திருமணத்துக்கு முன் குருமூர்த்தியிடம் பார்த்தி ஆலோசனை செய்தது உண்மைதான், ஆனால் திருமணத்துக்கு பின் கணவன் மனைவி உறவுநிலை குறித்து எதுவும் அவரிடம் அவன் சொன்னது கிடையாது. அப்படி கேட்பது அநாகரீகம் என கருதி அவரும் அவனிடம் விசாரித்தது இல்லை.
மனைவியிடமும் அவர் இதை சொல்லியிருக்க தேவையில்லை, ஏதோ ஒரு நேரத்தில் எப்படியோ வாய் விட்டு விட்டார். திருமதி குருவுக்கு இவர்களின் வாழ்க்கை எப்படி செல்கிறது என குறு குறுப்பாக இருக்க, இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி விட்டார்.
சுஹானாவோ திருமணத்துக்கு பின்னரும் தங்கள் சொந்த வாழ்க்கை பற்றி குருவிடம் சொல்லியிருக்கிறான் பார்த்தி என நினைத்து விட்டாள். திருமதி குரு சொன்ன விதமும் அப்படித்தானே இருந்தது.
சுஹானாவுக்கு கணவன் மீது மனத்தாங்கல் ஏற்பட்டது. ஆனாலும் வெளிக் காண்பித்து கொள்ளாமல், “நாங்க நல்லாருக்கோம்” என சின்ன சிரிப்புடன் சொல்லி பேச்சை திசை மாற்றி விட்டாள்.
அங்கேயே சாப்பிட்டு விட்டு எட்டு மணி போல வீடு வந்து சேர்ந்தனர். வழியிலேயே மனைவியின் அமைதியை உணர்ந்து கொண்டான் பார்த்தி.
தாத்தா பாட்டி வீட்டில் இல்லை என்பதால் வளர்மதிக்கும் விடுப்பு கொடுத்திருந்தனர்.
காய்ந்து கொண்டிருக்கும் துணிகளை எடுத்து வைக்க வேண்டும் என சொல்லி தாத்தாவின் வீட்டுக்கே சென்று விட்டாள் சுஹானா.
வெகு நேரமாகியும் அவள் வராமல் போக, அவனும் தாத்தாவின் வீட்டுக்கு சென்றான். சோஃபாவில் படுத்திருந்தவள் இவனை காணவும் எழுந்தமர்ந்தாள்.
வேலை சென்று வந்தது, தாத்தா பாட்டி கிளம்ப உதவியது, இரயில் நிலையம் சென்றது, கடைகளுக்கு சென்றது என அலைச்சலிலும் மனக்கிலேசத்திலும் அவளுக்கு தலைவலி வந்திருந்தது.
என்னவென அவன் கேட்டதற்கு தலைவலி என மட்டும் சொன்னாள். தைலம் தேடி எடுத்து வந்தவன் அவளது நெற்றியில் தடவி விடப் போனான்.
“நானே போட்டுக்கிறேன், கொடுங்க” என்றாள்.
“ஏன் நான் போட கூடாதா ஆச்சி?” என அவன் கேட்ட தொனியே நான்தான் போடுவேன் என அவளுக்கு சொன்னது.
அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தைலம் தடவி இதமாக பிடித்து விட்டான். வாடிப் போயிருந்த அவளது முகம் அவனை என்னவோ செய்தது.
“ரொம்ப வலின்னா டேப்லெட் போடுறீங்களா ஆச்சி?” எனக் கேட்டான். மறுப்பாக தலையை மட்டும் அசைத்தாள். கேளாதவன் மாத்திரை ஒன்றையும் போட்டுக் கொள்ள செய்தான். மீண்டும் தன் மீது சாய்த்துக் கொண்டு நெற்றியை பிடித்து விட்டான்.
வழக்கத்திற்கு மாறாக வெகு அமைதியாக இருந்தாள் அவள்.
“என்னவாம் என் ஆச்சிக்கு?” என கொஞ்சலாக கேட்டு பார்த்தான்.
அவளுக்கு எது பேசவும் இப்போது வலுவில்லை. அவனது மனநிலை எல்லாம் தெரிந்துதானே கல்யாணம் செய்து கொண்டேன், வழிகாட்டியாக இருப்பவரிடம் பேசியிருக்கிறான் என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள்.
ஆனால் மனம் ஏற்க மறுத்தது. அதெப்படி திருமணம் ஆன பின்னரும் அவரிடம் எல்லாம் சொல்லுவார் என முரண்டு பிடித்தது.
இதைக் கேட்டால் பார்த்தியிடம் என்ன பதில் இருக்கும், சங்கடம் வருவது தவிர வேறேதும் நிகழப் போவதில்லை என நினைத்து அவனிடம் கேட்கவே இல்லை அவள்.
“வாங்க ஆச்சி, படுத்து தூங்கிடுங்க, சரியாகிடும்” என அழைத்தான். அவள் எழ, வீட்டு சாவி எங்கே என பார்த்தான். பார்த்தி பற்றிய யோசனையோடு வீட்டை திறந்திருந்த சுஹானாவுக்கு சாவியை எங்கு வைத்தோம் என நினைவில் இல்லை.
அவன் சாவியை தேடிக் கொண்டிருக்க, “நீங்களும் டயர்டா இருப்பீங்க பார்த்தி, காலைல பார்த்துக்கலாம். நான் இங்கே தங்கிக்கிறேன், நீங்க தூங்க போங்க” என்றாள்.
இருவரும் இங்கேயே உறங்கலாம் என அவள் சொல்லியிருந்தால் அவனுக்கு சமாதானமாக இருந்திருக்கும். தன்னை போக சொன்னதும் அவனுக்கு மனம் வாடி விட்டது.
அவளும் அவனை தவிர்க்க எண்ணி சொல்லவில்லை. குழப்ப மன நிலையில் இங்கே வீட்டை பூட்டாமல் இருக்க முடியாது என்பதால் இதைத்தான் தீர்வாக நினைத்தாள். இருவரும் இங்கே இருக்கலாம் என்ற யோசனை அவளுக்கு வரவே இல்லை.
அவனிடம் எப்போதும் இந்த வீட்டின் இன்னொரு சாவி இருக்கும். சுஹானா தனிமையை விரும்புகிறாளோ என நினைத்தவன் இன்னொரு சாவி பற்றி எதுவும் சொல்லாமல் வீட்டை உள் பக்கமாக தாழிட சொல்லி விட்டு கிளம்பினான்.
திருமணம் ஆனதிலிருந்து இன்றுதான் இருவருக்கும் தனித் தனியான உறக்கம். மாத்திரை போட்டதாலோ என்னவோ அவள் விரைவாகவே உறங்கி விட்டாள். ஆச்சிக்கு என்ன பிரச்சனை, ஆச்சியை வருத்த படுத்தும் படி அப்படி என்ன செய்து விட்டேன் என அவனுக்குத்தான் ஒரே யோசனை.
இத்தனை நாட்களாக மனைவியை அணைத்துக் கொண்டுதான் அவனுக்கு உறக்கம், இடையில் விழிக்கும் போது கூட தள்ளி படுத்திருப்பவளின் மேல் கையை போட்டுக் கொண்டுதான் உறக்கத்தை தொடர்வான். அவள் அருகில் இல்லாமல் கண்களை மூடக் கூட பிடிக்கவில்லை அவனுக்கு.
நடு இரவில் விழித்துக் கொண்டவளுக்கு இரவில் நடந்தது எல்லாம் நினைவில் வந்தது. பார்த்தி தவறாக எடுத்திருக்க கூடும் என புரிந்து உடனே எழுந்து கொண்டாள்.
இரண்டு மணிக்கு சுஹானா அழைக்கவும் பயந்து போனவனாகத்தான் அழைப்பை ஏற்றான் பார்த்தி. கதவை திறக்கும் படி அவள் சொல்லவும் விரைந்து வந்து கதவை திறந்தான்.
வேகமாக உள்ளே வந்தவள் அவனை முறைத்துக் கொண்டே உள்ளே போய் படுத்து விட்டாள்.
இடுப்பில் கை வைத்து திகைப்பும் குழப்புமுமாக அவள் சென்ற திசையை பார்த்தவன், “ஒன்னும் புரியலை” என முணு முணுத்துக் கொண்டே கதவை அடைத்தான்.
“இப்ப வலி பரவாயில்லையா ஆச்சி? தூக்கம் வரலையா? அதான் வந்துட்டீங்களா?”என கேள்விகளாக கேட்டுக் கொண்டே படுத்தான் பார்த்தி.
“உங்கள்ட்ட இன்னொரு சாவி இருக்கும்தானே? என்னை ஏன் அங்கேயே விட்டீங்க, அட்லீஸ்ட் நீங்களாச்சும் அங்க வந்திருக்கலாம்ல?” எனக் கேட்டாள்.
“நீங்க பக்கத்துல இல்லாம நான் தூங்கவே இல்லை ஆச்சி, எனக்கு தலைவலி வந்துடும் போல, நாளைக்கு காலேஜ்க்கும் லீவ் போட முடியாது. ப்ளீஸ் காலைல பேசலாமா?” என பாவமாக கேட்டான்.
“தைலம் போட்டு விடவா?” என அக்கறையாக கேட்டாள்.
“வேணாம், என் ஹார்ட் பீட்ஸ் கவுண்ட் பண்ணுங்க” என சொல்லி நேராக படுத்துக் கொண்டான்.
அவளுக்கு அவன் மீது கோவமிருந்த போதும் அதைக் கொண்டு அவனை காயப்படுத்தி விடக்கூடாது என்பதில்தான் கவனம்.
அவனை நெருங்கி வந்தவள் அவனது மார்பில் கை வைத்துக் கொண்டாள்.
‘நான் என்ன தவறு செய்திருந்தாலும் இப்படி விலகி போகலாமா?’ என அவனுக்கு அவள் மீது வருத்தமிருந்த போதும் அதைக் கொண்டு அவளை வேதனை படுத்தி விடக்கூடாது என்பதில் கவனம்.