரசு,
“நாங்க ஏர்போர்ட் போகுறதுக்கு மட்டும், ஒரு நல்ல ட்ரைவரோட கார் ஒன்னு அரேஞ்ச் பண்ணி குடுங்க” என்று சதாசிவத்திடம் உதவியும் கேட்டிருந்தார்.
“சரி” என்று சொன்ன விஸ்வாவின் அப்பா, தன் மகனையே காரோடு அனுப்பி வைத்திருந்தார். விஸ்வாவைக் கண்டதும், வழக்கம் போல ஷக்தி முறைத்தாள்.
அவன் அதை சட்டை செய்யாமல், தமிழரசோடு சேர்ந்து காருக்கு லக்கேஜை கொண்டு சேர்த்ததுமில்லாமல், லேசாக தடுமாறிய கலைவாணியை, தோளோடு அணைத்து காருக்கு அழைத்து சென்று, முன்சீட்டில் அமர வைத்து, “ஆர் யூ ஓகே ஆன்டி” என்று கேட்கவும் செய்தான்.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ஷக்திக்கு, கோபம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஏற, “அடுத்த கட்ட நடிப்புக்கு தயாராகியாச்சு போல” என்று அவன் காதருகே முணுமுணுத்தாள்.
ஷக்தியின் வார்த்தைகளில் மனம் நொந்து போனாலும், ‘தான் செய்து வைத்திருக்கும் காரியத்திற்கு, இப்படி பேசாமல், வேறு எப்படி பேசுவாள்?’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான் விஸ்வா.
இவர்கள் சென்னை விமான நிலையத்தில் நுழைய, அங்கே இவர்களுக்காக சௌந்தர், மகாலிங்கம் ஐயா, கல்யாணி அம்மா தவிர, குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் காத்துக்கொண்டிருந்தார்கள். கௌரி கூட அவர்களோடு வந்திருந்தார்.
ஆனால், ஷக்தி தான் அவர்கள் யாரிடமும் பேசுவதற்கு தயாராக இல்லை. தம்பியின் கையைப்பிடித்து கொண்டு, அவர்கள் நின்றிருந்த இடத்தைக் கடந்து வேறு இடம் நோக்கி சென்றாள்.
மகளின் செயலை யோசனையோடு பார்த்த கலைவாணி, கூடிய சீக்கிரம் நல்லநாள் பார்த்து, மகளை அவர்கள் வீட்டுக்கு அனுப்புவதாகவும், இப்போது தங்களோடு அழைத்து கொண்டு போவதாகவும் விஸ்வாவின் பெற்றோரிடம் சொன்னார்.
தங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கும் ஷக்தியை பார்த்தவாறே, சரியென்று ஒத்துக்கொண்டனர் அவர்களும்.
கலைவாணியால் சொல்லத்தான் முடிந்தது, ஆனால், அதை நடத்த முடியவில்லை.
ஆமாம்… அப்படி இப்படி என்று, அவர்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து மூன்று மாதங்கள் உருண்டோடியிருந்தது. கலைவாணி நன்றாகவே உடல்நலம் தேறியிருந்தார். ஷக்தி சென்னையில், பிரபல சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.
இத்தனை நாட்களில், மகளின் திருமணம் நடந்தமுறை, அதன்பின் நடந்த நிகழ்வுகள் என்று அத்தனையையும், நேரம் பார்த்து மனைவியிடம் தமிழரசு சொல்லியிருந்தார்.
அதைக் கேட்டதிலிருந்து மகளின் வாழ்க்கை சிக்கலில் மாட்டிக்கொண்டதோ என்ற பயம் தான் கலைவாணிக்கு.
எத்தனையோ முறை மகளிடம், எடுத்துக் கூறியும், விஸ்வாவின் செயலை ஒத்துக்கொள்ள மறுத்து, மதுரைக்கு போகப் போவதில்லை என்று ஒற்றைக்காலில் நின்றாள் ஷக்தி.
ஒரு அளவுக்கு மேல் ஷக்தியைக் கட்டாயப்படுத்த முடியாமல் திணறினார்கள் வீட்டின் பெரியவர்கள் மூவரும்.
“வி லவ் ஈச் அதர்னு சொன்னியே! இவ்வளவு தான் உங்க லவ்வா?” வேண்டுமென்றே மகளை உசுப்பேற்றி பார்ப்பார் கலைவாணி.
“லவ்ன்னா என்ன மம்மிஜி? ட்ரஸ்ட்… தன் துணை மீதான அளவு கடந்த நம்பிக்கை, அப்படித்தான? ஆனா, உண்மை தெரிஞ்சா நான் கல்யாணம் பண்ணமாட்டேன்னு, என்னை நம்பாம அவசரப்பட்டு எங்கழுத்துல விஸ்வா தாலி கட்டுனானே, அப்பவே அந்த லவ் செத்து போச்சு” என்று பதில் சொல்லுவாள் ஷக்தி.
“நீ விஸ்வா செய்ததை இப்படி சொல்லுற, ஆனா நான் அதை அளவு கடந்த காதல்னு சொல்லுறேன்” என்பார் கலைவாணி.
“அளவு கடந்த காதலா? அது எப்படி?”
“இதுக்கு, உன் விஷயத்தில் எங்களையே எடுத்துக்காட்டா எடுத்துக்கோ ஷக்தி. உன்னை தாங்கன்னு கேட்டு வந்ததும், உன்னை இழக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அப்படியே தூக்கிட்டு ஊரை விட்டே நாங்க ஓடல… “
“அப்படித்தான் விஸ்வாவும், உனக்கு உண்மை தெரிஞ்சிடிச்சின்னா நீ தனக்கு கிடைக்கமாட்டியோங்குற பயத்துல, உன் சம்மதத்தை கூட எதிர்பார்க்காமல் தாலி கட்டிட்டார். இது அளவுகடந்த காதல் இல்லாமல் வேற என்ன? சொல்லு” என்று சவாலாக கலை கேட்பார்.
“மம்மிஜி… நீங்க எம்மேல வச்சிருக்கிற லவ் கூட, வேற யாரையும் கம்பேர் பண்ணாதீங்க” என்று சிலிர்த்துக் கொண்டு நிற்பாள் பெண்.
வேறு வழியேயில்லாமல் ஒருநாள், “நீ இப்படியே வீம்பு பிடிச்சிட்டு இரு ஷக்தி, தாய் வளத்திருந்தா இந்த பொண்ணோட வாழ்க்கையைப் பற்றி, இப்படி கவலைப்படாமல் இருப்பாங்களான்னு யாராவது என்னைப் பார்த்து சொல்லப் போறாங்க” என்று கூட கலைவாணி சொல்லிப் பார்த்தார்.
“சொல்லுறவங்களை எங்கிட்ட காட்டுங்க, நான் அவங்க பல்லை உடைக்கிறேன்” என்று சண்டைக்கு வந்தாள் ஷக்தி.
இப்படி எந்த வழியிலும் ஷக்தியை திருமண விஷயத்தில் சமாதானப்படுத்த முடியாமல் கலைவாணி முழிக்க, தன் தாய் தகப்பனோடு ஒருநாள் அங்கு வந்திறங்கினான் விஸ்வா.
தகவல் எதுவும் தெரிவிக்காமலே, ஒரு விடுமுறை தினம் பார்த்து வந்திருந்தார்கள் மூவரும். அவர்கள் வருகையின் போது வீட்டிலுள்ள அனைவருமே ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள்.
வந்திருப்பது யாரென்று தெரியவும், ஷக்தி தன் அறைக்குள் நுழைந்துகொள்ள பார்த்தாள். அவள் கைப்பற்றி நிறுத்தி, “வந்துருக்கவங்களை வாங்கன்னு சொல்லிட்டு போ ஷக்தி” என்று பஞ்சவர்ணம் அதட்டினார்.
அப்பத்தாவை விழிகளை உருட்டி முறைத்துப் பார்த்தவள், “வாங்க” என்று யாருடைய முகத்தையும் பார்க்காமல், கடனே என்று சொல்லிவிட்டு, அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
பெண்ணவளின் வரவேற்பே, தாங்கள் எண்ணி வந்த விஷயம் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டது விஸ்வாவுக்கு.
சம்பிரதாயமான வரவேற்பு எல்லாம் முடியவும், தங்கள் வீட்டுக்கு முறைப்படி ஷக்தியை அனுப்பி வைக்குமாறு விஸ்வாவின் பெற்றோர்கள் கேட்டார்கள்.
அறைக்குள் இருந்தாலும், காதை ஹாலுக்கு கொடுத்திருந்த ஷக்தி, பெற்றவர்கள் பதில் சொல்லும் முன்பே, அறையை விட்டு வேகமாக வெளியே வந்து, “என்னால அங்கெல்லாம் வரமுடியாதுன்னா… முடியாது” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
“நீ எங்கூட வாழ, மதுரைக்கு எங்க வீட்டுக்கு வராட்டா என்ன? நான் உங்கூட வாழ, சென்னைக்கு உங்க வீட்டுக்கு வந்துட்டு போறேன்” என்று இலகுவாகச் சொன்னான் விஸ்வா…